ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
நம்பிள்ளை காலத்திலே முதலியாண்டானுடைய திருப்பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளையுடைய வைபவத்தைக் கண்டால் அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய், தோழப்பர் ஒருநாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள, நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள, தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க, நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக்கொண்டு பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள, அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத் திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளியிருக்க, அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள, தேவிகள் முன்புபோலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து ‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய், இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க, தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம்போலே ஒரு அவதார விஶேஷமாய், பெருமாளுக்கு ப்ராணபூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல் அநேகமாகப் பரிபவித்து இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு? நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதாபிதாக்கள் உம்முடைய கையில் காட்டித்தந்த என்னுடைய ஶரீரத்தை உமக்கு வேண்டினத்தைச் செய்துகொள்ளும். என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன், ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவதநிந்தை பண்ணினவர்களை ஒருகாலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள்தாமே அருளிச்செய்த திருமுகப்பாசுரத்தை அறிந்தும், அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே இருந்து ஈடேறிப்போகிறேன்” என்ன, தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளியிருந்து, பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய், தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம். இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன, தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்தவிடத்தில் தேடீர்’ என்ன, தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன, தேவிகள் ‘பரமக்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம் பண்ணுவித்துக் கொண்டு அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன, தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து இப்போது அவர் ஸந்நிதியிலே போய் நிற்கவென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது; நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன, தேவிகள், தோழப்பர் அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து அவரையும் கூட்டிக்கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிறவளவிலே நம்பிள்ளை செய்தபடி – கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளினபின்பு முதலிகளெல்லாரையும் ‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து, பகலெல்லாம் அமுதுசெய்தருளாமல் தம்முடைய திருமாளிகையளவிலே எழுந்தருளியிருந்து, போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப்பரிவட்டத்துடனே முட்டாக்கிட்டுக்கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி, கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண்வளர்தருள, தோழப்பரும் தேவிகளும் திருவிளக்கையும் ஏற்றிக்கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத் திருமாளிகை வாசலிலே புறப்பட்டவளவிலே திருவிளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப்புடையிலே கிடக்கிற அத்தைக் கண்டு தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க, பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றிதாஸன்’ என்ன, அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து, பிள்ளையைப் பார்த்து, ‘மஹாதேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவிக்கலாவதே என்கிற கோபாதிஶயத்தாலே நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன, பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன, ‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன, பிள்ளை அருளிச்செய்தபடி – ‘பெரியபெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தேவரீர் திருவுள்ளம் கலங்க வர்த்தித்த மஹாபாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன, இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண்வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு, அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போரவித்தராய், பிள்ளையை வாரி எடுத்தணைத்துக்கட்டிக்கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்; இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று – ‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டுபுக்கு, தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத் தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக்கொண்டு தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம் “துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை உலகாரியனென்னும் பேர் நம்பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளினார்.
‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும் வஞ்சக்குறும்பின் வகையறுத்தேன் மாயவாதியர்தாம் அஞ்சப்பிறந்தவன் சீமாதவனடிக்கன்புசெய்யும் தஞ்சத்தொருவன் சரணாம்புயமென் தலைக்கணிந்தே” , “நமாமி தௌ மாதவ ஶிஷ்யபாதௌ யத்ஸந்நிதிம் ஸுக்திமயீம் ப்ரவிஷ்டா: | தத்ரைவ நித்யம் ஸ்திதிமாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்தசித்தா: || ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீயகோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி| ஶ்ரீமத்கலித்வம்ஸந்தாஸநாம்நே தஸ்மை நமஸ்ஸூக்திமஹார்ணவாய” என்றிறே நம்பிள்ளையுடைய வைபவம் இருப்பது.
இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தையுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான வடக்குத்திருவீதிப்பிள்ளை தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளியிருந்து நம்பிள்ளைக்கு ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக்கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத்திருவீதிப்பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள, அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத்திருவீதிப்பிள்ளை தேவிகள் ஈரப்புடவையுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அருகுநிற்கிற ஸ்த்ரீஜனங்களைப் பார்த்து ‘இந்தப் பெண் ஈரப்புடவையுடன் நிற்பானென்?’ என்ன, அவர்கள் சொன்னபடி – ‘நாலுநாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடிவந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன, அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத் தம்முடைய திருக்கையாலே அவளுடைய திருவுதரத்தை ஸ்பர்ஶித்து ‘என்னைப்போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றியருளினார். ஆகையாலே அத்தைக்கண்டு அதுக்குப்பின்பு வடக்குத்திருவீதிப்பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால் ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க, தத்ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள் திருவயிறுவாய்த்து குமாரர் திருவவதரிக்க, அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று ஆசார்யரான நம்பிள்ளையுடைய திருநாமம் சாற்றியருளினார்.
இப்படி நம்பிள்ளையுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான பிள்ளை லோகாசார்யரும் தம்முடைய பரமக்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கவேணும் என்று திருவுள்ளம் பற்றியருள, தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஶ்ரீவசநபூஷணம் முதலாக அநேகப்ரபந்தங்கள் இட்டருளினார். வடக்குத்திருவீதிப்பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை அழகியமணவாளப்பெருமாள் நாயனார் என்று திருநாமம் சாற்றியருளினார். அவர் ஆசார்யஹ்ருதயம் இட்டருளினார். ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத்தகப்பனார் திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள் அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
2 thoughts on “அந்திமோபாய நிஷ்டை- 9 – நம்பிள்ளை வைபவம் 2”