த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 1

 

சுவாமி கூரத்தாழ்வான்

ஸ்வாமி நம்மாழ்வாரே வேதாந்தத்துக்கும், நம் ஸம்ப்ரதாயத்துக்கும் உயர்ந்த ஆசார்யன் என்றும், ஸ்வாமி எம்பெருமானார் தமிழ் மறையின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பற்றுதலையும் நாம் கீழே கண்டோம். மேலே, நம் பூர்வாச்சார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பட்டர் மற்றும் தேசிகன் அவர்களின் க்ரந்தங்கள், ஸம்ஸ்க்ருத வேத வாக்கியங்கள் மற்றும் உபப்ரஹ்மணங்களைக் கொண்டு, நாம் ஆழ்வார்களின் ஏற்றத்தையும், திவ்ய ப்ரபந்தங்களின் ஏற்றத்தையும் இனி அனுபவிப்போம்.

 

 

வேதத்தில் திரமிடோபநிஷத் – நம்மாழ்வார் என்னும் சூரியன்

சுவாமி ஆளவந்தார்

 

ஒருமுறை வடக்கே யாத்திரை சென்று கொண்டிருந்த சமயம், ஸ்வாமி மதுரகவியாழ்வார், தெற்கிலிருந்து அற்புதமான ஒளி வருவதைக் கண்டார். காரணத்தை அறியும் ஆவலில், அவ்வொளியைத் தொடர்ந்து தெற்கே ஆழ்வார் திருநகரி வந்து, ஸ்வாமி நம்மாழ்வாரிடமிருந்து அவ்வொளி வருவதைக் கண்டார்.

ஸ்வாமி அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

“ஆதித்ய ராமதிவாகர அச்யுதபாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி விகஸியாத போதிற்கமல மலர்ந்தது  வகுளபூஷணபாஸ்கரோதயத்திலே”.

கிழக்கில் உதிக்கும் சூரிய ஒளியால் களையப்படாத நம்முடைய அறியாமை என்னும் இருள் களையப்பட்டுவிட்டது. ராமனின் ஒளியால் வற்றாத இந்த கரையைக் காணமுடியாத ஸம்ஸாரக் கடல், இப்போது வற்றி விட்டது. கண்ணனின் ஒளியால் மலராத ஜீவர்களின் இதயம் இப்போது முழுவதுமாக மலர்ந்துவிட்டது. இவற்றிற்கெல்லாம் காரணம் நம்மிடையே அவதரித்த சூரியனும், வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்டவருமான ஸ்வாமி நம்மாழ்வார் என்றால் அது மிகையாகாது.

ஸ்ரீமந்நாதமுநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ச்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர |                                                                                                                  யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “


நாதமுனிகள்

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ, யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ, யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ, வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்.

நாதமுநிகள் இந்த ச்லோகத்தை, நாம் நன்கு அறிந்த ஒரு ச்லோகத்தைக் கொண்டு அருளியுள்ளார்:

“த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:                                                                                                                                கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: “

இந்த ச்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக்கொண்டு ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன். நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார். ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார். ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார். ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் – ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. இந்திரன் பரத்வாஜரை ஸாவித்ரையைக் கற்றுக்கொள்ளும்படி பணித்தான்.

பரத்வாஜரின் குறையும் இந்திரனின் தீர்வும்

யஜுர் ப்ராஹ்மணத்தில், காடகத்தில், முதல் ப்ரச்நத்தில், இந்திர-பரத்வாஜ ஸம்வாதம் உள்ளது.பரத்வாஜர் த்ரயீ என்று போற்றப்படும் வேதத்தைக் கற்கவேண்டும் என்ற நோக்கத்துடன், இந்திரனிடம் முன்னூறு ஆண்டு கொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை வரமாகப் பெற்றார். முடிவில் தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து துவண்டு போகிறார்.  இந்திரன் மீண்டும் முனிவரைச் சென்று “மேலும் ஒரு நூறாண்டு ஆயுஸ்ஸைக் கொடுத்தால் என்ன செய்வீர்?” என்று கேட்க பரத்வாஜர் “மீண்டும் வேதத்தைப் பயிலுவேன்” என்கிறார்.

இந்திரன், பரத்வாஜரின் ஸகல வேதங்களையும் நன்றாகக் கற்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் புரிந்து கொள்கிறான். இந்திரன், தன்னுடைய யோகஸாமர்த்தியத்தினால் மூன்று வேதங்களை மூன்று மலைகளாக பரத்வாஜர் முன்னே நிறுத்தினான். அதிலிருந்து ஒரு கைப்பிடி துகள்களை எடுத்துக் காட்டி “வேதங்கள் எல்லையில்லாதவை, நீர் கற்றது இக்கைப்பிடி அளவே” என்றான். இத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் தளர்ந்து போனார். வருத்ததுடன் “வேதத்தை முழுதாகக் கற்கவே முடியாது போலுள்ளதே” என்று நினைத்தார். அத்தை உணர்ந்த இந்திரன், பரத்வாஜருக்கு ஸகல வேத ஸாரமான ஸாவித்ர வித்யையைக் கற்பித்தான். ஸாவித்ரை என்பது திருவாய்மொழியே.

பட்ட பாஸ்கரர், தன்னுடைய வ்யாக்யானத்தில், மேல் வருமாறு கூறுகிறார்.

“‘ஸாவித்ரையை அறிந்து கொள். இந்த ஸாவித்ரையைக் கொண்டே வேதத்தின் அனைத்து அர்த்தங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். ஸாவித்ரை இருக்கும் பொழுது, நாம் எதற்காக வருந்த வேண்டும்? ஸாவித்ரையை அறிந்து கொண்டாலே போதுமானது’ என்று கூறி ஸாவித்ரையை இந்திரன் பரத்வாஜருக்கு உபதேசித்தான்”

வேதங்கள் அநந்தம் (எல்லையில்லாதவை). நம்முடைய முயற்சியால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. வேதங்களை அறிய வேண்டும் என்றால், ஸாவித்ரையை அறிய வேண்டும். ஓருவர் வேதத்தின் அளவைக் கண்டு மலைத்து நிற்கும்போது, அதே கருத்துக்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுமிடத்தை காட்டுதல் முறை தானே? நம்முடைய ஆசார்யர்கள் சூரியனின் ஆயிரம் கிரணங்களான ஸாவித்ரையை, வகுள பூஷண பாஸ்கரரான நம்மாழ்வாரின் திருவாய்மொழியாகவே கருதினார்கள்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/01/31/dramidopanishat-prabhava-sarvasvam-2-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment