வரதன் வந்த கதை 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 1

ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் (ஸரஸ்வதி) பெயரைச் சொல்லாமல் , திருமகளே சிறந்தவள் என்று நான் சொன்னதால் அவள் கோபித்துக் கொண்டாள். அதனால் என்னை விட்டு அகன்றாள். அது புரிகிறது. ஆனால் தன்னாற்றின் (ஸரஸ்வதி நதி) கரையில் தவமியற்ற வேண்டிய காரணம் என்ன ?

கோபித்துக் கொண்டால் தவம் செய்ய வேண்டுமோ?! தவத்திற்கு யாது காரணமாயிருக்கும்? விடை தெரியாது தவித்தான் நாபி ஜன்மன் (உந்தியில் உதித்தவன் – பிரமன்)

நீண்ட யோசனைக்குப் பிற்பாடு விடை கண்டுபிடித்தான் விரிஞ்சன் !

முன்பு ஸரஸ்வதி தன்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது !

ஒரு முறை பிரமனும் ஸரஸ்வதியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கங்கை நதியைப் பற்றின பேச்சு வரவும் , பிரமன் கங்கையைக் கொண்டாடவும், நாமகள் முகம் வாடத் தொடங்கினாள் !

“எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினிலெல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையை” நான்முகன் கொண்டாடுவது கண்டு வருத்தமே ஏற்பட்டது ஸரஸ்வதிக்கு !

(ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களையும் நொடிப்பொழுதில் கழுவ வல்ல / போக்க வல்ல பெருமையுடையது கங்கை – அந்நதியின் பெயர் சொன்னாலே நம் தீவினைகள் தொலந்து போகுமாம்)

கங்கையைக் கொண்டாடினாலும் கோபம் !

திருமகளைக் கொண்டாடினாலும் கோபம் !

ஸரஸ்வதி எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்ளும் குணமுடையவள் என்றெண்ண வேண்டாம் !

{பொதுவாகவே, பெரும்பாலும் பெண்கள் தன்னையொழிந்த (தன்னைத் தவிர) மற்ற பெண்களின் ஏற்றங்களை/பெருமைகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்}

பரமன் நம்மை அநுக்ரஹிக்க , வரதனாய்க் கச்சியில் நின்றிட, ஸரஸ்வதியைக் கொண்டு ஆடும் ஆட்டம் இது !

இப்படித்தானே கைகேயியின் மனதை மாற்றித் தன் பெருமைகளை உலகறியும்படிச் செய்து கொண்டான்..

அர்ஜுனனுக்கு கலக்கத்தைத் தானே விளைவித்ததும் அவனுக்கு கீதோபதேசம் செய்வதற்காகத் தானே !

ஆகவே இதுவும் நம் நன்மையின் பொருட்டே !

ஸரஸ்வதியின் வருத்தத்திற்குக் காரணம் இது தான் !

வடக்கே பதரீகாச்ரமத்துக்கும் மேலே நாம் (ஸரஸ்வதி நதி) பெருகி ஓடுகின்றோம் ! மற்ற நதிகளுக்கு இல்லாத பெருமை நமக்கு உண்டு .. ஆம் ! நம் நீரோட்டம் சிலவிடங்களில் கண்ணுக்குப் புலனாகும் ! சிலவிடங்களில் கண்களுக்குத் தெரியாமல்  “அந்தர்வாஹினி” யாய்ச் (வெளியில் தெரியாமல் பூமிக்கடியில் வெள்ளமிடுதல்) செல்லும் !

( க்வசிதுபலக்ஷிதா க்வசித் அபங்குர கூட கதி: – தயா சதகம் – ஸ்ரீ தேசிகன்)

இப்பெருமைகளெல்லாம் கங்கை முதலான நதிகளுக்கு உண்டோ??

ஆனாலும் என் கணவர் உள்பட அனைவரும் கங்கை நதியின் பெயரினைக் கேட்ட மாத்திரத்தில் தலைகளுக்கு மேலே கரம் குவிப்பதும், ஜய ஜய என்று கோஷமிடுவதும் .. இப்பெருமைகளொன்றும் தனக்கில்லையே என்று மிகத் தளர்ந்தாள் நான்முகன் கிழத்தி !

வேதங்களிலும் மஹாபாரதம் போன்ற இதிஹாஸ புராணங்களிலும் போற்றப் பட்டிருக்கும் புண்ணிய நதி தான் ஸரஸ்வதி) அவளே காஞ்சியில் வேகவதி ஆனாள் என்பது மேலே கதையில் வரும்.

வாசகர்களுக்கு இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தி !

இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான ” சிந்து சமவெளி நாகரிகம் ” என்பது உண்மையில் ஸரஸ்வதி நதி நாகரிகமே !!!!

ஆம் !! ஸரஸ்வதி (நதி)யின் கரையில் உருவான இந்த நாகரிகம் தான், கொஞ்சம் கொஞ்சமாக கங்கை நதிக் கரையை நோக்கிச் சென்றதாக ஸமீபத்திய புவியியல் ஆய்வுகள் சொல்கின்றன !!

அப்படியெனின் ஸரஸ்வதியின் கோபம் நியாயம் தானே .. நாகரிகமே தன்னிடமிருந்து தான் கங்கைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது என்றால் , தான் கங்கையை விடச் சிறந்தவள் தானே என்பது அவள் முடிவு !

பிரம்மா பொறுமையாக பதிலளித்தார் !

## வாசகர்களுக்கு ..

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள் இங்கே கொடுக்கப்பட்டது ஒரு கூடுதல் தகவல் மட்டுமே !!

(நாகரிகமே தன்னிடமிருந்து தான் கங்கைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது என்றால், தான் கங்கையை விடச் சிறந்தவள் தானே என்பது அவள் முடிவு !)

ஸரஸ்வதி கோபித்துக் கொண்ட தருணத்தில் இந்த நாகரிகங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டு ஆய்வுகளும் ஸரஸ்வதி நதிக்குப் பெருமை சொல்வது போல் உள்ளதை, ஒரு சுவைக்காகவே இவ்விடத்தில் சேர்த்துள்ளேன் !

மொத்தத்தில் தான் கோபித்துக் கொண்ட அன்றும் சரி ; நாகரிகத்தை (கங்கைக் கரைக்கு) வழங்கிய பிற்காலத்திலும் சரி; தானே உயர்ந்தவள் என்று ஸரஸ்வதி கருத வாய்ப்புண்டு என்பதனைக் காட்டவே இப்பகுதி சேர்க்கப்பட்டது.

சரித்திரம் நிகழும் காலத்தில் நாகரிகங்கள் ஏற்பட்டிருந்தனவா என்கிற குழப்பங்களைத் தவிர்க்கவும்.

வாணீ … கோபப்படாதே ! என் கையில், சதுப்புயன் (சதுர்புஜன் – எம்பெருமான்) தாளில், சங்கரன் சடையில் என்று கங்கைக்கு எங்கள் மூவராலும் பெருமை !

முக்யமாக “ஹரி பாதோதகம்” எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தம் என்கிற பெருமை கங்கைக்கே உரித்தானது .. இவ்வாறு பிரமன் சொல்லவும் அப்போது ஒன்றும் பேசாதிருந்த கலைமகள், இப்பொழுது கோபித்துக் கொண்டு சென்று, தவமியற்றுவது கங்கையை விடத் தான் சிறந்தவள் என்கிற ஏற்றம் பெறவே என்பதனை உணர்ந்தான் ஸுரஜ்யேஷ்டன் (தேவர்களில் பெரியவன் – பிரமன்)

ஸரஸ்வதியை எண்ணியவாறு பெருமூச்செறிந்தான் !

அப்பொழுது தான் தேவகுரு ப்ருஹஸ்பதி பலரையும் கூட்டிக் கொண்டு, தன்னைச் சந்திக்க வந்திருப்பதாக அயனுக்கு செய்தி சொல்லப்பட்டது !

ப்ருஹஸ்பதி வந்திருப்பதை நான்முகனிடம் சொல்ல வந்த சேவகன் , அவருடைய எண்காதுகளில் (எட்டுக் காதுகளில்) ஒன்றைக் கடித்தான் (ரஹஸ்யமாகப் பேசினான்)

ப்ரபோ ! ப்ருஹஸ்பதியும் அவருடன் வந்திருப்பவர்களும் (தேவர்கள் – ருஷி, முனிவர்கள்) அளவிற்கு மீறிய கோபத்துடன் தங்களுக்குள்ளே சண்டையிட்டபடியே தங்களைக் காண வந்துள்ளனர் !

சேவகன் இப்படிச் சொன்னதும்,  தன் நாடியடங்கிட நின்றான் நான்முகன் !

நடுநடுங்கின குரலோடே சேவகனை அவர்களுக்குள் என்ன தான் சிக்கல் என்று கேட்டான் !

சேவகன் சொன்ன பதில் தான் என்ன ?

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

1 thought on “வரதன் வந்த கதை 2”

Leave a Comment