ஆசார்ய நிஷ்டை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygn6dBMoMHvuFwhBH

முன்னதாக ஸ்ரீ ராமானுஜ தரிசனம் பத்திரிகையில் ஆசிரியர் குழு பக்கத்தில் வெளியிடப்பட்ட வ்யாசங்களின் தொகுப்பு – https://www.varavaramuni.com/home/sriramanuja-dharsanam-magazine

குரு பரம்பரையை முழுவதுமாகப் பல மொழிகளில் அனுபவிக்க – https://acharyas.koyil.org/index.php/.

நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்ய நிஷ்டை ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இவ்விஷயமாக நம் பூர்வர்கள் வாழிவிலிருந்து சில விஷயங்களை இங்கு அனுபவிப்போம்.

தை மாத அனுபவம்

தை மாதத்தில், திருமழிசை ஆழ்வார், கூரத்தாழ்வான் மற்றும் எம்பார் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆழ்வான் தன்னுடைய செல்வங்களைத் துறந்து, எம்பெருமானாரைச் சரணடைந்து தன் வாழ்நாள் முழுதும் மாதுகரம் செய்து வாழ்ந்து வந்தார். வைராக்யத்தின் உருவமாகவே இருந்தார். தான் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தும் அவற்றைத் துறந்து தன்னுடைய ஆசார்யனை அடைந்து கைங்கர்யம் செய்வதற்கு ஒரு நொடியும் தயங்கவில்லை. மேலும், அவர் ஒரு சிறந்த ஞானியாக இருந்தும் தன்னுடைய ஞானத்தைத் தன் ஆசார்யன் முன்போ வேறு எவர் முன்போ காட்டிக்கொண்டதில்லை. சிறந்த நைச்சியத்தையே வெளிப்படுத்தினார். இதனாலேயே, திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் இவரை “மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்று கொண்டாடினார். இதையொட்டியே, மாமுனிகளும் தன்னுடைய யதிராஜ விம்சதியில் இவரை “வாசா மகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத” என்று கொண்டாடினார்.

எம்பாரும் மிகச் சிறந்த ஆசார்ய நிஷ்டர். இவர் பெரிய திருமலை நம்பியின் சிஷ்யர். ஒரு முறை தன்னுடைய ஆசார்யனுக்குப் படுக்கை தயார் செய்து, அதைக் கைகளால் தடவிப் பார்த்து, பின்பு தான் அதில் படுத்தும் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் அதிர்ச்சியுற்றார். எம்பெருமானார் எம்பாரை நொக்கி “ஆசார்யன் படுக்கையில் படுக்க எவ்வாறு துணிந்தாய். இது மிகவும் தவறு” என்றார். எம்பாரோ அமைதியாக “என்னுடைய ஆசார்யனுக்கு படுக்கை சௌகரியமாக ஏற்பாடு செய்வது என் கடமை. ஆகையால் நானே அதில் படுத்துப் பார்த்தேன். இத்தால் எனக்கு பாபங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்” என்றார். தான் இன்னலுக்கு ஆளானாலும், தன் ஆசார்யனின் சுகத்தையே விரும்பினார். இதைக் கேட்ட எம்பெருமானார் மிகவும் ஆநந்தித்தார். இவ்வாறு ஆசார்யன் திருமேனிக்கும் கைங்கர்யம் செய்யும் கொள்கையை மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் “தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை நோக்குமவன்” என்று உணர்த்துகிறார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

மாசி மாத அனுபவம்

மாசி மாதத்தில், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், மணக்கால் நம்பி , திருமாலை ஆண்டான், திருக்கச்சி நம்பி மற்றும்  பிள்ளை உறங்கா வில்லி தாஸர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக மணக்கால் நம்பி மற்றும் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

மணக்கால் நம்பி தன்னுடைய ஆசார்யனான உய்யக்கொண்டாருடன் 12 ஆண்டுகள் இருந்து கைங்கர்யம் செய்தார். அக்காலத்தில் உய்யக்கொண்டாரின் தர்ம பத்தினி திருநாடு அடைந்து விடவே ஆசார்யனின் திருமாளிகையையும் குழந்தைகளையும் இவரே கவனித்துக் கொண்டார். ஒரு முறை உய்யக்கொண்டாரின் குழந்தைகள் காவிரிக்குச் சென்று திரும்பும்போது ஓரிடத்தில் சேறாக இருக்க, நம்பி அந்தச் சேற்றில் படுத்துக் குழந்தைகளைத் தன் மேல் ஏறிச் செல்லும்படி பணித்தார். இதைக் கேட்ட உய்யக்கொண்டார் நம்பியின் ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மகிழ்ந்து அவரை மெச்சினார். நம்பியிடம் ஏதாவது அவருக்கு விருப்பமா என்று வினவ, நம்பியோ ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதே வேண்டும் என்று பணிவுடன் கூறினார். இதைக் கண்டு மகிழ்ந்த உய்யக்கொண்டார், மீளவும் ஒரு முறை நம்பிக்கு த்வய மந்திரத்தை உபதேசம் சேய்தார். ஆசார்யர்களுக்கு சிஷ்யர்களிடத்தில் ப்ரீதி உண்டானால் த்வயத்தை உபதேசம் செய்வது என்பது பல இடங்களில் காணப்பட்டுள்ளது.

பிள்ளை உறங்கா வில்லி தாஸர் எம்பெருமானாரால் திருத்தப்பட்டவர். அவரும் அவரது தர்ம பத்தினி பொன்னாச்சியாரும் நம்பெருமாளின் சிறந்த பக்தர்களாகவும் எம்பெருமானாரின் சிறந்த சீடர்களாகவும் திகழ்ந்தனர். இருவரும் எம்பெருமானாரிடத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து ஒரு கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு க்ருஹஸ்தாச்ரம வாழ்க்கைக்கு ஒரு எடுக்காட்டாக விளங்கினார்கள். தாஸரும் எம்பெருமானாருக்கு மிகவும் அணுக்கராக இருந்து, அவர் தீர்த்தமாடித் திரும்பும்போது இவர் கையைப் பிடித்துக்கொண்டே கறை ஏறும் பேறு பெற்றிருந்தார். கூரத்தாழ்வான் போன்ற சிறந்த ஞானம், பக்தி உடையவர்களால் தாஸர் மிகவும் கொண்டாடப்பட்டார். பொன்னாச்சியாரும் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஆழ்பொருட்களை உணர்ந்தவராக இருந்து பல சமயங்களில் அதை வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

பங்குனி மாத அனுபவம்

பங்குனி மாதத்தில் பெரிய பிராட்டியார், திருவரங்கத்து அமுதனார் மற்றும்  நஞ்சீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம். குறிப்பாக, பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாச்சியாரும் நம்பெருமாளும் சேர்த்தியில் எழுந்தருளி எம்பெருமானார் அனைவருடைய உஜ்ஜீவனத்துக்காகவும் செய்தருளிய சரணாகதியை நினைவுறுத்துகின்றனர்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக அமுதனார் மற்றும் நஞ்சீயர் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

அமுதனார் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியார் ஸன்னிதியை நிர்வாகம் செய்து வந்தார். எம்பெருமானார் கூரத்தாழ்வானைக்கொண்டு  அமுதனாரைத் திருத்தி ஆழ்வானுக்கே அவரை சிஷ்யனாகவுமாக்கினார். அமுதனார், அவ்வாறு மாறியபின் இராமானுச நூற்றந்தாதியை இயற்றினார். இப்ப்ரபந்தத்துக்கு உரையிடுகையில், மாமுனிகள் இதை ப்ரபந்ந காயத்ரி என்றே கொண்டாடுகிறார். எம்பெருமானாரின் ஏற்றத்தைச் சிறப்பாக வெளியிடும் இந்தப் ப்ரபந்தம், எம்பெருமானாருடைய திருவடிகளே நம்முடைய உய்வுக்கு ஒரே வழி என்று விளக்குகிறது.அமுதனார் ஆழ்வார்களில் ஒருவரும் அல்ல, இந்தப் ப்ரபந்தம் எம்பெருமானைக் கொண்டாடியும் அல்ல, ஆயினும் இது ஆழ்வார்கள் பாசுரத்துக்கு இணையாக திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அமுதனாருக்கு எம்பெருமானாரிடத்தில் இருந்த நிஷ்டை அவருடைய சொல் (இராமானுச நூற்றந்தாதி) மூலமாகவும் அவருடைய செயல் (தாயார் ஸன்னிதியின் நிர்வாகத்தை எம்பெருமானாரிடம் சமர்ப்பித்தது) மூலமாகவும் அறியலாம்.

பராசர பட்டரால் திருத்தப்பட்டதற்கு முன் நஞ்சீயர் சிறந்த வேதாந்தியாகத் திகழ்ந்தார். பின்பு, பட்டருக்கு சிஷ்யாராகி, எல்லாவற்றையும் துறந்து, பட்டருக்குக் கைங்கர்யம் செய்தே வாழ்ந்தார். பல சமயங்களில் அவர் பட்டரிடத்தில் பூர்ணமாக சரணடைந்து இருந்து, ஒரு சிஷ்யன் ஆசார்யரிடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டியுள்ளார். அவர் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்ட பின், அவரின் ஸந்யாஸ ஆச்ரமம் க்ருஹஸ்தராக இருக்கும் பட்டருக்கு கைங்கர்யம் செய்வதற்குத் தடையாகுமோ என்ற கேள்வி வர, அப்படி ஒரு தடை வந்தால் தான் சந்யாஸ ஆச்ரமத்தை விடுவதாகவும் கூறுகிறார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

சித்திரை மாத அனுபவம்

சித்திரை மாதத்தில்  மதுரகவி ஆழ்வார், எம்பெருமானார், முதலியாண்டான், அநந்தாழ்வான், கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான், வடுக நம்பி, கிடாமபி ஆச்சான், எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

மாமுனிகள், உபதேச ரத்தின மாலையில் ஆழ்வார்கள் பதின்மர்களைப் பாடிய பின், மதுரகவி ஆழ்வார், ஆண்டாள் மற்றும் எம்பெருமானாரைப் பாடுகிறார். ஆழ்வார்கள் பதின்மரும் எம்பெருமானிடத்தில் கொண்ட பக்தியால் கொண்டாடப்பட்டனர். மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் தங்கள் தங்கள் ஆசார்யர்களான நம்மாழ்வாரிடத்திலும் பெரியாழ்வாரிடத்திலும் கொண்ட பக்தியால் கொண்டாடப்பட்டனர். எம்பெருமானார் ஆளவந்தார் மற்றும் பெரிய நம்பிகளிடத்தில் கொண்ட பக்தியினால் மாமுனிகள் எம்பெருமானாரையும் இந்த ஆசார்ய நிஷ்டர்கள் கோஷ்டியிலேயே சேர்த்து அனுபவித்தார்.

எம்பெருமானாரின் சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் அவரிடத்தில் இருந்த ஆசார்ய நிஷ்டையினால் சிறந்து விளங்கினார்கள். எம்பெருமானாரின் ஆணையின் பேரால் பெரிய நம்பியின் குமாரத்திக்கு சீதன வெள்ளாட்டியாக (வேலைக்காரனாக) உடன் சென்றார் முதலியாண்டான். எம்பெருமானாரின் ஆணையின் பேரால் திருவேங்கடம் என்கிற திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்தார் அநந்தாழ்வான். எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அறிந்த உடனேயே கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் தன்னுடைய உயிரைத் துறந்தார். வடுக நம்பி எம்பெருமானை விட எம்பெருமானாரையே மிகவும் கொண்டாடிப்போந்தார். எம்பெருமானார் திருக்கோஷ்டி நம்பியைக் கண்டவுடன் கடும் வெயிலில் கீழே விழுந்து வணங்க, அத்தைப் பொறுக்க முடியாமல் கிடாம்பி ஆச்சான் அவரைத் தூக்கி நிறுத்தினார். அதனாலேயே நம்பியால் எம்பெருமானாருக்குத் பிக்ஷை செய்து கொடுக்கும் கைங்கர்யம் செய்யும்படி நியமிக்கப் பெற்றார்.  இவை அனைத்தும் ஆசார்ய நிஷ்டைக்கு சிறந்த உதாரணங்கள்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

வைகாசி மாத அனுபவம்

வைகாசி மாதத்தில்  நம்மாழ்வார், திருவரங்கப்பெருமாள் அரையர், திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, பராசர பட்டர், வேத வ்யாஸ பட்டர் மற்றும் திருவாய்மொழி பிள்ளை போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

அந்திமோபாய நிஷ்டை (https://granthams.koyil.org/2013/06/anthimopaya-nishtai-6/) என்னும் க்ரந்தத்தில் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் வாழ்வில் நடந்த ஒரு அற்புதமான விஷயம் காட்டப்பட்டுள்ளது. ஒரு முறை எம்பெருமானார் நம்பிகளிடத்தில் “அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு நல் வார்த்தை அருளவேணும்” என்று ப்ரார்த்தித்தார். நம்பி தன் கண்களை மூடித் த்யானித்து, பின்வருமாறு அருளினார் “நாங்கள் ஆளவந்தாரிடம் கல்வி பயின்று வந்த காலத்தில், ஆளவந்தார் நதிக்குச் சென்று தீர்த்தமாடும்பொழுது அவர் திருமுதுகைச் சேவிப்போம். அது காண்பதற்கு பளபள என செப்புக் குடம் போன்றிருக்கும். அந்த திவ்ய சேவையையே நான் எப்பொழுதும் தஞ்சமாகக் கருதுவேன். நீரும் அவ்வாறே நினைத்திரும்” – இச்சரித்திரம் மிகப் ப்ரசித்தமானது. சிஷ்யனின் த்யானத்துக்கு ஆசார்யனின் திருமேனியே விஷ்யம் என்பதை உணர்த்தும் சரித்திரம். நம்பிகள் எப்பொழுதும் திருக்கோஷ்டியூர் ஸன்னிதி கோபுரத்தில் அமர்ந்திருந்து “யமுனைத்துறைவர்” என்கிற மந்திரத்தைக் கொண்டு ஆளவன்தாரையே த்யானித்திருப்பர் என்று கூறப்படுவதுண்டு.

இது போன்று, திருவாய்மொழிப் பிள்ளையும் தனக்கு பிள்ளை லோகாசார்யரின் ஆணைப்படி ஸத் ஸம்ப்ரதாய ஸாரார்த்தங்களை உணர்த்திய கூர குலோத்தம தாஸரிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

ஆனி மாத அனுபவம்

ஆனி மாதத்தில்  பெரியாழ்வார், நாதமுனிகள், திருக்கண்ணமங்கை ஆண்டன், வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளை லோகாசார்யரின் சிறந்த சிஷ்யர். அவர் தன்னுடைய ஆசார்யனிடம் எப்பொழுதும் அடி பணிந்து இருந்து கைங்கர்யங்கள் செய்து வந்தார். அவருக்குத் திருமணம் ஆகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்தார். இதை நினைத்து வருந்திய அவரின் தாயார் நம்பிள்ளையிடம் சென்று முறையிடுகிறார். நம்பிள்ளை தன்னுடைய சிஷ்யரை ஸத் ஸந்தானத்தைப் பெறுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடுமாறு நியமிக்கிறார். நம்பிள்ளை மற்றும் நம்பெருமாள் அருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் தர்ம பத்தினி பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்னும் இரண்டு திவ்யமான குழந்தைகளை ஈன்றெடுக்கிறார். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ப்ரம்மச்சாரிகளாக இருந்து ஆழ்வார் ஆசார்யர்கள் உரைத்த தத்துவங்களைத் தெளிவாக எடுத்துரைத்து நம் ஸத் ஸம்ப்ரதாயத்தை சீரிய முறையில் வளர்த்தார்கள்.

அது போலே, வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் முதலில் நம்பிள்ளை சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளையின் மெத்தப் படிக்காத ஒரு ஸாமான்யமான சிஷ்யராக விளங்கினார். பெரியவாச்சான் பிள்ளையின் கருணையினாலேயே, அவர் ஒரு சிறந்த வித்வானாக உருவாகிறார். பின்பு, திருவாய்மொழிக்குப் பதவரையும் கீதை வெண்பா மற்றும் பல க்ரந்தங்களை எழுதுமளவுக்கு சிறந்து விளங்கினார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

ஆடி மாத அனுபவம்

ஆடி மாதத்தில் ஆண்டாள், ஆளவந்தார் மற்றும் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம். ஆசார்ய நிஷ்டை விஷயமாக சில மஹான்களின் வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

மாமுனிகள் ஆழ்வார்கள் மற்றும் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரங்கள் மற்றும் அவதார ஸ்தலங்களைத் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் கோடிட்டுக் காட்டுகிறார். அவ்வாறு செய்கையில், ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமாக இருந்தாலும், மதுரகவிகள் மற்றும் எம்பெருமானாருடன் சேர்த்தே காட்டுகிறார் – ஏனெனில் இம்மூவரும் ஆசார்ய நிஷ்டர்கள் என்பதால். ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று பெரியாழ்வாருக்காக வரும் எம்பெருமானே தனக்கு வேண்டும் என்று அறுதியிடுகிறாள். நம்மாழ்வாரிடம் மதுரகவிகள் கொண்ட ஆசார்ய நிஷ்டை மிகப் ப்ரபலமானுது. எம்பெருமானாரும் நம்மாழ்வார், ஆளவந்தார் மற்றும் பெரிய நம்பிகளிடத்தில் மிகவும் அடிபணிந்து இருந்தவர்.

ஆளவந்தாரும் தன்னுடைய ஸ்தோத்ர ரத்தினத்தில் நாதமுனிகளையே தனக்கு எல்லாமாக அறுதியிட்டார். முதலில் “அத்ர பரத்ர சாபி” (நாதமுனிகளையே இவ்வுலகிலும் பரவுலகிலும் அண்டி இருப்பேன்) என்றும், இறுதியில் “அக்ருத்ரிம … பிதாமஹம் நாதமுனிம்…” (என்னை என்னுடைய நன்மைகளுக்காக ஏற்காமல், என் பாட்டனாருக்காக ஏற்றுக்கொள்வாயாக) என்றும் கூறினார். இறுதியாக மாமுனிகளைச் சரணடையும் போது, ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனும் தான் விசிஷ்டாத்வைதத்துக்கு எதிர் வாதிடுபவர்களுக்குச் சிங்கமாகவும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் தாஸனாகவும் இருப்பேன் என்று கூறினார்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை இம்மஹான்களிடத்தில் ப்ரார்த்திப்போம்.

ஆவணி மாத அனுபவம்

ஆவணி மாதத்தில்  ஸ்ரீ ரங்கநாதன் (பெரிய பெருமாள்), பெரியவாச்சான் பிள்ளை, நாயனாராச்சான் பிள்ளை மற்றும் அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் போன்ற மஹநீயர்களின் திருநக்ஷத்ரங்களைக் கொண்டாடும் பேறு பெற்றுள்ளோம்.

பெரிய பெருமாளின் ஆசார்ய நிஷ்டையை விளக்கும் விஷயத்தை இப்போது காண்போம்.

ஸ்ரீமந் நாராயணன் நிரங்குச ஸ்வதந்த்ரனாக இருப்பினும், மற்றவர்களுக்கு வழிகாட்ட, தானும் சில ஆசாரர்களைக் கொண்டான். பகவத் கீதையில், எம்பெருமான் ஒரு குருவைச் சென்றடைந்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, அவரிடமிருந்து தத்துவத்தை அறியுமாறு உரைத்தான். தன்னுடைய அவதாரங்களில் அதை நடத்தியும் காட்டினான்.

ஸ்ரீ ராமனாக வசிஷ்ட விச்வாமித்ரர்களிடத்தில் பயின்றான். ஆயினும், அதில் அவன் த்ருப்தி அடையவில்லை. கண்ணனாக ஸாந்தீபனி  முனியிடத்தில் பயின்றான். அங்கும், அவன் த்ருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. எம்பெருமானார் காலத்தில், அவர் திருவேங்கடமுடையானுக்கு சங்க சக்கரங்களை வழங்கி அவர் விஷ்ணுவே என்பதை நிலை நாட்டினார் (பஞ்ச ஸம்ஸ்காரத்தின்போது சங்க சக்கரங்களை சிஷ்யனுக்கு ஆசார்யன் அளித்து அவன் ஸ்வரூபத்தை நிலை நாட்டுவதால், எம்பெருமானாரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான்). திருக்குறுங்குடி நம்பியும் எம்பெருமானாரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, அவரிடம் மந்த்ரோபதேசம் பெற்று ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் எம்பெருமான் தன்னுடைய சிஷ்யத்வ பூர்த்தியை வெளிப்படுத்தாததால் அவனுக்கு பூர்ண த்ருப்தி ஏற்படவில்லை. மாமுனிகள் திருவரங்கம் வந்தடைந்தவுடன், அவரே தனக்குச் சிறந்த ஆசாயராக விளங்குவார் என்று ஸ்ரீ ரங்கநாதன் மிகவும் மகிழ்ந்தான். அதனால், முதலில் மாமுனிகளை திருவாய்மொழி காலக்ஷேபம் தன் திருமுன்பு சாதிக்குமாறு ஆணையிட்டான் – இதன் மூலம் ஆசார்யனிடம் அடி பணிந்து காலக்ஷேபம் கேட்கும் முறையை வெளிப்படுத்தினான். ஒரு ஆனி திருமூலத்தன்று காலக்ஷேபம் சாற்றுமுறை ஆனபின்பு, பெரிய பெருமாள் மிகச்சிறந்ததான “ஸ்ரீசைலேசா தயாபாத்ரம்” தனியனைத் தன் ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்தான். அவ்வளவோடு அல்லாமல், இந்தத் தனியனை எல்லா இடமும் பரப்பி, திவ்ய ப்ரபந்த சேவாகாலத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சேவிக்குமாறு ஆணையிட்டான். மேலும், சிஷ்யன் ஆசார்யனுக்குத் தன் சிறந்த செல்வத்தை அளிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, தன்னுடைய சேஷ பர்யங்கத்தை மாமுனிகளுக்கு வழங்கினான். இவ்வாறு, பெரிய பெருமாள் மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்று மிகவும் மகிழ்ந்தான்.

ஆகையால், நாமும் இப்படிப்பட்ட ஆசார்ய நிஷ்டையை பெரிய பெருமாளிடத்தில் ப்ரார்த்திப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாசன்

ஆங்கிலம்: https://granthams.koyil.org/2015/08/acharya-nishtai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment