ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தீப ப்ரகாசன். இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான். குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !!
சம்பராஸுரன், இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட, பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி, காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்..
ஒளியாக வந்து ரக்ஷித்த பெருமானின் பெருங்கருணையை பிரமன் முதலான அனைவரும் கொண்டாடினர் !
“ப்ரகாசிதம் ஜகத்ஸர்வம் யத் தீபாபேன விஷ்ணுநா |
தஸ்மாத் தீப ப்ரகாசாக்யாம் லபதே புருஷோத்தம:” என்கிறது புராணம்..
தன்னுடைய ஒப்பற்ற ஒளியினாலே உலகனைத்தையும் ப்ரகாசிக்கச் செய்தவன் ஆனமையால் இவன் தீப ப்ரகாசன் என்று பெயர் பெற்றானாம் !
பகவான் ஒரு மிகப் பெரிய தீப்பந்தம் போன்ற வடிவு கொண்டிருந்தாலும் , யாக சாலைக்கோ, பிரமன் தொடக்கமானவர்களுக்கோ எந்த இன்னலும் தராமல், எதனையும் எரித்துச் சாம்பலாக்காமல் ஒளி மட்டும் தருபவன் ஆனானாம் ..
“ந ததாஹ ததா சாலாம் ததத்புதமிவாபவத்” என்று புராணம் விவரிக்கிறது !!
எம்பெருமானுடைய தேஜஸ்ஸு, ஒளியிற்சிறந்த மற்ற எல்லா பதார்த்தங்களையும் (பொருள்களையும்) வெல்ல வல்லது !
அவனுக்கு முன்னே சூரியனோ, சந்திரனோ, மின்னல்களோ, நக்ஷத்ரக் கூட்டங்களோ அல்லது அக்னி தான் ஒளிவிடக் கூடுமா ?!
ஒளியை உடையவன் என்பதனாலுமன்றோ அவன் “தேவன்” எனப்படுகின்றான் !
கீதாசார்யனான கண்ணனும் ” திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா| யதி பாஸ்ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மந ” என்றான் !!
(கணக்கற்ற ஸூர்யர்கள், ஒரே சமயத்தில், ஆகாயத்தில் தோன்றினால் அவைகள் அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகக் கூடும்)
உபனிஷத்தும் அவனை பாரூப: (ஒளிமயமாயிருப்பவன்) என்கிறது !!
“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்” என்றும்” சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு” என்றும் ஆழ்வார்கள் இறைவனைப் போற்றுகின்றனர் !!
விளக்கொளி என்றும் தீபப்ரகாசன் என்றும் போற்றப்படுகின்ற இவ்வெம்பெருமானின் பெருமைகளை “சரணாகதி தீபிகையின்” வாயிலாக வெளியிடுகின்றார் தேசிகன் ..
சோதி வெள்ளமாய்த் தோன்றிய இறைவனை, பல வகைகளில் துதித்தான் பிரமன். அவனுடைய தோத்திரங்களால் மகிழ்ந்த பகவானும் பிரமனுக்கு நல் ஆசிகளை வழங்கினான் !! அஸுரர்களின் திட்டம் தவிடு பொடியானது.
பல முறை தோற்றாலும் அஸுரர்கள் திரும்பத் திரும்ப வரத் தானே செய்வர்கள். வேறோர் வகையில் வேள்விக்கு பங்கம் விளைவிக்க ப்ரயத்னம் செய்தார்கள்..
யாக சாலைக்குப் பெருங்கூட்டமாகப் படையெடுத்து அனைத்தையும் நொடிப்பொழுதில் அழித்திட எண்ணங்கொண்டு அஸுரர்கள் திரும்பவும் திரண்டனர் !!
தீப ப்ரகாசன் தோன்றித் துயர் தீர்த்திருக்க, ஈதென்ன மீண்டும் பிரச்சினை என்று பிரமன் அஞ்சினாலும், அவனுடைய இறை நம்பிக்கை அவனைத் தேற்றியது !
பெரும்படையுடன் ஓடி வரும் அஸுரர் குழாம் கண்டு பிரமன் தன்னுள் சொல்லிக் கொண்டது இது தான்..
இதுவும் கடந்து போகும் .. அவனருளால்..
அப்பொழுது யாகசாலையிலிருந்து பெருத்த சப்தத்துடன் ஏதோவொன்று மேலே கிளம்பியது !
என்ன அது ??
அடுத்த பகுதியில் …
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “வரதன் வந்த கதை 9”