ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
நான்முகன் அழைத்தவுடனே விச்வகர்மா விரைந்து வந்தான். ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை அலங்கரிக்கும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட, அவனும் தன் பேறு இது என்று ஏற்றுக் கொண்டான் !
பிரமன் விவரிக்கத் தொடங்கினார் ! ஸகல வசதிகளுடன் பற்பல மாடமாளிகைகள் கட்டப்பட வேண்டும் .. வேள்வியைத் தரிசிக்க வரும் விருந்தினர்க்கு எவ்வகையிலும் சிரமங்கள் ஏற்படாத படி , ஸௌகரியங்கள் பல செய்து செய்து தரவும் ஆணையிட்டார்.
விச்வகர்மா சன்னமான குரலில் கேட்டான்.. நான்முகனே ! இவ்வேள்விக்கு எத்தனை பேர் வரக்கூடும்? தெரிந்து கொள்ளலாமா?
சிரித்தபடி பதிலுரைத்தான் பிதாமஹன் (பிரமன்). விச்வகர்மாவே நன்கு கேள் !!
வேள்விகளில் சிறந்ததாய், ஸகல பாபங்களையும் போக்குவதாய், வைஷ்ணவமானதாய் (ப்ரதானமாக, நேரடியாக பரமாத்மாவையே பூசிப்பதாய்) விளங்கக் கூடியது இந்த அச்வமேதம் !
இந்த க்ஷேத்ரமும் (ஸத்ய வ்ரத க்ஷேத்ரம்) நாம் தொடங்கிய நற்காரியங்கள் தடையின்றி நிறைவேறுமிடமாய், பாபங்களிலிருந்து நமக்கு முக்தி அளிப்பதாய் உயர்ந்த ஹஸ்திகிரியை தன்னகத்தே கொண்டதாய் விளங்கும் உன்னத இடமாகும் !!
வேள்வியும் சிறந்தது. வேள்வி நடை பெறுமிடமும் சிறந்தது. எனவே ஆசையுடன் பலரும் வருவர்கள். இத்தகு வேள்வியை தரிசிப்பதே புண்யமன்றோ !!
தவிரவும் , வேள்வி நடைபெறுமிடத்திற்கு , நமக்கு அழைப்பு வந்தால் போகலாம் என்று காத்திருக்க வேண்டியதில்லை. நம்மை அழைக்காமல் விட்டாலும் நாம் வேள்வியைக் காணப் போக வேண்டும் சாஸ்த்ரமும் சொல்லியிருப்பதால் ஆஸ்திகர்கள் (வேத வேதாந்தங்களில் நம்பிக்கையுடையவர்கள்)
தாங்களாகவே வருவார்கள்..
தேவர்கள், மனிதர்கள் , இன்ன பிறர்களும் ஆசையுடன் வரக்கூடும்.. எனவே ஏற்பாடுகள் கனகச்சிதமாக இருக்க வேண்டும். யாக சாலைகள், யாக வேதி (யாகம் செய்யப் பாங்கான மேடை), பாக சாலைகள் (சமையலறைகள்), விருந்துண்ணுமிடங்கள், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள், விருந்தினர் விடுதிகள், என்று யாவும் சிறந்த முறையில், மிக நேர்த்தியாக, அழகாக அமைக்கப்பட வேண்டும் என்று பிரமன் சொல்லவும், அவ்விதமே செய்வதாக விச்வகர்மா பதிலுரைத்தனன்.
அவர் சொன்னபடி அனைத்தையும் விரைவாகச் செய்து முடித்தான் விச்வகர்மா !
எல்லா வகையாலும் உயர்ந்த ஹஸ்திகிரியையே உத்தர வேதியாக்கினான் விச்வகர்மா ! நம் வரதன் உதிக்கப் போகும் இடம் இதுவேயாம் !
(அக்னிஹோத்ரம் செய்வதற்கு ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி ஆகிய மூன்று அக்னிகள் உண்டு; இவைகளுக்கு முன்பிருக்கிற இடத்திற்கு மஹாவேதி என்று பெயர். ஸதஸ், ஹவிர்தானம் என்னுமிடங்களும் அங்கு உண்டு. அதற்கு முன்பாக அக்னியை ஸ்தாபனம் (உண்டாக்கி) பண்ணி வேள்வி செய்வார்கள்; அந்த இடத்திற்கே உத்தர வேதி என்று பெயர்)
அனைத்தையும் நன்கு வடிவமைத்து, ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை ஒரு ராஜதானி (தலை நகரம்) போலே சமைத்திட்டான் (உருவாக்கினான்) விச்வகர்மா !
நன்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஊரினைப் பார்வையிட வருமாறு பிரமனுக்கு அவன் (விச்வகர்மா) அழைப்பு விடுக்கவும், அயனும் ஆசையுடன் வந்தான் ! வந்தவன் தன் மனத்தினைப் பறி கொடுத்தவனாய், இந்த க்ஷேத்ரத்தினை, விச்வ கர்மாவின் கை வண்ணத்தினை ச்லாகிக்கத் தொடங்கினான் !!
நாநா விதமான (பல்வகை) ரத்நங்களாலும், ஸ்வர்ணம் முதலானவைகளைக் கொண்டு, சிறந்த சில்பிகளைக் கொண்டு பக்குவமாக அமைக்கப்பட்டிருக்கிற நகரத்தின் மாட மாளிகைகளின் அழகு, பிரமனையும் ஏனையோரையும் வியப்பிலாழ்த்தியது.
இனிமேல் தான் இந்த க்ஷேத்ரம் “காஞ்சீ” என்று ப்ரஸித்தமான பெயரைச் சுமக்கும் என்று புன்னகை தவழ , பெருமிதத்துடன் பேசினான் அயன் !
ஏன்? ஏற்கெனவே காஞ்சீ என்ற பெயருளதே!! “பூமிக்கு இடையாபரணம் போன்ற ஊர்” என்கிற பொருளிலே முன்னமேயே இந்நகரத்துக்கு காஞ்சீ என்ற பெயர் கொடுக்கப் பட்டுள்ளதே.
பின்பு ஏதோ இப்போது தான் புதியதாக இவ்வூருக்கு இப்பெயர் சூட்டுமாப் போலே நான்முகனுக்கு ஏன் இத்தனை ஆநந்தம்..
பலரும் அங்கே இப்படித் தான் யோசித்த படி புருவங்களை உயர்த்தலாயினர் !!
நான்முகன் பேசினான் !!
எனக்கு “க” என்றொரு பெயர் உண்டு ! க என்கிற என்னால் எவ்விடத்தில் ஸ்ரீ ஹரி பூசிக்கப்படுகின்றானோ அவ்விடத்திற்கு “காஞ்சீ” என்று பெயர் ! இவ்வூர் புண்ணியங்களை நன்கு வளர்த்திடும் திறன் பெற்றது.. என்று அவன் சொல்லவும் , வானம் பூச்சொரிந்து நம் நகரை (காஞ்சியை) நனைத்தது..
பிரமன் முகத்தில் ஆநந்தத்திற்குக் குறைவில்லை.. ஆனால் அவர் மைந்தன் வசிட்டர் முகம் வாடிக் காணப்பட்டார்..
காரணம் வினவினான் வசிட்டரை..
அவர் சொன்ன பதில் நான்முகன் முகத்தையும் வாடச் செய்தது ..
என்ன காரணம்..
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “வரதன் வந்த கதை 7”