வரதன் வந்த கதை 15-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 14-3

அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே, பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான்! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் !!

வரம் வரய தஸ்மாத் த்வம் யதாபிமதமாத்மந:
ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே”

மனிதர்கள் கண்ணால் காணக் கூடிய நிலைமையை தற்பொழுது நான் அடைந்துள்ளேன் ! (அவர்களுக்கும்) எல்லாம் கை கூடப் போகிறது .. உனக்கு வேண்டியதைக் கேள் ! என்றான் இறைவன் ..

கண்ணெதிரே கரிகிரிக் கண்ணனைக் கண்ட கமலத்தயன், பணிவான குரலில் பரமனைப் பார்த்துப் பேசினான் ! ஐய ! வரமே என்ன வரம் வேண்டும் என்று கேட்பது விந்தையாகத் தான் உள்ளது !

எதையும் நான் என் முயற்சியால் ஸாதித்திருப்பதாக நினைக்கவில்லை .. நின்னருளல்லதெனக்குக் கதியில்லை ! அதுவே உண்மை !

பெருமானே ! அநந்த, கருட , விஷ்வக்ஸேநர் போன்ற மஹாத்மாக்கள் காணத் தக்க உன் வடிவை , நான் காணப் பெற்றேனே ! இதை விட வேறு பலன் ; வேறு வரம் ஏதேனும் உண்டோ ?!

என் பதவி நிலையற்றது. உன்னுடைய ஸ்ருஷ்டியில் எத்தனை எத்தனை ப்ரஹ்மாண்டங்கள் உள்ளனவோ; அங்கங்கெல்லாம் எத்தனையெத்தனை பிரம்மாக்கள் உள்ளனரோ?; யாரறிவார்?

ஏதோ ஒரு ப்ரஹ்மாண்டத்தில், ஒரு ஸத்ய லோகத்தில் உனதருளால் தற்சமயம் நான் பிரமன் ! .. கங்கையின் மணலைப் போலே; இந்திரன் பொழியும் மழையின் தாரைகள் போலே , எத்தனையெத்தனை பிரம்மாக்கள் இந்தப் பிரம பதவியில் இருந்துள்ளனர் என்பது எண்ணக் கூடியதன்று !!

என்னமுதினைக் கண்ட கண்கள் ; மற்றொன்றினை விரும்பாது !

உன்னிடத்தில் சொல்ல விரும்புவது ஒன்று தான் !! நீர் என்றென்றும் இங்கேயே, இக்கச்சியிலேயே எழுந்தருளியிருக்க வேண்டும் !!

வைகுண்டே து யதா லோகே யதைவ க்ஷீரஸாகரே |
ததா ஸத்யவ்ரத க்ஷேத்ரே நிவாஸஸ்தே பவேதிஹ ||

ஹஸ்திசைலஸ்ய சிகரே ஸர்வ லோக நமஸ்க்ருதே |
புண்யகோடி விமானேஸ்மிந் பச்யந்து த்வாம் நராஸ் ஸதா || “

உனக்குப் பிடித்தமான வைகுந்தத்தைப் போலே; திருப்பாற்கடல் போலே; இங்கும், இந்த ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தில் , அனைவரும் வணங்கும் இத் திருவத்தி மாமலையில், புண்யகோடி விமானத்தில், உம்மை மனிதர்கள் எப்போதும் வணங்கட்டும் !

“அம்மா ! அடியேன் வேண்டுவதீதே” என்று விண்ணப்பித்தான் பிரமன் !

எம்பெருமானும் ; பிரமனே ஸத்யமாகச் சொல்கிறேன் , அனைவருக்கும் காட்சி அளித்துக் கொண்டு , எப்பொழுதைக்குமாக இங்கேயே இருக்கப் போகிறேன் !

ஸந்தோஷம் தானே !

இந்த ஆதி யுகத்தில், நீ கண்டிட வந்து தோன்றிய நான்; இனிவரும் யுகங்களிலும் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன !

அவற்றைச் சொல்கிறேன் கேள் ! என்று தொடங்கினான்..

அவைகளை நாமுமறிய அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “வரதன் வந்த கதை 15-1”

Leave a Comment