வரதன் வந்த கதை 12-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 11-3

எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே “யஜ்ஞ:” என்று திருநாமம் உண்டு! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் ..

அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹம் அஹமௌஷதம் |
மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 )

யாகம் நான்..மஹாயஜ்ஞம் நான்; பித்ருக்களுக்கு வலுவளிக்கும் ஸ்வதா என்கிற பிண்டம் மற்றும் சப்தம் நான், நானே ஹவிஸ்ஸு, மந்த்ரம் நானே, நெய் நானே, அக்னி நானே, செய்யப்படும் ஹோமமும் நானே என்கிறான் கண்ணன் !!

ஸஹஸ்ரநாமத்தில் யஜ்ஞ : என்கிற திருநாமம் தொடங்கி யஜ்ஞகுஹ்யம் என்கிற திருநாமம் வரை, மேற்கண்ட கீதா ச்லோகத்தை விவரிக்குமாப் போலே அமைந்திருக்குமழகு காணத் தக்கது !!

” செய்கின்ற கிதியெல்லாம் யானே” என்றார் ஆழ்வாரும் !

“வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான்” என்றார் கலியன் !

மறை ,வேள்வி, தக்ஷிணை யாவும் அவனே !

எனவே தான் பிரமன் அச்சங்கொள்ளவில்லை ! உண்மையான நம்பிக்கை அச்சத்தினைத் துணைக்குக் கூப்பிடாது !

ப்ரஹ்லாதன் சொன்னதும் அது தானே ! சிறுபிள்ளை தான் அவன். பள்ளியிலோதி வரும் பருவம் தான் ! ஆனால் ஸாதுக்களின் தலைவனாகப் பார்க்கப்படுகின்றான். காரணம் இது தான். அவன் அஞ்சியதில்லை !

இரணியனுக்கே வியப்பு ! மகனைப் பார்த்து கேட்கிறான்.. பிள்ளாய் உனக்குப் பயமே இல்லையா ?! சிரித்த படி அக்குழந்தை சொன்ன காரணம் இது தான் !

எவனைக் கண்டால்/நினைத்தால் பயமும் பயங்கொள்ளுமோ; அவன் என்னோடுளன்! இனியென் குறையெனக்கு! இது தான். இந்த நம்பிக்கை தான் அப்பாலகனை இறுதி வரை காத்தது!

நாம் கொள்ள வேண்டியதும் அதுவே! ஆம்! நம்பிக்கை! இறை நம்பிக்கை! அவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதனையே!

மஹாவிச்வாஸம்! பிரமனிடத்து அது இருந்தது! ஸரஸ்வதியின் தாக்குதல் குறித்து அவன் விசனப்படவில்லை!

ஸரஸ்வதி தான் தப்புக் கணக்கு போட்டிருந்தாள்! போதாக் குறைக்கு அஸுரர்களின் துர்போதனை வேறு! அஸுரர்களின் கோபத்துக்குக் காரணங்கள் பல! இயற்கையாகவே நல்லவர்களைக் கண்டால் ஆகாது. தவிரவும் பிரமனுடைய வேள்வியில் தேவதைகளுக்கு அதிக மதிப்பும் அஸுரர்களான தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை போன்ற புகார்கள் வேறு!

ஸரஸ்வதியைக் கொண்டு வஞ்சம் தீர்த்துக் கொள்ள முற்பட்டதன் விளைவே; வேள்வியைக் குலைக்கும் செயல்கள்!

அஸுரர்கள் ஸரஸ்வதியைக் கொண்டே தங்கள் (நாச) காரியத்தை முடித்துக் கொள்ள எண்ணினர். அவளும் இசைந்தாள்! தான் தவஞ்செய்யும் இடத்திலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி வந்து சேர்ந்தவள்; ஒரு மஹாநதியாயப் பெருகி பிரமனின் வேள்வியை அழிக்க வந்தாள்!

ஸரஸ்வதி “வேகவதி” ஆனாள் ! கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு அந்நதி பாய்ந்து வருவதே, அவள் சீற்றத்தினை அனைவருக்கும் உணர்த்தியது ! வேள்வியில் கலந்து கொள்ள வந்தவர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் வேகவதிக் காட்டாற்றிலிருந்து காத்துக் கொள்ள , உயரமான இடங்களைத் தேடத் தொடங்கினார்கள் ! கடல் எழுந்து நின்றாற்போல் அச்சமூட்டியபடி அலையெறிந்த வண்ணம் வேகமாக யாக சாலையை நெருங்கிக் கொண்டிருந்தாள் வேகவதி !

மநோ வேகம் , வாயு வேகம் போன்றவைகள் வேகவதியின் வேகத்திற்கு முன்னே தோற்றுப் போமளவு அந்நதியின் பாய்ச்சல் இருந்தது!

இன்று இருந்த சுவடே தெரியாமல் , நம்மால் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்ட வேகவதி நதி, ஏழு கிளைப் பிரிவுகளுடன் பெருகிப் பாய்ந்த பெருமையுடையது என்று சொன்னால் உங்களுக்கு அது பொய்யாகத் தான் தோன்றும் !

ஆக்கிரமிப்புகளினால் கிளைப்பிரிவுகளுடன் சேர்த்து வேகவதியையும் மொத்தமாக அழித்த பெருமை நம்மையே சாரும் !

(புராண) ஹஸ்திகிரி மாஹாத்ம்யமும், தேசிகனின் ஹம்ஸ ஸந்தேசமும், வேகவதியின் மஹிமையை; அதில் நீராடினால் வரும் நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றது !

நம்முடைய பாபங்களைப் போக்கப் பிறந்த வேகவதியையே அழித்து நாம் நம் பாபச் சுமையைக் கூட்டினவர்களானோம் !

ஆப ஏவ ஹி ஸுமநஸ : என்றும் இனிதென்பர் தண்ணீர் என்றும் பிரமாணங்கள் சொல்லும் நாம் தான் ; நீரின்றி அமையாது உலகு என்று சொல்லும் நாம் தான் நீர் நிலைகளை, நதிகளை அழித்தோம்.

எத்தனையோ பாபங்களை நாம் செய்பவர்களாயினும்; அவைகளுக்குக் கழுவாய் (பிராயச்சித்தம்) இருப்பினும், பெருத்த பாபமான நீர் நிலைகளை அழித்த பாபத்திற்கு விமோசனமிருப்பதாகத் தெரியவில்லை !

கோபத்தோடு பெருகி வந்த ஸரஸ்வதியாம் வேகவதியை, இறைவன் கூட, அழித்திடாது அணையாய்க் (அவள் வேகத்தைக் கட்டுப்படுத்திக்) காத்தான் !

ஆனால் நாம் !!

வேகவதியின் ஏழு கிளைப் பிரிவுகளையுமன்றோ அழித்தொழித்தோம்.

அவைகளின் பெயர்களாவது தெரிந்து கொள்வோமே என்கிறீர்களா ?!

அடுத்த பகுதிக்குக் காத்திருங்கள் .

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “வரதன் வந்த கதை 12-1”

Leave a Comment