ஐப்பசி மாத அநுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwyhQb903z2p2myqyX4

ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் துலா மாஸம் என்று புகழ் பெற்ற ஐப்பசி மாதம் தனிச் சிறப்புடையது. அம்மாதத்தின் சில சிறப்புகளை நோக்கி அனுபவிப்போம்.

  • முதலாழ்வார்கள் – முதலாழ்வார்கள் என்று புகழ் பெற்ற பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் இப்புனித மாதத்திலேயே அவதரித்தனர். த்வாபர/கலி யுகங்களின் சந்தியில் (இரு யுகங்களுக்கு இடைப்பட்ட காலம்)  தோன்றி ஆழ்வார்கள் மற்றையோரின் வரவுக்கு வழி வகுத்தனர் எனலாம். இவர்கள் வரவில் தொடங்கி மற்றுள்ள ஆழ்வார்களில் தொடர்ந்த அருளிச்செயல் நமக்கு கிடைத்த பெருஞ்செல்வம் என்பதால் மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் சேதனர்களை உஜ்ஜீவிக்க அவதரித்தனர் என்று உகந்தருளினார்.
  • இம்மாதத்தின் மற்றொரு மாபெரும் சிறப்பு யாதெனில் முதலாழ்வார்கள் தோன்றி அருளிச் செயலை நமக்கு அளித்த முதல் மாதத்திலேயே நம் ஓராண் வழி ஆசார்ய பரம்பரையின் இறுதி ஆசார்யர் ஆகிய மாமுனிகள் அவதரித்ததும் ஆகும். ஐப்பசித் திருமூல நன்னாளில் எம்பெருமானாரே அருளிச் செயல்களையும் அவற்றின் வ்யாக்யானங்களையும் நன்கு பரப்புவது எனும் ஒரே லக்ஷ்யத்திற்காக மாமுனிகளாய் மீண்டும் வந்தார்.  அவர் முன்பு தமிழ் வடமொழி ஆகிய இரண்டிலும் பெரும்  தேர்ச்சி பெற்றிருந்தும் வேதங்கள் வேதாந்தங்கள்ஆகியவற்றிற்கான விளக்கங்கள், பாஷ்யங்கள் இடும் பணியிலேயே பெரும்பொழுது கழிந்ததால்  மாமுனிகளாய் வந்து திருவாய்மொழி மற்றும் அருளிச் செயல்களுக்கான வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்த வ்யாக்யானங்கள் இவற்றிற்காகவே வாழ்ந்து நம்மை உஜ்ஜீவிப்பித்தருளினார்.

எம்பெருமானார்,மாமுனிகள் – ஸ்ரீபெரும்பூதூர்

இனி இம்மாதத்தில் அவதரித்த பூர்வாசார்யர்களின் பெருமைகளைப் பார்ப்போம்.

  • சேனை முதலியார் (ஐப்பசிப் பூராடம்) ஸ்ரீவைகுண்டத்தில் ஸேனைத் தலைவரான இவரே நம் குரு பரம்பரையில் மூன்றாமவர்.

சேனை முதலியார்

முதல் ஆழ்வார்கள் – (காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள) தொண்டைமண்டலத்தில் பூக்களில் அவதரித்தவர்கள். அவர்கள் அனைவரும் ஸ்ரீமன் நாராயணின் பரத்வத்தை மிக அழகாக எடுத்துக் காட்டினார்கள். அவர்களின் அர்ச்சாவதார அனுபவம் – https://granthams.koyil.org/2012/10/archavathara-anubhavam-azhwars-1/

  • பொய்கை ஆழ்வார் (ஐப்பசித் திருவோணம், ச்ரவணம்) – எம்பெருமான் (விண்ணுலகம், மண்ணுலகம் எனும்) இரண்டு விபூதிகளுக்கும் நாதன் உபய விபூதி நாதன் எனத் தமது முதல் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே காட்டுகிறார்.
  • பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்) – தமது இரண்டாம் திருவந்தாதி முதல் பாசுரத்திலேயே நாராயணனை அன்றி வேறு பரமன் இலன் என்கிறார்.
  • பேயாழ்வார் (ஐப்பசி சதயம்) – தம் மூன்றாம் திருவந்தாதி முதல் பாசுரத்திலேயே திருமகள் நாதனே பகவான் என்கிறார்.
  • பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்) நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யர்களில் ஒருவர். பரமபதம் பெறுவதைக் காட்டிலும் இங்கே ஸ்ரீரங்கத்தில் நம்பிள்ளைக்குக் கைங்கர்யம் செய்வதே பெரும் பேறென்றிருந்தவர். இவரே ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் அருளிச் செய்தவர்.

நம்பிள்ளையின் திருவடிகளில் பின்பழகிய பெருமாள் ஜீயர்

  • நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்) கூரத்தாழ்வான் திருவம்சத்தவர் நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யர்களில் ஒருவர்.
  • பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசித் திருவோணம்/ச்ரவணம்) – தேவப் பெருமாளின் திருஅவதாரம். வடக்குத் திருவீதிப்  பிள்ளையின் குமாரராக நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் அவதரித்தவர். ரஹஸ்யக்ரந்த ரசனையையே லக்ஷ்யமாகக் கொண்ட பரம காருணிகரான ஆசார்யர் இவரே. இவரது முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசன பூஷணம் என்பன காலக்ஷேப க்ரந்தங்களாகக் கொண்டாடப் படுகின்றன. அவை ஸத்  ஸம்ப்ரதாய ஸாரார்த்தங்களே நிறைந்த வடிவுடையன. இவற்றின் உட்பொருள்களைத் தெள்ளத்தெளிய உரைக்கும் வ்யாக்யானங்களை மாமுனிகள் அருளிச்செய்தார்.
  • விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்திரட்டாதி) – பிள்ளை லோகாசார்யரின் ப்ரிய சிஷ்யர். திருவனந்தபுரத்தில் கைங்கர்யம் செய்துகொண்டு ஸ்ரீவசன பூஷணம் மற்றும் முக்கிய ரஹஸ்யார்த்தங்களைத் திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தவர். ஸ்ரீவசன பூஷண உட்பொருளாகிய ஆசார்ய மாஹாத்ம்யத்தை விளக்கும் “ஸப்த காதை” க்ரந்தம் இவர் அருளிச் செய்ததே.
  • ஆயி ஜனன்யாசார்யர் (ஐப்பசிப் பூராடம்) – திருநாராயணபுரத்து மஹா வித்வான், செல்வப்பிள்ளை மீது இவர் கொண்ட ஈடிலா அன்பால் எம்பெருமானாலேயே “என் தாய்/ஆயி” எனக் கொண்டாடப் பட்டவர். ஆசாரய ஹ்ருதய கிரந்த ஸூக்ஷ்மங்களை அவர்களின் சந்திப்பின்போது மாமுனிகளுக்குக் காட்டியவர். இருவரும் பரஸ்பரம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
  • மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்) – நம் ஸம்ப்ரதாயத்தின் மிகப் பெருங்காருணிகரானவர். பெரிய பெருமாளால் உகந்து ஆசார்யனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரிய ஜீயர் என்றும் அழைக்கப் படுபவர். நம் ஸம்ப்ரதாய ஆசார்ய மகுட சூடாமணி விசதவாக் சிகாமணி. அனைத்து க்ரந்தங்களிலும் பெரு வல்லமை பெற்றுப் பேருரைகள் அனுக்ரஹித்து நம்மை வாழ்வித்தருளினவர்.
  • எறும்பியப்பா (ஐப்பசி ரேவதி) – மாமுனிகள் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவர். மாமுனிகள் நித்ய அனுஷ்டானக்ரமங்காட்டும் அத்புத க்ரந்தங்களான  பூர்வ, உத்தர தின சரியைகளை அருளிச் செய்தவர். ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை மிக ஆழ்ந்து அலசி இவர் அருளிய “விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்” சாஸ்த்ரார்த்தங்கள் கற்றோர்/கற்போர் மனங்களில் எழும் ஐயங்கள் அனைத்தையும் களையும் ஞான நிதி.
  • ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர் (ஐப்பசிப் புஷ்யம்) ஸ்ரீபெரும்பூதூர் மடத்தின் முதல் ஜீயர். இவர் தனியனிலிருந்து இவர் மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயர் போன்ற மஹாசார்யர்கள் பால் அணுக்கராய் இருந்தார் என அறிகிறோம்.

இவ்வாறு இம்மாதத்துக்கு உள்ள பெருமையை ஓரளவு உணரலாம். இம்மாதத்தில் பல திவ்ய தேசங்களிலும் நிகழும் ஆழ்வார் ஆசார்யர் உத்ஸவங்களிலும் நமக்கு அநுபவம் கிட்டி அவர்கள் நினைவில் இருப்பதே சேமம். இக்கட்டுரைத் தொடரில், இம்மாதத்தில் அவதரித்துள்ள ஆழ்வார் ஆசார்யர்களின் க்ரந்தங்களைச் சிறிது காணலாம்:

ஆழ்வார் எம்பெருமானார் லோகாசார்யர் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/aippasi-thula-masa-anubhavam/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org