திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

                      மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று
                      கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை
                      அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்
                      துணித்தருள வேணும் துணிந்து

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்

             ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். இப்படிப்பட்ட பரமபதத்தின் லக்ஷணங்களை ஸ்ரீ பராசரபட்டர்

* யத்தூரே மநஸோ யதேவதமஸ:பாரேய தத்யத்புதம்
யத்காலா தபசேலிமம் ஸுரபுரீ யத்கச்சதோ துர்கதி: |
ஸாயுஜ்யஸ்ய யதேவ ஸுதிரதவா யத்துர்க்ரஹம் மத்கிராம்
தத்விஷ்ணோ: பரமம் பதம்….... * (ஸ்ரீ குண கோ – 21)

என்கிற ஶ்லோகத்தில் அருளினார். [எந்த இடம் மனத்திற்கு தூரத்தில் உள்ளதோ, எந்த இடமே ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ எந்த இடம் மிகவும் வியக்கத்தக்கதோ, எந்த இடம் காலத்தினால் முதுமை அடையாததோ, எந்த இடத்தை நோக்கி போகின்றவனுக்கு தேவர்களின் நகரமான அமராவதியும் நரகமோ எந்த இடமே முக்தி நிலைக்கு பிறப்பிடமோ , இறைவனான விஷ்ணுவின் மேலான ஸ்தானம் ஆகிற பரமபதம்]. திருமாமணிமண்டபத்தில், நித்ய முக்தர்களுக்கு தன்னுடைய அழகை எல்லாம் காட்டி – எப்படி கடலானது அலையெடுத்த வண்ணம் இருக்கிறதோ அதே போன்று தன்னுடைய திருக்கல்யாண குணங்களை அவர்களுக்குக் அனுபவிக்கக் கொடுத்து கொண்டு தன்னுடைய செங்கோல் ஆட்சி ஒரு குடைக்குக் கீழ் நடத்துகிற இடம். இதனை பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் * ஸ்புரதுபரிபணாரத்நரோசிர்விதானம் விஸ்தீர்யாநந்தபோகம் ததுபரி நயதா விச்வமேகாதபத்ரம் * (படங்களின் ரத்நங்களினுடைய ஒளியாகிற மேல்கட்டியை உடையதுமான ஆதிசேஷன் திருவுடம்பை விரித்து அதன்மீது வீற்றிருந்து உலகை ஒருகுடைக்கீழாம்படி நடாத்துகிறவனும்) என்றருளினார்.

         வ்யூஹமாவது (2) பரமபத நாதனிடமிருந்து உத்பத்தியான வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ந, அநிருத்த ரூபங்கள். இந்த ரூபங்களை உடையவனாய் ஆமோத ப்ரமோத ஸம்மோத லோகங்களிலும், க்ஷீராப்தியிலும் எழுந்தருளியிருக்கும் நிலை.  ப்ரஹ்மாதிகளின் குறைகளைக் கேட்பதற்கும், ஸனத்குமாரர்கள் முதலானோர்கள் கிட்டி அனுபவிப்பதற்காகவும் இருக்கும் நிலை.

        விபவமாவது(3) அநிருத்தனிடத்தில் இருந்து உண்டான இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள். இவை பூர்ணாவதாரங்கள், ஆவேசாவதாரங்கள் என இருவகைப்படும். பூர்ணாவதாரங்கள் – இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்; ஆவேசாவதாரங்கள் – பரசுராம, பலராமாதி அவதாரங்கள்; பூர்ணாவதாரங்கள் * ஜன்ம கர்ம ச மே திவ்யம்  *  (கீதை – 4-9) [அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும் எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறுஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்] என்கிறபடி விக்ரஹங்கள் (திருமேனிகள்) அப்ராக்ருதம்.

          அந்தர்யாமித்வமாவது (4) சேதனாசேதனங்களில் எழுந்தருளியிருக்கும் இருப்பு. இதனைக் குறிக்கிற ஶ்ருதியானது “ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ய: ஆத்மநி திஷ்டந்” என வஸ்துக்கள் தோறும் எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கின்றான் என ஒதிற்று. இது தன்னை திருமழிசைப் பிரான் * நின்றியங்கும் ஒன்றலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள்கலந்து நின்ற இன்ன தன்மை * (நின்று – நிலைபேராதே நிற்கும் மலைமுதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது; இயங்கும் – அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது, இப்படிப் பலவகைப்பட்ட சரீரங்கள் தோறும் ஆத்மாவாய் பொருந்தி நின்ற உன்னுடைய ஸ்வபாவம்) என்றருளினார். எம்பெருமான் இப்படி எழுந்தருளியிருப்பது, யோகிகளின் ஹ்ருதயத்தில் அவனை த்யானிப்பதற்காக.

1969361_694505220595052_1689616711_n

        அர்ச்சையாவது (5)  * அர்ச்சாயாம் ப்ரதிமா பூஜா * என்கிற நிகண்டுவின்படி தனது பக்தர்களின் திருவாராதனத்திற்காவும், உஜ்ஜீவனத்திற்காவும், தான் பரிபூர்ணனாய் நிற்கும் நிலை. இது தன்னை வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் திருக்குமாரரும், ஸ்ரீரங்கேசரின் புரோஹிதருமான பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்திலே * ஆஸ்தாம் தே குணராஶிவத் குணபரீவாஹாத்மநாம் ஜன்மநாம் ஸங்க்யா பௌமநிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு ரங்கேஶ்வர | அர்ச்ச்யஸ்ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபிஸ்தவ ததஶ்ஶீலாஜ்ஜடீபூயதே ||* (ஸ்ரீ ரங். ஸ்த் – உத் 74) என்றருளினார்.  ரங்கேஶ்வர – பெரிய பெருமாளே!; தே குணராஶிவத் – தேவரீருடைய திருக்கல்யாணகுணக் கூட்டங்கள் போல; குணபரீவாஹாத்மநாம் – அந்த திருக்கல்யாண குணங்களை காரணங்களாகவும், அவற்றைப் ப்ரகாஶிப்பவைகளாகவும் இருப்பதினாலே அந்த திருக்குணங்களுக்கு ப்ரவாஹங்களாயிருக்கிற; ஜன்மநாம் – திருவவதாரங்களுடைய; ஸங்க்யா – எண்ணித் தலைக்கட்டி முடிக்கமுடியாமையானது; * அஜாயமானோ பஹுதா விஜாயதே * (தை. பு 21) (பிறப்பில்லாதவன் பலபடியாகப் பிறக்கிறான்), * பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி * (கீதை – 4-5) இத்யாதி ப்ரமாணங்கள் இதனை உணர்த்தும். ஆஸ்தாம் – இருக்கட்டும். இதனால் இவருக்கு அர்ச்சையில் உள்ள ஆதரத்தினை உணர்த்தினாராயிற்று, அர்ச்சாவதாரத்தை அனுபவித்தால் தேவரீர் எவ்வளவு திருவவதாரங்கள் எடுத்த போதிலும் அவற்றில் ஊற்றமில்லை என்றபடி; த்வம் – தேவரீர்; பௌமநிகேதநேஷ்வபி – இப்பூமண்டலத்திலுள்ள ஆலயங்களிலும்; குடீகுஞ்ஜேஷு – க்ருஹங்களிலும் ஆச்ரமங்களிலும்; அல்லது பௌமநிகேதநேஷ்வபி – திருவரங்கம் முதலான கோயில்களிலும்; குடீகுஞ்ஜேஷு – திருக்குறுங்குடி, திருக்கண்ணங்குடி, திருவெள்ளியங்குடி, முதலான குடிகளிலும்; அர்ச்ச்ய இதி – அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி * தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரிப்பவராயும் * ஸாக்ஷாதபசாரம், உபசாராபதேஶமான அபசாரம் (உபசாரம் செய்ய வேண்டும் என்றாரம்பித்துப் பண்ணும் அபசாரம்) ஆகியவற்றை ஸஹிக்கையே ஸ்வபாவமாகக் கொண்டும், ப்ரீணீஷே – உகந்து எழுந்தருளுகின்றீர்; (அணியழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று (அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானே);  தத: – அப்படிப்பட்டதான; தவ ஶீலாத் – தேவரீருடைய ஶீலகுணத்தினால்; ஹ்ருதயாலுபி: ஜடீபூயதே – ஸஹ்ருதயர்கள் மோஹிக்கிறார்கள். இங்கு ஸஹ்ருதயர்கள் என்றது ஆழ்வார்களை. மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஸர்வஜ்ஞரான ஆழ்வார்கள், இந்த ஶீல குணத்தை அநுஸந்தித்து மோஹிக்கிறார்கள்.

இப்படி ஐந்து ப்ரகாரங்கள் இருந்தாலும் அவற்றில் ஸ்தல பேதமேயொழிய வஸ்து பேதமில்லை என்பதினை ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்,

பகலோலக்கமிருந்து கருப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம் ” (157)

என்ற சூர்ணிகையில் அருளினார்.

கலியனும் அர்ச்சாவதாரமும்

              ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள். அவர்களுள் இறுதியாக, ஆசார்ய பரம்பரையிலே ஸ்ரீமத் வரவரமுனிகள் போலே, திருவவதாரம் பண்ணியருளியவர் திருமங்கை ஆழ்வார். * மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த * என்கிற உபதேசரத்தினமாலை ஸ்ரீஸுக்திப்படியே, நான்கு வேதங்களின் ஸாரமாக நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு, இவ்வாழ்வாருடைய ஆறு திவ்யப்ரபந்தங்கள் ஆறு அங்கங்களாம். * ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் * (ஆ. ஹ். 36) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு இவர் ப்ரபாவம் அறியலாம்.

thirumangai-alvar-

     நம்மாழ்வாரை * க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் * என்றார் ஸ்ரீ பராசர பட்டர். ஸ்வாமி மணவாள மாமுனிகளை * யதீந்த்ர ப்ரவணர் * (எம்பெருமானார் மீது அளவற்ற ப்ரேமை கொண்டவர்) என்றான் ஸ்ரீ அழகிய மணவாளன். அதே போன்று * அர்ச்சாவதார ப்ராவண்யமே * வடிவெடுத்தவர் யார் என்று கேட்டால் – அது திருமங்கை ஆழ்வார் ஒருவரே ஆவர்.  நம்மாழ்வார் * செய்ய பரத்துவமாய் சீரார் வ்யூஹமாய் துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் எய்துமவற்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் * என்று உபதேசிப்பது அர்ச்சாவதார விஷயமாய் இருந்தாலும், அதை அனுஸரித்துக் காட்டியவர் திருமங்கை ஆழ்வாரே ஆவர். நம்மாழ்வார் அப்பதிகந்தன்னிலேயே (அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும் பதிகந்தன்னில்) * அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் காண்பதென்றுகொல் கண்களே? * என்று தான் க்ருஷ்ணாவதாரத்தில் ஆதரத்துடன் இருப்பதைக் காட்டினார். அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கங்கத்திலே சயனிப்பவனாயிருந்துவைத்து வஸுதேவருடைய திருமாளிகையிலே அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் முடியும்படியாக பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார்.

      பேயாழ்வார் எம்பெருமானை அமுதம் என்றார் – * மருந்தும் பொருளும் அமுதமும் தானே * எம்பெருமானை அமுதம் என்றது – இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும் மட்டுமேயன்றி ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கும் என்றபடி.

      பரத்வத்திலே அமுதமாயிருப்பது * மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது * ஆகும் – நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அப்பால் பரமபத்திலே (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடமுடியாதவனும் அருமையான அம்ருதம் போன்றவன்.

     * நரம்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, அங்கண்மா ஞாலத் தமுது.* என்றிருப்பது விபவதாரங்களாகிற அமுது. நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த அழகனுடைய இணையடியே அழகிய இடமுடைத்தான இம்மாநிலத்தில் போக்யமான அம்ருதமாகும்.

      அந்தர்யாமி தஶையிலே அமுதமாயிருப்பது * கடிசேர் நாற்றத் துள்ளாலை * என்பது. கடிசேர் நாற்றத்துள்ளாலை – விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த தேனிலுள்ள சுவையினுடைய கோது கழிந்த (குற்றங்கள் கழிந்து) ஸாரமான பாகம் போலிருக்கிற விச்சேதமற்று (தடையின்றி) நித்யமான ஆனந்தமயனாய் இருப்பவன். இப்பாசுரத்தில் ஆழ்வார் அனுபவிப்பது அந்தர்யாமி தத்வத்தை என்பது குறித்துக்கொள்ளத் தக்கது.

        இப்படி எம்பெருமான் மற்ற தஶைகளில் அமுதமாயிருந்தாலும், திருமங்கை ஆழ்வார் உகப்பது * திருமூழிக்களத்து விளக்கே – இனியாய தொண்டரோம் பருகின்னமுதாய கனியே * என்று அர்ச்சாவதார நிலையையேயாம். திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் விளக்குப்போல் விளங்குமவனே, பரமபோக்யனே! தொண்டரான அடியோங்கள் பானம் பண்ணுதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனிபோன்றவனே! => ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அடியோங்கள் பருகும் அம்ருதமாய் அப்போதே எடுத்து நுகரலாம்படி கனி போன்று இருக்கிறவனே!

     திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதன் விஷயீகரிக்கத் திருவுள்ளம் பற்றி, வாய்த்த திருமணங்கொல்லையினில் அவருக்கு திருமந்த்ரம் அருளிச் செய்த பின்பு, ஆழ்வார் தம்முடைய நிலைக்குச் சேராதவைகளை வெறுத்து ஒதுக்கி, அத்திருமந்த்ரம் திருவவதரித்த இடமான திருவதரி தொடங்கி அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஸாஸனம் செய்யத் தொடங்கினார். திருமந்த்ரம் விளைந்த இடமான திருப்பிரிதியை மங்களாஸாஸனம் செய்தருளின பின்பு, அந்த திருமந்த்ரம் உள்ளே கொண்ட வஸ்துவான அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஶாஸனம் செய்தருளத் தொடங்கி அருளிச் செய்கிறார்.  * மந்த்ரத்திலும், மந்த்ரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது * என்னும் மூமுக்ஷுப்படி சூர்ணிகை நினைக்கத் தக்கது. வெறும் தேஸங்களாக இருந்த உகந்தருளின நிலங்களைத் திவ்யதேஸங்களாக ஆக்கித் தந்தவர்கள் ஆழ்வார்கள். திருமங்கையாழ்வார் மொத்தம் 86 எண்பத்தாறு திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்துள்ளார். இவற்றுள் கலியன் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ள திவ்யதேஶங்கள் நாற்பத்து ஏழு (47). இந்த திவ்ய தேஶங்கள் பிற ஆழ்வார்களால் மங்களாஶாஸனம் செய்யப்படாமல் இவர் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ளார். இங்ஙனம் ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்து அருளவில்லை எனில் திவ்யதேஶங்கள் எண்ணிக்கை 108 ஆக இருந்திராது! ஆழ்வார் தாமும் முதல் பத்தில் திருமந்த்ரத்தினைப் பற்றி அருளிச் செய்த பின்பு இரண்டாம் பதிகத்தில் திருப்பிரிதி தொடங்கி வரிசையாக வடநாடு, தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலை நாடு என மங்களாஸாஸனம் அருளியுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களாஶாஸனம் செய்த திருப்பதிகள்

  1. திருஉறையூர்
  2. திருக்கரம்பனூர்
  3. திருபுள்ளம்பூதங்குடி
  4. திருஆதனூர்
  5. திருதேரழுந்தூர்
  6. திருசிறுபுலியூர்
  7. திருசேறை
  8. திருதலைச்சங்கநாண்மதியம்
  9. திருக்கண்டியூர்
  10. திருநாகை
  11. திருநறையூர்
  12. திருநந்திபுரவிண்ணகரம்
  13. திருஇந்தளூர்
  14. திருக்காழிசீராம விண்ணகரம்
  15. திருக்கூடலூர்
  16. திருக்கண்ணங்குடி
  17. திருக்கண்ணமங்கை
  18. திருவெள்ளியங்குடி
  19. திருமணிமாடக்கோயில்
  20. திருவைகுந்தவிண்ணகரம்
  21. திருஅரிமேய விண்ணகரம்
  22. திருத்தேவனார்தொகை
  23. திருவண்புருடோத்தமம்
  24. திருச்செம்பொன்செய் கோயில்
  25. திருத்தெற்றியம்பலம்
  26. திருமணிக்கூடம்
  27. திருக்காவளம்பாடி
  28. திருவெள்ளக்குளம்
  29. திருப்பார்த்தன்பள்ளி
  30. திருமெய்யம்
  31. திருப்புல்லாணி
  32. திருவஹீந்த்ரபுரம்
  33. திருநீரகம்
  34. திருநிலாத்திங்கள்துண்டம்
  35. திருக்காரகம்
  36. திருக்கார்வானம்
  37. திருக்கள்வனூர்
  38. திருபவளவண்ணம்
  39. திருப்பரமேச்சுர விண்ணகரம்
  40. திருப்புட்குழி
  41. திருநின்றவூர்
  42. திருஇடவெந்தை
  43. திருசிங்கவேள்குன்றம்
  44. திருநைமிசாரண்யம்
  45. திருப்பிரிதி

     திருநெடுந்தாண்டகத்தின் அவதாரிகையிலே, ஆழ்வார்களின் ஊற்றத்தை அருளிச் செய்யும் விதமாக (ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிலையின்லே ஊன்றியிருப்பார்கள்) , இவரது அர்ச்சாவதார ப்ராவண்யத்தைக் காட்டியருளுகிறார் ஸ்ரீ பெரிய ஆச்சான் பிள்ளை.

முதலாழ்வார்கள்

பரத்வம்

திருமழிசைப்பிரான்

அந்தர்யாமி தஶை

குலசேகரப் பெருமாள்

ராமாவதாரம்

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்

க்ருஷ்ணாவதாரம்

தொண்டரடிப்பொடிகள், திருப்பாணாழ்வார்

திருவரங்கம் பெரிய கோவில்

திருமங்கையாழ்வார்

அர்ச்சாவதாரம்

இது தன்னைக் கலியன் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாசுரம் கொண்டு பார்க்கலாம்.

கல்லெடுத்துக் கன்மாரி காத்தாய்! என்றும்
     காமருபூங் கச்சியூரகத்தாய்! என்றும்
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய்! என்றும்
    வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும்
மல்லடர்த்து மல்லரையன் றட்டாய்! என்றும்
    மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே யென்று
    துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே. (13)

         ராஜகுமாரர்கள் ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நெய் கொண்டு புஜிக்குமா போலே, இவ்வாழ்வார் தாமும் பாசுரத்தின் அடிதோறும், காமருபூங் கச்சியூ ரகத்தாய்! என்றும் – வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் – அர்ச்சையை அனுபவிக்கிறார்.  இதே போன்று அருளிச் செய்யப்பட்ட * மண்ணளந்த தாளாளா! தண்குடந்தை நகராளா! வரையெடுத்த தோளாளா! *, முதலானவைகள் நோக்கத்தக்கது. இங்கு ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்தி * அல்லாத ஆழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இதுவிறே. அவர்கள் மேன்மையை அநுபவிக்கும் போது பராவஸ்தையைப் பேசுவர்கள்; அந்நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்; இவர் மேன்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே, நீர்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே; அத்தை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே. * மற்றைய ஆழ்வார்களுக்கும் இத்திருமங்கை ஆழ்வாருக்கும் உள்ள வாசி (வேறுபாடு) இதுவேயாகும். அவர்கள் எம்பெருமானது மேன்மையை அனுபவிக்க வேண்டுமானால் பரத்வத்திலே இழிவார்கள். எம்பெருமானது நீர்மையை அனுபவிக்க வேண்டுமானால் அவனது அவதாரங்களைப் பேசுவார்கள். அந்த நீர்மையை நேராகக் காணவேண்டில் மட்டுமே அர்ச்சாவதாரத்தைப் பேசுவார்கள். ஆனால் திருமங்கை ஆழ்வாரோ மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; நீர்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; அதை நேரே கண்டனுபவிப்பதும் திருப்பதிகளிலே.

Added: மேன்மையை அர்ச்சையிலே அனுபவித்தது

  1. Added: யாவருமா யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய் – மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம் [சேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய், (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய், முழுமுதற் கடவுளான, எம்பெருமான் அமர்ந்து உறையும் இடம்- திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-1)
  2. வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம் [நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-2)

  3. உலகுண்ட பெருவாயரிங்கே வந்து, என் பொருகயல்கண்ணீரரும்பப் புலவி தந்து புனலரங்கமூரென்று போயினாரே [பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும், நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் ] (திருநெடுந்தாண்டகம் – 24)

  4. அண்டமுமெண்டிசையும் நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன் [அண்டங்களையும் எட்டுத்திசைகளையும் பூமியையும் கடல்களையும் ஆகாசத்தையும் அக்நியையும் காற்றையும் இவை முதலான மற்றும் பல பொருள்களையும் பிரளயம் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கின  எம்பெருமானுக்கு இடமாவது பரமேச்சுரவிண்ணகரம் ] (பெரி திரு 2-9-4)

  5. நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ [

    நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளவிடமுடியாத அழகிய சுடரையுடையவனே!, என்றவாறே இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார்] (பெரி திரு 7-2-3)

Added:நீர்மையை அர்ச்சையிலே அனுபவித்தது

பின்னானார் வணங்கும் சோதி –  அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே! பரத்துவத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படுகின்றனர். அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே!’ என்கின்றார் ஆழ்வார்.  திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும். திருமூழிக்களமென்றது மற்றைய அர்ச்சாவதாரங்களுக்கு உபலக்ஷணம். பின்னானார் – அவதாரத்திற்குப் பிற்பாடர்;  வணங்கும் சோதி – ஆஶ்ரயிக்கக்கூடிய ஜ்யோதிர்மயமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே. நம்மாழ்வாரும் ‘திருமூழிக்களத்துறையுமொண்சுடர்‘ என்றது குறிக்கொள்ளத்தக்கது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது; அத்திருக்குணம் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே; ஆகையால் ‘ஒண்சுடர்‘ என்றும் ‘விளக்கு‘ என்றும் ‘சோதி‘ என்றும் அருளினார் என்று உணரவேண்டியது. இங்கு * இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாஶிப்பது இங்கே * என்னும் பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீஸூக்தி நினைக்கத்தக்கது.

திருக்கண்ணபுரத்து அம்மான்

திருக்கண்ணபுரத்து அம்மான் என்றால் திருக்கண்ணபுரத்திலே உறையும் ஸ்வாமி என்றர்த்தம். இங்கு ஆழ்வார் திருக்கண்ணபுரத்து அம்மான் என்றழைத்ததற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அற்புதமாகத் தாத்பர்யம் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானாகிற தத்வம் ஸர்வஸ்மாத்பரனாயிருக்கும். அதனை அனுபவிப்பவர்களும் நித்யமுக்தர்கள். அவதாரங்களில் மநுஷயத்வே பரத்வமாயிருக்கும். அனுபவிப்பதும் விதுரர், சபரி போன்ற ஒரு சிலருக்காயிருக்கும். பரகால நாயகியானவள் அர்ச்சாவதராத்தில் பரத்வம் உட்பட அனைத்தையும் அறிந்தாள். இதனை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை – ” அவதாரங்களிற் காட்டில் அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாளென்று தோற்றியிராநின்றது “. இதனை ஸ்வாமி அருளிய இப்பதிகத்தின்  அவதாரிகையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும். அதன் சாராம்சம் – எம்பெருமானோடு அனுபவிக்க மாட்டாமையாலே தளர்ந்து பிராட்டி தஶையினை அடைந்து, திருத்தாயார் வாயாலே பேசுவதாக அமைந்தது இத்திருமொழி. வேதாந்தங்களை அதிகரிக்காது ஒரு சில ஆசார்யர்களிடம் கேட்டு எல்லாம் தெரிந்தவன் போல் இருந்த ஶ்வேதகேதுவை நோக்கி “ஸ்தப்தோஸி” (எல்லாம் அறிந்தவன் போன்று நின்றாய்!) என்று அவனுக்கு ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று அறிவுறுத்துவதற்காக வினவினார் அவனது தந்தையான உத்தாலகர். அவன் அறியாததை அறிவிப்பதற்காக தந்தை வினவினார். இங்கு இவள் பேச்சுக்களைக் கேட்டால் இவள் பரத்வத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; விபவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; வ்யூஹத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை; அர்ச்சாவதாரத்தில், அதிலும் திருக்கண்ணபுரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறாள். இங்கு கலியனது திருத்தாயார் ஸர்வாதிகனான ஸர்வேஶ்வரனையும் நன்றாக அர்ச்சையிலே அறிந்திருக்கிறாள் என்று தானறிந்ததைச் சொல்லுகிறாள்.

திருஇந்தளூர் விசேஷானுபவம்

           திருமங்கையாழ்வாரின் திருஇந்தளூர் மங்களாஶாஸனம் அதிவிலக்ஷணமானது. அர்ச்சாவரதார பெருமையை இப்பதிகத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தது சிறிது அனுபவிக்கலாம். ஆழ்வார் திருஇந்தளூரில் எம்பெருமானை கிட்டி அனுபவிக்கலாம் என்று மிகுந்த பாரிப்போடே திருஇந்தளூர் எழுந்தருளினார். ஆனால் அந்த சமயம் அகாலமானதால் திருஇந்தளூர் எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவில்லை. அதனால் ஆழ்வார் மிகவும் நைந்து எம்பெருமானோடு ஊடி வார்த்தையாடுகிறார்.

இங்கு குறிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு

  1. ஆழ்வார் ஊடுவதும் அர்ச்சாவதார எம்பெருமானோடே! நம்மாழ்வார் ” மின்னிடை மடவாரில் ” கண்ணனோடே ஊடினார்.
  2. ஆழ்வார் தாமான தன்மையில் ஊடுகிறார்.

  திருஇந்தளூர் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்யும் ப்ரகாரம்

            தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
            மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
            தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியோமுக்
            கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.

10432101_757047764366361_5082148871398745732_n

       திருவிந்தளூர்ப் பெருமாளே! தேவரீர் தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும் திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால் – (அஜ்ஞரான) அடியோங்கள் தேவரீரைக் காணமாட்டாதவர்களாயிருக்கிறோம்; தாயாகவும் ஸ்வாமியாகவும் பிதாவுக்கும் பிதாவாகவும் இருக்கின்ற பெருமானே! தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ? அடியோமுக்கே எம்பாருமானல்லீரோ நீர் – பரலாஸுதேவனாயிருக்கும் இருப்பு நித்ய முக்தர்களுக்கு அநுபவிப்பதற்கு. வ்யூஹ நிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பயனளித்தற்கு. அந்தர்யாமியாய் இருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் போல்வார்க்குப் பயனளிக்கும். அர்ச்சாவதார நிலையொன்றே அடியோங்களுக்கு ஜீவனம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காகவேயன்றோ இது ஏற்பட்டது.

       பரத்வம் நித்ய ஸூரிகளுக்காய் இருக்கும். வ்யூஹம், ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்கைக்காக. விபவங்களான ராமக்ருஷ்ணாதியவதாரங்கள் தசரத வாஸுதேவாதிகளுடைய பாக்யத்தினால் பெற்றவைகளாய் இருக்கும். அர்ச்சாவதாரங்களோ என்னில் ஸம்ஸாரிகளுக்காக. ஸம்ஸாரிகளோ தங்களுக்கு ஹிதம் (நன்மை) இன்னது என்றோ, இந்த உலக வாழ்க்கையாகிற ஸம்ஸாரம் த்யாஜ்யம் (விடத்தக்கது) என்றோ, ஸர்வேஶ்வரன் ஆகிய எம்பெருமான் ப்ராப்யன் (அடையத்தகுந்தவன்) என்றோ ஜ்ஞானம் இல்லாதவர்கள்.

      இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி – * குருடர்க்கு வைத்த இறையிலியில் விழித்தார்க்குப் ப்ராப்தி இல்லையிறே * [இறையிலி – அறச்சாலை – வரி நீக்கப்பட்ட நிலம். இறையிலி = இறை + இல். இறை – வரி]. கண் இழந்தவர்களுக்கு என்று உரித்தானதில், கண் உடையோர் அனுபவிக்கக் கூடாதிறே என்பது தாத்பர்யம். பரத்வத்தை அனுபவிக்கும் நித்யமுக்தர்கள் – இவர்கள் படியை ஸ்ரீ பராசர பட்டர் தம்முடைய ஸ்ரீகுணரத்னகோஸத்தில் –

தே ஸாத்யா ஸந்தி தேவா ஜநநி! குணவபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷாஸ் ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ:! ஸ்ரீரங்க பர்த்து ஸ்தவச பதவரீசாரவ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத்கார கைங்கர்ய போகா: ||

   [ தாயான இலக்குமியே எவர்கள் குணங்களாலும் வடிவங்களாலும் கோலங்களாலும் நடத்தைகளாலும் ஸ்வரூபங்களாலும் வேற்றுமையற்றவர்களோ, ஆகையால் எப்பொழுதும் சிறிதும் குற்றமற்றவர்களோ, எப்பொழுதும் ஒழிவில் காலமெல்லாம் ப்ரீதியினால் உருகின மனோவிகாரத்தாலே கலங்கின ஹ்ருதயத்தாலே கைங்கர்யங்களின் இன்பமுடையவர்களோ அந்த நித்ய ஸூரிகள்]. இதனால் இவர்களது மேன்மை விளங்கும். இவர்களுக்கு அருளுமிடம் பரத்வம்.

வ்யூஹமோ என்னில் – மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரே வ்யூஹத்தை அருளிச் செய்யுமிடத்து * பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் * என்றார். ஆழ்வாரே யாம் கண்டேயும் என்னாதே யாம் கேட்டேயும் என்றருளினார். அவர்க்கும் இது கேட்கையோடிருத்தல் என்றால் மற்றவர்களுக்கு அரிது என்பது சொல்லவும் வேண்டுமோ?

விபவமோ – அக்காலத்தில் உள்ளார்களுக்கு மட்டும் அனுபவமாய் இருக்கும்.

அந்தர்யாமி தஶை – * என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணுமேல் * என்று அரிதாய் இருக்கும். எக்காலத்திலும் வெளிக்கண்ணாலே காணக்கூடாத அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சாகிற அகக்கண் விகஸித்து (மலர்ந்து) ஸாக்ஷாத்கரிக்குமாகில் என்று ச்ரமாமாயும் ப்ரஹ்லாதாழ்வான், திருமழிசைப்பிரான் போன்றோருக்குமாய் இருக்கும்.

எனவே தான் இவர்களை * விழித்தார் * என்றழைக்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. இவ்வர்த்தங்கள் ஸ்ரீ வசனபூஷணம் ஸு 39 (பூகத ஜலம் போலே….) ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானத்தால் விரிவாக அறியலாம்.

ஸ்ரீமத் இத்யாதி பூஜ்யராய், அஸ்மத் ஆசார்யனாய், சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய், தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி, திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார். அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

        நும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
        நும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்
        இந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்
        தந்நிலை மாறாத வனாய் (39)

70493507_2264276140368037_3426036905974693888_o

அநுகாரமும் அர்ச்சையிலே!

        ஒருவர் போன்று மற்றொருவர் செய்து காட்டுவது அநுகாரமாகும். கோபிகைகள் கண்ணன் வாராமையாலே மிகவும் விஶ்லேஷப்பட்டு ஒரு கோபிகை கண்ணன் போன்று அநுகரித்துத் தரித்தார்கள். ஆண்டாள் நாச்சியாரும் கோபிகைகள் போன்றே இடைப்பேச்சும் முடைநாற்றமும் என அநுகரித்துத் தானும் திருப்பாவை அருளிச் செய்தார். இவ்வாறு அநுகரித்தல் பிரிவாற்றாமையின் துன்பம் குறைவதற்க்குச் செய்ய்யும் செய்கை ஆகும். நம்மாழ்வார் திருவாய்மொழியில் * கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் * (5-6) என்கிற பதிகத்தில் கடல் ஞாலத்தீசனாக அநுகரித்துத் தரித்தார். ஆனால் திருமங்கையாழ்வாரோ என்னில் அவ்வநுகாரமும் அர்ச்சையினிலே அநுகரித்துத் தரித்தார். தெள்ளியீர் பதிகத்தில் * வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் * (8-2-6) என்பதே. திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சௌரிப்பெருமாளாக நிற்பது யானே என்றார் ஆழ்வார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி *வேறே அநுகரித்தாரும் சிலர் உண்டிறே. “கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்” என்று. அவளைப் போலே ஜகத்காரணரூபியைப்பற்றும் அவளன்றிறே இவள். அர்ச்சாவதாரரூபியையிறே இவள் அநுகரிப்பது. இவ்வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அநுபவமொழிய, அந்தந்த அவதாரங்களால் பிறக்குமநுபவத்தை நாய்க்கிடவென்றிருக்குமவளிறே இவள். *  அர்ச்சாவதாரங்களால் வரும் அனுபவமன்றி மற்றவை திருமங்கை ஆழ்வார் கைக்கொள்ள மாட்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது. மற்றைய ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது.

தூதுவிடுவதும் அர்ச்சைக்கே

        நம்மாழ்வார் எம்பெருமானைக் குறித்து அவரது நிலையை அறிவிக்கும் பொருட்டு திர்யக்குக்களை (பறப்பன முதலியவற்றை) தூது விட்டார். அது நான்கு திருவாய்மொழிகளில் – * அஞ்சிறைய மடநாராய், வைகல் பூங்கழிவாய், பொன்னுலகாளீரோ, எங்கானலகங்கழிவாய் *. இந்த நான்கு பதிகங்களிலும் ஒவ்வொரு நிலையில் தூது விட்டார். முதலில் விபவம், கடைசியாகத் திருமூழிக்களம் அர்ச்சையில் தூதுரைத்தார். இவையனைத்தும், ஆசார்ய ஹ்ருதயத்தில் விரிவாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

     கலியனோ தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார். * தூவிரிய மலருழக்கி * (3-6) அழகிய சிறகுகளோடு கூடிய வண்டு, குருகு முதலானவற்றை வயலாலி மணவாளன் திறத்து தன்னுடைய சிந்தை நோய், உடலின் நோய் ஆகியவற்றை அறிவிக்கும்படி பணிக்கிறார். ஒன்பதாம் பத்தில் * காவார் மடற்பெண்ணை * (9-4) பதிகத்தில் ஆழ்வார் உள்ளத்தாலும், உடலாலும் எய்திய நோய் கூற புள்ளினத்தை திருப்புல்லாணி எம்பெருமானிடத்து தூது விடுகிறார். திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்கள், அணியழுந்தூர் எம்பெருமானிடத்தும், திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடத்தும் தூது விடுவதாக அமைந்தது.  இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்தி * (திருக்கண்ணபுரம் புக்கு) ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமாபோலேயன்று காணும் – இவர்க்குத் திருக்கண்ணபுரம் என்றாலிருக்கும்படி. அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ்வூரில் உண்டான பாவபந்தம். அநந்தாழ்வான் “திருவேங்கமுடையான்” என்னுமாப்போலேயும், பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்னுமாப்போலேயும். சோமாசியாண்டான் ” எம்பெருமானாரே சரணம்” என்னுமாப்போலேயும் திருநாமங்களைச் சொல்லும்போது இவராதரம். * ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்பதை மிகுந்த ஆதரத்துடன் (ப்ரேமத்துடன்) சொல்வார் என்பதே இதன் தாற்பர்யம்.

இன்னமும் * காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் * (8-2-2) என்றவிடத்தில் ஆழ்வாருக்கு திருக்கண்ணபுரத்தில் உள்ள ஆதரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. * (காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்) சுற்றும்கண்ணையோட்டிப் பார்த்தவாறே திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாக வேண்டுவானென்னென்னில்; இவளுக்கு அபிமதம் சவுரிப்பெருமாள் பக்கலிலே யாகையாலும், இவள் தான் லக்ஷ்யத்தை உடையளாகையாலும், திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாயிற்று. * * “திருக்கண்ணபுரத்தைக் காணிகோள், அஞ்சலியைப் பண்ணிகோள்” என்று சொல்லப்புக்கு முடியச் சொல்லமாட்டாதே குறையும் ஹஸ்தமுத்ரையாலே காட்டினாள் * இது பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி. ‘திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று சொல்லத் தொடங்கி, பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை கையினால் முத்திரையினால் முடிக்கிறாள். திருக்கண்ணபுரம் என்றால் மேலே ஒன்றும் செய்ய முடியாதபடி ஆயிற்று, இவ்வாழ்வாருக்கு அவ்வூரில் உள்ள ப்ராவண்யம்.

 இவ்வாழ்வாரின் தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார்.

பாகவத சேஷத்வம்

     வேதத்தின் உட்பொருளான பாகவத் சேஷத்வத்தை கலியன் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்தார். அதுவும், கடல்மல்லைத் தலசயனத்து எம்பெருமான் திறத்து அடியார்களாய் இல்லாதவர்களோடு கூடாமையும், திருச்சேறை எம்பெருமானின் அடியார்களை விட்டுப் பிரியாதவராய் இருத்தலையும் (கண்சோர வெங்குருதி வந்திழிய) சொல்லி பாகவத சேஷத்வத்தை அனுஸந்தித்தார். இதுவும் அர்ச்சாவதார எம்பெருமானிடத்து அடியவராய் இருத்தலே சொல்லப் பட்டது. இரண்டு திவ்யதேஶங்களைச் சொன்னது மற்றவைகளுக்கு உபலக்ஷணம்.

மடல்

ஆழ்வார் மடலெடுத்ததும் அர்ச்சாவதாரத்திலேயாகும். பெரிய திருமடல் தனியன் இது தன்னை விளக்கும்.

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் – நன்னுதலீர் நம்பி நறையூரர் *
மன்னுலகில், என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில் * மன்னு மடலூர்வன் வந்து.

அழகிய நெற்றியையுடைய மாதர்காள்! பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளும் தாமரைப்பூவிற்பிறந்த பிராட்டியும் தோத்திரம் செய்யப்பெற்ற திருநறையூரில் எழுந்தருளியிருப்பவனும் கல்யாண குணபரிபூர்ணனுமான எம்பெருமான் எனது அவஸ்தையைக் கடாக்ஷித்தும் க்ருபை செய்யாவிடில் திருப்பதிகள் தோறும் மடலூர்ந்து கொண்டு இருப்பேன்.

நாயகியாய் வளை இழத்தலும் அர்ச்சைக்கே

ஆழ்வார் நாயகி தஶையினை அடைந்து எம்பெருமானது திருக்குணங்களில் ஈடுபட்டு இருக்க, அந்நாயகியைப் பார்த்து திருத்தாயார், அவள் எப்படி வளை இழந்தாள், என்று கூறுவதாக திருவாய்மொழியிலும், திருமொழியிலும் ஒவ்வொரு பதிகம் இருக்கின்றன. திருமொழியில் தானிழந்தவற்றைத் தன் வாக்காலே அருளினார் என்னும் வாசி குறிக்கத் தக்கது. இங்கு * கலை வளை அஹம் மம க்ருதிகள் * என்ற ஆசார்ய ஹ்ருதயம் காட்டுகிற ஸ்வாபதேஶார்த்தம் நோக்கத் தக்கது.

* மாலுக்கு வையமளந்த மணாளற்கு * (6-6) பதிகத்தில், நம்மாழ்வார் வாமனன் எம்பெருமான் முதலாக * இழந்தது பீடே, இழந்தது சங்கே * என எல்லாம் இழந்ததாக தாய்ப் பேச்சாலே சொல்லப்பட்டது.

பரகால நாயகி (திருமங்கை ஆழ்வாரோ) என்னில் * இழந்தேனென் வரிவளையே இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் செறிவளையே, இழந்தேனென் பொன்வளையே, இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் ஒளிவளையே * என்று வரிவளையை இழந்தது திருக்கண்ணபுரத்துறையும் எம்பெருமானுக்கே ஆதலால், இவ்வனுபவமும் அர்ச்சையிலே ஆயிற்று. இத்திருமொழியில் ஆழ்வார் தாமான தசையில் இழந்தேன் என்னுடைய வரிவளையே என்றருளினார். தெள்ளியீர் பதிகத்தில் ஆழ்வார் தாய்ப்பேச்சாக சவுரிப்பெருமாளை நோக்கி இவளது கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் என்று கேட்கிறாள். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி குறிப்பிடத் தக்கது – * பராவஸ்த்தையைத் தொழுதாளோ? வ்யூஹங்களைத் தொழுதாளோ? அவதாரங்களைத் தொழுதாளோ? அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரையன்றோ இவள் தொழுதது * .

அர்ச்சாவதாரமே ஆறும் பேறும்

     திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் அர்ச்சாவதாரத்தில் இழிகையே உஜ்ஜீவன ஹேது என்பதனை – * உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க்குய்யலாமே? * என்றருளினார். உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டனவாயுள்ள திருக்கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர்நகர், திருக்கடல்மல்லை, ஆகிய இத்திருப்பதிகளைப் பேசிக்கொண்டு அவகாஹிக்குமவர்கள் உஜ்ஜீவிக்கலாமத்தனையொழிய அல்லாதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டோ?

        பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே – திவ்யதேஶங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே! – விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி என்று தானுகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி என்று அர்ச்சாவதாரங்கள் தோறும் யாத்திரையாகப்போவது போக்கித் திரியும் பரமபாகவதர்களுக்குக் கதியே.

  இனி, திருக்கண்ணபுரத்தையே ஆறாகவும் பேறாகவும் சொன்னது இரண்டு திருமொழிகள். * தொண்டீர் உய்யும் வகை * (8-6) என்பது திருக்கண்ணபுரத்து எம்பெருமானை ஆறாக (வழியாக) சொன்னது. * வியமுடை விடையினம் * (8-7) திருமொழி திருக்கண்ணபுரத்தைப் பேறாக (உபேயமாகச்) சொன்னது.

தொண்டீர் உய்யும் வகை பதிகத்தில் * வருந்தாதிரு நீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா * (8-6-6) என்றும் *மால் ஆய், மனமே! அருந்துயரால் வருந்தாதிரு* (8-6-8) என்றும் உபாயத்வம் (விரோதி நிரஸநத்வம்) சொல்லப்பட்டது. இத்திருமொழி அவதாரிகை * ஸர்வேஶ்வரன் நம்முடைய ரக்ஷணத்தில் உத்யுக்தனாய் கொண்டு திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானான்; நாமும் அவனை ஆஶ்ரயித்து உஜ்ஜீவிப்போம் * என்று உபாயத்வம் சொல்லப்பட்டது குறிக்கத்தக்கது.

வியமுடை விடையினம் பதிகந்தன்னில் திருக்கண்ணபுரத்தின் ப்ராப்யத்வம் சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில், விரோதிகள் தொலைந்தால், எம்பெருமானை அனுபவிப்பது பரமபத்திலேயாம். ஆனால் அவ்வெம்பெருமானும் அதனை விட்டு இத்திருக்கண்ணபுரமே ப்ராப்யம் என இங்கு எழுந்தருளியிருப்பதனால் இதுவே ப்ராப்யமாயிற்று, * கணபுரம் அடிகள் தம் இடமே* என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை எம்பெருமானின் இருப்பிடத்தை அநுபவித்து இனியரானதும் நினைக்கத்தக்கது.

இவ்வர்த்தங்களை * தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கண்ணபுரத்தான் நண்ணார் ஒழிப்பானை ஆறாக * என்றும் * வியன்ஞாலத்தில் மல்கு சீரால் நல்வானில் நயமுடைக் கண்ணபுரம் பேறாக * என்றும் திருமொழி நூற்றந்தாதியில் அழகுற அருளியது காணத்தக்கது.

ஒரு நல் சுற்றம் பதிகம்

       இப்பதிகம் பெரிய திருமொழியில் பத்தாம் பத்து முதல் பதிகமாகும். இப்பதிகந்தன்னில் ஆழ்வார் பரமபதத்தேறப் போவதாகத் திருவுள்ளம் பற்றி இந்தத் திருமொழியை அருளிச் செய்கிறார். இதில் கல்யாணமான ஒரு பெண்பிள்ளையானவள் தனது பிறந்தகத்தில் நின்றும் புகுந்தகத்திற்க்குச் செல்லும்முன் தனது உற்ற தோழிகளிடமும் உறவினர்களிடமும் சொல்லிவிட்டு புறப்படுமாபோலே அமைந்தது. * நவோடையான பெண் – பிறந்தகத்தின்றும் புக்ககத்துக்குப்போம்போது ஜந்மபூமியிலுள்ள உறவுமுறையாருள்ளிடமெங்கும் புக்கு முகம் காட்டுமாபோலே *. ஆழ்வார் தமக்கு ஒரு (அத்விதீயமான) நற்சுற்றமாகக் கொண்டது திவ்யதேஶ எம்பெருமான்களையே. இங்கு திருநீர்மலை, திருக்கண்ணமங்கை முதலான திவ்யதேஶ எம்பெருமான்களின் குணாநுபவம் பண்ணுகிறார்.

      இளையபெருமாள், மாதா பிதா என அனைவரும் எனக்குப் பெருமாளே என்றார். மார்க்கண்டேய மஹரிஷி பாண்டவர்களுக்கு மாதா, பிதா, ஸுஹ்ருத் என அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனே என உபதேஶித்தார். கலியன் இப்படி எல்லாமாகப் பற்றுவது அர்ச்சாவதார எம்பெருமான்களையே. ஆழ்வார்க்கு இவ்வுலகம் பிறந்தகம்; புகும்வீடு பரமபதம்; திவ்யதேஶ எம்பெருமான்களே உற்றார் உறவினர், சுற்றத்தவர் மற்றும் பிறரும் ஆவர். இங்குள்ள திவ்யதேஶ எம்பெருமான்களிடம் சொல்லிக் கொண்டு ஆழ்வார் வானேறப் புறப்படுகிறார்.

மோஹிப்பதும் அர்ச்சையிலே    

    கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து, * எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே! * என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்! இதனை * த்வா மந்ய கோபக்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீய மவமாந மம்ருஷ்யமாணா, ப்ரேம்ணா த தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரித மார்யஜனாஸ் ஸஹந்தே* (40) என்கிற அதிமானுஷஸ்தவ ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் ஸ்ரீ கூரத்தாழ்வான். இங்ஙனம் நீ கட்டுண்டிருந்தாய் என்கிற சரிதத்தைப் ப்ரஸ்தாவித்த மாத்ரத்தில் ஸஹிக்க முடியாமல் *எத்திறம்* என்று ஆழ்வார்கள் மோஹிப்பர்கள்.

திருமங்கையாழ்வார் மோஹிப்பதோ அர்ச்சாவதாரத்திலே! உம்பொன்னுமஃதே (திருநெடு – 19) * உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை; ‘மத்துறுகடைவெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘ என்று அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது * இது வ்யாக்யான ஸ்ரீஸூக்தி. இத்தன்மை மற்ற ஆழ்வார்களுக்குத் தான் உண்டோ என திருத்தாயார் கேட்கிறார்

இதன் மூலம் கலியனின் அர்ச்சாவதார ஈடுபாடு விண்ணப்பிக்கப்பட்டது.

12316666_319453494845708_6603969925319131064_n

                        மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
                        எண்ணும் திருப்பதி நூற்றெட்டினையும் நண்ணுவார்
                        கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
                        பொற்பாதம், என்றலைமேல் பூ

                       மால்நீர்மைக்கு எல்லை உகந்தஊர் நூற்றெட்டு
                       சாலநண்ணியுள்ள கணக்கினிதாய் – ஆலிநாடன்
                       செய்யுந்திருமொழி நூற்றெட்டும் ஓதிடுவார்
                       எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து.      (திருமொழி நூற்றந்தாதி சாற்றுப் பாசுரம்)

திருமாலின் நீர்மை குணத்திற்கு எல்லை நிலமான திவ்ய தேசங்கள் 108. அந்த கணக்கு வரும்படி திருவாலி நாட்டிற்கு அதிபதியான ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 108ம் ஓதிடுவார் (திருமொழி மொத்தம் 108 பத்துக்கள்), விரைவாக வானவர் நாடான ஸ்ரீவைகுந்தம் புக்கு அங்கு திருமாலிற்கு அடிமை செய்வார்.

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலிவைரிணே
சதுஷ்கவிப்ரதாநாய பரகாலாய மங்களம்.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

 

Leave a Comment