வரதன் வந்த கதை 11-3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 11-2

திருவட்டபுயகரம் – காஞ்சியில் வைகுந்த வாசலுடன் விளங்கும் ஒரே க்ஷேத்ரம் ! எட்டுத் திருக்கரங்களுடன் பகவான் சேவை ஸாதிக்கும் தலம்.

வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கைகளில் சங்கு, வில், கேடயம், தண்டு ஆகியவற்றை ஏந்தினபடி இங்கு இன்றும் நம்மைக் காத்து நிற்கிறான் !

ஆதி கேசவன் என்றும் கஜேந்த்ர வரதன் என்றும் அட்டபுயகரத்தான் என்றும் இறைவன் போற்றப்படுகின்றான்..

இந்தத் தலத்திற்கே “அஷ்டபுஜம்” என்று பெயர் ! இங்கு உறைகின்றமையால் பெருமான் அட்டபுயகரத்தான் என்றழைக்கப்படுகின்றான் !

“பரகாலன் பனுவல்” (திருமங்கையாழ்வார் பாசுரம்) கொண்டு இத்திருத்தலத்தினை நாம் அனுபவிக்கலாம்..

கலியனுக்கு , எம்பெருமான் திறத்தில் அளவற்ற காதல் ! அக்காதல் அவரைத் தாமான தன்மை (ஆண் தன்மை) இழக்கச் செய்து, ஆன்மாவின் உண்மை நிலையான பெண் தன்மையில் பேசச் செய்தது ! அப்பொழுது அவருக்கு” பரகால நாயகி” என்று பெயர் !

பெண் தன்மையில் பாடும் பொழுது , பெண்ணான தான் அவனைப் பிரிந்து படும் வேதனைகளை , தானே (ஒரு பெண்ணாக) சொல்லுவதாகவும் தன் தாய் சொல்லுவதாகவும், தன் தோழி சொல்லுவதாகவும் பாடுவர் !

திருவிடவெந்தை என்கிற திருத்தலத்தைப் பாடும் பொழுது, மகள் (பரகால நாயகி) படுகின்ற வேதனைகளைக் கண்ட அவள் தாயார் , இறைவனைக் குறித்து, என் பெண் உன்னைப் பிரிந்து இத்தனை அல்லல் படுகின்றாளே ! இடவெந்தை ஈசனே !! என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய்?!! உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்?! என்று கேட்பதாக அத்திருமொழி அமைந்துள்ளது !!

பெண் தன்மையை அடைந்த ஆழ்வார் படும் சிரமங்களைக் கண்ட பகவான், அவரைத் தேற்ற” எட்டுத் திருக்கைகளுடன்” மிகவுமினியவனாய் காஞ்சியில் ஆழ்வாருக்கு முகம் காட்டினான் !!

பரகால நாயகி , அவனைப் பார்த்து, இத்தனை அழகாயிருக்கிறானே !! இவன் யாரோ என்று அறிந்து கொள்ள விரும்பி, அவனை நேரடியாக வினவாமல், தள்ளி நிற்கிற ஒருவரிடம் ;

அதோ அங்கே எட்டுத் திருக்கரங்களுடன் பேரழகனாய் ஒருவர் நிற்கிறாரே; யார் அவர்? என்று கேட்டார். உடனே இவ்வெம்பெருமான் தானாகவே முன் வந்து” நான் தான் அட்டபுயகரத்தேன்” என்று பதில் சொன்னானாம் !!

நான் அஷ்டபுஜன் என்று சொல்லியிருக்கலாம் ! அப்படிச் சொன்னால் நான் தான் எம்பெருமான் என்று சொன்னதாக ஆகும் !! பெருமானுக்கு அதில் விருப்பமில்லை போலும் ! தன்னை வேறொருவனாகப் பொய்யுரைக்கவும் அவன் விரும்பவில்லை !!

எனவே சாமர்த்தியமாக, “அஷ்டபுஜ க்ஷேத்ரத்திலே இருப்பவன் நான்” என்றானாம்!!

எனவே தான் இப்பதிகத்தில் பாசுரந்தோறும் “இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே” என்று வருகின்றது !

வேதாந்த தேசிகனும் தம்முடைய அஷ்டபுஜாஷ்டகத்தில் , இவ்வெம்பெருமானை அழைக்கும் பொழுது “அஷ்டபுஜாஸ்பதேச” (அஷ்டபுஜத்தை இருப்பிடமாக உடையவனே , ஈசனே !) என்றருளினார் !

ஆக இத்திருத்தலத்திற்கே அஷ்டபுஜம் என்கிற பெயர் உண்டு என்பதறிந்தோம் !

பிரமன் தொடங்கி பரகால நாயகி வரை அனைவரையும் தன் வசமாக்கிக் கொண்டவன் இவ்வெம்பெருமான் !

அடியவர்களைக் காப்பதைத் தன் பேறாகக் கருதும் இயல்வினன் !

பிரமன் அவன் பெருங்கருணையைத் துதிக்கலானான்..

பெருமானே ! “உன்னைத் துதிக்கத் தோன்றின துதிக்கை முகனை” (யானை – கஜேந்த்ரன்) ரக்ஷித்து , கஜேந்த்ர வரதன் என்று பெயர் பெற்றவனன்றோ நீ! என்றான் !

அழகான சரித்திரம் ..

ஒரு அரசன், கர்ம வசத்தால் யானை ஆயினன் ! அரசனாய் இருந்த பொழுது ஒரு நாளும் எம்பெருமானைத் துதிக்கத் தவறியதில்லை ! இறையருளால் யானையாய் உருமாறின பின்பும் தன்னிலை மறவாமல் நாடோறும் மலர்களைக் கொய்து வந்து, எம்பெருமானைப் பூசித்து வந்தான்.

ஒரு நாள் நீர் நிலையில் தாமரை மலர்களை கொய்வதற்காக அந்த யானை முயல, அந்தச் சமயத்தில் அங்கிருந்த பெரிய முதலை ஆனையின் காலைக் கவ்வியது !

கலங்கிப்போனது களிறு ! தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனை முயன்றும் முடியவில்லை ! பிடிகளும் (பெண் யானைகளும்) அதனைக் காக்க முயன்றன ! ஆனால் தோல்வியே மிஞ்சியது !!

ஆயிரம் தேவ வருஷங்கள் பெரிய போராட்டம் தான்..இறுதியில் தன் முயற்சி தன்னைக் காக்காது என்றுணர்ந்த யானை “நாராயணா ! ஓ மணிவண்ணா ! நாகணையாய் ! வாராய் என் ஆரிடரை நீக்காய்” என்று அரற்றியது ..
“ஆதி மூலமே” “ஆதி கேசவா” என்று உரக்கப் பிளிறியது !

மற்ற தேவதைகள் ” நாஹம் நாஹம் ” ( (ஆதிமூலம்) நானில்லை; நானில்லை) என்று பின் வாங்கினர் ..

இவ்வெம்பெருமான் தான் ஓடோடி வந்து முதலையை முடித்து , ஆனையைக் காத்தான் !

யானை இறைவனுக்கு நன்றி செலுத்தியது ! அஷ்டபுஜப் பெருமாள் தன்னுடைய உத்தரீயத்தினாலே (மேலாடையினாலே) தன் வாயில் வைத்து ஊதி யானையினுடைய காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தானாம் !!

யானை ஆனந்தக் கண்ணீர் பெருகப் பேசியது ! ஹே ! ஆதி கேசவா ! உன்னைக் கொண்டாடுவேனா ?! உன் அன்பினைக் கொண்டாடுவேனா ?! என்னைக் காக்க நீ வந்த வேகத்தைக் கொண்டாடுவேனா ?!

பராசர பட்டர் ‘பகவதஸ்த்வராயை நம:’ என்று அடியவனான யானையைக் காக்க அவன் ஓடி வந்த வேகத்திற்குப் பல்லாண்டு பாடுகிறார் !!

இறைவா.. நீ “அநாதி:” (விஷ்ணு ஸஹஸ்ரநாமம் – 941) என்று ஏன் அழைக்கப்படுகிறாய் தெரியுமா ?

மற்றைய தேவர்கள், உன்னைப் புகழ்ந்தாலும், அவ்வப்பொழுது தாங்களே உயர்ந்தவர்கள் என்று தலைக்கனத்தாலே பிதற்றுகின்றார்கள்.

“அருளையீன்ற என்னம்மானே ! என்னும் முக்கணம்மானும் பிரமனம்மானும் தேவர் கோனும் தேவரும் ஏத்தும் அம்மான்” அன்றோ நீர் !

அப்படியான தேவர்களுக்கு நீ அல்ப பலன்களையே வழங்குகிறாய் !

உன்னையே எல்லாமுமாகக் கொண்டிருக்கும் எங்களுக்கோ உன்னையே வழங்குகின்றாய் !

எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ நீ !

எனவே தான் நீ அநாதி என்றழைக்கப் படுகிறாய் !

(ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில், சப்த ஸஹ: (912 ) என்கிற திருநாமம் தொடங்கி ருசிராங்கத: (945) என்கிற திருநாமம் வரை “ஆனை காத்த கண்ணன்” விஷயமே என்பது ஸ்ரீ பராசர பட்டர் திருவுள்ளம் !!

காலை கண் விழித்தவுடன் இந்த கஜேந்த்ர ரக்ஷண வ்ருத்தாந்தத்தையும், கஜேந்த்ர வரதனான அஷ்டபுஜப் பெருமானையும் நாம் சிந்தித்தால், தீய கனவுகளினால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதாம் !!

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸ்வப்ந நாசன:”

என்கிறது ஸஹஸ்ரநாமமும் !!

முன்பே ஆதி கேசவன், கஜேந்த்ர வரதன் என்று அழைக்கப்பட்டவன் இன்றும் அஷ்டபுஜப் பெருமானாய் நம்மைக் காக்கிறான் !!

பிரமன் வேள்வியைத் தொடர்ந்தான் ..

தோல்வியுற்ற காளி தன் தலையைத் தொங்கவிட்டபடி ஸரஸ்வதியிடம் சென்றாள் !

ஸரஸ்வதி அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானாள் !! அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள் ..

நாமும் அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !!

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment