த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

 

ராமானுஜரும் திவ்யப்ரபந்தமும்

ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட திவ்யப்ரபந்தம் முக்கிய ப்ரமாணமாக கருதப்படுவதால், ராமாநுஜருக்கும் திவ்யப்ரபந்தங்களுக்கும் உள்ள தொடர்பை இப்பொழுது அனுபவிக்கலாம். ஜ்ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் அவர் கற்றுக் கொள்ள விரும்பும் சித்தாந்தத்தை, ஒரு ஆசாரியன், வித்வான் அல்லது சிஷ்யனின் நிலையிலிருந்தோ கற்றுக் கொள்ளலாம். ஒரு ஆசாரியன் அல்லது வித்வான் நிலையிலிருந்து கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர் மற்றவர்களுக்கு அந்த ப்ரம்ம ஜ்ஞானத்தை உபதேசிக்கும் தகுதியுடையவர்களாகிறார்கள். இந்த அடிப்படைக் கருத்தை மனதில் கொண்டு நாம் மேற்கொண்டு அனுபவிப்போம்.

திவ்ய ப்ரபந்தத்தின் சிஷ்யராக ஸ்ரீ ராமாநுஜர்

ஸ்ரீ ராமாநுஜர் சிஷ்யனின் நிலையிலிருந்து கற்றுக் கொண்டதை நாம் ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் பல இடத்தில் காணலாம். திருமாலையாண்டானிடமிருந்து திருவாய்மொழி கற்றுக் கொண்டதை குருபரம்பரை ஸாரம் மூலம் அறியலாம்.

“எம்பெருமானார் திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழிக்கு அர்த்தம் கேட்டருளினார்”.

ராமாநுஜர் ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை கற்றுக் கொண்டார் என்பதை ராமாநுஜ நூற்றந்தாதியில் காண்க. பூர்வாசார்யர்களின் பல ஸ்தோத்திரங்கள் மூலமாகவும், குருபரம்பரை ஸாரம் முதலிய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய க்ரந்தங்களின் மூலமாகவும் ஸ்ரீ ராமாநுஜர் சிஷ்யராக இருந்து கற்றது தெளிவாகிறது. ஆனால், இவையெல்லாம் மேலோட்டமாக கற்றுக் கொள்ளாமல், திவ்ய ப்ரபந்தத்தின் தாத்பர்யங்களை “அஞ்சு குடிக்கொரு சந்ததி” என்னுமா போலே ஸ்ரீமன் நாதமுநிகள் தொடக்கமாக ஓராண் வழி ஆசார்ய சிஷ்ய அடிப்படையில் முறையாக கற்றுக் கொண்டார். இன்றளவில் நாம் போற்றி அனுபவிக்கும் ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையின் ஸத்தை திவ்ய ப்ரபந்தத்தினால் மட்டும் அன்றி, அந்த திவ்ய ப்ரபந்தத்தை நாம் படித்து, படிப்பித்து போற்றுதலே நம் சத்சம்பிரதாயத்துக்கு முக்கியமானது. இத்தகைய உயர்ந்த திவ்ய ப்ரபந்தத்தை ஸ்ரீ ராமாநுஜர் ஆர்வமுடன் கற்றுக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை.

திவ்ய ப்ரபந்தத்தின் ஆசாரியராக ஸ்ரீ ராமாநுஜர்

ஒவ்வொரு திவ்ய ப்ரபந்தம் சேவிப்பதற்கு முன்பும் சில ச்லோகங்களை சேவிப்பது வழக்கத்தில் உள்ளது. இவை ப்ரபந்தத்துடன் சேர்ந்தவை அல்ல. இந்த ச்லோகங்களை “தனியன்” என்று சொல்லுவர்.

ஒவ்வொரு ப்ரபந்தத்திற்கும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தனியன்கள் இருக்கலாம். தனியன்கள் எற்பட்ட காரணங்களை மேலே காணலாம்:
1) அந்தந்த ப்ரபந்தத்தின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துவதற்காக
2) ப்ரபந்தத்தை அருளிய ஆழ்வாரின் பெருமைகளை வெளிப்படுத்துவதற்காக
3) ஆழ்வாரைப் போற்றியும், அவருடைய அவதார ஸ்தலம் போன்ற சிறப்புகளைச் சொல்வதற்கும்.
4) அந்த ப்ரபந்தத்தைப் பற்றிய பொருளுரை சொல்லும்.

கீழ் கூறிய வெளிப்படையான காரணங்களை மனதில் கொண்டு பார்த்தால், தனியன்கள் ஆழ்வார்கள் ப்ரபந்தத்தில் சொல்ல வந்த தாத்பர்யத்தை சுருக்கமாகச் சொல்வது விளங்கும்.

ஆனால், சில தனியன்கள் நமக்கு அது போன்ற கருத்தை தெரிவிப்பதில்லை. அதற்கு திருவாய்மொழியிலிருந்தும், பெரிய திருமொழியிலிருந்தும் இதோ சில உதாரணம்.

திருவாய்மொழிக்கு பூர்வர்கள் ஆறு தனியன்கள் அருளிச்செய்துள்ளார்கள். அதில் ஒன்று ஸம்ஸ்க்ருதத்திலும் மற்றவை தமிழிலும் அருளிச்செய்யப்பட்டது. இதில் முக்கியமாக இரண்டு தனியன்கள் ஸ்வாமி ராமாநுஜர் காலத்திற்கு பிற்பட்ட ஸ்வாமி அனந்தாழ்வானாலும், ஸ்வாமி பராசர பட்டராலும் அருளப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது.

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன் * வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் **ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் * பேராத உள்ளம் பெற **

இந்த தனியனின் அர்த்தம்:- ஸ்வாமி நம்மாழ்வாரின் திராவிட வேதத்தை திடமாக க்ரஹிக்கும் மனதை தர வேண்டும் என ஸ்வாமி ராமாநுஜரின் திருவடிகளில் வேண்டுகிறேன்.

 

வான் திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் * ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் **ஈன்ற முதல் தாய் சடகோபன் * மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் **

இந்த தனியனின் அர்த்தம்:- ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழி என்னும் ஆயிரத்தை ஒரு தாயாக ஈன்றெடுத்தார். அதை தாயாகிய ஸ்வாமி ராமாநுஜர் போற்றி பாதுகாத்து வளர்த்தார்.

பெரிய திருமொழி ஸம்ஸ்க்ருதத்தில் ஒன்றும், தமிழில் மூன்றுமாக தனியன் அமையப் பெற்றுள்ளது. இதில் ஸ்வாமி எம்பாரால் அருளப்பெற்றது இத்தனியன்.

 

“எங்கள் கதியே இராமானுச முனியே ! சங்கை கெடுத்தாண்ட தவராசா !பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும், தங்குமனம் நீயெனக்குத் தா!”

இத்தனியனும் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி நன்றாக மனதில் தங்க ஸ்வாமி ராமாநுஜரின் அருளை வேண்டுகிறது.

கீழ்க்கண்ட தனியன்களில் கவனிக்க வேண்டியது, பூர்வர்கள் ஸ்வாமி ராமாநுஜரின் திருவடிகளில் விண்ணப்பிப்பது. அவர்கள் பரம்பத நாதனிடமோ, பெரிய பிராட்டியிடமோ, ஸ்ரீமன் நாதமுநிகளிடமோ அல்லது ஆழ்வார்களிடமோ விண்ணப்பிக்காமல் ஸ்வாமி ராமாநுஜரிடம் விண்ணப்பம் செய்வதை இதன் மூலம் காணலாம்.

இதற்குக் காரணம் பட்டர் அருளிய தனியனிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆழ்வார்கள் திவ்ய ப்ரபந்தத்தை அருளிச் செய்திருந்தாலும், அவற்றைப் போற்றிப் பாதுகாத்து, ப்ரபந்தத்தால் எல்லோரும் பயனடைய வழி காட்டுபவராய் ஸ்ரீ ராமாநுஜர் இருந்தார். தன்னுடைய சிஷ்யர்கள் மூலமாக ப்ரபந்தத்தின் தாத்பர்யங்களை வ்யாக்யானமாக பட்டோலை செய்து நம் எல்லோர்க்கும் நல்வழி காட்டியிருக்கிறார். ஸ்வாமி ராமாநுஜரை பற்றிய ஐதீகங்கள், அவரே உத்தாரக ஆசாரியன் போன்ற நிர்வாஹம் முதலியவை பூர்வாச்சாரிய வ்யாக்யானங்களில் கண்டு கொள்க.

“ மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!”

ஸ்வாமி மணவாள மாமுநிகளும் தன்னுடைய ஆர்த்திப் ப்ரபந்தத்திலே திராவிட வேதத்தை போஷித்த ஸ்வாமி ராமாநுஜர் என்றே போற்றுகிறார்.

இத்தால் ஸ்வாமி ராமாநுஜரின் ஆசார்ய ஸ்தானத்தை சொல்லிற்றாயிற்று.

 

 

ஸ்ரீ ராமாநுஜர் நடத்திக் காட்டிய உயரிய வாழ்க்கை முறை

இங்கே ஸ்ரீ ராமாநுஜரின் வாழ்க்கை முறையை பார்க்கும் பொழுது, அவர் வித்வானா அல்லது வேதாந்தியா என்ற கேள்வி எழலாம். இதற்கு பதில் நாம் திருவரங்கத்தமுதனாரின் பாசுரத்திலிருந்து காணலாம். ஸ்ரீ ராமாநுஜரின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் இந்த பாசுரத்தைப் பார்க்க வேண்டும்.

“உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள்நாதனும் மாறன் விளங்கிய சீர்நெறிதருஞ் செந்தமிழாரணமே யென்றிந் நீணிலத்தோர்அறிதரநின்ற இராமானுசனெனக் காரமுதே”!

ஸ்வாமி நம்மாழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட திராவிட வேதமே தன்னுடைய தாயாகவும், தந்தையாகவும், ஆசாரியனாகவும், சொத்தாகவும், தெய்வமாகவும் மட்டும் நினைக்காமல், அந்த பாதையில் நடந்தும் காட்டியுள்ளார். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் திவ்ய ப்ரபந்தத்திடம் தனக்குள்ள பக்தியை உலகுக்கு காட்டியுள்ளார்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/01/30/dramidopanishat-prabhava-sarvasvam-1-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment