ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ப்ரதான அடையாளம்
ஆத்மாவின் இயல்பு என்பது தத்வ ஆராய்ச்சியின் அலசலுக்குட்பட்டது. இதுவே வெவ்வேறு தத்வங்களிலும் தத்வ ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக முக்யமாய் உள்ளது. வெவ்வேறு சித்தாந்தங்களிலும் ஆத்மாவின் இயல்பு பற்றிய வேறுபாடுகளும் அவற்றின் மீதான இசைவுமறுப்புகளும் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. ஸ்வாமி ராமானுசரின் ஆத்மா பற்றிய ப்ரதான அடையாளம் என்ன என்று பார்ப்போம்.
நம் மிகச் செறிவான ஸ்வாமி நம்பிள்ளை, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை போன்ற பெரியோர்களின் செம்பொருள் இலக்கியங்களில் ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.
ஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது?
இக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமது மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.
ஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், “அடியேனுள்ளான் உடனுள்ளான்” என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்.
ஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் “அடியேன்” என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.
ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் “அடியேன்” எனும் சொல் பல இடங்களில் பயின்று வந்துள்ள ஒன்றாகும். ஏன் நம்பிகள் மற்ற பலவற்றை விடுத்து இதை எடுத்துக்கொண்டார்? இது ஏதோ போகிற போக்கில் பொறுக்கி எடுத்ததா? ஆழ்வார் திருவிருத்தம் முதற்பாசுரத்திலேயே “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றருளிச் செய்கிறாரே இந்த எட்டாம் திருவாய்மொழி முதல் பாசுரத்திலேயே “அடியேன்” என்ற சொல் வருகிறதே. ஏன் நம்பிகள் இந்தப் பாசுரத்தைத் தேர்ந்தெடுத்தார்? இத்தேர்வில் என்ன சிறப்பு?
மற்ற ஸந்நிவேசங்களில் அடியேன் என்ற சொல் தனி ஓர் ஆத்மாவை விசேஷித்துக் குறிக்கவில்லை. உதாரணமாக, “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்பதில் விண்ணப்பம் என்பது சரீரமுள்ள ஆத்மாவுக்குத் தான் இயலுமே தவிர சரீரம் கடந்த ஓர் ஆத்மாவால் இயலாது. இப்படிப்பட்ட விஷயம் சரீரத்தில் அடைபட்ட ஆத்மாவுக்கன்று சரீரம் தாண்டிய தனி ஆத்மாவுக்கு விசேஷணமாக அடையாளமாக இருத்தல் வேண்டும். இத்தகைய அடையாளக் குறிப்பு ஆழ்வாரின் திருவாய்மொழி 8-8-2ல் மட்டுமே விசேஷக் குறிப்பாக வருகிறது.
இச்சொற்களின் பொருளை நாம் முதலில் பார்ப்போம். இப்பாசுரத்தில் ஆழ்வார் பெருமானை ஆத்மாவை அவலம்பித்துள்ளவன் எனும் பொருள் பட “அடியேனுள்ளான் ” எனவும், உடலை அவலம்பித்துள்ளான் எனும் பொருள்பட “உடலுள்ளான்” எனவும் அருளிச்செய்தார். ஈச்வரன் யாவற்றிலும் படர்ந்துள்ளான் எனும் விஷயம், அவன் ஆத்மாவிலும் படர்ந்துள்ளான் சரீரத்திலும் படர்ந்துள்ளான் என அவன் வ்யாப்தி ஆத்மா உலகியற்பொருள்கள் இரண்டிலும் தெரிவிக்கப் பட்டதாகிறது. “உடலுள்ளான்” என்றதால் சரீரத்தில் வ்யாப்தியும், “அடியேனுள்ளான்” என்றதால் ஆத்மாவில் வ்யாப்தியும் கிடைக்கிறது, “உடல்” எனும் சொல், ஆத்மாவை விடுத்து தனியே சரீரம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது, குறிப்பால் உணர்த்தவில்லை.
இங்கு ஆழ்வார் “நான்” என்னாமல் , “அடியேன்” என்றதன் மர்மம் தெரிகிறது, இதன்மூலம் ஆத்மாவின் அடையாளம் பற்றிய குழப்பம் முற்றாகத் தெளிவிக்கப் படுகிறது.
இந்நிகழ்ச்சி, இது பற்றிய விளக்கம் யாவும் இனிதாயிருப்பினும், இதுவேதான் உண்மை என்பதற்கு வேறு சான்றும் உண்டோ? ஸ்வாமி தம் வேறு ஸ்ரீகோசம் எதிலாவது இதைத் தெரிவித்தருளினாரோ? அன்றேல், இந்நிகழ்ச்சி ஒரு கதைபோலாகிவிடும், அதற்கு இவ்வளவு மதிப்பும் இராதே.
ஸ்வாமி இந்நிலையை இங்கு மட்டும், “ஞானி”. “ஞானவான்” என்பான் வருமிடங்களிலெல்லாம் கீதா பாஷ்யத்தில் மேற்கொள்கிறார். ஸ்ரீ சங்கரர் பொதுவாகவே தெளிவுற்ற சேதனனைப் பற்றி “விஷ்ணோ: தத்த்வவித்” (விஷ்ணுவின் உண்மைநிலை அறிந்தவன்) என்கிறார். ஸ்வாமியோ “பகவத் சேஷதைக ரஸ ஆத்ம-ஸ்வரூபவித் -ஞாநி “ என்கிறார். தெளிந்த அறிவுடையோன், ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டவன் என அறிந்தவனே என்பதாம்.
ஆழ்வார் “நான்” என்னாமல் “அடியேன்” என்றருளிச் செய்ததை அடியொற்றியே ஸ்வாமியும் ஞானத்தைப் பார்க்கிலும் சேஷத்வமே மேன்மையுடைத்தென்பதைக் காட்டியருளினார்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/14/dramidopanishat-prabhava-sarvasvam-16-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org