ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – ஸுந்தர காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< கிஷ்கிந்தா காண்டம்

சிறந்த சக்தியையுடைய ஹனுமன் பெரிய கடலைக் கடந்து பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட லங்கையில் அசோக வனத்தில் இருந்த ஸீதாப் பிராட்டியிடத்தில் வந்து சேர்ந்தான். அங்கே வைதேஹியான பிராட்டியைக் கண்டு ஸ்ரீ ராமனின் சரித்ரங்களை விரிவாகச் சொல்லி அவனளித்த கணையாழியையும் அவளிடத்தில் ஸமர்ப்பித்தான். ஹனுமன் பிராட்டியிடம் விண்ணப்பித்த ஸ்ரீ ராம சரித்ரமாவது:

  • திருவயோத்தியிலே ஸீதாப் பிராட்டியும் ஸ்ரீ ராமனும் ஆனந்தமாக வாழ்ந்த காலத்தில், ஓரிரவுப் பொழுதில் பிராட்டி பெருமாளை ஒரு மல்லிகை மாலையினாலே கட்டினாள்.
  • ஸ்ரீ ராமனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் என்றவுடன், மந்தரை என்கிற கூனி கைகேயியின் மனத்தைக் கலக்க, அவளும் தசரதனிடம் சென்று பரதனுக்கு ராஜ்யம் என்றும் ஸ்ரீ ராமனுக்கு வனவாஸம் என்றும் இரண்டு வரங்களை வேண்ட, மயங்கிய மனத்தை உடைய சக்ரவர்த்தி ஸ்ரீ ராமனை “குலக்குமரா! காடுறையப் போ” என்று காட்டுக்கு விடைகொடுக்க, ஸ்ரீ ராமனும் பிராட்டி மற்றும் லக்ஷ்மணனை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றான்.
  • கங்கைக் கரையில் வேடர்களின் ராஜாவான குஹனுடன் நெருக்கமான நட்பைப் பெற்றான் ஸ்ரீ ராமன்.
  • சித்ரகூடத்தில் இருந்த பொழுது, அங்கே பரதன் வந்து சேர்ந்து ஸ்ரீ ராமனிடம் சரணாகதி செய்து, மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும் என்று கேட்க, ஸ்ரீ ராமன் அதை மறுத்துத் தன் பாதுகைகளைக் கொடுத்து விட்டான்.
  • ஒரு ஸமயம் ஒரு அஸுரத் தன்மை கொண்ட காக்கை பிராட்டியின் திருமுலைத்தடங்களில் கொத்த, அப்பொழுது அவள் திருமடியில் தன் திருமுடியை வைத்துச் சயனித்திருந்த எம்பெருமான் விழித்தெழுந்து அக்காக்கையிடத்தில் மிகவும் கோபப்பட்டு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட, எல்லா உலகும் சுற்றித்திரிந்து ஸ்ரீ ராமன் திருவடிகளிலே வந்து விழ, பிராட்டியின் புருஷகாரத்தால், ஸ்ரீ ராமன் அக்காக்கையின் கண்ணை மட்டும் அறுத்துத் தண்டித்தான்.
  • ஸூர்ப்பணகையின் தூண்டுதலின் பேரில் ராவணன் மாரீசனை ஒரு தங்க மானாக அனுப்ப, அதைக் கண்ட பிராட்டி அதில் ஆசைப்பட, அவளிடத்தில் கொண்ட பேரன்பால் ஸ்ரீ ராமன் அதன் பின் வில்லை ஏந்திக் கொண்டு செல்ல, அதன் பிறகு லக்ஷ்மணனும் அவளை விட்டுச் சென்றான்.

இவ்வாறு ஸ்ரீ ராமன் சொன்ன சரித்ரங்களைப் பிராட்டிக்கு ஹனுமன் விண்ணப்பம் செய்து, ஸ்ரீ ராமன் அளித்த கணையாழி மோதிரத்தைப் பிராட்டியிடத்தில் ஸமர்ப்பித்தான். அழகிய கூந்தலை உடைய ஸீதாப் பிராட்டியும் அந்த மோதிரத்தைக் கண்டு மிகவும் ஈடுபட்டுதன் தலைமேல் வைத்து மகிழ்ந்து, ஹனுமன் சொன்ன சரித்ரங்களை ஏற்றுக் கொண்டாள்.

அதன் பிறகு பலம் பொருந்திய ஹனுமனை ராக்ஷஸர்கள் தாக்க வர, அவர்களை எளிதில் அழித்தான். ராவணனின் பிள்ளையான அக்ஷனைக் கொன்றான். பின்பு இந்த்ரஜித் ஹனுமனைச் சிறை பிடித்து, ராவணனிடம் கொண்டு செல்ல, ராவணனுக்கு நல்ல உபதேசங்களைச் செய்தான் ஹனுமன். அதைக் கேளாமல் ராவணன் ஹனுமனை அழிக்குமாறு ஆணையிட, ராக்ஷஸர்கள் ஹனுமனின் வாலுக்கு நெருப்பு வைக்க, அதன் மூலமாகவே லங்கையில் பெரும் சேதாரத்தை விளைத்தான்.

மீண்டும் பிராட்டி இருந்த வனத்துக்குச் சென்று அவளிடம் தானே அவளை ஸ்ரீ ராமனிடம் கொண்டு சேர்த்து விடுவதாகச் சொல்ல, பிராட்டி அதை மறுத்து, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஸ்ரீ ராமன் வரவில்லை என்றால் தான் உயிர் துறந்துவிடுவதாகச் சொன்னாள்.

அங்கிருந்து புறப்பட்ட ஹனுமன் கடலைக் கடந்து வானரர்கள் காத்திருந்த இடத்தை அடைந்து அவர்களிடம் இந்த நற்செய்தியைச் சொல்லி, அதற்குப் பிறகு கிஷ்கிந்தயை நோக்கிச் சென்றான். போகும் வழியில் ஸுக்ரீவனுடைய ஓய்வேடுக்கும் சோலையான மதுவனத்தை நன்றாக விளையாடி மகிழ்ந்தனர். பிறகு ஸ்ரீ ராமனை அடைந்து, ஸீதாப் பிராட்டியைக் கண்ட விஷயத்தை அவனுக்குச் சொல்லி, அவனுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தினான்.

தாத்பர்யங்கள்

  • ஸீதாப் பிராட்டியை மையமாகக் கொண்டதாலும், ஹனுமனின் பெருமை நன்றாகக் காட்டப்படுவதாலும், இக்காண்டம் ஸுந்தர காண்டம் என்று சொல்லப்படுகிறது.
  • ஹனுமன் மிகவும் சிறந்த பேச்சுத் திறமையை உடையவன். பிராட்டியின் க்லேசம் போகும் படியும் அவள் தன்னை முடித்துக் கொள்ளும் முயற்சியைத் தடுக்கும்படியும் அழகாகப் பேசினான்.
  • எடுத்த கார்யத்தைச் சிறந்த முறையில் செய்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஹனுமன். பிராட்டியைத் தேடி வந்தது முக்யமான கார்யம் என்றாலும் லங்கையில் பெரிய சேதத்தையும், ராவணின் மனதில் பயத்தை உண்டு பண்ணியும் ஸ்ரீ ராமன் திருவள்ளப்படி நடந்தான்.
  • பிராட்டியை அழைத்துப் போவதாக ஹனுமன் ப்ரார்த்தித்தபோதும், பிராட்டி அதற்கு இசையவில்லை. ஸ்ரீ ராமன் வந்து லங்கையை அழித்துத் தன்னை மீட்டுச் செல்ல வேண்டும் என்கிற கருத்தில் மிக உறுதியோடு இருந்தாள்.
  • ஹனுமன் பிராட்டியைக் கண்டு காப்பாற்றியதன் மூலம், பிராட்டியையும், அவளால் பிழைத்திருக்கும் ஸ்ரீ ராமனையும், அவனால் பிழைத்திருக்கும் இவ்வுலகத்தையும் காப்பாற்றினான்,

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment