ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஆழ்வார்களும் எம்பெருமானாரும் – 2
பரித்ராணாய ஸாதூநாம்
பகவத்கீதை நான்காம் அத்யாயத்தில் “பரித்ராணாய ஸாதூநாம்” என்று தொடங்கும் ப்ரசித்தி மிக்க ஶ்லோகம் வருகிறது. இந்த ஶ்லோகத்தின் பொருள் பாமரர்களாலும் எளிதில் அறியப் படக்கூடியதே. “நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன்” என்பதே. இது இவ்வளவே. ஆனால், “நல்லோர்”, “காப்பது”, ”அழிப்பது”, “தீயோர்”, “தர்மம்” ஆகிய சொற்களை விவரிப்பதில் குழப்பம் தொடங்குகிறது. இச்சொற்களை அவரவர் தத்தம் வசதி, அறிவுக்கேற்ப விவரிப்பது இயல்பே. ஆயினும், இந்த விவரணங்கள் யாவும் கீதையின் உட்கருத்துப்படி உள்ளனவா என்பது கேள்விக்குரியது. நாம் வெவ்வேறு விவரணங்களின் நிறை குறைகளில் நோக்கைச் செலுத்தவேண்டா. ஸ்வாமி ராமாநுஜர் இந்த ஸ்லோகத்தை விவரிக்கும்போது கீதை நூல் முழுவதையும் திருவுள்ளத்தில் கொண்டு, வசதியான கருத்தைக் கூறாது பொருத்தமான விளக்கத்தைத் தந்தருளியுள்ளார் என்பது மட்டுமே நமது இலக்குக்குப் போதுமானதாகும்.
“ஸாது” யார்?
கண்ணன் எம்பெருமானால் ரக்ஷிக்கப்படும் சாதுக்கள் யார் என்பதை அறிந்துகொள்வது மிக ரசமான விஷயமாகும். ஸ்வாமி இராமானுசர் இச்சொல்லை விவரிக்கும்போது ஆழ்வார்களை நினைந்திருந்தார் என்பதே தெளிவு. அவர் சாதுக்களைக் குறிக்கும்போது பல சொற்களை அவர்தம் குணநலன்களின் பல்வேறு இயல்புகள் பற்றிக் குறிப்பிடுகிறார். இச்சொற்கள் ஆழ்வார்களைப் பற்றி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி, பிறருக்கும் அறிமுகப் படுத்துவதாக ஸ்வாமி ராமாநுஜரால் எடுத்தாளப் பட்டுள்ளன.
கீதா பாஷ்யத்தில் ஸ்வாமியின் உரை இவ்வாறுள்ளது:
साधव: – उक्तलक्षण-धर्मशीला वैष्णवाग्रेसरा:, मत्समाश्रयणे प्रवृत्ता: मन्नामकर्म-स्वरूपाणां वाङ्मनसागोचारतया मद्दर्शनेन विना स्वात्मधारणपोषणादिकमलभमाना: क्षणमात्रकालं कल्पसहस्रं मन्वाना: प्रशिथिल-सर्वगात्रा भवेयुरिति मत्स्वरूप-चेष्टितावलोकनालापादिदानेन तेषां परित्राणाय |
“உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா: மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா: க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”
தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள். “தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம், அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும், இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.
வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு. ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள். வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.
மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள். இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”, “ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.
மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா – “என் சொல்லிச்சொல்லுகேன்?” “நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின் திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.
மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: – ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது. “தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”, “காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.
க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால் ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம். “ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”, “ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”, “ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,
ப்ரசிதில-சர்வ-காத்ரா: – எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன. கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு. “காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”, “காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”, “உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”, மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.
சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை, மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார், என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்” ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .
ஸாது எம்பெருமான் பிரிவால் துயருறுவதால், எம்பெருமான் மீண்டும் மீண்டும் யுகம் தோறும் அவதாரம் செய்கிறான். அவன் தன்னைத் தன பக்தர்களுக்குக் காட்டுகிறான், அவர்களோடு நெருங்கிய உறவு கொள்கிறான். இதுவே ஸாது சம்ரக்ஷண மாகும். அவன் அவர்களுக்குத் தன் திவ்ய தர்சநம் தந்து தரிப்பிக்கிறான். தன் திவ்ய நாமம், திவ்ய சேஷ்டிதங்களால் வாழ்விக்கிறான். தன் திவ்ய அனுபவத்தால் அவர்களை சம்ரக்ஷிக்கிறான்.
உரையின் நோக்கம்
இந்த வியாக்யானம் கீதையின் உள்ளுறை பொருளோடு ஒத்துள்ளது. வைஷ்ணவத்துக்கு வெளியே இருப்போருக்கும் ஸ்வாமியின் சொற்களுக்கும் கீதை முழுவதும் உள்ள கண்ணன் எம்பெருமானின் கருத்துக்கும் உள்ள தொடர்பு புரியும். ஆழ்வார்களை ஸ்வாமி எவ்வாறு நோக்கினார் என்பதும் தெரியும்.
ஸாது பதத்தின் இவ்விவரணத்திலேயே ஸ்வாமி எம்பெருமானார் ஆழ்வார்களின் இயல்பையும் விவரித்துள்ளதால் ஓர் உன்னத உரையாசிரியராய் விளங்குகிறார்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/04/dramidopanishat-prabhava-sarvasvam-6-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org