த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 6

சமுத்ரமும் திருக்கல்யாணகுணங்களும்

பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் எம்பெருமானை சகல கல்யாண குணங்களின் இருப்பிடமாகச் சொல்லக் காண்கிறோம். அவனை சகல திருக்கல்யாண குணக் கடலாகச் சொல்லுவர்கள்.

ஸ்வாமி எம்பெருமானாரும் பல இடங்களில் எம்பெருமானின் அளவிட முடியாத பெருமேன்மைகொண்ட கணக்கற்ற கல்யாண குணங்களை எடுத்துக்காட்டி அருளுகிறார். சுவாமியின் எல்லாக் க்ரந்தங்களிலும் இப்படிப்பட்ட சொற்கள் உண்டு.

ஸ்ரீ பாஷ்யத்தில் “அனந்த குண சாகரம்” அல்லது “அபரிமிதோதார குண சாகரம்” என்ற சொற்கள் பயின்று வருகின்றன. உதாரணத்திற்கு ஸ்ரீபாஷ்யம் இரண்டாம் அத்யாயம் தொடக்கம் – “ப்ரதமே அத்யாயே ப்ரத்யக்ஷாதி ப்ரமாண  கோசராத் அசேதநாத் தத்சம்ஸ்ருஷ்டாத் வியுக்தாச்ச சேதநாத் அர்தாந்தரபூதம் நிரஸ்த நிகில அவித்யாதி அபுருஷார்த்த கந்தம் அனந்த ஞானானந்தைக தானம் அபரிமிதோதார குண ஸாகரம் நிகில ஜகத் காரணம் சர்வாந்தராத்மபூதம் பரம் ப்ரஹ்ம வேதாந்த  வேத்யம் இத்யுக்தம்”.

இதன் பொருளாவது… வேதாந்த சூத்ரத்தில் முதல் அத்யாயத்தில் பர ப்ரம்ஹம் புலன்களால் அறியப் படுமவற்றிநின்று வேறு பட்டு, பௌதிகப் பொருள்களுக்குக் கட்டுப் பட்ட ஜீவாத்மாவில் நின்று வேறுபட்டு, இப்பொருள்களினின்றும்  விடுபட்ட ஜீவாத்மாவிலிருந்தும் வேறுபட்டு அஞ்ஞானம் போன்ற அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கி, எல்லையற்ற ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் நற்குணக் கடலாய் அண்ட சராசரங்கள் அனைத்துக்கும் தானே ஒரே காரணமாய் யாவற்றுக்கும் அந்தர்யாமியாய் வேதாந்தத்தால் அறியப்படுகிறது.

இவ்வாக்யத்தில் பரப்ரஹ்மம் எனும் சொல் முதலாம் வேற்றுமையில்  உள்ளதேயன்றி இரண்டாம் வேற்றுமையில் இல்லை. இதை நினைவில் வைத்தே நாம் இந்தப் பத்தியில் உள்ள சொற்களுக்குப் பொருள் கோடல் வேண்டும். “அபரிமித உதார குண சாகரம்” என்ற சொல் தத் புருஷ சமாசமாகக் கொண்டு  விரிக்கப்படக் கூடாது. ஏனெனில் “குணாநாம் ஸாகர:” என்பதில் சாகர என்பது ஆண்பால் சொல் ஆனபடியால் அபரிமித உதார குண ஸாகர: என்று இருக்க வேணும். ஆனால் இங்கு குணசாகரம் என்று பாலற்றச்சொல்லாக உள்ளபடியால் இதற்குத்தக  பஹுவ்ரீஹி சமாசமாக “அபரிமித குணசாகர: யஸ்ய தத்” அல்லது “அனந்த குனசாகர: யஸ்யதத்” என்றிருக்கவேனும். ஶ்ருதப்ரகாசிகாசார்யரும் இதைப் பஹுவ்ரீஹி சொல்லாகவே ஆண்டிருக்கிறார்.

இவ்விரு தொகுப்புச் சொற்களுக்குமுள்ள பொருள் வேறுபாடாவது: எம்பெருமானே கடல்; நீர்க் கடல் அல்லன், திவ்யகுணக்கடல் என்பது தத்புருஷ சமாசத்தின் பொருள். பஹுவ்ரீஹி சமாசத்தில் குணங்களே கடல்,  அக்கடலொத்த குணங்களை உடையவன் எம்பெருமான். இந்த இரண்டாவது பொருளே இவ்விடத்தில் பொருத்தமுடைத்து.

பல இடங்களில் பெருமானைக் குணக்கடலாகச் சொல்லக் காண்கிறோம். ஆனால்  அவன் குணங்களைக் கடலாகச் சொல்வது மிகச் சில இடங்களிலேயாம். ஆசார்யர்களின் வ்யாக்யைகளில், ஸ்வாமி ராமானுஜரின் எழுத்துகளில் மட்டுமே இதைக்காணமுடியும். எந்த ஆசார்யராவது எம்பெருமானின் குணங்களைக் கடலுக்கு ஒப்பிட்டாரென்றால் அவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை என்று சொல்லி விடலாம்.

ஸ்வாமி இந்த ஒப்புமையை ஒரு மேற்போக்கான வாய்ப்பாக அவர் பயன்படுத்தவில்லை. அவர் ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகளை ஆழ்ந்து கற்றிருந்தார். அதனாலேயே அவரால் இப்படி எழுத முடிந்தது. பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வார் “மிகும் திருமால் சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்”(69) என்கிறார். இதில் எம்பெருமான் திவ்ய குணங்கள் கடலோடு ஒப்பிடப் படுகின்றன. அகஸ்த்யர் உப்புக் கடலை உண்டார், ஆழ்வாரோ எம்பெருமானின் அமுத  குணக் கடலை உண்டார். மேகம் கடல் நீரைப் பருகுவதுபோல் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் குணக்கடலைப் பருகினர். இதைத் தெரிவிக்கவே சுவாமி பஹுவ்ரீஹி சொல்லைப் பயன்படுத்தினார்.

இவ்விடத்தில் இதே போன்ற இன்னொரு விளக்கத்தையும் குறிக்கத் தகும். ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் நாதமுநிகளை “அகாத பகவத் பக்தி சிந்து”,  நாதமுனிகள் பக்தியாகிற ஆழ் கடலை உடையவர் என்று ஸ்தோத்ரம் செய்து தொடங்குகிறார். இங்கு, நாதமுனிகளே பக்திக்கடலா? (தத்புருஷம்) அல்லது பக்தி என்னும் கடலை உடையவரா? (பஹுவ்ரீஹி) என்கிற கேள்வி எழுகிறது. வியாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்பிள்ளை இதை ஆழ்வார்கள் மரபில் நின்று பஹுவ்ரீஹியாகவே நிர்வஹிக்கிறார். இதற்கு அவர் நம்மாழ்வாரின் “காதல் கடலின் மிகப் பெரிது” (திருவாய்மொழி 7-3-6) பாசுரத்தையும்  திருமங்கை ஆழ்வாரின் “ஆசை என்னும் கடல்” (பெரிய திருமொழி 4-9-3) பாசுரத்தையும் மேற்கோள் காட்டுகிறார். த இவ்விளக்கம் சுவாமி வேதாந்த தேசிகனாலும் ஆதரிக்கப்பட்டது. அவர் தம் உரையில் முதலில் தத்புருஷ அர்த்தமும் பின்பு பஹுவ்ரீஹி அர்த்தமும் சாதித்தருளுகிறார். “பக்திம்வா சிந்துத்வேன ரூபயித்வா பஹுவ்ரீஹி”, பக்தியை ஒரு கடலாக உருவஹித்தல்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/05/dramidopanishat-prabhava-sarvasvam-7-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment