அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 9

உடையவர் எழுந்தருளியிருக்கிற காலத்திலே அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி பாங்கின்றிக்கே கண்வளருகிறபோது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல், நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த ஸ்நேஹத்துக்கு அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி க்ருபை பண்ணியருளாமல், ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல், அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார். இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.

வடுகநம்பி உடையவருக்குப்பின்பு சிறிது நாள் எழுந்தருளியிருந்து பின்பு திருநாட்டுக்குகெழுந்தருளினவாறே, ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுகநம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய, அவரும் ‘வடுகநம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன, ‘ஏன், வடுகநம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன, ‘ஆகாது காணும், சரகுதின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற, எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்றுகாணும் அவர் எழுந்தருளுவது’ என்ன, ‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்யபூமி வேறே உண்டோ?’ என்ன, ‘உண்டுகாணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம். ‘அத்ர பரத்ரசாபி நித்யம் யதீயசரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச்செய்தார். ‘விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறைநாலும் வளர்த்தனனே” என்று நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.

ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும், பரமாசார்யரான ஆளவந்தாரும், உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்யவைபவத்தை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக அருளிச் செய்கையாலே சரமாதிகாரிகளுக்கு நித்யவிபூதியிலே போனாலும் “பொதுநின்ற பொன்னங்கழ”லாய், “தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக்காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரணஶேஷியாய், லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அஸாதரணஶேஷியாய், சரமபர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரமப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம். ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’, ‘எதிராசா எந்நாளும் உன்தனக்கே ஆட்கொள்உகந்து’ என்று நம்முடைய ஜீயர் இப்படி அருளிச்செய்தருளிற்று.

ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுதுசெய்தருளாநிற்க, கிடாம்பியாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப்பவளத்திலே பரிமாறுகிறவர் செவ்வையிலேநின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய, அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக்கையாலே அறைந்து, ‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க, ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு, “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று விண்ணப்பம் செய்து ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

ஒருநாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறியருள, நடுவுநின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து ‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன, ஆழ்வான் அருளிச்செய்தபடி – “இவ்வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமானபின்பு அவருடைய விநியோகப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ்வ்ருத்தாந்தம் மாணிக்யமாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தார்.

பிள்ளையுறங்காவில்லிதாஸர் முதலியாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஶிஷ்யலக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச்செய்தபடி – ஆசார்யவிஷயத்தில் ஶிஷ்யன் பார்யாஸமனுமாய், ஶரீரஸமனுமாய், தர்மஸமனுமாய் இருக்கக்கடவன். அதாவது சொன்னத்தைச் செய்கையும், நினைத்ததைச் செய்கையும், நினைவாயிருக்கையும் என்றருளிச்செய்தார். அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்யலக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச்செய்தபடி – ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ருஸமனுமாய், ஶரீரிஸமனுமாய், தர்மிஸமனுமாய் இருக்கக்கடவன். அதாவது ஏவிக்கொள்ளுகையும், எடுத்து இடுவிக்கையும்; அதாவது அசேதநத்தை நினைத்தபடியே விநியோகங்கொள்ளுமாப்போலே விநியோகங்கொள்ளுகையும், எடுத்துக்கொள்ளுகையும் என்றருளிச்செய்தார். இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தாமாலையிலே உண்டு.

ஒருநாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளியிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியாநிற்க, ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ? க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று இங்ஙனே ப்ரஸங்கமாக, முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன, கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன, ஆண்டான் “குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச்செய்கையாலே ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆகவேணும் என்ன, ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணிகொள்வான் குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும் ஸ்வாநுவர்த்தி கூடாமையாலே க்ருபாமாத்ரத்தாலே மோக்ஷமாகவேணும்’ என்றருளிச்செய்தார். ஆண்டானும் ‘அப்படியேயாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்யோக்தம்.

க்ருமிகண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல்நாட்டுக்கெழுந்தருளின போது பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக்கொண்டு போருகையாலே விஷமத்துக்காக ‘உடையவராலேயன்றோ இத்தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்கவொண்ணாது’ என்று திவ்யாஜ்ஞை இட்டுவைத்தார்கள். கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமிகண்டனிடத்திலே புக்கு அவனாலே திருநயநங்களுக்கு உபத்ரவம் வந்தது மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை ஸேவிக்க எழுந்தருளினவளவிலே, திருவாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய, ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன, அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திருவாசல் காக்குமவர்களைக் கேட்க, அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விடவேண்டாம் என்று திவ்யாஜ்ஞையிட்டுத் தகைந்துகிடக்கிறது’ என்ன, ‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன, அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச்சொன்னோம்’ என்ன, ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜலசந்திரனைப்போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு, ‘ஐயோ! ஆத்மகுணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று; எனக்குண்டான ஆத்மகுணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய்விட்டதோ’ என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்துகொண்டு ‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்; தத்ஸம்பந்தத்தையொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

எம்பெருமான்தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச்செய்தருளுவர் என்னுமது திருவிருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம். அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸுநந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று இவ்வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

 

1 thought on “அந்திமோபாய நிஷ்டை- 10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை”

Leave a Comment