வரதன் வந்த கதை 11-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 10-2

அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு , பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான் ! வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற்சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர் !

இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் , அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன், தன்னையுமறியாது பரமனைப் போற்றிக் கொண்டிருந்தான்..

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான பகவான், விளக்கொளியாய் வந்ததென்ன ; அவனே நரசிங்கமாய்த் தோன்றி விரோதிகளான அஸுரர்களை மாய்த்ததென்ன; இவற்றையே அங்கு அனைவரும்   வாய் வெருவிக் கொண்டிருந்தனர்!!

நல்ல காரியங்களுக்குத் தடைகள் பல ஏற்படுமாம் !! ஆம் !! தடைகள் ஏற்பட்டால் மட்டுமே அது நல்ல காரியம் என்று கொள்க !!

நல்லது செய்வதென்றால் எத்தனையெத்தனை தடைகள். இதே ஒரு தவறைச் செய்ய முற்பட்டால் தடையின்றி நிறைவேறி விடுகின்றதே! இது என்ன விந்தை !!

இவ்விஷயங்களைத் தன் மனதில் அசை போட்டபடியே மெய் மறந்திருந்த அயன், இனியும் தனக்கும் வேள்விக்கும் பிரச்சினைகள் வரும் என்று திடமாக நம்பினான் ! ஆனாலும் அவன் கலக்கமுறவில்லை..

பக்கத்திலே ஒருவர் அயனை விசாரித்தார். பிரமனே ! இனியும் பிரச்சனைகள் வருமா என்ன?

நிச்சயமாக வரும் ! இது பிரமன்..

கேள்வி கேட்டவர் , பிரமனின் இந்த விடையைச் சற்றும் எதிர்பார்த்திராததால் , விழிகள் வெளியில் விழுந்திடத் திகைப்புடன் அவனை நோக்கினார்; நடுநடுங்கிய குரலில், அயனே அத்தடைகளைச் சமாளிக்க நீ தயாராக இருக்கிறாயா என்றார் !

நிச்சயமாக இல்லை ! ஸரஸ்வதியை , அவள் கோபத்தினை, அவள் செயல்களை முறியடிக்கும் ஆற்றல் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை..

இவ்வாறு பிரமன் பதில் சொல்லவும், வினவினவர் விக்கித்துப் போனார் !

சிரித்தான் அஜன் (பிரமன்) !

ஐயா ! நான் தயாரில்லை, என்னால் சமாளிக்க முடியாது என்று தான் கூறினேனேயொழிய, எம்பெருமானால் ஆகாது என்று சொன்னேனா ?!

அவன் நம்மை மீண்டும் மீண்டும் ரக்ஷித்திருந்தும், நாம் சந்தேகிக்கலாமா ? என்னைக் கருவியாய்க் கொண்டு இக்காஞ்சீ மாநகர் முழுவதும் தான் நிறைந்திடவன்றோ அவன் திருவுள்ளம் பற்றியிருப்பது !

அசரீரியாய் அவன் (பரமன்) பேச, அயமேத வேள்வியை ஆரம்பித்தேன் அடியேன். ஆம் ஆரம்பத்திலிருந்தே தடைகள் தான். ஆனால் அவன் துணையால் தடைகள் தூளாகின்றன அன்றோ !

(நமக்கும் இந்த நம்பிக்கை வேண்டும்! எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டாலும்; அவன் துணையிருக்கிறான் என்கிற தெளிவு. அது முக்கியம். அவன் நிச்சயமாகக் கைவிட மாட்டான்)

பிரமன் நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான். இப்பொழுது என் எதிர்பார்ப்பெல்லாம் அவன் அடுத்து என்னவாகத் தோன்றப் போகிறான்?! அவனை நான் எவ்விதம் துதிக்கப் போகிறேன் என்பது தான் !

விளக்கொளியாய், ஸிம்ஹேந்திரனாய்த் தோன்றியவனுடைய அடுத்த எழிற்கோலமென்ன;  இது தான் என்னுடைய விசாரம் !!

பிரமன் இவ்விதம் பேசவும், அவனுடைய உறுதிப்பாட்டினைக் கொண்டாடியபடி வசிஷ்டர் அவனருகே விரைந்தார் !

அஜனே ! இறைவன் பால் நீ கொண்டிருக்கும் விச்வாஸம் நிச்சயம் உனக்கு நன்மையே செய்யும். உன்னால் எங்களுக்கும் மேன்மையே என்றார் !

மேலும், ஸரஸ்வதி.. என்று தொடங்கி மேலே பேச முயன்றவரைக் கை கூப்பித் தடுத்திட்டான்.

ஆத்திரமுடையவர்களுக்கு புத்தி குறைவு என்பார்கள். இங்கோ புத்தியே (புத்தி -அறிவு) (= ஸரஸ்வதி) கோபித்துக் கொண்டு சென்றுள்ளது ! அவள் நிச்சயமாக சும்மா இருக்க மாட்டாள் !

ஆனால் கவலை வேண்டாம். ஸ்ரீ ஹரி பார்த்துக் கொள்வான். பிரமனின் இவ்வுரையைக் கேட்டு அனைவரும் மயிர்க்கூச்செறிந்தவர்களாய் பரமனுக்குப் பல்லாண்டு பாடினர் !

அங்கு. தன்னாற்றங்கரையில் ஸரஸ்வதி அஸுரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாள் !

சம்பராஸுரன், பற்பல அஸுரர்கள் சென்றும் வேள்வியைக் குலைக்க முடியவில்லை. அடுத்து..? சட்டென நினைவிற்கு வந்தவளாய், கலையரசி, காளியின் பெயரை உச்சரித்தாள்.

காளியும் ஸரஸ்வதி முன்பு தோன்றினாள். ஆணையிட்டாள் ஆழ்கலையழகி ! ஹே ! காளி! உடனடியாக நீ பலரையும் அழைத்துக் கொண்டு பிரமன் வேள்வி நடத்துமிடம் சென்று, அவ்வேள்வியைக் கெடுப்பாய் என்றாள் !

காளியும் உடனே புறப்பட்டாள் ! பல அஸுரர்கள் புடை சூழ !!

அட்டஹாஸச் சிரிப்புடன், வெளியில் தொங்கவிடப்பட்ட, கூர்மையான கோரைப் பற்கள் இரத்தக் கறையுடன் விளங்கிட, பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடி , தீ விழி விழித்தபடி , யாக பூமியில் காளி தோன்றிடவும், அதிர்ந்தனர் அனைவரும்..

ஆனால் பிரமன் மட்டும், அக்கணம் காளியின் எதிர்த்திசை நோக்கியபடி புன்னகை தவழக் கைகூப்பியபடி நின்றிருந்தான் !

இம்முறை , பிரச்சினை வந்த பின்பு அல்ல; காளி தோன்றுவதற்குச் சரியாக ஒரு கணம் முன்னதாகவே எம்பெருமான் தோன்றியிருந்தான் !!

அவனைத் தான் பிரமன் கை கூப்பித் தொழுது கொண்டிருந்தான் !

“ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம் !”..இவர் யார்?? என்று அனைவரும் வாய் பிளந்து நின்றிருந்தனர் ! யார் அவர் ??

காத்திருப்போம் !!

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

1 thought on “வரதன் வந்த கதை 11-1”

Leave a Comment