ஆழ்வார்திருநகரி வைபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஆழ்வார்திருநகரி என்கிற ஸ்ரீகுருகாபுரி க்ஷேத்ரத்துக்கு என்று சில தனிப்பட்ட பெருமைகள உள்ளன. முற்காலத்தில் இது ஆதிக்ஷேத்ரம், குருகாபுரி, ஸ்ரீநகரி என்று அழைக்கப்பட்டது. ப்ரபந்ந ஜன கூடஸ்தரான (பகவானிடம் ப்ரபத்தி செய்தவர்களில் முதன்மையானவர்) நம்மாழ்வார் இந்த திவ்யதேசத்தில் அவதரித்த பிறகு, இது ஆழ்வார்திருநகரி என்றே ப்ரஸித்தமாக அழைக்கப்படுகிறது. இந்த க்ஷேத்ரத்தின் பெருமைகளைப் பற்றி இங்கே நாம் சிறிது அனுபவிப்போம்.

ஆழ்வார்திருநகரி ஒரு மிகப் பழமையான க்ஷேத்ரம். ச்ரிய:பதியான ஸர்வேச்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரின் திருவவதார ஸ்தலம் ஆகும். நம்மாழ்வாராலே மங்களாசாஸனம் செய்யப்பட்டதால் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிதும் கொண்டாடும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதாகவும் அமைந்துள்ளது. மேலும் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் மிக முக்யமான ஆசார்யரான ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி, அதாவது விக்ரஹம், அவர் இந்தப் பூவுலகில் அவதரிப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம்மாழ்வாரின் க்ருபையாலே மதுரகவி ஆழ்வார் மூலமாக தாமிரபரணி நதியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஸ்தலம் இது. மேலும் நம் ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஸ்தானமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாளாலே ஆசார்யராக ஏற்றுக் கொள்ளப் பட்ட, ஸ்ரீ ராமானுஜரின் புனரவதாரமான, அழகிய மணவாள மாமுனிகளின் அவதார ஸ்தலமும் இதுவே.

இப்படி இது திவ்யதேசமாகவும், ஆழ்வார் அவதார ஸ்தலமாகவும், ஆசார்யர்கள் அவதார ஸ்தலமாகவும் இருப்பதால் முப்புரியூட்டிய ஸ்தலம் என்ற பெருமையைக் கொண்டதாக இருக்கிறது.

மேலும் பல மஹான்கள் அவதரித்த, வாழ்ந்து கைங்கர்யம் செய்த, இன்றளவும் கைங்கர்யம்  செய்து வருகிற முக்யமான ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசம். தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூர் மார்க்கத்தில்,  “நவதிருப்பதி” என்று கொண்டாடப்படும் ஒன்பது பெருமாள் ஸந்நிதிகளில் (கோயில்களில்) ப்ரதானமான ஸந்நிதியாக (கோயிலாக) அமைந்திருக்கக் கூடிய ஸ்தலம்.

இப்படிப்பட்ட பல பெருமைகளைப் பெற்ற இந்த க்ஷேத்ரத்தைப் பற்றிய அற்புதமான பல விஷயங்களை இங்கே விரிவாக அனுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org