த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 7

தாமரைக் கண்ணன் எம்பெருமான்

(1)புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம்

சாந்தோக்யோபநிஷத் தாமரைக் கண்ணன் ஆன புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் என்றது.இது, “தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” எனும் வாக்யத்தில் தெரிவிக்கப் படுகிறது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் பரப்ரஹ்மனின் வடிவைத் தெரிவிக்கக் காட்டும் பல வழிகளில் இதையும் ஒன்றாகக் கொண்டருளினார்:”க:புண்டரீக நயன:” என்பது அவர் திருவாக்கு. ஆகவே, கமல நயனனான எம்பெருமான் வாசுதேவனே பரப்ரஹ்மம் என்பது ஸ்ருதி சித்த மாயிற்று.

                    [திருவெள்ளறை – புண்டரிகாக்ஷன் எம்பெருமான்]

(ii)விளக்கத்தில் விளைந்த சர்ச்சைகள்

விளக்குவதில் உள்ள ச்ரமங்கள் காரணமாக இந்த சாந்தோக்ய உபநிஷத் ச்லோகம் சர்ச்சைகளுக்கு மூலமாய் விட்டது. யாதவப்ரகாசர் இதை மிக எளிதாக விளக்க முற்பட்டு நிரசமாக உரைத்தார்.அவர், பெருமானின் கண்கள் குரங்கின் பின்பாகம் போன்றுள்ளன என்றார், இவ்விளக்கம், ப்ரஹ்மத்தின் பெருமையைப் பகராததன்றியும், ப்ரஹ்மத்தைக் கேலிப்பொருள் ஆக்கிவிட்டது. தவறான இவ்விளக்கம் சுவாமி ராமாநுசருக்குப் பெரும் மனவருத்தம் ஏற்படுத்தியது என்பது வைஷ்ணவ சம்பிரதாய வரலாறு..

ஸ்ரீ சங்கரர் இவ்வொப்புவமையை மறைமுகமாக் கூறி இக்கஷ்டத்தைத் தவிர்க்க முயற்சி செய்தார். அவர், குரங்கின் பின்பாகம் பிரமத்தின் கண்களுக்கு நேர்பட ஒப்பாகாது என்றார், மாறாக, தாமரைக்கு(புண்டரீகம்) பிரஹ்மத்தின் கண்களுக்கு  உவமை ஆகும் என்றார். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் ப்ரஹ்மம் புண்டரீகாக்ஷனே என்று அறுதியிடுவதிலும் மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் ஓர் அம்சத்தை மிகத்தாழ்ந்த குரங்கின் பின்பாகத்தோடு ஒப்பிடாததிலும் வெற்றி பெற்றவர், ஸ்ருதி இந்தக்கட்டத்தில் தாமரை பற்றிச் சொன்னாலே  போதுமாயிருக்க ஏன் குரங்கின் பின்பாகம் பற்றிப் பேசவேண்டும் என்பதைத் த்ருப்திகரமாக விளக்கவில்லை. கப்யாசத்தைத் தாமரைக்கு ஒப்பிடுவதும் எவ்விதத்திலும் ரசமானதன்றே.

 

(iii)ஸ்வாமி ராமானுசரின் விளக்கம்

கப்யாசம் என்பது தாமரைக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைத் தக்கபடி காட்டி எம்பெருமானார் இந்த ஸ்ருதி வாக்யத்தைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை நிறைவு செய்தார். அதாவது, ப்ரஹ்மம் தாமரைக் கண்ணன் என்பதை நேர்படச் சொல்வதிலேயே வேதாந்தத்தின் நோக்கு. ”குரங்கின் பின்பாகம்” எனும் விரசத்துக்கு மாறாக, உபநிஷத் எம்பெருமானின் திருக்கண்களின் அழகை வியந்து பேசுகிறது.சுவாமி ராமானுசரின் இந்த நேர்த்தியான விளக்கத்தால் விரசமான ஒப்புவமைகளிளிருந்து வேதாந்தம் தப்பியது.

 

இராமானுசர் அருளிய மூன்று அர்த்தங்கள்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன  அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்

நீரைக் குடிப்பது கபி.சூர்யன் நீரை வற்றடிப்பதால் கபி எனப்படுகிறான்.கப்யாசம் என்பது சூர்யனால் அலற்த்தப்படுவது. தாமரைக்கு அடைமொழி ஆகி இது சூர்யனால்அப்பொழுது  அலர்த்தப்படும் தாமரையைக் குறிக்கிறது.

  

[ சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை ]

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்

கபி நீரைக் குடிப்பது எதுவோ அதைக் குறிக்கும். தாமரையின் நாளம் நீரைக் கு டிப்பதால் அது கபி. எனவே, கப்யாசம் புண்டரீகம் என்பது, நீரில் நாளத்தால் சுமக்கப்படும் தாமரையைக் குறிக்கிறது.

[கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்]

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம்  

கம் என்பது ஜலம்.நீரில் நிற்பது கப்யாசம்.இவ்விடத்தில் கப்யாசம் புண்டரீகம் என்பது ஓர் அழகிய, நீரில் தோன்றி வளர்ந்து நிற்கிற தாமரையைக் குறிக்கிறது.

[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

ச்ருதப்ரகாசிகை மூலமாக திரமிடாசார்யர் தம் உரையில் ஆறு அர்த்தங்கள் சொன்னதாக அறிகிறோம். இவற்றில் மூன்று குரங்குக் குறிப்போடுள்ளதால் அவற்றின் கசடு கருதி பூர்வ பக்ஷமாகக் கருதப் படுகின்றன.மற்ற மூன்றும் ப்ரஹ்மத்தினைக் கமலக் கண்ணனாகச் சொல்வதால் அவை யுக்தமாகக் கொள்ளப் படுகின்றன. இவ்வர்த்தங்கள்  ராமானுசரால் மிக நன்றாகவும் ஸ்ருதி வாக்யத்துக்குச் சேரவும் இனிமையாக பொருத்தமாக விளக்கப் பட்டுள்ளன.

வேதார்த்த சங்க்ரஹத்தில் ஸ்வாமியால் மிகத் தெளிவாக இவ்வேதாந்தப் பொருள் இவ்வாறு விளக்கப் பட்டுள்ளது:-.

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”

கப்யாசம் எனும் சொல் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இவ்விரிவான பொருள் தரவே தராது. ஸ்வாமியால் எவ்வாறு இவ்வர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது?

ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அனுபவித்தவர்களால் மட்டுமே இவ்வர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆழ்வார்களின் இத்தொடர்புள்ள சொற்களை அறிந்த மாத்திரத்தில் எவ்வாறு இந்த விளக்கம் அவதரித்தது என்பது விளங்கும்.

ஸ்வாமியின்  இவ்விளக்கம் ஆழ்வார்களின் எந்தத் திருவாக்குகளிலிருந்து பெறப் பட்டது என்பது இனி இத்தொடரில் மேல் வரும் விஷயங்களில் பெறப்படும்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/06/dramidopanishat-prabhava-sarvasvam-8-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment