ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஆழ்வார்களும் ஸ்வாமி ஆளவந்தாரும்
ஸந்யாஸிகளுக்குத் தலைவர்
ஸ்ரீ ஆளவந்தார்
நமக்கு திவ்ய ப்ரபந்தத்தை மீட்டுக் கொடுத்தவரான ஸ்வாமி நாதமுநிகளின் பேரனும் ஸ்வாமி எம்பெருமானாரின் பரமாசார்யரும், யாமுநாசாரியர், யமுனைத் துறைவர், யாமுநமுநி என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுபவர் ஸ்வாமி ஆளவந்தார். இவர் அருளிய அர்த்தங்களையே இவருடைய காலத்துக்குப் பின் அவதரித்த ஆசாரியர்கள் அனைவரும் பின்பற்றி தம்முடைய நூல்களை இயற்றினரென்றால் அது மிகையாகாது. ஆளவந்தார் அருளிச்செய்யாத அர்த்தம் நம் ஸம்பிரதாயத்தில் ஒன்றும் இல்லை.
இவ்வாறு உயர்ந்த குருபரம்பரையில் வந்தவரான ஸ்வாமி ஆளவந்தாரின் மேன்மையை அறிந்தவர்கள் ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர். ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை. திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.
ஸ்வாமியின் பன்முக வித்வத் திறமைகளை அறிந்துகொள்ள அவருடைய அற்புதமான க்ரந்தங்களான ஸ்தோத்ர ரத்னம், ஸித்தித்த்ரயம், ஆகம ப்ராமாண்யம் போன்றவைகளால் அறிந்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ஸ்வாமிக்கு கவிதை, தத்துவ ஜ்ஞானம், வாத ப்ரதிவாதம், பாஞ்சராத்ரம் ஆகியவற்றில் உள்ள அதிகாரத்தை புரிந்து கொள்ளலாம். அல்லது, ஸ்வாமியின் வார்த்தைகளைக் கொண்டே புரிந்து கொள்ளலாம்.
न वयं कवयस्तु केवलं, न वयं केवल–तन्त्र–पारकाः, अपितु प्रतिवादिवारण–प्रकटाटोप–विपाटन–क्षमाः |
(ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)
“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல; நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார். ஸ்வாமியின் இந்த வாக்கு, தற்பெருமையினால் வந்ததல்ல என்று நன்கு கற்றறிந்த வித்வான்கள் அறிவார்கள்.
நம் ஸம்ப்ரதாயத்தின் ஆசார்யர்கள், ஸம்ஸ்க்ருத மொழியில் வேத வாக்யங்களை ஒருங்க விட்டு நமது ஸித்தாந்தத்தை தெளிவுபடுத்த நூல்களை இயற்றியுள்ளனர். ஆனால், அவற்றில்லெல்லாம் நம் ஆழ்வார்களின் பாசுரங்களை மேற்கோள் காட்டியிருக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், இப்படி அமைந்த நூல்களின் குறி்க்கோளையும், அவற்றைக் கற்கும் அதிகாரிகளையும் கருதியே ஆகும். ஆனால், நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய க்ரந்தங்கள் என்று வரும்போது அவர்கள் ஆழ்வார்களைப் பற்றியும், பாசுரங்கள் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி போற்றியுள்ளனர்.
ப்ரபந்ந குலத்தின் அதிபதி
ஶ்ரீ சடகோபன்
ஸ்வாமி நம்மாழ்வார் மீது ஸ்வாமி ஆளவந்தார் கொண்டிருந்த அதீத பக்தியை நாம் ஸ்தோத்ர ரத்னத்தின் ஐந்தாவது பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம். ‘माता पिता – மாதா பிதா’ என்று ஆரம்பிக்கும் இப்பாசுரத்தில் ஸ்வாமி நம்மாழ்வாரின் பெயரை நேரடியாக எங்கும் ப்ரயோகிக்காமல், ‘आद्यस्य नः कुलपतेः – ஆத்யஸ்ய ந: குலபதே’ என்றும், அதாவது, ஸ்வாமி ஆளவந்தார் வழி வந்த ஆசார்ய குருபரம்பரையின் அதிபதி என்றும், வகுளாபிராமம் என்றும் ப்ரயோகம் செய்திருப்பார். वकुलाभिरामम् – வகுளாபிராமம் என்றால் வகுள மலர்களை தரித்தவர் ஆகும். வகுள மலர்களை யார் வேண்டுமானாலும் தரித்திருக்கலாமே, அதை வைத்து எப்படி ஸ்வாமியை குறிக்கிறார் என்று நிச்சயம் செய்ய முடியும் என்று தோன்றும். அதற்கு ஆழ்வாரே தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகளைக் கவனித்தால் – நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன் மாறன் சடகோபன் – வகுள மலர்களே நாட்கமழ் மாலை எனவும் அதை அணிந்திருப்பவர் ஆழ்வாராகையால் வகுளாபரணன் என்ற வார்த்தை அவரையே குறிக்கும் என்ற விஶேஷ அர்த்தமும் தோற்றும். பின்னாளில் அவதரித்த ஆசார்ய புருஷர்களும் ஆழ்வாரை ‘वकुलाभरणं वन्दे जगदाभरणं मुनिम्. – வகுளாபரணம் வன்தே ஜகதாபரணம் முநிம்’ என்று போற்றியது இங்கு கவனிக்கத்தக்கது.
ஸ்தோத்ர ரத்னத்தில் ஆசார்ய வரிசைக் க்ரம விசாரம்
ஶ்ரீ மந் நாதமுனிகள்
ஸ்தோத்ர ரத்னத்தில் ஸ்வாமி ஆளவந்தார், முதல் மூன்று ஶ்லோகங்களால் ஸ்வாமி நாதமுநிகளையும் ஐந்தாவது ஸ்லோகத்தினால் ஸ்வாமி நம்மாழ்வாரையும், நடுவே ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளிய ஸ்வாமி பராஶர மஹரிஷியைப் பற்றி ஒரு ஸ்லோகமும் சாதித்துள்ளார். ஆனால் நம் குருபரம்பரையில் நாம் ஸ்வாமி நம்மாழ்வார், ஸ்வாமி நாதமுநிகள், ஸ்வாமி ஆளவந்தார் என்ற வரிசைக் க்ரமத்திலேயே ஸேவித்து வருகிறோம்.
ஶ்ரீ பராஸரர்
இப்படியிருக்க, ஸ்வாமியின் முதல் ஐந்து ஸ்லோகங்களின் வரிசை க்ரமம் நமக்குள் ஒரு கேள்வியை தூண்டும். அதாவது ஸ்வாமி ஆளவந்தார், ஸ்ரீ பராசர முநியை ஸம்ஸ்க்ருத வேதாந்தத்துக்கு ஆசார்யராய் முதல் பாடலில் பாடி, பின்பு தன் குல ஆசார்யரான நாதமுநிகளைப் பற்றி பாடி, பிறகு நம் ஸம்ப்ரதாய குலபதியாக ஆழ்வாரைப் பாடியிருக்கலாம். அல்லது, முதலில் தம் ஆசார்யரையும், குலபதியாக ஆழ்வாரையும் பாடி பின்பு ஸ்ரீ பராசர முநியைப் பாடியிருக்கலாம். இவ்வழியன்றி, ஏன் இந்த வரிசைக் க்ரமத்தில் ஸ்தோத்ரத்தை அமைத்தார் என்பதே அக்கேள்வி.
ஸ்வாமி தேசிகரின் அழகிய வ்யாக்யானம்
கீழ்கண்ட கேள்வியின் பதிலில் த்ரமிடோபநிஷத்தின் ஏற்றம் மறைந்திருக்கிறது. அதை ஸ்வாமி வேதாந்த தேசிகரின் அற்புதமான வ்யாக்யானத்தைக் கொண்டு நாம் மேலே அநுபவிப்போம்.
ஸ்வாமி நாதமுநிகளுக்குப் பிறகு ஸ்வாமி நம்மாழ்வாரைப் பாடிய காரணம், ஆழ்வாரே ஸ்வாமி நாதமுநிகளுக்கு த்ரமிடோபநிஷத்தை அருளிச் செய்தவர் என்பது நம் ஸம்ப்ரதாயத்தில் ப்ரஸித்தம். ஆனால், ஆழ்வாரை ஸ்ரீ பராசர மஹரிஷிக்குப் பின்பு பாட காரணம் என்ன என்பதற்கு ஸ்வாமி தேசிகனின் வியாக்யானம் மேலே:
“வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள் எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால் நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும், கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார். எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ, அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி
நம் பூர்வாச்சார்யர்களும், ஆழ்வாரை எம்பெருமானின் திருவடிகளாகவே நினைத்தார்கள். கீழே கண்ட அக்காரணத்தாலேயே, ஸ்வாமி ஆளவந்தார் எம்பெருமானை போற்றுவதற்காக தொடங்கும் முன், அவருடைய திருவடிகளான நம்மாழ்வாரைப் போற்றித் தொடங்கினார் என்றும் பெரியோர் கூறுவர்.
ஸ்தோத்ர ரத்னத்தின் பல ஶ்லோகங்கள் ஆழ்வாரின் பல பாசுரங்களுக்குத் தொடர்புடையனவாக அல்லது நேரடி விளக்கமாகவோ உள்ளதை இங்கு காணலாம். (இவற்றின் விரிவான அர்த்தத்தை அவரவர் ஆசார்யர் பக்கலில் காலக்ஷேபமாக கேட்டறிந்துகொள்ள விடப்பட்டது).
- க:ஶ்ரீ:ஸ்ரீய (12) , ஸ்ரீய:ஶ்ரீயம் (45) – திருமங்கை ஆழ்வாரின் திருவுக்குந்திருவாகிய செல்வா.
- 26வது ஶ்லோகம் ‘நிராஸக ஸ்யாபி ந தாவதுத் ஸஹே ‘- குலசேகர ஆழ்வாரின் பாசுரம் தருதுயரந்தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை, விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட்டம்மானே
- 38வது ஶ்லோகத்தின் வார்த்தைகள் – குணேன ௫பேண விலாஸ சேஷ்டிதை: ஸதா தவைைவோசி தயா தவ ஸ்ரியா:, ஆழ்வாரின் உனக்கேற்குங்கோலமலர்ப்பாவைக்கன்பா என்ற பாசுரத்துக்கு விளக்கமாக அமைந்துள்ளது..
- 40வது ஶ்லோகம், ‘நிவாஸ ஸய்யாஸன’ பொய்கையாழ்வாரின் சென்றால் குடையாம் பாசுரம் போலே அமைந்துள்ளது.
- ஆழ்வாருடைய வளவேழுலகு பத்தின் ஸாரார்த்தமாக அமைந்துள்ள ஶ்லோகம் திக ‘ஸுசிம்அவிநீதம்’ (47).
- “எனதாவிதந்தொழிந்தேன் … எனதாவியார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்ற பாசுரத்தை வபுராதிஷு (52) , மம நாத(53) என்ற ஶ்லோகங்களில் காணலாம்.
- 56வது ஶ்லோகத்தில் ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வார்களை ‘மஹாத்மபிர்மாம்’ என்றழைக்கிறார். ஒருநாள் காணவாராயே, நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே, எம்மாவீட்டுத்திறமும் செப்பம் என்ற பாசுரங்களில் உள்ளது போன்ற அநுபவத்தை இந்த ஶ்லோகத்தில் உரைக்கிறார்.
- 57வது ஶ்லோகமான ‘ந தேஹம் ந ப்ராணான்’, ஆழ்வாரின் ஏறாளுமிறையோன் என்ற பத்தின் சுருக்கமாக அமைந்துள்ளது.
கீழே நாம் கண்ட பல ப்ரமாணங்களிலிருந்து ஸ்வாமி ஆளவந்தார் திவ்யப்ரபந்தத்தைத் தன்னுடைய ஸம்ப்ரதாய க்ரந்தங்களின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டோம்.
ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்தம் ஸுதுர்க்ரஹம்| ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர தம் வந்தே யாமுநாஹ்வயம்||
[யதிகளுக்குத் தலைவரும், மறைபொருளின் உயரிய அர்த்தங்களை எல்லோருக்கும் புரியும்படியாக ஶ்லோகங்களாக அருளிச்செய்தவருமான ஸ்வாமி யாமுந முநியை வணங்குகிறேன்.]
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/02/dramidopanishat-prabhava-sarvasvam-4-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org