ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பிரமன் பெற்ற சாபம் தான் என்ன ??
மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத (பிரமனின்) இத்தீர்ப்பினால் துவண்டு போயினர் !
சட்டத்திற்குப் (சாஸ்த்ரங்களுக்கு) புறம்பாகப் பிரமன் பேசியதாகக் கூச்சலிட்டதுடன், நான்முகனுக்கு, அவன் செய்த பெரும்பிழைக்கு, அவனுக்கு தண்டனை தர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர் ..
உண்மையான ம்ருகத்தைக் கொண்டு யாகங்கள் செய்ய வேண்டியதே முறையாயிருக்க, மாவினால் மிருகம் செய்து தீ வளர்க்க வேண்டுமாமே !! இதற்கு என்ன சாபம் கொடுக்கலாம் ?! என்று தங்களுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர் !
பொறுமையுடன் ப்ருஹஸ்பதி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் ! .. அவர் என்ன பேசப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்..
மௌனம் கலைத்தார் தேவ புரோஹிதர் ..
“பிரமனே ! பிடி சாபம் !! வேள்வியின் இலக்கணங்களுக்கு/சட்ட திட்டங்களுக்கு எதிராக நீ பேசியமையால் , உன் (பிரம) பதவியிலிருந்து விலகக் கடவாய் !
ஒன்றல்ல!! ஆயிரம் அச்வமேத யாகங்களை குறையில்லாமல் விரைவில் செய்து முடித்தால், உன் பதவி உன் வசமாகும் !! மேலும் யாகங்களை நீ தீர்ப்பளித்தாற் போல் மாவினால் ஆன ம்ருகங்களைக் கொண்டு அல்ல; நிஜமான ம்ருகங்களைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும் .. இதுவே சாபம் !
கலக்கமுற்ற பிரமனும் வெகுண்டவனாய் ப்ருஹஸ்பதிக்கு சில சாபங்களைத் தந்தனன்..
(இருவருக்குமே சாப விமோசனம் நம் வரதனால் தான் என்பது மேலே தெரிய வரும்)
ப்ருஹஸ்பதிக்கு பதிலுக்கு சாபம் வழங்கினாலும், பிரமன் நிலை பரிதாபத்துக்கு உரியதாயிற்று !
ஆம்.. யாகம் செய்வதே கடினம்.. அதிலும் அச்வமேத யாகம் சாதாரணமானதா?
ஆயிரம் அச்வமேதம் என்றால் …. தலை( கள் ) சுற்றியது ப்ரம்மாவிற்கு !!
நாம் சொன்ன தீர்ப்பு ; சரிப்படவில்லையென்றால் மேல் முறையீடு, மறு சீராய்வு போன்றவற்றிற்கு விண்ணப்பித்திருக்கலாம்.. அதை விடுத்து ஆயிரம் அச்வமேதங்கள் செய்ய வேண்டியது என்றால் , யாராயிருந்தாலும் தலை சுற்றத் தானே செய்யும் ..
*******************************************************************************
## வாசகர்களுக்கு..
உங்களில் பலரும் பிரமன் கொடுத்த தீர்ப்பு முடிவு சரியானதே என்று கருத இடமுண்டு !
வேள்விகளில் ஒரு உயிரை பலியிடுவதை விட, மாவினால் செய்யப்பட்ட மிருகத்தை ஆஹுதியாகக் கொடுப்பது சிறந்தது தானே என்று எண்ணுவீர்கள்..
“ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி” – யாரையும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக் கூடாது என்று விதித்த சாஸ்த்ரம் தான் வேள்விகளில் மிருக வதையை ஆமோதிக்கிறது என்பது ஜீரணிக்க சிரமமாயிருக்கலாம். ஒன்றுக்கொன்று முரணாகவும் தென்படும் ..
முதற்கண் வேதத்தில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றறிக !
சிற்சில யாகங்களில் ம்ருகங்களை பலியிட வேண்டும் என்று சொல்லியிருப்பது , அஹிம்ஸைக்கு விரோதமாகாது ! யாகத்தினுடைய தூய்மைக்கும் பங்கமாகாது !
ஒரு மருத்துவன் , நமக்கு அறுவை சிகித்ஸை செய்கிறான்.. வாளால் அறுத்துச் சுடுகிறான் .. நிச்சயம் அது வெளிப்பார்வைக்கு ஹிம்ஸையாகவே புலனாகும். ஆனால் நோயாளன் (patient) அம் மருத்துவனிடம் ஆராத காதலோடு தானே இருப்பன். (அதாவது இந்த ஆபரேஷன் நம் நன்மையின் பொருட்டே செய்யப்படுகிறது என்று தெளிந்து , மருத்துவரிடம் அன்பாகவே இருப்பான்)
நிகழ்காலத்தில், ஹிம்ஸையாகக் கண்ணில் பட்டாலும், எதிர்காலத்திற்கு அது நன்மையே ஆகும் !
அதே போல், வேள்விகளில் பலியிடப்படுகிற பசுக்களின் (மிருகங்களின்) ஆன்மாக்கள் ஸுவர்க்கம் முதலான உயர்ந்த லோகங்களை நிச்சயமாகப் பெறுகின்றமையால் , வேள்வியில் பலியிடுதல் என்கிற முறை தவறாகாது !
ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்விஷயம் ஈண்டு விசாரிக்கப்பட்டு , ஆடு குதிரை போன்ற மிருகங்களை யாகங்களில் உபயோகிப்பது தவறில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது !
” அசுத்தமிதி சேத் ந சப்தாத்” (ஸூத்ரம் 3.1.25) என்கிற ப்ரம்ம ஸூத்திரத்தின் (எம்பெருமானார்) உரையினில் மேற்கண்ட விஷயம் சேவிக்கலாகும் .
நம் சுயநலத்திற்காக ஒரு ப்ராணியை ஹிம்ஸிப்பது குற்றமாகும்! அந்த ப்ராணியின் ஆன்ம நன்மையை உத்தேசித்துச் செய்யப்படும் காரியம் எங்ஙனம் தவறாகும்?!
“ஹிரண்ய சரீர ஊர்த்வ: ஸ்வர்க்கம் லோகமேதி” (யாகத்தில் பலியிடப்பட்ட ம்ருகம் தங்க மயமான சரீரத்துடன், ஸ்வர்க்கத்திற்குச் சென்று அங்கு பல போகங்களை அனுபவிக்கிறது) என்கிறது சாஸ்த்ரமும் ..
“யத்ரயந்தி ஸுக்ருதோ நாபிதுஷ்க்ருத: தத்ர த்வாதேவ: ஸவிதா ததாது” என்று எது செல்வதற்கு அரிதான இடமோ, அங்கு ம்ருகமே உன்னை பகவானே அழைத்துச் செல்லட்டும் என்று வேள்வியில் பலியிடப்படும் ம்ருகத்தைப் பார்த்து வேதம் பேசுகிறது !
எனவே தான் பிரமன் உரைத்த தீர்ப்பு சாத்திரங்களுக்கு முரணானதென்று ப்ருஹஸ்பதி கோபமடைந்தார் ###
********************************************************************************
ஆயிரம் அச்வமேதங்கள்.. ஆம் செய்தே ஆக வேண்டும் .. பதவி சுகம் கண்டு விட்டோமே! அதுவும் ப்ரம்ம பதவி என்றால் லேசா..
இன்னொன்று! பத்நீ இல்லாமல் யாகம் செய்வதா? மனைவிக்கு யாக வேளையில் அன்றோ பத்நீ என்று பெயர்!
இன்ன பிற தேவிகள் இருந்தாலும் ப்ரதான மஹிஷீ ஸரஸ்வதி தானே! சரி பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்தான்.. பிரச்சினைகள் அணிவகுத்து நெருக்க/நெரிக்க, பிரமன் பூவுலகிற்கு வந்து, திரிவேணீ ஸங்கமத்தில் மற்றும் நைமிசாரணியத்தில் வேள்விகள் செய்ய ஆயத்தமாயினன்..
தவறான தீர்ப்பு சொன்ன பழி – பாபம் நீங்க மட்டுமல்ல.. இந்த யாகங்களின் வழியாக தன் தமப்பன் தன்னொப்பாரில்லப்பனையும் தரிசித்து விட ஆசைப்பட்டான் அயன் !
“சக்ஷுஷாம் அவிஷயமான” (கண்களால் காண முடியாத) தத்வமன்றோ இறை தத்வம் ..
“என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை” கண்டே தீருவது என்று தயாரானான்.
முடியுமா? என்றால் முடியும் என்பதே விடை !
ஆம்.. நம் முயற்சியினால் ஆகா !! ஆனால் அவன் அருளினால் அவனைக் காண முடியும் !!
தீர்மானமாக நம்பினான் பிரமன்.. அப்போது ஒரு அசரீரி (வார்த்தை) கேட்டது.. உருவமில்லா அவ்வொலி சொன்னதென்ன !! காத்திருப்போம் !!
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
ennadhan sonnalum himsai???