யதீந்த்ரமத தீபிகை

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.

undefined

இந்த க்ரந்தமானது நமது பூர்வாசார்யர்களின் திருவுள்ளத்தை அழகாகக் காண்பிக்கிறது – ஸ்வாமி தாமே கடைசியில் தாம் தொகுத்த க்ரந்தங்களின் வரிசையை அருளியுள்ளார். அதில் அனைத்து க்ரந்தங்களும் இருப்பதைக் காணலாம். இதனால் இது விசிஷ்டாத்வைத மதத்தைச் சுருக்கிக் கூறும் நூல் என்பது தேறும். இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக்க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டிவிட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்மபூதஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.

இந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். சாரீரக சாஸ்த்ரத்தைப் பற்றி பேசுவதற்கு அடியேனுக்கு ஒரு தகுதியும் இல்லை. ஆயினும், அடியேனுக்கு விஷயங்களை அனுக்ரஹித்தருளிய ஸ்ரீ  உ. வே திருக்கண்ணபுரம் ஸம்பத்குமாராசாரியார் ஸ்வாமியின் திருவடி பலத்தாலும், ஸ்ரீ உ வே திருநாங்கூர் ப்ரதிவாதி பயங்கரம் ஸ்வாமி அருளிய டிப்பணி மற்றும் ஸ்ரீ உ. வே புத்தூர் ஸ்வாமி அருளிய யதீந்த்ர மத தீபிகை ஆகியவற்றின் துணையாலும், இதன் மூலம் எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் சம்பந்தமான நற்பொருள்களை சிந்திப்பதில் இருக்கும் ஆசையினால், இதனை முயல்கின்றேன். இதில் தோஷங்கள் இருந்தால் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு தொடர்கிறேன்.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org