ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸேதுர் யஜ்ஞே ஸகல ஜகதாம் ஏக ஸேது : ஸ தேவ : ||
நிகரில் புகழுடைத் தொண்டை மண்டலத்தின் மேன்மைகள் …
பேரருளாளன் பெருமையை, திருவத்தி மாமலையின் ஏற்றங்களை “ப்ரஹ்மாண்ட புராணம் ” என்கிற நூல் நமக்கு எடுத்துரைக்கிறது ..
நாரதரும் ப்ருகு முனிவரும் பேசிக் கொள்வதாய், (ஒரு உரையாடலாக) ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் அப்புராணத்தில் அமைந்துள்ளது !
ப்ருகு வேண்டினபடியால், பிரமன் தனக்கு உபதேசித்த ஸத்ய வ்ரத க்ஷேத்ர மாஹாத்ம்யத்தை நாரதர் (ப்ருகுவிற்குச்) சொல்லலானார் .
துண்டீர மண்டலமென்றும் தொண்டை மண்டலமென்றும் வழங்கப்படுகிற இந்நிலப் பகுதி, பூமியின் மற்ற பாகங்களை விடப் பல வகைகளில் சிறப்புடையது !
அதனால் தான் அசரீரி, பிரமனை பூமியின் இப்பகுதிக்கு விரைந்து செல்ல ஆணையிட்டது ! ஆம் !! “ஸத்ய வ்ரத க்ஷேத்ரம்” அது இங்கு தானே உள்ளது !
நம்முடைய விரதம் ..அதாவது நாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தொடங்கும் நற்காரியங்கள் தங்கு தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறுமிடமாதலால் இவ்விடம் ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் என்று கொண்டாடப்படுகின்றது !
பூமிப் பிராட்டியின் இடைக்கு ஒட்டியாணமிட்டது போல் விளங்கும் ஊராக அறியப்படும் பெருமை காரணமாக “காஞ்சீ” என்றே புகழப்படும் நிலம் இது !
ஆம் ! காஞ்சீ என்று மேகலைக்கும் (இடை ஆபரணத்திற்கும்) பெயர் !
ஒரு பெண்ணை வருணிக்கும் புலவர்கள் பெரும்பாலும் அவள் இடையையன்றோ கவி பாடுவர் ! அது போல் , பூமி இத்தனை சிறந்து அழகாய் காட்சி அளித்திடக் காரணம் அவள் இடை, இடை ஆபரணம் போல விளங்கும் காஞ்சியேயாம் !
காஞ்சியில் பிறந்தால் முக்தி ; காசியில் மரித்தால் முக்தி என்னும் சொற்றொடர் இவ்வூரின் பெருமையை பாமரர்க்கும் எளிதில் உணர்த்திடும் !
அயோத்யா, (வட) மதுரா , ஹரித்வாரம், காசீ, காஞ்சீ, உஜ்ஜயினீ, த்வாரகை ஆகிய க்ஷேத்ரங்களை “முக்தி தரும் நகரங்கள்” என்று அழைப்பர்கள் !! தென்னாட்டில் இருந்து இப்பட்டியலில் இடம் பெற்ற பெருமை காஞ்சிக்கே என்பதனை நினைவில் கொள்க !
இன்னொன்று; பூமிக்கு இடை ஆபரணம் போலே என்று (காஞ்சீ) சொல்லப்பட்டது போல், மற்றெந்த முக்தி க்ஷேத்ரங்களும் பூமியோடு தொடர்பு படுத்திப் பேசப்படவில்லை / கொண்டாடப் படவில்லை என்பதும் காஞ்சிக்குத் தனிப் பெருமையாம் !!
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஒன்று என்கிற தன்னேற்றமும் காஞ்சிக்கு உண்டு ! (ஒருவரும் ப்ரார்த்திக்காமல், தானே உகந்து பகவான் நிலை கொள்ளும் இடங்களை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்பர்)
“ஸ்வயமுதயிந:” என்று தயா சதகம் மேலே சொன்ன கருத்தினை அறிவிக்கின்றது !!
பண்ணிய நல் விரதமெல்லாம் பலிக்க , பாரதத்திற் படிந்திட்ட பங்கயத்தோனை (பிரமனை) ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல் என்று அசரீரி பணிக்கவும், சடக்கெனப் புறப்பட்டான் பிரமன் !
அப்பொழுதே யாகம் செய்து இறைவனைக் கண்டு விட்டாற் போல் குதூகலித்தான் கமலோத்பவன் (பிரமன்) !!!!
வேதாந்த தேசிகன் “ஹம்ஸ ஸந்தேசமென்றொரு நூல்” அருளியுள்ளார் ..
ஸீதையின் பிரிவால் வாடும் இராமன் ஓர் அன்னப் பறவையை அவளிடம் தூது விடுவதாக அமைந்திருக்கிற அற்புதக் காவியமிது !
அன்னப்பறவைக்கு, எப்படிச் செல்ல வேண்டும்; எங்கெங்கெல்லாம் செல்ல வேண்டும்; தரிசிக்க வேண்டியவைகள் என்னென்ன என்று அனைத்தையும் விவரித்துச் சொல்லுகிறான் இராகவன் !!
போகும் வழியில் , தொண்டை மண்டலம் புகுந்து ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல்லாமல் வாராதே என்று அன்புக் கட்டளையிடுகின்றான் !!
‘துண்டீராக்யம் ததநு மஹிதம் மண்டலம் வீக்ஷமாண: க்ஷேத்ரம் யாயா: |
க்ஷபித துரிதம் தத்ர ஸத்ய வ்ரதாக்யம் ||’
என்று புகழ்கின்றான் இவ்வூரினை !!
ஸத்ய வ்ரத க்ஷேத்ரமென்பது பாபங்களையெல்லாம் விரைவாகப் போக்கும் திவ்ய பூமி !
மேலும் எம்பெருமானின் தொடர்ச்சியான கருணைப் பார்வைக்கு இலக்கான ஒரே ஊர் காஞ்சீ மட்டுமே என்றும் ஹம்ஸ ஸந்தேசம் இவ்வூரினைக் கொண்டாடுகின்றது !!
இன்னொன்றும் வெகு ஸ்வாரஸ்யமாக, தனக்கே உரித்தான பாணியில் “கவி தார்க்கிக ஸிம்ஹம்” தேசிகன், அங்கு அருளிச்செய்கிறார் !
ஸீதையை நாடிச் செல்லும் அன்னப் பறவை, வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பதால் களைத்துப் போக வாய்ப்புண்டு ! வியர்வையினால் உண்டாகும் சிரமங்களும் அன்னத்தை பாதிப்பிற்குள்ளாக்கக் கூடும் !
ஆனால் அன்னம் அது குறித்து அஞ்ச வேண்டியதில்லையாம் !! ஏனெனில் காஞ்சியின் காற்று அன்னத்தின் களைப்பை அநாயாஸமாகப் போக்கிவிடுமாம் !!
“மந்தாதூதாத் ததநு மஹிதோ நிஸ்ஸ்ருதச் சூதஷண்டாத்;
பார்ச்வே தஸ்யா: பசுபதிசிரச் சந்த்ர நீஹார வாஹீ |
தூராத் ப்ராப்தம் ப்ரியஸகமிவ த்வாம் உபைஷ்யதி அவச்யம்;
கம்பாபாத : கமல வநிகா காமுகோ கந்தவாஹ:||”
அன்னமே; காஞ்சியில் மாஞ்சோலைகள் நிறைய உண்டு ! காற்று வீசுவதால் மாமரங்கள் அசைய, அவற்றின் (மாங்கனி, பூ, இலை) நறுமணங்களைச் சுமந்து கொண்டு, காற்று அங்கிருந்து நகரத்து மக்களை மகிழ்விக்கப் புறப்பட்டுச் செல்லும் !
அது மட்டுமா?!! அக்காற்று தன்னுடைய குளிர்ச்சியை அதிகரிக்க மற்றொரு உபாயத்தை (வழியைக்) கைக் கொள்ளுமாம்.. மாந்தோப்புகளிலிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வரும் போது இங்கு கோயில் கொண்டிருக்கும் ஏகாம்பரன் (பரம சிவன்) தலையைத் தடவிக் கொண்டு கிளம்புமாம்..
காற்று தன் குளிர்ச்சியைக் கூட்ட, சிவனின் சிரஸ்ஸை தடவிப் பயன் உண்டோ என்கிற ஐயம் எழுவது இயற்கை !
சிவன் தன் தலையில் சந்திரப் பிறை சூடியிருக்கின்றான் .. சந்திரன் குளிர்ச்சிக்குப் ( தண்ணளி) பெயர் போனவன் .. அப் பிறையில் தோய்ந்து காற்று தன்னை இன்னமும் குளுமையூட்டிக் கொள்ளுமாம் !! இத்தனை போதாதென்று தாமரைக் காட்டைத் தழுவி , அதன் மணத்தையும் சுமந்து கொண்டு, ஒரு தோழனை உபசரிக்குமாப் போலே அன்னமே காஞ்சியின் காற்று உன்னையும் உபசரிக்கும் !!
அஞ்சாதே !! என்று பெருமாள் (இராமன்) அன்னத்தைப் பார்த்துச் சொல்லுவதாக ஸாதிக்கிறார் தேசிகன் !!
தற்சமயம் கடும் கோடை வெப்பத்தால் துவண்டு அவ் வருணனை (மழையை) எதிர்பார்த்திருக்கும் நமக்கு இவ் வருணனை (மேலே கண்ட ச்லோகம் மற்றும் அதன் பொருள்) சற்றேனும் ஆறுதலன்றோ !
(அவ் வருணனை, இவ் வருணனை என்றவிடங்களில் சிலேடைச் சுவை ரசித்திடுக!)
இப்படிப் பரம்பொருளான இராமனே , இந்நகரைப் பல படிகளாக (பல வகைகளில்) கொண்டாடியிருக்கின்றான் எனில்; பிரமன் மகிழ்ச்சியுடன் இந்நகரை நோக்கி ஓடி வரத் தயக்கம் தான் உண்டோ ?!
மண் மகளுக்கு அலங்காரமெனத் திகழும் மதிள் கச்சியை மகிழ்வுடனே வேகமாக அடைந்திட்டான் நான்முகனும் !!
வரதனாய் இறைவன் வருவதற்கு முன்பே அவன் அருட்பார்வை பதிந்திட்ட அத்திகிரியைக் கண்டான் அயன் !
எம்பெருமானுடைய சக்ராயுதமே அத்திகிரி ஆயிற்றோ என்று வியந்தான் பிரமன்.. ஆம் சக்ரம் எதிரிகளைப் பூண்டோடு அழிக்கும் !
இம்மலை நம் வினைத் தொடரை (பாபங்களை) வேரோடு அறுக்கும் !!
மலைக்கு இனியனாய் நின்ற பெருமானை மனக்கண்ணில் நிறுத்தி , மலையையே கரம் குவித்துப் போற்றலானான் நாபீஜன்மன் !!
உடனடியாக வேள்விக்குத் தன்னையும், ஊரையும் தயார்படுத்த எண்ணியவன் சட்டென ஒரு பெயரை உச்சரித்தான் ..
ஆம் .. விச்வகர்மா தான் அவன்..
அவன் வருகைக்குக் காத்திருந்தான் பிரமன்..நாமும் காத்திருப்போம் !!
******************************************************************************
விட்டில் பூச்சிகள் விளக்கினில் விழுந்து மடிவது அனைவருமறிந்ததே !!
விளக்கினை ஆரேனும் குறை கூற வழியுண்டோ ??
விளக்கொளியில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகள் .. ( நிஜ வாழ்க்கையிலும் பல மூடர்களுக்குப் பொருந்தும் ) !!
வரதன் வந்த கதையில் .. விரைவில்..
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “வரதன் வந்த கதை 6”