ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
பட்டரும் ஆழ்வார்களும்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீவைஷ்ணவ மரபில் ஈடிணையற்ற மஹா மேதாவியாவார். ஸம்ப்ரதாயம் பற்றிய அவரது தெளிவு இணையற்றது, ஸித்தாந்தத்தில் அவரது ஞானம் ஸ்வாமியுடையதோடு மட்டுமே ஒப்பிடப்படக் கூடியது. ஆகவேதான் ஸ்வாமி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அவரைக்கொண்டு பாஷ்யம் இடுவித்தது. இந்த பாஷ்யத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்று பெயர். இவ்வுரை முழவதும் ஆழ்வார்களின் திருவாக்குகளையே அடிப்படையாகக் கொண்டது. அதன் விரிவு கருதி இவ்விரண்டுக்குமுள்ள ஒப்புமையை இங்கு விவரித்துள்ளோம். ஆகவே நாம் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் சில உதாஹரணங்களை மட்டுமே நோக்குவோம்.
பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் தொடக்க ச்லோகங்களில் ஆழ்வாரை இங்ஙனம் போற்றுகிறார்:
ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் I
ஸ ஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் I I
பட்டர் இதில் ஆழ்வாரை ஒரு ருஷி என்கிறார். ஆழ்வார் க்ருஷ்ண பக்தியின் காதலின் வடிவம் என்றும் கூறுகிறார். ஆழ்வாரும் க்ருஷ்ண பக்தியும் வேறல்ல எனும் பட்டர், வேதங்களின் எண்ணற்ற சாகைகளை ஆழ்வார் தமிழில் காட்டினார் என்றும் அருளிச் செய்துள்ளார்.
பதின்மூன்றாம் ச்லோகத்தில்.
அமதம் மதம் மதமதாமதம் ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் இதி ரங்கராஜாமுதஜுகுஷத் த்ரயீ
என்பதில் முதல் பகுதி “யஸ்யாமதம் தஸ்ய மதம்” எனும் உபநிஷத் வாக்யத்தை அப்படியே ஒட்டியுள்ளது. யாவன் ஒருவன் தான் ப்ரஹ்மத்தை உணர்ந்ததாக எண்ணுகிறானோ அவன் அதை அறிந்திலன், யாவன் ஒருவன் தான் ப்ரஹ்மத்தை அறிந்திலேன் என்கிறானோ அவன் அதை உணர்ந்தவன் என இது பொருள்படும்.
இதன் அடுத்த பகுதியில் இம்மந்த்ரம், “ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்” என்கிறது. ப்ரஹ்மத்தைப் புகழ்வதும் ஒர் இகழ்ச்சியாகவும், இகழ்ச்சியே புகழ்வதாகவும் ஆகிறது. இப்பகுதி உபநிஷத்தில் எவ்விடத்திலும் இல்லை ஆனால் ஆழ்வார் திருவாக்கில், பெரிய திருவந்தாதியில், “புகழ்வோம் பழிப்போம், புகழோம் பழியோம், இகழ்வோம் மதிப்போம், மதியோம் இகழோம்” என வருகிறது.
இதில் ஸ்வாரஸ்யம் என்னெனில் பட்டர் இவ்விரண்டுமே த்ரயீயின் பாகங்கள் என்கிறார். அவர் உபநிஷதங்கள் திவ்ய ப்ரபந்தங்கள் இரண்டையுமே வேத பாகங்களாகக் கருதுகிறார். இது, பதினாறாவது ஸ்லோகத்தில் “ஸ்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட வேத ஸூக்தை:” என்பதில் தெளிவாகத் தெரிகிறது.
இருபத்தொன்றாம் ச்லோகத்தில், “துக்தாப்திர் ஜனந்யஹமியம்” என்பதில் அவர், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், “தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம்” என்பதில் காவேரி ஆறு கலங்கி ஓடுவதாக அநுபவிப்பதை அடியொற்றுகிறார்.
ஜித பாஹ்ய ஜினாதி மணிப்ரதிமா அபிவைதிகயன்னிவ ரங்கபுரே | மணிமண்டப வபகணான் விததே பரகாலகவி:ப்ரணமே மஹிதான் ||
என்பதில் பட்டர், ஆழ்வார் நியமித்தருளிய கோபுரங்களும் தூண்களும் மண்டபங்களும் பரமவிலக்ஷணமான ஊர்த்வ புண்ட்ராதிகளோடும் எம்பெருமானின் சங்க சக்ர சின்னங்களோடும் திகழ்வதை அருளிச் செய்கிறார்.
நாற்பத்தோராவது ச்லோகத்தில் சந்திர புஷ்கரிணிக்குக் கிழக்கே எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்கள் துதிக்கப் படுகிறார்கள்:
பூர்வேண தாம் தத் வதுதார நிம்ன ப்ரசன்ன சீதா சய மக்ன நாதா: |
பராங்குசாத்யா: ப்ரதமே புமாம்சோ நிஷேதிவாம்சோ தசாமாம் தயேரன் ||
சந்திர புஷ்கரிணிக் கரையிலுள்ள புன்னை மரத்தைப் பற்றிச் சொல்லும்போது பட்டர் சாதிப்பது:
புன்னாக தல்லஜம் அஜஸ்ர சஹஸ்ர-கீதி சேகோத்த திவ்ய-நிஜ-சௌரபமாமநாம: (49)
இம்மரத்தடியிலேயே பூர்வாசார்யர்கள் பலரும் எப்போதும் திருவாய்மொழி அர்த்த விசேஷங்களையே பேசிக்குலாவியபடியால் இம்மரமும் திருவாய்மொழி நறுமணம் பெற்றதாயிற்று.
இப்படி மர நிழலை அழகாகச் சொன்ன மாத்திரத்திலேயே பூர்வர்கள் திருவாய்மொழியின் செம்பொருள்களையே பேசிக் காலம் கழித்தனர் என்றும் காட்டினாராயிற்று.
குலசேகராழ்வார், “கடியரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயாரவென்றுகொலோ வாழ்த்துநாளே” என்கிறார். அரங்கனின் திருக்கண்களில்ருந்து பெருகும் அருள் அமுதத் திவலைகளில் நிற்க மாட்டாமல் ஒரு பிடிப்புக்காக அங்குள்ள திருமணத்தூணைப் பற்றிக்கொள்வேன் என்றார் ஆழ்வார்.
சேஷசாய லோசனாம்ர்த நதிரயாகுலித லோல மானாநாம் |
ஆலம்பமிவாமோத ஸ்தம்பத்வயம் அந்தரங்கமபியாம: || 59
மணத்தூண் என்பதை ஆமோத ஸ்தம்பம் என்றே பட்டர் சாதித்திருப்பதைக் காண்க.
78வது ச்லோகத்தில்
“வட தள தேவகி ஜடர வேத சிர: கமலாஸ்தன சடகோப வாக் வபுஷி ரங்கக்ருஹே சயிதம்“ என்று ஸ்ரீரங்கநாதன் தனக்குறைவிடமாக ஆழ்வார் திருவாக்கைக் கொண்டுள்ளான் என்றார்.
கிரீடசூட ரத்னராஜிராதி ராஜ்ய ஜல்பிகா |
முகேந்து காந்திருன்முகம் தரங்கிதேவ ரங்கினா: ||
என்று 91 வது ஸ்லோகத்தில் பட்டர் ஆழ்வாரின் “முடிச்சோதியாய்” பாசுரத்தை மிக அழகாக வடமொழியாக்கியுள்ளார்.
116வது ஸ் லோகத்தில் “த்ரயோ தேவாஸ்-துல்யா:” என “முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்” எனும் ஆழ்வார் திருவாக்கை அடியொற்றினார்.
ஆழ்வார் திருவாக்குக்கும் பட்டர் திருவாக்குக்கும் உள்ள ஸாம்யம் காண்பதில் நாம் நம்மையே ஹேளனப்பொருளே ஆக்கிக்கொள்வோமித்தனை போக்கி வேறில்லை. பட்டர் திருவாக்கு ஒவ்வொன்றிலும் ஆழ்வார் திருவுள்ளமே உண்டென நம் பூர்வர்கள் வ்யாக்யானங்களால் கண்டு ரஸித்து உணர்வோர் பாக்யசாலிகள் என்றிவ்வளவே கூறலாகும்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/25/dramidopanishat-prabhava-sarvasvam-27-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org