வேதார்த்த ஸங்க்ரஹம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

 

தொடக்கப் பாசுரங்கள்

ஆசார்யர்கள் தம் உபதேச  ஸ்ரீகோசங்களை எம்பெருமான் மீதும் ஸ்வாசார்யர் மீதும் துதிகளோடே தொடங்குவது மரபு. ஸ்வாமியும் தம் நூலை முதல் ச்லோகம் எம்பெருமானைப் பற்றியும், இரண்டாவது ச்லோகம் தம் ஆசார்யரான யாமுநாசார்யர் பற்றியுமாக இரண்டு ச்லோகங்களோடே தொடங்குகிறார்.

[1] அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI

நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I    

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின்  உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக்கொள்கிறார். கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:” (எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான். வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும்போதே அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக்கொள்கிறார். இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார். சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே  வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷின்

அவனே ஒன்றுவிடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி. அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன. அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன. நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை. அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன. அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன. அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன. இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

ii) சேஷ சாயின்

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.  ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான். இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.  ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள்  எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது. இதுவே சேஷ / சேஷி ஸம்பந்தம்.

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும்  விஷ்ணுவுக்கும் உடையவன்/அடிமை என்றார். இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன்  என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?  ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது, இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது. மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே. இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன். நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர். உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான். அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன். ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

அவன் குற்றமற்றவன், நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு, ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது. அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது. ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள். ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது. விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது. அவன் ஸ்வாமித்வத்திலும்கூட அபூர்ணனல்லன். அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன். அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச்சொல்லின் பொருளுமாகும். எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை. சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான். சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/28/vedartha-sangraham-1-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment