வேதார்த்த ஸங்க்ரஹம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 6

வேதங்களின் உட்பொருள் அறிதல்

அத்வைத விமர்சம்

பத்தி 15

தந்தை தம் மனத்தில் உள்ளதைத் தம் மகனுக்குத் தெளிவுபடுத்த முற்படுகிறார். ப்ரஹ்மத்தின் உண்மை இயல்வானது உணர்வுமயமாயிருப்பது, அளவற்ற பெருமையுடனிருப்பது. அது உண்மை போன்ற அளவிறந்த மங்கள குணங்களுக்கு இருப்பிடம்,  அது எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாதது. பெயர்கள் வடிவங்களற்ற அறிவுள்ள, அறிவற்ற சேதன அசேதனங்களை அவற்றின் ஸூக்ஷ்ம நிலையில் அது தன் சரீரமாகக் கொண்டுள்ளது, தனது லீலையில் ஆசையினால் அது தன் சரீரத்தையே நிற்பனவும் அசைவனவுமான பலவாக்கிக்கொள்கிறது.  ப்ரஹ்மத்தை அறிந்தால் யாவற்றையும் அறியலாம். இவ்விஷயத்தைத் தெளிவுறுத்தத் தந்தை உலகியலில் காணும் காரண கார்ய சம்பந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

கருத்துரைகள்

இவ்வுலகில் நாம் காரணம் கார்யத்திலிருந்து வேறுபட்டதில்லை எனக் காண்கிறோம். காரணமே ஒரு மாறுதல் அடைந்து கார்யமாகிறது. இந்தக் காரியமே ஒரு மாறுதலடைந்து காரணமாகிறது, முன் மாறுதலை ஸ்ருஷ்டி, படைப்பு என்கிறோம்; பின்னதை அழிவு, நாசம் என்கிறோம். ப்ரஹ்மம் தன்னில் நிறைவுடையது, அதற்குத் தன சரீரத்தை மாற்றிக் கொண்டு அடையவேண்டிய பயன் ஏதுமில்லை. ஆகவே இந்த நடவடிக்கை, லீலை அல்லது விளையாட்டு எனப்படுகிறது.

பத்தி 16

ஒரே களி மண்ணிலிருந்து குடம், ஜாடி என வேறு பல வடிவுகளைச் சமைக்கலாம். ஆனால் அந்தக் களிமண் மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் அந்தக் களிமண்ணுக்குத் தரப்படும் பானை, குடம், ஜாடி எனும் வேறு  வேறு பெயர்களே அன்றி வேறல்ல.

பத்தி 17

ஆயினும், மகனுக்கு உலகில் காணில் வெவ்வேறு பொருள்களுக்கு ப்ரஹ்மமே காரணம் என்பது விளங்கவில்லை. ஆகவே, “தந்தையே! எனக்கு இதை நீரே விளக்கவேணும்” என்றான். எல்லாவற்றிலும் இருப்பதும், எல்லா ஆற்றலும் உள்ளதுமான ப்ரஹ்மமே காரணம் என விளக்க, தந்தை, “இது ஒன்றே முதலில் ஸத் என்று உள்ளதாக இருந்தது, இதை விட்டால் வேறொன்றுமே இரண்டாவதாக இல்லை” என்றார்.  

”இது” ப்ரபஞ்சத்தையும், “முதலில்” என்பது ஸ்ருஷ்டிக்கு படைப்புக்கு முன்பான காலத்தையும் குறிக்கிறது. அப்போது ப்ரபஞ்சம் வடிவங்களாலும் பெயர்களாலும் அறியப்பட முடியாதிருந்தது. அதாவது, அது, “இருத்தல்” (ப்ரஹ்மம்) என்பதைத் தன் உயிராகக் கொண்டிருந்தது. “ஒன்றே ஒன்று” என்பதால் அதைத் தவிர வேறு காரணப் பொருளும் (உபாதானம்)  இப்ரபஞ்சத்துக்கு இல்லை என்றாயிற்று. “வேறு இரண்டாவதாக ஒன்று இல்லை” என்றதால் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு வேறு ஒரு ஸ்ருஷ்டி காரணமும் (நிமித்தம்) இல்லை என்றாயிற்று.

பத்தி 18

“எதைக் கேட்டால் எல்லாவற்றையும் கேட்டதாகுமோ அந்த ஆதேசத்தை நீ கேட்டாயா?” என்று தந்தை கேட்பதிலிருந்து அவர் உள்ளத்தில் உள்ளது தெளிவாகிறது. “அது, நான் பல ஆகுவேனாக, நான் பல்கிப் பெருகுவேனாக என ஸங்கல்பம் செய்தது” என அவர் சொல்வது இவ்விஷயத்தை மேலும் வலியுறுத்துகிறது.

இங்கு குறிக்கப்படும் வ்யக்தி எங்குமுள்ள, எல்லா ஆற்றலும் மிக்க ஸத்ய ஸங்கல்ப சக்தியுள்ள பரப்ரஹ்மம். ப்ரஹ்மம் எப்போதுமே தன்னிறைவுள்ளவனாதலால் ஒரு நோக்கமோ லாபமோ இல்லாத லீலையே ஸ்ருஷ்டி. ப்ரஹ்மம் தான் பல ஆவதாக ஸங்கல்பம் செய்தது, இந்த ஸங்கல்பம் இப்ரபஞ்சம் முழுதும் பல்வேறு சேதன அசேதனங்களால் நிறைக்கப் படவேணும் என்று. இதற்கே அதன் ஸங்கல்பம். ஆகவே அது பல்கிப் பெறுக முடிவெடுத்தது. அது தன்னில் ஒரு பகுதியிலிருந்து ஆகாசம் முதலிய அடிப்படை பூதங்களை உருவாக்கியது. பின் ப்ரஹ்மம் “நான் இவ்வடிப்படை பூதங்களினுள் ஜீவாத்மாக்களின் மூலம் புகுந்து பல தனி வடிவுகளும் பெயர்களும் உடைய பொருள்களும் ஆவேன்” என முடிவெடுத்தது. இதனால் தனி ஓர் உயிர் அல்லது பொருளின் உட்பொருளாக ப்ரஹ்மமே இருப்பது தெரிகிறது. மேலும், ப்ரஹ்மத்தின் சரீரமான இந்தத் தனி ஆத்மா ப்ரவேசிப்பதாலேயே ப்ரபஞ்சத்திலுள்ளன யாவும் பெயர்களும் வடிவங்களும் பெறுகின்றன என்றும் தெரிகிறது.

கருத்துரைகள்

இவ்வாறு ப்ரஹ்மம் “நான் பல ஆவேன்” என்று முடிவெடுத்ததாலும், ப்ரஹ்மம் தானே பல ஆயிற்று என்றதாலும் தந்தை தம் மனத்தில் ப்ரஹ்மமே  ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி காரணமும் (நிமித்தம்) , பொருள் காரணமும் (உபாதானம்) என்று உணர்கிறார் எனத்தெரிகிறது. சாந்தோக்யத்தின் அடுத்த மேற்கோள்கள் ஸ்ருஷ்டி எவ்வாறு நடந்தது எனக் காட்டும்.   

பத்தி 19

தனி ஆத்மா ப்ரஹ்மத்தின் சரீரமாகச் செயல்படுவதால் அது ப்ரஹ்மத்தைத் தன் ஆத்மாவாக உடையது எனலாம். தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என வெவ்வேறு நிலையில் இருப்பதால் இவை யாவும் ப்ரஹ்மத்தின் ப்ரகாரங்களே. ஆகவே மரம், செடி, கொடி, கல், மலர், பானை, என யாவும் அந்தந்த வடிவுகளை மட்டுமன்றி அவற்றுள் உள்ள ப்ரஹ்மத்தின் தன்மையையும் காட்டுவன. ஆகவே அவை யாவற்றையும் ப்ரஹ்மமே தலைவனாகி உளவாக்குகிறான், ஆக எல்லாப் பெயர்களும் ப்ரஹ்மத்தையே சுட்டும்.

பத்தி 20

இவ்வாறாக, ப்ரபஞ்சம் முழுமைக்கும் ப்ரஹ்மமே காரணமாகவும், வஸ்துவாகவும் உள்ளது. ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தால் ஆகி, அவனால் தாங்கப் பட்டு, அவனால் கட்டுப் படுத்தப் படுகிறது. “மகனே! எல்லாவற்றிற்கும் மூலம், இருப்பிடம், ஆதாரம் ப்ரஹ்மமே“ என்றதன் பொருள் இதுவே. காரண கார்ய சம்பந்தத்தைக் காட்டி, தந்தை, “இந்த ஆத்மாக்கள் யாவும் ப்ரஹ்மத்தைத் தம் ஆத்மாவாக உடையவை, ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தைத் தன் ஆத்மாவாக உடையது, ப்ரஹ்மமே யாவற்றுக்கும் ஆத்மா, எல்லா ஆத்மாக்களுமே அதன் சரீரங்கள்” என்கிறார். “நீ அது ஆகிறாய்” என்பதில் நீ என்பது தனி உயிராகிய மகனைக் காட்டும். பிரபஞ்சம் முழுதும் ப்ரஹ்மம் என்பதால் தனி ஆத்மாவும் “ப்ரஹ்மாத்மகம்” என்றதாயிற்று. ஆகவே அதுவும் பிரஹ்மம் ஆகிறது.

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/06/vedartha-sangraham-7-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

Leave a Comment