ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
வட்டமணி குலத்தில் எம்பார் மஹாவித்வானாய், மஹாவிரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டிவிழுந்து, அலந்தகொட்டையும் பூண்டு காளஹஸ்தியில் ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே பிடித்துக்கொண்டு இரண்டாம் முத்தமிழ்விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன்பாட்டுப்பாடி, காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே திருமலையில் நின்றும் பெரியதிருமலைநம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக, ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க, அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப் பெரியதொரு பூக்கொடலையும் கழுத்திலே கட்டிக்கொண்டு ருத்ரப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக்கொண்டு, திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப்பறியாநிற்க, திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு ‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்தவிஷயத்தில் ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில் பெரிய வித்வானாகையாலும், அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம்பற்றித் தாமும் முதலிகளும் எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளியிருந்து ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க, எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச்செய்கிற திவ்யஸுக்திகளைச் செவிமடுத்துக்கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போரவித்தராய், நெடும்போது கேட்டுக்கொண்டு திகைத்துநிற்க,
நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக்கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்யஸூக்தியிலே ஒன்றைச் சொல்லித்திருத்தக்கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி, “தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய, எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து ‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி ‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று கூப்பிட்டு நம்பி திருவடிகளிலே விழ, நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து எம்பாரையும் ‘தீர்த்தமாடிவாரும்’ என்ன, அவரும் எலந்தைக்கொட்டைவடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து, தீர்த்தமாடி ஈரப்புடவையோடே தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க, நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அப்போதே அவர்க்கு பஞ்சஸம்ஸ்காரமும் பண்ணி, த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து, ‘புறம்புண்டான பற்றுக்களையெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச்செய்ய, அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக்கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,
அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடிவந்து ‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர் போகவொண்ணாது’ என்று எம்பாரைத்தகைய, அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து ‘காளஹஸ்த்தியாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்துபாரோம்’ என்று அருளிச்செய்து, பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப்போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாகவிட்டுப் பெரிய ப்ரீதியோடே முக்தர் பரமபதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழிநடத்தப் போமாப்போலே திருமலை நம்பியை ஸேவித்துக்கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி, நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக்கொண்டு வாழுகிற காலத்திலே,
உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து ஆளவந்தாரைப்போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து ‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்கவேணும்’ என்ன, உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன, நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார். அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள, நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன, ‘அங்குத்தையேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு திருமலைக்கு எழுந்தருளி நம்பி திருவடிகளிலே தண்டனிட்டுநிற்க, நம்பியும் எம்பாரைப் பார்த்து ‘உதகபூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்துவிட்டோமே; அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன, எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய, நம்பியும் ‘விற்றபசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத்தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று ஒருபோதும் ப்ரஸாதமிடாமல் தள்ளிவிட்டார். எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி, உடையவரை ஸேவித்துக்கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,
ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும் எம்பாருடைய ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத்தூக்கிக் கொண்டாட, எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக்காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக்கொள்ள, உடையவரும் அத்தைக்கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம் பண்ண வேண்டியிராநிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளாநின்றீர்; இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன, எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக்கொண்டாடில் காளஹஸ்த்தியிலே கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டுநின்ற அந்நிலையைக் கொண்டாடுமத்தனையன்றோ அடியேனுக்குள்ளது; இப்படியானபின்பு “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷிபரம்பரைகளை அநுஸந்தித்து நித்யஸம்ஸாரிகளிலும் கடைகெட்டுக்கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும் ‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”, “நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக்கொள்ள ப்ராப்தியுண்டு; ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப்பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார் என்று பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.
ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க, அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்கிறபடியே அவனை நியமித்துக் கொண்டுபோர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்யநியமநம் தனக்கு ஹிதம் என்று அறியாமல் வெருவி இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியாநின்றார்கள்’ என்று வெறுக்க, அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனையன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம். இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்கவேணும் என்னுமதும், ஸதாசார்ய நியமநம் ஸச்சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர்கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.
நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்யஸேவை பண்ணிக்கொண்டிருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப்பார்த்து ‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளைவிட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க, அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தைசொல்ல, இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு, ஆசார்யனைப்பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து ‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான்பாதம் – நாடோறும் – மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச்செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம். இத்தால் ஸதாசார்யன் கண்வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது. ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.
கொங்குநாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான். அக்காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுதுசெய்தருளுவர். திருவீதியிலே எழுந்தருளும்போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள். அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும். ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சுநின்றும் இழிந்து இடைகழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்; இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க, ‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய, ‘அந்நல்வார்த்தை எனக்கு அருளிச்செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள். உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய் அவர்கள் அங்கேறப்போகவிருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப்போகப்பெற்றிலேன் என்று அந்தப்பெண் வ்யாகுலப்பட்டுக்கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார். அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப்போகா நின்றோம்; முன்பு அருளிச்செய்த நல்வார்த்தை அடியேன் நெஞ்சிலே படும்படி அருளிச்செய்து எழுந்தருளவேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க, உடையவரும் அவ்வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணியருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி எழுந்தருளப்புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்மரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’ என்று அவள் விண்ணப்பம் செய்ய, உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப் பெரியபிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு ப்ராஸாதித்து எழுந்தருளினார். அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம் பண்ணிக்கொண்டு போந்நாள் என்னும், இவ்வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம். இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது. ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள் கொங்கில் பெரிய பிராட்டியாரைப்போலே இருக்கவேணும் என்று சொல்லிற்று. இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org