ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
தைத்திரீயத்தில் உள்ள மேற்கண்ட ருக் த்ரமிடோபநிஷத் என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு ஸ்தோத்திரம் போல் அமைந்துள்ளதை காணலாம்.
सहस्रपरमा देवी शतमूला शताङ्कुरा | सर्वं हरतु मे पापं दूर्वा दुस्स्वप्ननाशिनी (ஸஹஸ்ரபரமா தேவீ சதமூலா சதாங்குகரா | ஸர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ்ஸ்வப்னனாசினீ) ||
கீழ்கண்ட வரியில் உள்ள தேவி என்னும் சொல், சொல் இலக்கணப்படி (ஸம்ஸ்கிருதத்தில் தாது) திவு என்னும் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
दिवु (திவு) – क्रीडाविजिगीषाव्यवहारद्युतिस्तुतिमोदमदस्वप्नकान्तिगतिषु (க்ரீடா விஜிகீசா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ன காந்தி கதிசு )|
அதில் ஸ்துதி என்கிற பொருளே இங்கு பொருத்தமானதாகும். ஸ்துதி என்றால் ஸ்தோத்திரம் அல்லது போற்றுதல் அல்லது கீர்த்தனை எனலாம். அருளிச்செயல் எமபெருமானின் திருக்கல்யாண குணங்களைப் போற்றிப் பாடுவதால் இப்பெயர் வழங்குகிறது.
தேவி என்னும் சொல்லுக்கு அடைமொழி துர்வா. இதற்கு அர்த்தம் பசும் பச்சை. இதே போல் ஆழ்வார்களின் பாசுரங்கள் பசுந்தமிழ் என்று அழைக்கப்படுவது ப்ரஸித்தம். “எம்பெருமானைப் போற்றும் பசுந்தமிழ்” என்று பொருள் அமைவதால் உஷ்ணத்தோடு கூடியிருக்கும் வடமொழி துதிப்பாக்கள் இவ்விடத்தில் குறிக்கப்படவில்லை என்று அறியலாம்.
கீழே தைத்திரீய வரியில் உள்ள ஸஹஸ்ரபரமா – ஆயிரம் பாசுரங்களை உடையது என்னும் சொல் இங்கு கவனிக்கத்தக்கது. நாயனாரின் ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில்:
வேதங்களில் பௌருஷ மானவ கீதா வைஷ்ணவங்கள்போலே, அருளிச்செயல் ஸாரம்.
வேதத்தில் புருஷ ஸூக்தம், தர்ம சாஸ்த்ரத்தில் மனு தர்மம், பாரதத்தில் கீதையும், புராணத்தில் விஷ்ணு புராணம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் திருவாய்மொழி த்ராவிட வேதாந்ததின் முக்கிய பகுதி என்று சாதித்தார்.
शतमूला – நூறு பாசுரங்களைச் சார்ந்திருப்பது. திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்கள் திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களைச் சார்ந்திருக்கிறது. நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயத்தில்:
ருக் ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமாபோலே சொல்லார்தொடையல் இசை கூட்ட அமர்சுவையாயிரமாயிற்று.
ரிக் வேதத்தின் இடைஇடையே ஸங்கீத ஸ்வரத்தால் அழகுபடுத்திப் பாடினால் எப்படி ஸாம வேதமாகிறதோ, அதேபோல் நூறு திருவிருத்த பாசுரங்களைப் பாடலாகப் பாடினால் அவையே ஆயிரம் இனிய திருவாய்மொழி பாசுரங்களாக விரிவடைகின்றன என்றால் அது மிகையாகாது.
शताङ्कुरा (சதாங்குகரா) – நூறு பாசுரங்கள் என்னும் விதையிலிருந்து முளைத்தது. நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முதலாழ்வார்களின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளாகிய நூறு-நூறு பாசுரங்களிலிருந்து முளைத்தது எனலாம்.
மேலுள்ள பதம் – துஸ்ஸவப்நநாஷினி. அதாவது, திவ்ய ப்ரபந்தம் நம்முடைய கெட்ட ஸ்வப்நங்களை அழிக்கிறது. இங்கு சொல்லப்படும் ஸ்வப்நம் நாம் உறங்கும்போது வருவதல்ல. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பாசுரம்:
“ஊமனார்கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன”
ஊமையின் கனவை விட எம்பெருமானை தெரிந்து கொள்ளாத நாட்களே மிகவும் வீணானவை. கனவில் மிகவும் குறைந்த ‘அறிதல்’ நிலையே இருக்கும். அதே போல் எம்பெருமானை அறிந்து, தெரிந்து கொள்ளாத நாட்கள் ஒரு கெட்ட ஸ்வப்நத்தை போலாகும். கனவுதான், அனால் அதை ஏன் கெட்ட கனவு என்று கூறவேண்டும்? ஏனென்றால், எம்பெருமானை தெரிந்து கொள்ளாதவரை நாட்டார் இப்பெரும் ஸம்ஸார கடலில் உழன்று துயரத்தை அநுபவிப்பர். த்ராவிட வேதமானது ஜீவனுக்கு எம்பெருமானைப் பற்றி தெளிவாக்கி இந்த ஸம்ஸாரத்திலிருந்து கரையேற்றுகிறது. ஸ்வாமி நம்மாழ்வாரின் பாசுரம் காண்க:
“இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே”
பாலைவனத்தின் கானல் நீர் போன்ற இந்த ஸம்ஸார பெரும் துக்கம் இந்த பத்துப் பாசுரங்களால் அழிக்கப்படுகிறது. திவ்ய ப்ரபந்தம் அறிந்தவர்களுக்குக் கெட்ட ஸ்வப்நம் போன்ற இந்த ஸம்ஸார துக்கம் அழிந்துவிடுகிறது.
सर्वं हरतु मे पापं – मे सर्वं पापं हरतु (ஸர்வம் ஹரது மே பாபம் – மே ஸர்வம் பாபம் ஹரது) – நம்முடைய பூர்வ ஜன்ம பாவங்கள் தத்வ-ஹித-புருஷார்த்தத்தை முழுமையாக உணர தடையாக உள்ளது. இந்த ஸ்தோத்திரம் அப்படிப்பட்ட பாவத்தை தகர்த்தெறியும்படி ப்ரார்த்திக்கிறது.
கீழே நாம் கண்ட விஷயத்தின் ஸாரம் : இந்த ருக்கு, த்ராவிட வேதாந்தத்தை ஒதுபவரின் பாவங்களை நீக்கும்படி ப்ரார்த்திக்கிறது. எம்பெருமானின் மேன்மையை பேசும் பசுமையான திவ்ய ப்ரபந்தம், ஆயிரம் பாசுரங்களைக் கொண்ட திருவாய்மொழியை முக்கிய பகுதியாக கொண்டது. இந்த திருவாய்மொழி நூறு பாசுரங்களைக் கொண்ட திருவருத்தம் என்னும் ப்ரபந்தத்தின் விரிவாக்கமாக உள்ளது. இப்பிரபந்தம் முதலாழ்வார்களின் நூறு பாசுரங்களான திருவந்தாதியிலிருந்து முளைத்தது. இது ஸம்ஸாரம் என்னும் துஸ்ஸ்ப்நத்திலிருந்து நம்மைக் காக்கிறது.
நிற்க.
மேல், 7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம். இங்கு, वेदेभ्यस्स्वाहा (வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, गाथाभ्यस्स्वाहा (காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது. ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன. ஸ்வாமி தேசிகன் गाथा என்கிற இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது. உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:
प्रज्ञाख्ये मन्थशैले प्रथितगुणरुचिं नेत्रयन् सम्प्रदायं (ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்)
तत्तल्लब्धि–प्रसक्तैः अनुपधि–विबुधैः अर्थितो वेङ्कटेश: (தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச:) |
तल्पं कल्पान्तयूनः शठजिदुपनिषद्–दुग्ध–सिन्धुं विमथ्नन् (தல்பம் கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்)
ग्रथ्नाति स्वादु–गाथा–लहरि–दश–शती–निर्गतं रत्नजातम् (க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||
பொருள் – காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத் தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான அயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை, வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன். இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/01/31/dramidopanishat-prabhava-sarvasvam-3/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org