ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதங்களின் உட்பொருள் உணர்தல்
அத்வைத விமர்சம்
இனி அத்வைத விமர்சமும், அதன் பின் பேதாபேத தத்வத்தின் இரு வகுப்பார் பற்றிய விமர்சங்களும் தொடரும்.
பத்தி 9
முதலில் அத்வைதம் பற்றித் தரப்படும் விளக்கங்களுக்கு மிக்க எச்சரிக்கையோடு அறிஞர்கள் அதிலுள்ள கஷ்டங்களைத் தெரிவிக்கிறார்கள்.
“தத்த்வமஸி”யில் உள்ள “தத்” எனும் சொல் ப்ரஹ்மனைக் குறிக்கும். இந்த வாக்கியம் ப்ரஹ்மமே ஜகத் ஸ்ருஷ்டி, ரக்ஷணம், ஸம்ஹாரம் மூன்றையும் ஸங்கல்ப மாத்ரத்தால் செய்யவல்லது என்று கூறும் கட்டத்தில் வருகிறது. “ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய” (அந்த ப்ரஹ்மம் தான் பலவாக ஸங்கல்பித்தது, என்று தொடங்கி) முதல் “ஸந் மூல: ஸோம் யே மா ஸர்வா: ப்ரஜா: ஸதாயதனா: ஸத் ப்ரதிஷ்டா:” என்று முடிகிறது. இந்த உலகம் முழுதும் ப்ரஹ்மத்தை மூலமாகவும், இருப்பிடமாகவும், அடிப்படையாகவும் கொண்டுள்ளது என்று பொருள்.
மற்ற வாக்கியங்கள் ப்ரஹ்மன் ஸர்வ வ்யாபி, ஸர்வ சக்தன், ஸர்வஜ்ஞன், எல்லாவற்றையும் தன் இயல்வாக உடையவன், தனக்கு நிகரோ தன்னை விஞ்சியவனோ அற்றவன், ஸ்வயம் பரிபூர்ணன், ஸத்ய ஸங்கல்பன் என்கின்றன, இவ்வாக்கியங்கள் கூறும் ப்ரஹ்மன் அனந்த கல்யாண குணங்கள் நிரம்பியவர். “அபஹதபாப்மா” போன்ற சொற்கள் இவர் அப்பழுக்கற்றவர் என நமக்கு அறிவுறுத்துகின்றன,
இவை அத்வைத நிலைப்பாட்டுக்கு ஒவ்வா
விமர்சனங்கள்
அத்வைதத்தின் நிலைப்பாடு வேத அபிப்ராயங்களோடு முரண்படுகின்றது மூன்று வழிகளில்: 1. தத்த்வமஸி என்பது ப்ரஹ்மத்துக்கும் உலகுக்கும் உள்ள காரண கார்ய உறவைக் குறிப்பதே தவிர, தனி ஆத்மா பரமாத்மாவின் ஐக்யத்தைக் குறிப்பதன்று. 2. ப்ரஹ்மன் நிர்குணன் எனும் கருத்து வேதங்களில் உள்ள ப்ரஹ்மத்தின் எண்ணற்ற கல்யாண குணங்களைப் பற்றிய வாக்கியங்களைப் பொருளற்றதாக்கிவிடும். 3. ப்ரஹ்மன் குறைகளற்றவன் எனும் வேதத்தின் கருத்தை, ப்ரஹ்மனும் ஆத்மாவும் ஒன்றெனும் வாதம் பொருளற்றதாக்கிவிடும், ஏனெனில் ஆத்மாவுக்குள்ள அளவற்ற குறைகளை ப்ரஹ்மன் மீது ஏற்றிவிடும்.
பத்தி 10
அத்வைதியின் பதில்
ஒன்றை அறிவதன் மூலம் யாவற்றையும் அறிய முடியும் என இவ்விஷயம் தொடங்கிற்று. மண், குடம் எனும் எடுத்துக்காட்டுகளால் காரணமே மெய், பிற விளைவுகள், மாறுதல்கள் உண்மையல்ல. காரண ப்ரஹ்மம் உள்ளும் புறமும் எல்லா வேறுபாடுகளும் அற்றதாக, “ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்” எனும் வாக்யத்தால் சொல்லப்பட்டது. அதாவது, முதலில் ஸத் மட்டுமே இருந்தது, அதற்கு இரண்டாவதாக ஒன்றில்லை என்பது இதன் பொருள்.
“ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம”, “நிஷ்கலம்”,”நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்சனம்”, “விஞ்ஞானம்”, “ஆனந்தம்” ஆகிய யாவும் ப்ரஹ்மம் ஒரு குணமுமற்றது என்பதையே வலியுறுத்துகின்றன,
ஸத்யம் ஆனந்தம், எல்லையற்றது என்பன குணங்களற்ற ப்ரஹ்மத்தைக் குறிக்குமாயின் இவை யாவும் ஒரே பொருள் கொண்ட பல சொற்கள் எனும் அபத்தம் உண்டாகும். இச்சொற்கள் யாவும் உடன்பாடாக வன்று, எதிர்மறையாக, மாறுபாட்டை மறுப்பனவாக அர்த்தம் கொள்ளப்பட வேண்டும். ஸத்யம் என்பது ப்ரஹ்மம் பொய் அன்று என உணர்த்துகிறது. எல்லையற்றது என்பது ப்ரஹ்மம் எல்லைகளுக்குட்பட்டது அன்று என உணர்த்தும். இவை யாவும் ஒரோ குணத்தை மறுப்பதற்காகவே கொள்ளப் பட வேண்டும்.
விமர்சனங்கள்
அத்வைதி இவ்விஷயத்தில் காரண தத்துவத்தை ஒப்புக்கொண்டு விளக்க முயற்சி செய்கிறார். ஆனால் இம்முயற்சியில் அவர் காரணம் மட்டுமே உண்மை காரியம் உண்மையன்று என்றொரு கருத்தை முன் வைக்கிறார். இவ்விளக்கத்தின்படி அவர் இவ்வுலகம் முழுதும் உண்மையன்று, வேறுபாடுகள், குணங்கள் உண்மையல்ல என்கிறார். ப்ரஹ்மம் பற்றி உடன்பாடாக ஏதும் சொல்ல முடியாது, வேதத்தில் வரும் உடன்பாட்டு வாக்கியங்கள் அவை சொல்லும் குணங்களுக்கு மாறுபாடான பொருள் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.
பத்தி 11
இதற்கு இராமானுசரின் விடை
அத்வைதியின் காரணமே உண்மை, விளைவு/கார்யம் உண்மையன்று என்பது ஆதாரமற்றது, ப்ரஹ்மத்தை (காரணம்) அறிவதன் மூலம் எதையும் (கார்யம்/விளைவு) அறியலாம் எனும் கூற்றுக்கு முரணானது.
(1) விளைவுகள் உண்மை அல்லனவாகில் அவற்றை அறிந்து பயனில்லை, (2) உண்மையை அறிந்து கொள்வதன் மூலம் உண்மை அல்லாதவற்றை அறிய முடியும் என்பது தர்க்க பூர்வமானதன்று, உண்மை, உண்மை-அற்றது இவ்விரண்டுக்கும் ஸாம்யமில்லை.
இந்த வேத வாக்கியத்தை சரியான முறையில் புரிந்துகொள்ள ப்ரஹ்மமே எல்லாவற்றுக்கும் ஆத்மா என்பதை ஏற்க வேண்டும்.
விமர்சனங்கள்
விளைவுகள் உண்மையல்ல எனும் அத்வைத வாதத்தை ஆசிரியர் மறுக்கிறார். “ப்ரஹ்மம் ஒன்றை அறிவதன் மூலம் எல்லாம் அறியப்படுகின்றன என்பது காரணத்தை அறிவதன் மூலம் விளைவை அறியலாம் “ என்பதை மறுப்பதாய் உள்ளது என்கிறார்.
விளைவுகள் உண்மை அல்ல எனில், அவற்றை அறியத் தேவையே இல்லை, ஏனெனில் அவை இல்லை! உண்மையில் இல்லாத ஒன்றை ஒருவர் எப்படி அறிய முடியும்? உள்ளதும் இல்லாததும் ஒன்றோடொன்று ஏதோ ஒருவகையில் தொடர்பு படாவிடில் அவை பற்றிய உண்மை அறிவு எப்படி ஏற்பட முடியும்? உண்மை, பொய் இரண்டுக்கும் ஓர் உடன்மறையான தொடர்புண்டு என்பது தர்க்கத்துக்கு மாறானது.
இவ்வாக்கியத்துக்குச் சரியான விளக்கம், குடம் போன்றவற்றுக்கு மண் போல ப்ரஹ்மம் யாவற்றுக்கும் அந்தராத்மாவும் உட்பொருளுமாகும் என்பதே. காரணம், விளைவு இரண்டும் உண்மைகளே. இதை ஏற்றுக்கொண்டால், ப்ரஹ்மம் உலகுக்கு அந்தராத்மா என்பது பொருந்தும்.
பத்தி 12
ச்வேதகேதுவின் தந்தை தம் மகனைக் கேட்டார் ”நீ த்ருப்தனாயும் கர்வத்தோடும் காணப் படுகிறாய். நீ அந்தக் கட்டளை(ஆதேசம்)யையும் அறிந்துகொண்டாயா? ஆதேசம் பற்றி ஆசார்யர்களைக் கேட்டாயா?”. ஆதேசம் என்பது எல்லாவற்றையும் கட்டுப் படுத்துவது. கட்டளை எனலாம். ப்ரஹ்மமே ஆதேசம். ஏனெனில் அதுவே உலகைக் கட்டுப்படுத்துகிறது. அவனே, “ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம்” எல்லாவற்றுக்கும் தலைவன். “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸானே கார்கி சூர்யா சந்த்ர மாஸௌ வித்ருதௌ திஷ்டத:”. கார்கி! இந்த அழிக்கமுடியாத தலைவனின் ஆதரவில் ஸூர்யனும் சந்த்ரனும் நிற்கின்றனர். “ஏகமேவ அத்விதீயம்” என்பதில் ஏகம் என்பது உலகுக்கு அது ஒன்றே காரணம் என்பது, அத்விதீயம் என்பதில் உலகுக்கு ப்ரஹ்மம் தவிர மற்றொரு காரணம் இல்லை என்பதும் தெளிவு,
மேலும் தந்தை உத்தாலகர் ச்வேதகேதுவைக் கேட்கிறார் ”இவ்வுலகுக்கு மூலப் பொருளான தலைவனைப் பற்றி அறிந்தாயா? அந்த ப்ரஹ்மனைப் பற்றிக் கேட்டால், கேளாதன எல்லாம் கேட்டதாகும். அவனை நினைத்தால் நினையாதன எல்லாம் நினைத்ததாகும். அவனை அறிந்துகொண்டால் அறியாதன எல்லாம் அறிந்தன ஆகும்.
உலகுக்கு மூலமும், உட்பொருளும், உலகின் அழிவுக்குக் காரணமும். எங்கும் நிறைந்ததும் பரிபூர்ணமானதும் எல்லைகளற்றதும் ஸத்ய ஸங்கல்பனும் அளவற்ற கல்யாண குணங்களுள்ளவனும் ஆன ப்ரஹ்மனை ச்வேதகேது அறிந்துகொண்டானா என அறிவதே தந்தையின் நோக்கம்.
பத்தி 13
ப்ரஹ்மனே வெவ்வேறு வடிவங்களில் மாறுபாடுகளில் விளைவுகளாய்க் காணப்படும் எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுள்ள அறிவற்றன யாவற்றையும் தன் உடலாயும் ஸூக்ஷ்ம நிலையில் யாவற்றிலும் தானேயுள்ள ப்ரஹ்மனே அனைத்தையும் ஸ்தூல வடிவாகக் கொண்டுள்ளான் என்பதால் ப்ரஹ்மனை அறிவதால் அனைத்தையும் அறிந்ததாகும், அவனைப்பற்றிக் கேட்டால் அனைத்தையும் கேட்டதாகும் என உத்தாலகர் கூறுகிறார்.
பத்தி 14
ஆனால் விவரமறியாத பிள்ளை ச்வேதகேது, தந்தையின் உட்கருத்தை அறிந்திலன், ப்ரஹ்மனிலிருந்து வேறான உலகத்தை ப்ரஹ்மனை அறிவதின் மூலம் எவ்வாறு அறிய முடியும் என அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, “மரியாதைக்குரிய தந்தையே! ஆதேசம் என்பது என்ன” என்று கேட்கிறான்.
விமர்சனங்கள்
தந்தைக்குக் காரணம் விளைவு (கார்யம்) இரண்டில் வேறுபாடில்லை என்பது தெரியும். ப்ரஹ்மனில் ஸூக்ஷ்ம வடிவிலுள்ளவ சேதன அசேதனங்களே ஸ்தூல வடிவெடுக்கின்றன. எல்லா அறிவுள்ள அறிவற்ற பொருள்களும் ப்ரஹ்மத்தின் உடலே. சரீரமே. இவ்வுலகின் உயிராய் ஆத்மாவாய் இருப்பவன் நியாமகன் ஆதேசம் ஆக்குபவன் ப்ரஹ்மனே. அவனே அனைத்துக்கும் நியந்தா.
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/05/vedartha-sangraham-6-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org