அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 7

மலைக்குனியநின்றபெருமாள் என்னும் திருநாமத்தையுடையராய் இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க் கோயிலிலே நித்யவாஸமாக எழுந்தருளியிருக்கிற பட்டருடைய திருத்தகப்பனார் நம்முடைய ஜீயருக்குத் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய், மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாடப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக்கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர். அவ்வளவன்றிக்கே “நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளிக்கிழமை வளர்பக்கம் நாலாம்நாளில் செல்வமிகு திருமண்டபத்தில் செழுந்திருவாய்மொழிப் பொருளைச் செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாளமுனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப்பவித்திரத் திருநாள் எழுந்தருளி அணியரங்கன் திருமுற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திருவோலக்கமாகத் தம்மை ஸேவித்து மங்களாஶாஸநம் பண்ணிக்கொண்டு நிற்கிறவளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப்பாடிட்டருளி, ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி, ‘நம்முடைய பெரிய திருமண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநைமுதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே பெரியதிருமண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத் திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றியருளினார்.

ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ்விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிறபோது முன்புபோலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறியருளி திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச்செவி சாற்றியருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி, ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம். ஆகையாலே “நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன் செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று நம்முடைய ஜீயர்தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும் தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகாரஸ்ம்ருதி பண்ணியருளினார். ‘வலம்புரியாயிரம் சூழ்தரவாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர் குலம்பலசூழ் மணவாளமாமுனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னேதமிழ் வேதம் நவிற்றனனே. தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என் ஆராவமுதனையான் மணவாளமாமுனியையழைத்து ஏரார் தமிழ்மறை இங்கேயிருந்து சொல் என்றனனே” என்று இத்யாதிகளாலே நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம் ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.

இப்போது ஸ்வாசார்யவைபவமும் சொல்லுவானென் என்னில், “குரும் ப்ரகாஶயேந்நித்யம்”, “எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”, “வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக்கடவதிறே. ஒருநாள் நம்பிள்ளை பகவத்விஷயம் அருளிச்செய்த கோஷ்டி கலைந்தவளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு ‘இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச்செய்யவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச்செய்ய, ‘அப்படியன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய, பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன, ‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம், அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம், அவர்களுடைய முகமலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

 

1 thought on “அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)”

Leave a Comment