ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதங்களின் உட்பொருள் அறிதல்
மாறுபட்ட விளக்கங்கள்
வேதாந்தத்தின் உட்பொருளைச் சுருக்கமாக விளக்கியபின், ஸ்வாமி க்ரந்தத்தின் மீதியை இரு பகுதிகளாகப் பிரிக்கிறார்: (1) பிற விளக்கங்களை ஆய்வது (2) தம் கருத்தை எடுத்துரைப்பது.
6 முதல் 8 வரையுள்ள பத்திகள் பிற கோட்பாடுகளை சுருக்கமாகக் கூறி அவற்றிலுள்ள முரண்பாடுகளைக் காட்டுகின்றன,
பத்தி 6
1.முதலில் ஸ்ரீ சங்கரர் உள்பட வேறுபல அத்வைதிகளின் ஸித்தாந்தங்கள் கூறப்படுகின்றன,
2.இக்கோட்பாடுடையவர்கள், மேலுக்கு சப்பைக்கட்டாகச் சில கூறி ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் வேறுபாடுகள் பேசும் வாக்யங்களை முற்றாக விட்டு, ஒற்றுமை கூறும் ஸாமாநாதிகரண்ய ச்ருதிகளை மட்டும் தங்களுக்கு ஆதரவாக காட்டுகிறார்கள்.
3.அவர்களுடைய முடிவுகள் இவ்வாறுள்ளன:
- ப்ரஹ்மம் வெறும் ஞானமே. ப்ரஹ்மத்துக்கு குணங்கள் கிடையாது.
- ப்ரஹ்மம் எக்காலத்தும் விடுதலை பெற்றிருக்கும், பிறிதொன்றைச் சாராமல் தானே தோன்றக்கூடியது (ஸ்வயம் ப்ரகாசம்). ஆகிலும், தத்த்வமஸி போன்ற வாக்யங்களால் ப்ரஹ்மம் என்பது ஆத்மாவே (ஜீவாத்மா) என உணர வேண்டும்.
- வேறு ஒரு வஸ்து இல்லாததால், அஞ்ஞானம், பந்தம், மோக்ஷம் யாவுமே இந்த ப்ரஹ்மத்தையே சாரும்.
- சுத்த ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மம் மட்டுமே ஸத்யம். பிற யாவும் – ஆள்பவன் ஆளப்படுபவன் என உள்ள வேறுபாடுகள் – பொய்.
- சில ஆத்மாக்கள் மோக்ஷமடைகின்றன, சில பந்தப்பட்டுள்ளன என்கிற அமைப்பு ஏற்கத்தக்கதன்று.
- சில ஆத்மாக்கள் ஏற்கெனவே மோக்ஷமடைந்து விட்டன என்பது தவறு.
- ஒரே ஒரு சரீரத்துக்கு மட்டுமே ஆத்மா உண்டு ஆனால் அது எந்த சரீரத்தில் உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.
- வேத தாத்பர்யம் போதிக்கும் ஆசார்யர் மாயை, வேத அதிகாரி மாயை, வேதம் மாயை. வேதத்தால் அறியப்படும் வஸ்து மாயை.
- மாயையாகிய வேதத்தை அறிந்தால் இவ்விஷயம் புலப்படும்.
கருத்துரை
அத்வைதிகள் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஐக்கியம் பேசும் வாக்யங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். வேதாந்தம் முதலில் வேற்றுமையை உபதேசித்து விட்டு மறுப்பதாக கொள்கிறார்கள். ஆனால் ஏற்கெனவே அனுபவத்தால் நமக்குத் தெரிந்துள்ள வேறுபாட்டை மறுபடியும் கூறி மறுக்க வேண்டிய நிர்பந்தம் வேதாந்தத்துக்கில்லை. நேர்பட மறுத்திருக்கலாம், அவ்வாறு மறுக்கவில்லை.
ப்ரஹ்மத்துக்கு குணங்கள், இயல்புகள் இல்லை, அது வெறும் உணர்வு மட்டுமே என அத்வைதிகள் நினைக்கிறார்கள். வேதாந்தம் ப்ரஹ்மத்தை ஸகுணமாகவும் நிர்குணமாகவும் பிரித்து அறிந்து கொள்ளக் கற்பிக்கவில்லை. மேலும் இவர்கள் சொல்லும் வெறும் உணர்வு ரூபமாக அது ப்ரஹ்மத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
குணமற்ற ப்ரஹ்மத்தை எல்லா உறவுகளுக்கும் வெளியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். அது எப்போதும் ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வயம் ப்ரகாசமாயும் உள்ளது. ஒரு ஆத்மாவின் முற்றிலும் அப்பழுக்கற்ற நிலையே ப்ரஹ்மம். ப்ரஹ்மம் தவிர வேறில்லாததால், பந்தம் மோக்ஷம் என்பன எல்லாவற்றையுமே அந்த ப்ரஹ்மம் ஒன்றே அநுபவிக்கிறது. ப்ரஹ்மம் தவிர வேறொன்றில்லாததால் ஒரு ஆத்மா கட்டுண்டுள்ளது, மற்றொன்று மோக்ஷம் அடைந்துள்ளது, அல்லது சில பெருமுனிவர்கள் மோக்ஷம் பெற்றனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அத்வைத ப்ரஹ்மத்துக்கு குணங்கள் இல்லை, மோக்ஷ தசையில் அது ஒன்றைத் தவிர வேறில்லை என்பதால் எவருக்கும் மோக்ஷம் இல்லை. அல்லது ப்ரஹ்மமே ஏதோ ஒரு வடிவில் கட்டுண்டிருந்தது, பிறகு மோக்ஷமடைந்தது எனல் ஆகும். ப்ரஹ்மத்தை நாம் நோக்கும் கோணத்தைப் பொறுத்தது இது.
மோக்ஷத்துக்கு வழியும் மாயையே
ப்ரபஞ்சம் முழுதும் மாயை. எனவே உண்மையில் வேறுபாடுகளில்லை, கற்கும் மாணவன் மாயை, வேதமும் அதன் பொருளும் மாயை, கேட்பவன் கேள்வி ஞானம் மாயை, கற்பிப்பது கேட்பது கல்வியின் கருத்து யாவும் மாயை, அத்வைதம் உணர்ந்த ஆசார்யருக்குக் கற்பிக்க ஏதுமில்லை ஏனெனில் அவருடைய ஆத்மாவைத் தவிர வேறில்லையே! வேறுபாட்டைத் தவிர்க்க எல்லாக் கர்மங்களிலிருந்தும் ஸந்யஸித்தவர், இனி வாழ்நாள் முழுதும் குரு சிஷ்யன் எனும் த்வைதத்தையே (வேறுபாட்டையே) நினைத்து இருக்கவேண்டும்!
ஒருமையில் இறங்குதல்
அத்வைதத்தை முறையாகக் கற்றபின், தனது அனுபவத்துக்கு வெளிப்படும் எல்லா சேதன அசேதன பொருட்களும் மாயை எனும் நிலையில் வாழவேண்டும். அப்போது தன்னுடைய சரீரம் மட்டுமே உணர்வோடுள்ளதாயும் பிற யாவும் உணர்வற்றன என்றும் தோன்றும். ஒவ்வொரு அத்வைத சீடர்க்கும் இதே நிலை என்பதால் ஒருவருக்கும் தம்மைத் தவிர பிறர்க்கு உணர்வுண்டு எனத்தோன்றாது. எனக்கு நீ மாயை, உனக்கு நான் மாயை என்கிற வேடிக்கையான நிலைதான்.
பலபடிப்பட்ட ஸத்யத்தின் முரண்
இக்கால அத்வைதிகள் இம்முரண்பாட்டை ஒருவாறாக நிர்வஹிக்க எண்ணி, ஸத்யத்தை ‘வ்யாவஹாரிகம்’, ‘பாரமார்த்திகம்’ என்று இரு நிலைகளில் எப்போதும் வழங்குகிறார்கள். இது வெறும் சொல் விளையாட்டே. குணங்கள் ஏதும் இல்லாத வஸ்து ஸத்யமாகக் கூட இருக்க முடியாது. ஸத்யம் என்பதே அனுபவத்தால் உணரப்படும் ஒரு பண்பு தான். அது ஸத்யம்-பொய் என்கிற இரட்டையைச் சேர்ந்தது தானே! குணங்கள், வேறுபாடுகள், இரட்டைகள் – இவற்றைக் கடந்த தத்துவம் ஸத்யத்தையும் கடந்து ஸத்யமாகக் கூட விளங்க முடியாது.
ஸத்யத்தின் நிலைகள் எவ்வாறு தாங்கப்படுகின்றன? வ்யாவஹாரிக நிலையில் தான் தாங்கப்படுகின்றனவாயின், அந்த நிலையைப் பொய்யென்னும் போது ப்ரஹ்மமும் பொய் என்று வழங்க வேண்டி வரும். பாரமார்த்திக நிலையிலும் பொருந்தாது; அங்கு தான் வேறுபாடுகளே இல்லையே! அப்போது, இவ்விரு சாத்தியங்களைத் தாங்க வேறொரு ஸத்யம் தேவைப்படுகிறது. இது முரண்.
இதே போல், அறிவு என்பதும் அறிவு-அறியாமை என்னும் இரட்டையைச் சார்ந்ததே. எல்லையின்மையும் எல்லையுடைமை-எல்லையின்மை என்னும் இரட்டையைச் சார்ந்தது. எல்லா வேறுபாடுகளையும் கடந்த தத்துவம் அறிவாகவும் எல்லையற்றதாகவும் இருக்க முடியாது. அத்வைதிகள் குணங்களை மறுத்து விட்டு, ஒரு சில வேறுபாடுகளை மட்டும் இசைகிறார்கள். இதுவும் முரண். அறிவில்லாத பொருளல்லாதது அறிவுள்ள பொருள் தான். எல்லைப்படும் பொருளல்லாதது, எல்லையில்லாதது தான். ஒன்றை இல்லை செய்வதால், இரட்டையின் மற்றொன்றே நிலைநிறுத்தப் படுகிறது. குணமில்லாத ப்ரஹ்மம் யார் அறிவுக்கும் எட்டாத ஒரு கற்பனைப்பொருள் ஆகிறது. அத்வைத ப்ரஹ்மமே மிகப்பெரிய மாயை.
பத்தி 7
- பாஸ்கரரின் பேதாபேதம் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
- ப்ரஹ்மம் குறைகளற்றதாய்ச் சொல்லபட்டாலும், ஆத்மாவோடு ஒற்றுமை ‘தத்வமஸி’ போன்ற வாக்கியங்கள் சொல்வதால், ப்ரஹ்மமே சில காரணங்களால் ஆத்மாவாக மாறி மாற்றமும் துன்பமும் அடைகிறது. அதனால் பந்த மோக்ஷங்களுக்கு ஆளாகிறது.
கருத்துரை
அத்வைத மாயை ஸித்தாந்தத்தில் உள்ள முரண்களை பாஸ்கரர் நன்குணர்ந்திருந்தார். ஆகையால் உண்மையான காரணங்களால் ப்ரஹ்மத்தின் மாறுதலை விளக்கினார். இவர் கொள்கையில் மாயையால் வரும் குறைகள் இல்லையே ஆகிலும், ப்ரஹ்மத்துக்கு தோஷங்களை நிரூபிக்கும் குறை உண்டு.
பத்தி 8
- யாதவப்ரகாசர் மதம் விவரிக்கப்படுகிறது,
- இவரும் மேற்சொன்ன பிறரைப்போல் ஐக்கியம் பேசும் சொற்களால் மயங்குகிறார். இவர் கொள்கையில், ப்ரஹ்மம் உயர்பண்புகளுடையது ஆகிலும், ஆத்மாவாகி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரமாகி ஸ்வர்க்க நரகாதிகளை அநுபவித்து பின் மோக்ஷமடைவதாகச் சொல்லப் படுகிறது.
- ப்ரஹ்மத்தின் ஸ்வபாவமே மற்றத்தினின்றும் வேறுபட்டும், ஒருபடிப்பட்டும் இருப்பதாகும்.
- ப்ரஹ்மம் ஆகாசம் போன்றவற்றுக்குத் தக்க விகாரம் அடையும்.
கருத்துரை
பாஸ்கரரின் மதத்தில் ப்ரஹ்மம் சில காரணிகளால் பாதிக்கப் படுகிறது. இவை ப்ரஹ்மத்துக்குப் புறம்பானவையா? அல்லது உட்பட்டவையா? என்னும் கேள்வி பிறக்கிறது. புறம்பானவை என்றே கொள்ள வேண்டும். ஆயின், ப்ரஹ்மத்தைக்காட்டிலும் வேறுபட்ட, அதைவிட உயர்வான தத்துவம் உண்டு என்றாகி விடுகிறது. இக்குறையைக் களைய யாதவப்பிரகாசர், ப்ரஹ்மம் தன் ஸ்வபாவத்தாலேயே மாறுதலுறுகிறது, வெளிக்காரணிகளால் அல்ல என்று கூறுகிறார்.
அத்வைதக் கொள்கை முதல் யாதவப்பிரகாசர் கொள்கை வரை சிந்தனையின் ஒரு விதமான போக்கு உணரமுடிகிறது. ப்ரஹ்மத்தைக் குறைகளினின்றும் காப்பாற்ற அத்வைதிகள் மாயையைப் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இது பல முரண்பாடுகளுக்கு இடமளிக்கிறது. பாஸ்கரர் முரணில்லாத கொள்கை வகுக்க, ப்ரஹ்மத்துக்கு வெளியில் சில காரணங்களைக் கொள்கிறார். இதனால், உண்மையில் ப்ரஹ்மம் சிறிது மாசுபடுகிறது. யாதவபிரகாசர் பாஸ்கரரின் கொள்கையில் உள்ள சில முரண்பாடுகளைக் களைய அக்காரணங்களும் ப்ரஹ்மத்தின் ஸ்வபாவத்திலேயே இருப்பதாகக் கல்பித்து, ப்ரஹ்மத்தைக் குறைகளுக்கு இருப்பிடமாகவே மாற்றி விடுகிறார்! முரண் பிறவாமல் கொள்கை வகுத்தலும், வேதாந்தங்களுக்கு இசைந்த ப்ரஹ்மத்தின் பெருமை உரைத்தலும் மிகக்கடினமான காரியங்களாக தோன்றுகின்றன.
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/04/vedartha-sangraham-5-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org