அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 6

 

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, திருக்காவேரி இருகரையும் ஒத்துப்பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள, நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே திக்ப்ரமம் பிறந்து, தோணி அமிழத்தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்; ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப்பட்டுப்போகும்’ என்று தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே தோணியை விட்டார்களில்லை. அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து ‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக்கரையிலே விடு’ என்று சொல்லி, அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார். அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக்கரையிலே சேர்ந்தேறிற்று. அவ்வளவில் பிள்ளையும் ‘ஐயோ! ஒராத்மா தட்டுப்பட்டு போய்விட்டதே!’ என்று பலகாலும் அருளிச்செய்து வ்யாகுலப்பட்டருள, அந்த ஸாத்த்விகையம்மை தோணியைவிட்டு நாலடி எழப்போனவளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று, இராக்குரலாகையாலே அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப்பட்டருள வேண்டாம்; அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல்காட்ட, பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாகவேணும்’ என்று திருவுள்ளம் பற்றியருளித் தோணிக்காரனைவிட்டு அவளைக் கரையிலே அழைப்பித்துக்கொள்ள, அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனையொழிந்து வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே ‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப்போகிற போது தேவர் அங்கே வந்து ஒருகரைமேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’ என்று கேட்க, பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவானபின்பு அதுவும் அப்படியேயாகாதோ’ என்று அருளிச்செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச்செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு ‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான். இப்படி மஹாஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய், அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு  ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது, இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய, அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன, ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்கவென்றொரு கோல்துறையையும் நமக்குத்தாரும்’ என்று திருவுள்ளம்பற்றியருள, அவளும் ‘அடியேன் அப்படிச்செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன, பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச்செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன, பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து, ‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றிதாஸன் பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக்கொண்டு கொடுத்தருளவும்’ என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார். பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள். ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் நம்பிள்ளையுடைய ஜ்ஞானபக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும், ஶிஷ்ய ஸம்பத்தியையும் கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்றுகொண்டு போருவராயிருப்பர். அக்காலத்திலே அந்த பட்டர் ராஜஸ்தாநத்துக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு, ‘ஜீயா! நாம் ராஜகோஷ்டிக்கு போகிறோம்; கூடவாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக்கொண்டு ராஜஸ்தானத்துக்கேற எழுந்தருள, ராஜாவும் பட்டரை எதிர்க்கொண்டு பஹுமாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக்கொண்டு பெரிய திருவோலக்கமாயிருக்கிறவளவிலே, ராஜா, தான் பஹுஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும், பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்கவேணும் என்று விசாரித்து, ‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்தக்கிற பெருமாள், ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க, பட்டர் அதற்கு உத்தரம் அருளிச்செய்யச் சிறிது விசாரிக்க வேண்டியிருக்க, அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக, அவ்வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து, ‘ஜீயா! திருக்கலிகன்றிதாஸர் பெரியவுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம் கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க, ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன, பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளியிருக்க, ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன, பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக்கேள்’ என்று “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ: குரூந்ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச்செய்ய, ராஜாவும் போரவித்தராய், ‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று ஶிர:கம்பம்பண்ணி மிகவும் ஶ்லாகித்து, மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள், அநேக தநங்களெல்லாத்தையும் கட்டிக்கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று ஸத்கரித்துவிட, பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக்கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு ஜீயர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே கொண்டுபோய்க் காட்டிக்கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச்செய்ய, ஜீயரும் பட்டர் அருளிச்செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக்கொடுக்க, நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து, ‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுகமண்டலத்தைப் பார்த்து ‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன, ‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன, பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்யஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது; ஆனபின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குலப்ரபாவத்துக்குத் தகுதியாகும் தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையேயாகிலும், அசலகத்தேயிருந்து இத்தனை நாள் தேவரை இழந்து கிடந்த மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு “அஸூயாப்ரஸவபூ:” என்கிறபடியே அஸூயை பண்ணித்திரிந்த இவ்வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கையல்லது வேறு எனக்கொரு கைம்முதலில்லை. ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க, பிள்ளையும் பட்டரை வாரியெடுத்துக் கட்டிக் கொண்டு, விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தம்முடைய திருவுள்ளத்திலே தேங்கிக்கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும் ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள, இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல் பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி, ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

 

அக்காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள பட்டர் பிள்ளையருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு, தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க ‘இதேது?’ என்று கேட்டருள, ‘தேவரீர் இந்த உருத்திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன, பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க, நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி மஹாபாரத ஸங்க்யையாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு, பட்டரைப் பார்த்து, ‘இதுவென்? நம்முடைய அநுமதியின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்தபடியே திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன, பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்யஸூக்தியை எழுதினதொழிய, ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன, பிள்ளை பட்டரைப் பார்த்து, ‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில், நம்முடைய நெஞ்சை எழுதப்போகிறீரோ?’ என்று வெறுத்தருளிச்செய்து, ‘உடையவர் காலத்திலே திருக்குருகைப்பிரான்பிள்ளான் திருவாய்மொழிக்கு ஶ்ரீவிஷ்ணுபுராண ப்ரக்ரியையாலே ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை. ஆனபின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் ஸபாதலக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால் ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச்செய்து, பட்டர் திருக்கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக்கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க, அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரியஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக் கற்றிருக்கிற பெரியவாச்சான்பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார். அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை பகல்கேட்டு தரித்து, ராத்ரியில் எழுதித் தலைக்கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டுபோய் வைக்க, நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள, அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள, அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே ஆனைக்கோலம் செய்து புறப்பட்டாப்போலே மிகவும் அழகாய், ஶ்ருதப்ரகாஶிகை கட்டளையிலே முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி, வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி ‘நன்றாக எழுதினீர்; ஆனாலும் நம்முடைய அநுமதியின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத்தாரும்’ என்று அவர் திருக்கையில் நின்றும் வாங்கிவைத்துக் கொண்டு பின்பு தமக்கு அபிமதஶிஷ்யரான ஶ்ரீமாதவப்பெருமாள் என்று திருநாமத்தையுமுடையரான ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும், இவ்வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே “சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமெனவாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று நம்முடைய ஜீயர்தாமே அருளிச் செய்தருளினார். ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான வ்யாக்யாநகட்டளைகள் எல்லாம் உபதேசரத்தினமாலையிலே தெளியக்காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம் திருநாட்டுக்குக்கெழுந்தருளினார். அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடிவிளக்குவித்துக்கொள்ள, நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து ‘திருக்கலிகன்றிதாஸர் பரம்பதப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர் தலை ஷௌரம் பண்ணிக்கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன, பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூரகுலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன, அவரும் பட்டரைப்  பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன, பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான் கூரகுலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸக்ருத்யமான மோவாயும் முன்கையும் வபநம் பண்ணுவித்துக்கொள்ளவேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே ஶிஷ்யபுத்ரர்களுடைய க்ருத்யமான தலைமாத்ரம்  ஷௌரம் செய்வித்துக் கொண்டது உங்களுடைய கூரக்குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன, அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து ‘உம்முடைய திருக்கலிகன்றிதாஸர் போய்விட்டாரே! இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள் உபகாரஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன, பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகாரஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன, அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில்  யாவதாத்மபாவியோ? இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று, பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் தெளிந்து, போரவித்தராய், பட்டர் திருவடிகளிலே திருத்தி, தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக்கொண்டு ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி – நடுவில் திருவீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக்கொண்டு கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியாநிற்கும்; அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள். சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி – நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன்மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து, கல்லிட்டெறியாதே, ஏறித்துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதிபால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே விருதூதிவர, பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன, அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன, பட்டர் இரண்டு திருக்கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன, அவன் அதுக்கு ஒன்றும் சொல்லமாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க, பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன, அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன, பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று விருதூதித் திரியமாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனிப்போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளிவிட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ராதாரணத்துக்கு ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞைபண்ண, ராஜாவும் மஹாஸமர்த்தனாயிருக்கையாலே இத்தை நன்றாக அறியவேணும் என்று பட்டரைப் பார்த்து ‘பட்டரே! தப்தமுத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன, அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன, ‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன, பட்டர் ‘என் தோளைப்பாரீர்’ என்று திருக்தோளும் திருவிலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட, ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து, ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டிவிட்டார் என்று இவ்வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச்செய்வார்கள். ஆகையாலே ‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்திவ்வையமெல்லாம் எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமானிலங்கு சிட்டர்தொழும் தென்னரங்கேசர் தம்கையில் ஆழியை நானெட்டனநின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று இந்த திருநாமமும், ஶ்ருதிவாக்யமும் “விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்தசக்ரமுத்ராம், புஜயேவமமைவ பூஸுராணாம் பகவல்லாஞ்சந்தாரணே ப்ரமாணம்” என்று பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து. இவ்வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில் இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களேயாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

2 thoughts on “அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1”

Leave a Comment