ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமாயணம் மிகவும் முக்யத்வம் வாய்ந்த ஒரு சாஸ்த்ரமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் எம்பெருமான், பிராட்டி, அடியார்கள் ஆகியோரின் வைபவங்கள் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இதில் சரணாகதி தத்வம் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டிருப்பதால், இது சரணாகதி சாஸ்த்ரம் என்று கொண்டாடப்படுகிறது.
திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் தேவர்களின் ப்ரார்த்தனைக்கு இணங்கி, இந்த நிலவுலகில் தசரதச் சக்ரவர்த்தியின் திருமகனாக வந்து அவதரித்தான். அவ்வாறு அவதரித்து இங்கு மனிதர்களுக்குள் ஒருவனாகத் தன்னை அமைத்துக்கொண்டு வாழ்ந்த காலத்தில், தானே இவ்வுலகில் சிறந்த குணங்களை உடையவனாகத் திகழ்ந்தான். பொதுவாக ஒருவனுக்குப் பெருமை, அவன் குணங்களாலேயே என்று சொல்லப்படும். முன்பே பகவானாக, உலகை எல்லாம் படைத்துக் காத்து அழித்து, உலகத்தவர்களுக்கு நல்ல வழியையும் மோக்ஷத்தையும் கொடுப்பவனாக எம்பெருமான் இருந்தாலும், ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களாலும், அழகாலும் உலகத்தவர்களாலே கொண்டாடப்பட்டும் வணங்கப்பட்டும் திகழ்ந்தான்.
வால்மீகி பகவானாலே ஸ்ரீ ராம சரித்ரமானது மிக அழகாக, ஆதி காவ்யமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ப்ரஹ்மாவின் அருளைப் பெற்ற வால்மீகி பகவான், எம்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வையும் அற்புதமாக விளக்கியுள்ளார். இதுவே ஸ்ரீ ராமாயணம் என்று கொண்டாடப்படுகிறது. நம்முடைய ஆசார்ய பரம்பரையில் வ்யாக்யானச் சக்ரவர்த்தியாகக் கொண்டாடப்படும் பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம் என்கிற உரைநடை ப்ரபந்தம் மூலமாக, ஸ்ரீராமாயண சரித்ரத்தை ஆழ்வார்கள் பாசுரங்களில் இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு தொகுத்து அருளியுள்ளார். இதை அடி ஒற்றி ஸ்ரீராமனின் லீலைகளையும் அவற்றின் தாத்பர்யங்களையும் இங்கே அனுபவிக்கலாம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org