ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் மீண்டுமொரு முறை அவனைத் தரிசித்திட ஆசைப்பட்டாள். அவனைத் தரிசிக்க இச்சை (ஆசை) தானே தகுதி !
“கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ” என்றும் “போதுவீர் போதுமினோ” என்றும் தமப்பனாரும் திருமகளாரும் (பெரியாழ்வாரும், ஆண்டாளும்) பாடியுள்ளமை; அவனை அடைய (நமக்கு) ஆசையே வேண்டியது என்பதனை உணர்த்தும் !
“ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே” என்றார் லோக திவாகரர் (திருமங்கையாழ்வார்) !
ஸரஸ்வதியின்; நாரணனைக் கண்டுவிட வேண்டும் என்கிற ஆர்வமே நதியாய் வடிவு கொண்டதோ என்று சொல்லும்படி இருந்தது அவளது வேகம்!
அலையெறிகின்ற அந்நதியின் ஓசை கூட, அவள் எண்ணத்தினை உச்சரிக்குமாப் போலே இருந்தது. அவளது எண்ணம் தான் என்ன ?!
இரண்டு முறை அவனைக் கண்டிருந்தும், அவனைக் கடந்திருந்தும் நாம் துதிக்காமல் போனோமே என்கிற வருத்தம் அவளை வாட்டிக் கொண்டிருந்தது ! மீண்டுமொரு முறை அவனைக் காண விரும்பியவள், இம்முறை அவனைத் துதிப்பதோடு மட்டுமின்றி; அவன் திருவடிகளையே உற்று நோக்கியபடி எந்நாளும் இருந்திட வேண்டும் என்கிற அவள் நினைப்பே; அலைகளின் ஓசையாகப் பரிணமித்ததோ என்று கருதும்படியாயிற்று !!
தேவர்களும் பிரமனும் கூட, பெருமானை இறைஞ்சினார்கள். அத்தனை ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காத்தவன்; இதோ கச்சியிலும்; ஹஸ்திசைலத்திற்கருகிலும் நிச்சயமாக நம்மைக் காப்பான் என்று உறுதிபட நம்பினார்கள் !
தன் பால் அன்புடையடியவர்க்கு எளியவன் ஆயிற்றே பகவான்! தோன்றாதிருப்பனோ!
ஸேதுவாய் (அணையாய்) மீண்டும் சயனித்தபடி ஸகலரும் (அனைவரும்) காண ஆவிர்பவித்தான் அழகன்..
அவன் திருவடிகளை வருடியபடி, ஸரஸ்வதி நாணமுற்றவளாயும், அன்பினால் கனத்த நெஞ்சு உடையவளாகவும், இதுவரை இருந்த விருப்பு, வெறுப்பு , கோபம் , வஞ்சம் போன்ற தீய குணங்கள் முற்றிலுமாக அழியப்பெற்றவளாயும் “பரமனடி பாடி”க் கொண்டிருந்தாள் !
ஹஸ்திசைலத்திற்கு மேற்கே வேகாஸேதுவாய் (வேகமாய்ப் பெருகி வந்த நதியைத் தடுத்திட ஒரு அணையாய்) மலர்ந்த விழிகளுடனும், மாறாத புன்னகையுடனும் ஸரஸ்வதியை நோக்கிப் பேசலானான் பெருமான் !
” மத்பாதஜாயா: கங்காயா அபி தே ச்ரைஷ்ட்யம் உத்தமம்; தத்தம் மயா அதுநா க்ஷேத்ரே மதீயே புண்ய வர்த்தனே |
யஸ்மாத் வேகாத் அனுப்ராப்தா க்ஷேத்ரம் ஸத்ய்வ்ரதம் ப்ரதி: தஸ்மாத் வேகவதீ இதி ஆக்யாம் லப்த்வா வஸ மதாஜ்ஞயா |
அஹம் சாபி உத்தரே தீரே தவ வத்ஸ்யாமி சோபனே ||”
(இந்த புராண ச்லோகங்களைப் படிப்பதும் கேட்பதும் நமக்கு நன்மை தரும்! அதற்காகவே இவைகளை இங்கே காட்டியுள்ளேன் ! வாசகர்கள் படித்தின்புறுக!)
ஹே! ஸரஸ்வதி! நீ கங்கையை விடச் சிறந்தவள் என்று கொண்டாடப்படுவாய்! வேகவதி என்றுன்னை அனைவரும் போற்றுவர்! உனது வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன்! என்கிற வரங்களைத் தந்தான் வெஃகணைப் பெருமான்! (வேக அணை என்பது வேகணையாகி அதுவே வெஃகணை என்று திரிந்து அதுவே வெஃகா என்றாயிற்று)
ஸரஸ்வதி ஆனந்த பாஷ்பங்களுடன் பரமனைப் போற்றிக் கொண்டிருந்தாள்!
வேகாபகை (வேகவதி) என்கிற பெயர் எனக்கு எத்தனை பிடித்திருக்கிறது தெரியுமா! ஆறு (நீர்) வெள்ளத்தோடு பாய்ந்தால் அதற்கு ஆபகா என்று பெயராம்!
அப்படிப் பெருகி வந்த என்னை தடுத்தாட்கொண்டாய் தலைவா!
“வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே” – உன்னை எங்ஙனம் போற்றுவேன்!
“உன்னிய யோகத்துறக்கத்தினை” இங்கே காணப்பெற்ற இவ்வடியவள் தான் எத்தனை பாக்கியசாலி! “பாந்தன் பாழியில்” (பாம்புப் படுக்கையில்) பள்ளி விரும்பி இங்கே எழுந்தருளினையோ?
கச்சிக்கிடந்தவனே – நீ இன்று தானா அணை என்று போற்றப்படுகின்றாய்!
“அம்ருதஸ்ய ஏஷ ஸேது:” என்று வேதமும் உன்னைப் போற்றுகின்றமை பிரசித்தம்! உன்னையடைய விரும்புகிறவனுக்கு, இந்த ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுபட நீயே அணை ஆகின்றாய்!
இங்கு, உன் நிறமும் அழகும் பார்த்தால், உயர்ந்த “இந்திர நீலக் கல்லே” ஒரு அணையாக ஆயிற்றோ என்று நாங்கள் வியந்து நிற்கிறோம்!
ஸகல லோகைக ஸேதுவான நீ, வேகவதியான என்னிடையே, அரவணையோடும் கூட அணையாகக் கிடப்பதை மூவுலகிலுள்ளவர்களும் கண்ணும் மனமும் களித்திடக் கண்டு நிற்கிறார்கள் !
நான் சினம் தவிர்ந்தேன்! என் நிலை உணர்ந்தேன்! நின்றவா நில்லா நெஞ்சுடையவளாய், இவ்வேள்விக்கு எத்தனை எத்தனை இடையூறுகளை விளைத்திட்டேன்!
நீயோ என்னிடம் கோபிக்காது என்னை ஆட்கொண்டாய்! என்று இவ்விதம் பலவாறாக அவள் துதிக்கவும், பிரமனும் மிகுந்த ஆனந்தத்துடன் அவளுடன் இணைந்து கொண்டான்!
அணை (எம்பெருமான்) அவ்விணைக்கு (பிரமன் – ஸரஸ்வதி) ஆசி வழங்கியது !
சொன்ன வண்ணம் செய்பவனன்றோ நான்! பீஜகிரிக்குக் கீழும், திருப்பாற்கடலிலும் தோன்றிய என்னை; திரும்பவும் கண்டிட நீ ஆசைப்பட்டாய்! வருகிறேன் என்றேன். சொன்ன வண்ணம் வந்திடவும் செய்தேன்! விச்வ ரக்ஷைக ஹேதுவான (உலகினைக் காத்திடும் ஒரே காரணனான) நான் இங்கேயே என்றும் இருந்து, அபீஷ்ட ஸித்தி (பக்தர்களின் {ந்யாயமான} கோரிக்கைகளைத் தரும் ஸாதனம்) என்று அனைவரும் கொண்டாடிடத் திகழ்வேன் என்றான் !
பிரமனே! இனி கவலையில்லை! வேள்வி இனிதே நிறைவுறும்! அச்சமில்லை! உனக்கான பரிசு விரைவில் உன் கண் முன்னே! அப்பரிசு உனக்கானதாக மட்டுமின்றி இவ்வுலகிற்கான பரிசாகவும் ஆகும்!
காத்திருப்பாய் என்றான் !
நாமும் காத்திருப்போம் !!
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “வரதன் வந்த கதை 13”