ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஈடற்ற வாத்ஸல்யம்
“அகிலஹேய” என்று தொடங்கும் சரணாகதி கத்யப் பகுதியில் ஸ்வாமி ராமாநுசர் எம்பெருமானை வெவ்வேறு திருநாமங்களால் விளிக்கிறார். இத்திருநாமங்கள் யாவும் அழைப்புகளாக உள்ளன (ஸம்போதனம்)
எம்பெருமான் “மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!” என்று விளிக்கப்பட்டு, பின் அவனது திவ்ய குணங்கள் கொண்டாடப் படுகின்றன. தொடரும் சொற்கள் – ”அபார காருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்யௌதார்ய ஸௌந்தர்ய மஹோததே!”. எம்பெருமான் ஓர் ஆழ் பெருங்கடல். அவன் கல்யாண குணங்களாலான கடல். இக்குணங்கள் எல்லையிலாதன, அனுபவிக்கவும் எல்லையிலாதன. (அபார) இவ்வுலகத்து ஆத்மாக்களைத் தரிக்க வைத்திருக்கும் அவனது தலையாய இயல்புகள் இரக்கம், எளிமை, தலைமை, அழகு என்பன. இப்பட்டியலில் வாத்ஸல்யம் எனும் கல்யாண குணமும் குறிக்கப்படுகிறது.
வாத்சல்யமாவது யாது?
சேதனரின் குறைகளைக் கருதி அவர்களைத் தண்டியாது அக்குறைகளையும் அநுபவிக்கும் இயல்பே வாத்ஸல்யம். சில அறிஞர்கள் அவன் இக்குறைகளைக் கண்டுகொள்வதில்லை என நினைக்கிறார்கள் இதை விவாதிப்பது இப்போது நம் நோக்கமன்று. இதை ஒரு தாயின் அன்பில் காண முடியும். ஒரு தாய் தன் குழந்தையின் தவறுகளையும் நேசிக்கிறாள், தவறு இருப்பினும் தன் குழந்தையை ஒரு நிபந்தனையின்றி விரும்புகின்றாள். அப்போதே பிறந்த தன் கன்றின் உடல் அழுக்கையும் தாய்ப்பசு விரும்பி நக்குகிறது. இவ்வழகிய இயல்பே வாத்ஸல்யமாகும். எம்பெருமான் விஷயத்தில் இது எல்லையற்றது, மிகவும் விசேஷமானது.
சரணாகதி கத்யத்தில் இப்பெயரைத் தொடர்ந்து ஸ்வாமி இன்னொரு பெயரும் இடுகிறார், ”ஆச்ரித வாத்ஸல்ய ஜலதே!” எம்பெருமான் தன் அடியார்களைக் காண்கையில் வாத்ஸல்யமாகிற ஒரே குணத்தாலான கடல் ஆகிறான்.
இவ்வாறு “வாத்ஸல்யம்” என்கிற ஒரு குணத்தையே திரும்பத் திரும்ப ஏன் ஸ்வாமி அனுபவிக்கிறார்? இக்கேள்வியே தேவையற்றது ஏனெனில் இக்குணம் ஆச்சர்யகரமானது, அடியார் மனத்தை ஈர்ப்பது. இராமாநுசர் போன்ற உயர் பக்தி நிலையில் உள்ளோர் இக்குணத்தில் மயங்குவதும், தம் தெய்வீக அநுபவத்தில் அதையே மீண்டும் மீண்டும் வாய் வெருவுவதும் வியப்பானதன்று.
ஆயினும், வெளிப்படையான இதற்கும் அப்பால், இவ்வநுபவத்துக்கு ஆழ்வார்களின் அருளிச்செயல்களே அடி என்பது காணத்தக்கது.
திருவேங்கடத்தானை நம்மாழ்வார் “அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா!” என்று புகழ்கிறார். பெருமாளின் திருமார்பில், பெரிய பிராட்டி ஒரு க்ஷணமும் பிரியாமல் இருக்கிறாள். அவள் அவனுள் அடியார்களை அவன் க்ருபை செய்யும் வகையில் சில இயல்புகளைத் தூண்டிவிடுகிறாள். அவ்வாறு அவள் கிளர்த்தும் உணர்வுகளில் வாத்ஸல்யமே தலையாயது. இதில் வியப்பேதுமில்லை ஏனெனில் அவளே வாத்ஸல்யம் மிக்கவள், வாத்ஸல்யாதி குணோஜ்வலை .
நம்மாழ்வார் சரணாகதி அனுஷ்டிக்கும்போது இவ்வாத்ஸல்ய குணத்தைப் புகழ்கிறார், “நிகரில் புகழாய்!” என்று. வேறிடங்களில் புகழ் என்பது பெருமை அல்லது சிறந்த குணங்களைக் குறிக்கலாம். ஆனால் இப்பாசுரத்தில் அவனது பிராட்டியின் சேர்த்தி வைபவம் சொல்லும் நம் ஆசார்யர்கள் ஒரு மிடறாக இதை வாத்ஸல்யம் உணர்த்துவதாகவே கண்டார்கள்.
வாத்ஸல்யம் போல் வேறொரு குணமில்லை என்று திருவுள்ளம் கொண்டே எம்பெருமானார் பிற குணங்களை எல்லாம் ஓதியபின் இதைத் தனிப்படக் கூறியருளினார். நம் பூர்வர்கள் தேவையின்றி புனருக்தி செய்யார். அவ்வாறு செய்யும்போது காரணத்துடனேயே செய்வர். சுவாமி, எம்பெருமானை, “அபார காருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்யௌதார்ய ஸௌந்தர்ய மஹோததே!” என முதலில் நமக்கு அவனது எண்ணற்ற ஆச்சர்ய குணங்களைக் காட்டி, பின் அவற்றோடிருப்பினும் தன்னிகரற்றது வாத்ஸல்யம் எனத் தனிப்படுத்திக் காட்டியருளுகிறார், “ஆச்ரித வாத்ஸல்ய ஜலதே!” என.
வாத்ஸல்யம் அவனது எண்ணற்ற கல்யாண குணங்களில் ஒன்றே. ஆனால் அது தன்னிகர் அற்ற தனிப் பெரும் குணம்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/15/dramidopanishat-prabhava-sarvasvam-17-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org