ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் ! பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் !
இறைவா! ஆமுதல்வனே! உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது!
தனி நின்ற சார்விலா மூர்த்தீ! அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு. பக்த வத்ஸலனே. ப்ருஹஸ்பதி சாபத்தாலும், ஸரஸ்வதி கோபத்தாலும் உடைந்து போயிருந்த நான்; நீ அருள் செய்திருக்கவில்லை என்றால் தொலைந்தே போயிருப்பேன்.
அசரீரியாய் வந்தாய். ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் வரப் பணித்தாய்! கச்சியைக் காட்டினாய்! தந்தாவள கிரியாம் இவ்வானை மலையை ( வேள்விக்காகத் ) தந்தருளினாய் !
ஸரஸ்வதி மற்றும் அஸுரர்களால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை தூள் தூளாக்கினாய்! சம்பராஸுரனால் ஆபத்து வந்த போது , விளக்கொளிப் பெருமானாய் வந்தாய்! அஸுரர்கள் திரண்டு வந்து தீமை செய்த போது (வேளுக்கை ஆளரி) நரஸிம்ஹனாய் வெளிப்பட்டாய்! ஸரஸ்வதி காளியையும் அஸுரர்களையும் அனுப்பின போது, அஷ்டபுஜப்பெருமானாய் காக்ஷி தந்தாய்! வல்வினை தொலைத்தாய்! சயனேசனாய் (பள்ளி கொண்டானில்) தரிசனம் தந்தாய்! திருப்பாற்கடலில் ரங்கநாதனாய்த் தோன்றினாய்! வெஃகணைப் பெருமானாய் அருள் பாலிக்கின்றாய்!
இதோ இப்பொழுது, இங்கே அக்னி மத்யத்தில் பேரருளாளனாய்ப் புன்முறுவல் பூக்கின்றாய் !!
உன் அன்பினை, உன் பண்பினை யாரால் கொண்டாட முடியும்! நான்மறைகள் தேடியென்றும் / எங்கும் காணமாட்டாச் செல்வனன்றோ நீ! என் முயற்சியினால் நான் உன்னைக் காணாது தோற்ற போது; நீயேயன்றோ நிர்க்கதியாய் நின்ற என் கண் முன்னே தோன்றினாய்!
உலகிற்கே கண்ணான வேதத்திற்கு நடுவேயுள்ள கருவிழி போன்றவன் நீயே! உனைப் போலே கருணை மழை பொழிய யாராலியலும்! கடலைப் போன்றவன் நீ! உன்னை யார் முழுவதுமாகக் காண இயலும்! நீர் (தண்ணீர்) இவ்வுலகினைக் காப்பது போலே காப்பவன் நீ! அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் எம் பிழைகளைப் பொறுப்பதில் பூமிக்கு ஒப்பானவன் நீயே!
உன்னுடைய குணங்களை நாங்கள் ஆராய முற்பட்டால், உன்னைப் போல் ஒருவன் எங்குமில்லை என்கிற முடிவிற்கு வருகிறோம்!
கைம்மாவுக்கு (யானை) அருள் செய்த கார்முகில் போல் வண்ணா!
என் கண்ணா!
இவ்வடியவன் உன்னைத் துதிக்கின்றேனா, அல்லது பிதற்றுகின்றேனா!
அதுவும் அறியேன். நான் எதுவுமறியேன்!
கருமணியே! உன்னை நான் கரிகிரி மேல் கண்டேன். கண்டவுடன் என் கடுவினைகள் அனைத்தும் தொலைந்திடக் கண்டேன்.
நானே பாக்கியசாலி. நானே பாக்கியசாலி என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசலானான்!
காண்தகு தோளண்ணல் அத்தியூர்க் கண்ணன் (வரதன்) சிரித்த படி, அஞ்சல் (அஞ்சாதே) என்கிற அபயத் திருக்கரத்துடன் பிரமனை நோக்கி வார்த்தை சொல்லத் தொடங்கினான்.
என்ன சொன்னான்? காத்திருப்போம்!
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “வரதன் வந்த கதை 14-3”