ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள். ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து !
இரணியனை வதம் செய்த பிற்பாடு, தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன். இவ்விடமே (திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் இங்கு உளன் !
நரஸிம்ஹாவதாரம்..
தானவ சிசுவான (அசுரன் பிள்ளையான) ப்ரஹ்லாதனைக் காப்பாற்ற அவன் கொண்ட கோலமிதென்பது நாமறிந்ததே ! பிரமன் வரங்களைக் (இரணியனுக்கு) கொடுத்துவிட்டான் என்பதற்காக , அவைகளுக்குக் கட்டுப்பட்டு தூணில் இருந்து வெளிப்பட்டு இரணியனை முடித்தான்.
பிரமன் பேச்சு பொய்யாகி விடக்கூடாது என்பதில் தான் எத்தனை அக்கறை !
அவன் அவதாரங்கள் செய்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.. தானே கீதையில் அவதாரத்திற்கான காரணங்களைப் பட்டியலிடுகின்றான் கண்ணன்.
ஸாதுக்களை (நல்லவர்களை) ரக்ஷிப்பதற்காகவும், தீயவர்களை ஒடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டுதற் பொருட்டும் தான் அவதரிப்பதாக அவனே திருவாய் மலர்ந்தருளியுள்ளான்..
தர்மத்தை நிலைநாட்டுதல் என்றால்.. ?
அதனைத் தெரிந்துகொள்ள ஆசையிருப்பின் , தர்மம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது !
தர்மம் = திருக் கல்யாண குணங்கள் என்றருளுகிறார் ஸ்ரீ பராசர பட்டர் ..
அப்படியெனில் தன்னுடைய “எண்ணில் பல் குணங்களை” வெளியிடுவதற்காகவே அவன் தோன்றுவது !
“அஜாயமான: பஹுதா விஜாயதே” என்கிறது வேதம் .. (பிறப்பில்லாதவன்; பல படிகளாகப் பிறக்கிறான்) என்பது பொருள் !
அதாவது நம்மைப் போல் கர்மத்தின் காரணமாகவல்லாமல், தன் இச்சையின், மற்றும் நம் பால் கொண்டிருக்கிற அன்பின் காரணமாகப் பிறக்கிறானாம் !
இச்சா க்ருஹீதோபிமதோரு தேஹ : என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் !
ஓரோர் அவதாரமும் ஓரோர் குணத்தை வெளியிடுவதில் நோக்காயிருக்கும் !
(அவதாரங்களில் எல்லா திருக்குணங்களையும் அவன் பால் நாம் காண முடியுமாயினும், முக்கியமாக ஓரோர் அவதாரத்திலும் ஓரோர் திருக்குணம் ஒளி விடும் !)
ந்ருஸிம்ஹாவதாரத்தில், உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கை என்கிற தன்மை வெளிப்படுகின்றதாம் !
அவனுக்கே “அந்தர்யாமி” என்றொரு பெயர் உண்டு ! உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு ( நம்மை) நியமிப்பவன் என்பது பொருள் !
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: என்று உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் அவனே என்கிறது வேதமும் !
இந்தத் திருக் குணத்தை, தன்மையை நமக்கு நன்கு விளக்குவதே நரஸிம்ஹாவதாரம். ப்ரஹ்லாதன் அதனைத்தானே “தூணிலும் இருப்பான் துரும்பிலுமிருப்பான்” என்று சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தான்.. !
ஆழ்வாரும் “எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்து” என்று இவ்வர்த்தத்தை அறுதியிடுகிறார் !
சிங்கப்பிரான் பெருமை நாம் ஆராயுமளவோ ?!
வேள்வியைக் காக்க வந்த வேளுக்கை ஆளரி, அசுரர்களை முடித்துப் பிரமனையும் காத்தான் !
பிரமன் வேள்வியைத் தொடர்ந்தார் !
அசுரர்களால் கலங்கின மதியை உடையவளான கலைவாணீ , வேள்வியைக் குலைக்க வேறோர் திட்டம் தீட்டினாள் !
என்ன திட்டம் அது ?!
அறியக் காத்திருப்போம் !
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “வரதன் வந்த கதை 10-2”