ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பொன்மலை உதித்தாற் போல் , புண்ணிய கோடி விமானம் தோன்ற, அதனுள் (ஒளியில்) ஸூர்யனும் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு; ஒளி வெள்ளமாய் வரதன் வந்துதித்தான் !!
“சைத்ர மாஸி ஸிதே பக்ஷே சதுர்தச்யாம் திதௌ முனே:
சோபனே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே |
வபாஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே
தாதுரத்தர வேத்யந்த : ப்ராதுராஸீத் ஜநார்த்தந: ||”
சித்திரை மாதத்தில், சுக்ல பக்ஷத்தில், சதுர்தசி திதியில், ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய, மங்களகரமான ஹஸ்த நக்ஷத்ரத்தில், “வரந்தரு மாமணி வண்ணன்” வந்து தோன்றினான் !!
ப்ராதஸ் ஸவந காலத்தில் பிரமன் கண்களுக்கு விஷயமானான் இறைவன் !!
ஒரு வேள்வி (பசு யாகம்), காலை, நடுப்பகல், மாலை என த்ரி (மூன்று) காலங்களில் நடத்தப்பட வேண்டும் ..அவைகளுக்கு முறையே ப்ராதஸ் ஸவநம், மாத்யந்தின ஸவநம், ஸாயம் ஸவநம் என்று பெயர்கள் !
வபையை (விலங்கின் உள் சதையை) எடுத்துச் செய்யப்படும் யாகம், காலையில் வேள்வியில் செய்யப்படவேண்டும் !!
அச்சமயத்தில் தான் பேரருளாளன் பெருங்கருணையுடன் வந்தருளினான் !!
அனைவருக்கும் ஒரே புகலான ஸாக்ஷாத் நாராயணன் நமக்காக வரதனாய் வந்தார் !! சங்கம் சக்ரம் கதை ஆகியவற்றை ஏந்தியுள்ள பரம்பொருள் நமக்காக இங்கு தோன்றினான் !!
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு, நமக்காக இங்கு (வரதனாய்) வந்தது!! நாம் வானேற (வைகுந்தம் செல்ல) வழி தருமவன்; தானே நம் பொருட்டு வரதனாய் வந்தான் !!
இப்படிப் பலரும் , வரதனைக் கண்டு “தொடர்ந்தெங்கும் தோத்திரம்” சொல்லினர் !!
“மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில்” போன்றவனான வரதன் பேரழகில் அங்குள்ளார் அனைவரும் தங்களை மறந்திருந்தனர் !!
கண்கள் காண்டற்கரியவன்; கண் முன்னே நிற்கக் கண்ட நான்முகன், பித்துப் பிடித்தவனைப் போலே ஆயினன் !!
“அத்தா அரியே என்றுன்னையழைக்க பித்தாவென்று பேசுகின்றார் பிறரென்னை” என்கிறார் திருமங்கையாழ்வார்!! பக்தியிற் சிறந்தவர்கள் ஊரார் கண்களுக்குப் பித்தர்களாகத் தான் தெரிவார்கள் !!
உந்மத்தவத், ஜடவத், பிசாசவத் என்று பக்தியின் இயல்புகளை நாரத பக்தி ஸூத்ரம் வருணிக்கின்றது !!
பக்தி { = இறை அன்பு } என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும் ! சிலரைப் பித்தர்களைப் போலே ஒரு இடத்திலே இருக்க விடாமல் சுற்றப்பண்ணும் !! சிலரை ஜடத்தைப் போலே ஒரே இடத்திலே வைத்திருக்கும் !! சிலரைப் பிசாசத்தைப் போலே ஆக்கும் !!
“மீரா ஹோ கயி மகன் .. ஓ கலி கலி ஹரிகுண் கானே லகீ”
(மீரா கண்ணன் மேல் பைத்தியமானாள்; தெருத்தெருவாக சுற்றிச் சுற்றி ஹரியின் குணங்களைப் பாடத் தொடங்கினாள்) என்கிற பக்தை மீராவின் பஜனை” பக்தி – உன்மத்த நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு !
“ஜட பரதர்” – பக்தியில் சிறந்தவர். ஜடத்தைப் போல் இருந்தவர். இது, பக்தி – ஜட நிலைக்கு எடுத்துக்காட்டு !! பக்தி எதனைத் தான் செய்யாது என்கிறார் சங்கர பகவத் பாதர் !
வரதனைக் கண்ட பிரமன் திக்குமுக்காடிப் போனான் ! நெடுநாள் பசியுடையவன் சோற்றைக் கண்டாற் போலே , வரதனைக் கண்களால் பருகிக் கொண்டிருந்தான் அயன்! “ஆராவமுதே!! ஆராவமுதே !! என்று வாய் வெருவிக் கொண்டிருந்தான் !!
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, நடுநடுங்கின உடலோடே என்ன செய்வதென்றறியாதவனாய் இங்குமங்கும் ஓடியோடி வரதனை (தன் கண்களால்) விழுங்கிக் கொண்டிருந்தான் !
சிறிது போது , தன் கைகளைத் தட்டிக் கொண்டு, “வரதராஜா !! தேவராஜா !! தயாநிதே !! பேரருளாளா !!” என்று சொல்லிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ப்ரதக்ஷிணங்களைச் செய்தான் !!
சுற்றிச் சுற்றிச் வந்தவன், தன்னை மறந்தவனாய் அவ்வப்போது அப்ரதக்ஷிணமாகவும் சுற்றினான் !!
ப்ரதக்ஷிணம் ப்ரைதி ததா’ப்ரதக்ஷிணம் ப்ரயாதி தூரம் புநரேதி ஸந்நிதிம் |
கரேண பஸ்பர்ச மமார்ஜ தத்வபு: ப்ரியேண காடம் பரிஷஸ்வஜே க்ஷணம் ||
என்று பிரமன் நிலையை வருணிக்கிறது புராணம் !!
“அத்யந்த பக்தியுக்தஸ்ய ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:”
சிறந்த பக்தியுடையவர்களை ; எந்த சாஸ்த்ரங்களும், சட்டங்களும் , நியமங்களும் கட்டுப் படுத்தவே செய்யாதன்றோ !
பிரமன் நினைத்துக் கொண்டான்;
வரதன் பக்கத்திலிருந்து ஸேவித்தால் இத்தனை அழகாய் இருக்கிறானே; தூரத்திலிருந்து வணங்கினால் ??
உடனே தள்ளி விலகி நின்று தரிசித்தான் !
இன்னமும் அழகனாய்த் தெரிந்தான் வரதன். திரும்பவும் பக்கத்தில் வந்து வணங்கினான். மீண்டும் தள்ளிச் சென்று வணங்கினான். பக்கத்தில் வருவதும், பேரருளாளனைத் தொட்டுப் பார்ப்பதும், அவன் கன்னங்களைக் கிள்ளுவதும், அவனைக் (வரதனை) கட்டிப்பிடிப்பதும்! அதிகம் கட்டிப்பிடித்தால் குழந்தை வரதனுக்கு வலி ஏற்படுமோ என்று அஞ்சி நடுங்கி தன் கைகளை விலக்குவதும்!! .. பிரமன் செயல்கள் பலருக்கும் ஆச்சரியமூட்டின !!
நாத்தழும்ப நான்முகன் வரதனைப் போற்றினான் !!
எங்ஙனம் ??
காத்திருப்போம் !!
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
தேவரீருக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
“ஸவநம்” என்ற பகுதியை சற்று விளக்கமாக அருள வேண்டும் ஸ்வாமி.
திருக்கச்சிநம்பிகளின் வாயிலாக ஶ்ரீமத் இராமாநுஜருக்கு வழங்கிய ஆறு வார்த்தைகளின் சத்தியமான விளக்கத்தையும் அந்த வார்த்தைகளின் நோக்கத்தையும் தெளிவு படுத்த இயலுமா.
வழக்கத்தில் உள்ள விளக்கங்கள் மற்றும் பொது மேடையில் சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாக இல்லை.
ஆச்சார்யர்களின் வாழ்வை ( 1: இராமாநுஜமுனி2: மணவாள மாமுனிகள் 3: தேசிகர்) பார்க்கும்பொழுது இந்த 6 வார்த்தைகளின் உள்ளார்த்தங்களை (குஹ்யம்) பற்றி நம்மால் ஒரு தீர்வுக்கு வர இயலவில்லை.
ஆராய்ந்து அறிய முற்படுவதை இராமாநுஜர் ஊக்கப்படுத்துவது நிச்சயம் என்று நம்புகின்றேன்.
ஆச்சார்யர்கள் வாழி, ஆழ்வார்கள் வாழி, அரங்க நகர் வாழி.
அடியேன்
ஶ்ரீநிவாஸ இராமாநுஜதாஸன்.
jaigurudhev@gmail.com
swagatham9100@gmail.com
ஶ்ரீவைஷ்ணவமும் ஶ்ரீமத் இராமாநுஜ தர்சனமும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் சனாதன தர்மங்களும் அபிவிருத்தி அடையவேண்டும் என்று பகவானை வேண்டிக்கொள்கின்றேன்.
அடியேன்.