ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:
श्रीवेङ्कटेशम् करिशैलनाथम् श्रीदेवराजम् घटिकाद्रिसिम्हम् । कृष्णेन साकम् यतिराजमीडे स्वप्ने च दृष्टान् मम देशिकेन्द्रान् ॥ 1
ஸ்ரீவேங்கடேசம் கரிசைலநாதம் ஸ்ரீ ஹேவராஜம் கடிகாத்ரிஸிம்ஹம் |
க்ருஷ்ணேந ஸாஹம் யதிராஜமீடே ஸ்வப்நேந த்ருஷ்டாந் மம தேசிகேந்த்ராந் || 1
ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.
- இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
- ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
- ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
- தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்யவர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
- வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
- சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – சி. திரும
- வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமலை
- कृष्णेन सह यतिराजम् (க்ருஷ்ணேந ஸஹ யதிராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
- க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
- அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
- அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
- க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
- அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – उद्यद्दिनेशनिभं उल्लसदूर्ध्व पुन्ण्ड्रम् रूपं तवास्तु यतिराज दॄशोर्ममाग्रे [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்
यतीश्वरम् प्रणम्याहम् वेदान्तार्यम् महागुरुम् । करोमि बालबोधार्थम् यतीन्द्रमतदीपिकाम् ॥ 2
யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2
யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.
- இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குருபரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
- யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத்திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
- பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க.
श्रीमन्नारयण एव चिदचिद्विशिष्टोSद्वैतम् तत्त्वम्, भक्तिप्रपत्तिभ्याम् प्रसन्न्स्स एवोपायः, अप्राकृतदेशविशिष्टस्स एव प्राप्यः इदि वेदान्तवाक्यैः प्रतिपादयताम् व्यासबोधयनगुहदेवभारुचिब्रह्मनन्दिद्रमिडाचार्य श्रीपराङ्कुशनाथयामुनमुनियतीश्वरप्रभृतीनाम् मतानुसारेण बालबोधनार्थम् वेदान्तानुसारिणी यतीन्द्रमतदीपिकाख्या शारीरकपरिभाषा महाचार्यकृपावलम्बिना मया यथामति सङ्ग्रहेण प्रकाश्यते ॥ 3 ॥
ஸ்ரீமந்நாராயண ஏவ சிதசித்விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்திப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்தவாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாதயாமுனமுனி யதீச்வரப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பாலபோதனார்த்தம் வேதாந்தாநுஸாரிணி யதீந்த்ரமததீபிகாக்யா சாரீரகபரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதாமதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||
க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் – श्रीमन्नारयण एव – என்று.
அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி. “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.
இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.
தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று
ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)
ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.
द्वयोर्भावोद्विता – द्वित्वम् । द्वितैव द्वैतम् । नास्ति द्वैत यस्मिन्, तदद्वैतम् । चिदचितोर्पृथक्सिद्धविशेषणत्वेन ब्रह्मण्यण्तर्भुतत्वात् विशिष्टमेकमेव तत्वम् इत्यर्थः | (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த:) இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.
இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.
ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.
- ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
- இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.
இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக்கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.
வ்யாஸர் | ப்ரஹ்ம மீமாம்ஸா சாஸ்த்ரத்தை அருளிச்செய்தவர் |
போதாயனர் | வ்ருத்தி க்ரந்ததை அருளிச் செய்தவர் |
குஹதேவர் | வேதபாஷ்யம் அருளிச் செய்தவர் |
பாருசி | விஷ்ணு ஸ்ம்ருதி வ்யாக்யானம் அருளிச் செய்தவர் |
ப்ரஹ்மநந்தி , த்ரமிடாசார்யர் | சாந்தோக்ய உபநிஷத்திற்கு வ்யாக்யானம் அருளிச் செய்தவர் |
ஸ்ரீபராங்குச முனி | திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்தவர் |
நாதமுனி | யோகத்தில் நம்மாழ்வாரிடம் ஸித்தாந்த ரஹஸ்ய உபதேசங்களைப் பெற்றவர் |
யாமுனமுனி | ஸித்தித்ரயம், ஆகம் ப்ராமாண்யம், முதலியவை அருளிச் செய்தவர் |
எம்பெருமானார் | ஸ்ரீ பாஷ்யம் முதலியவை அருளிச் செய்து ஸித்தாந்தம் பல்கிப் பெறுக காரணமாக இருந்தவர் |
இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். यस्य पृथिवी शरीरं (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து यस्यात्मा शरीरं (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.
- நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
- वेदान्तवाक्यैः (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
- வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்,
वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥
வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.
அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org