ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< குரு பரம்பரை

நம் குரு  பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம்.

 

ஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன்

ஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் திவ்ய நிர்ஹேதுக க்ருபை அடியாகச் சில ஜீவாத்மாக்களை ஆழ்வார்களாக அனுக்ரஹித்துத் தன்பால் பக்தி பாரவச்யர்களாய்ப் பண்ணிப் போந்தான்.

நிரங்குச ஸ்வதந்த்ரனாக நித்யர்கள் மற்றும் முக்தர்களின் தலைவனுமாக இருந்தான் ஆகிலும் அவனுக்கும் ஒரு மன வருத்தம் இருந்தது. அவனது மன வருத்தம் யாதெனில், தன் மக்கள் லீலா விபூதியில் சிக்கித் துன்புற்று உழல்கிறார்களே என்பது பற்றியேயாம். இங்கே ஒரு கேள்வி எழும் – ஸர்வேச்வரனுக்குத் துன்பம் என்று உண்டு என்பது ஒரு தோஷமாகி விடுமே – அவன் ஸத்ய காமனாகவும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் அவனே அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாமே என்பதே அக்கேள்வி.இதற்கு நம் ஆசார்யர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளார்கள் – அதாவது, எல்லா சக்திகளும் படைத்த ஒரு தந்தை எவ்வாறு தான் தன் ஒரு குழந்தையுடன் இருக்கும் போதும் தன்னைப் பிரிந்திருக்கும் மற்றொரு குழந்தைக்காக வருத்தப்படுவானோ, அது போலவே பகவானும் தன்னைப் பிரிந்திருக்கும் ஜீவாத்மாக்களுக்காக பல முயற்சிகளை எடுக்கிறான். இவ்வாறு அவன் வருந்துவதை ஒரு சிறந்த கல்யாண குணமாகவே கொண்டாடுகின்றனர்.  இவ்வாறு மயங்கித் துன்புற்று உழலும் ஜீவாத்மாக்களின் நன்மையைக் கருதியே எம்பெருமான் ஸ்ருஷ்டி காலத்தில் அவர்களுக்குக் கரையேறும் பொருட்டுக் கரண களேபரங்கள் தந்தும், சாஸ்த்ரங்கள் தந்தும் தன்னைக் காட்டியும், ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்  செய்தும் அவர்களுக்கு அநுஷ்டித்துக் காட்டியும் திருந்தாததால் தன் மேன்மையையும் ரக்ஷகத்வத்தையும் உணர்த்த அவர்களிலேயே சிலரைத் தேர்ந்து, மானைப் பயிற்ற மானைப் போலேயும், யானையைப் பிடிக்க யானையைப் போலேயும் ஜீவர்களை உத்தரிப்பிக்க ஜீவர்களையே உபாயமாகக் கொண்டான்.  அங்ஙனம் கொள்ளப் பட்டவர்களே ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஆவர். இவர்கள் பாரத தேசத்தில் வெவ்வேறு திவ்ய தேசங்களில் அவதரித்தமையை வேத வ்யாசர் போன்ற ரிஷிகள் முன்கூட்டியே ஸ்ரீமத் பாகவதம்  போன்ற நூல்களில் தெரிவித்தனர் என்பதும் நாம் அறிந்ததே.

Azhwars

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப் பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய குணங்களைப் பாடுவது திவ்யப் ப்ரபந்தம்.இவை எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களைப் பாடுகின்றன. பாடியவர்கள் திவ்ய சூரிகள், பாட்டு திவ்ய ப்ரபந்தம், பாடப்பெற்ற திருவரங்கம் திருமலை காஞ்சீபுரம்,திருவல்லிக்கேணி ஆழ்வார் திருநகரி போன்ற தலங்கள் திவ்ய தேசங்கள். இவற்றில் ராம க்ருஷ்ணாத்யவதாரப் பெருமைகளும், பரம பதத்தில் உள்ள பரத்வப் பெருமையும், க்ஷீராப்தியிலுள்ள வ்யூஹப் பெருமையும் அவரவர் உள்ளே அந்தராத்மாவாய் இருந்து ரக்ஷிக்கும் அந்தர்யாமிப் பெருமையும் சேர்த்தே பாடப் பெற்றுள்ளன. இவற்றில் எல்லாவற்றையும்விட நம் கண் காண வந்து நம்மை ரக்ஷிக்கும் திவ்ய தேசத்து அர்ச்சா விக்ரஹங்களே நம் ஆழ்வார்களுக்குப் பெருவிருந்தானது, அதுவே நம் ஆசார்யர்களின் உயிர்நாடியாயும் இருந்தது.

திவ்ய ப்ரபந்தம் வேத/வேதாந்தச் செம்பொருளை எளிய இனிய தீந்தமிழில் நமக்குக் கொடுக்கிறது. ஆழ்வார்கள் இவற்றை அருளிச் செய்த பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஸ்ரீமன் நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுனிகள் ஈறான நம் ஆசார்யர்கள் இவற்றில் தோய்ந்தும் ஆய்ந்தும் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் ரக்ஷகத்வத்தையும் நமக்கு மிகத் தெளிவாகக் காட்ட இவைபோன்று வேறில்லை என்று அறுதியிட்டு நமக்காக இவற்றை ப்ரசாரம் செய்தும் வ்யாக்யானித்தும் நமக்குப் பேருபகாரம் செய்தனர். அவர்கள் தம் முழு வாழ்க்கையையும், வித்யாப்பியாசத்தையும் இச்செம்பொருள் பற்றிய சிந்தனையிலேயே செலவிட்டனர் எனில் மிகை அன்று.

azhwar-madhurakavi-nathamuni

நம்மாழ்வார், தம் இருபுறங்களிலும் மதுரகவிகள், நாத முநிகளுடன் (காஞ்சீபுரம்)

ஆழ்வார்களுக்குப் பின் திவ்ய ப்ரபந்தங்கள் ப்ரசாரமின்றி மறைந்துபோன ஓர் இருண்ட காலம் இருந்தது. அப்போது எம்பெருமான் திருவருளால் ஸ்ரீமன் நாதமுநிகள் தோன்றி, பல இன்னல்களுக்கிடையே ஆழ்வார் திருநகரியைத் தேடிக்கண்டுபிடித்து, அங்குச் சென்று மதுரகவி ஆழ்வார் க்ருபையால் நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து நாலாயிரம் பாசுரங்களையும் அவரிடமிருந்து அவற்றின் அர்த்தத்தோடேயே உபதேசமாகப் பெற்று, அவற்றை நாலாயிரம் பாசுரங்களையும் வகைப் படுத்தித் தொகுத்து, இவற்றைத் தமக்குபகரித்தருலிய மதுரகவிகளுக்கு க்ருதஜ்ஞதாநுசந்தானமாக நம்மாழ்வாரிடம் ஈச்வர விச்வாசம் கொண்டிருந்த அவரது “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பிரபந்தத்தை நாலாயிரத்தில் சேர்த்துத் தம் சிஷ்யர்களுக்குப் பண்ணோடு உபதேசித்தருளினார்.

 

Ramanuja_Sriperumbudur

ஸ்ரீ ராமாநுஜர்

ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ராமானுசருக்கு இவை யாவும் பூர்வாசார்யர்கள், முக்யமாக ஸ்ரீ யாமுநாசார்யர்  திருவுளப்படியே க்ரமேண அடைவே வந்து சேர்ந்தன. சமூகத்தின் எல்லாப் பகுதியினரும் இவற்றை அறிந்து உய்தி பெறவேண்டும் எனும் பெருங்கருணை கொண்ட மனத்தராய் இருந்ததால் திருவரங்கன் திருவருளால் இந்த ஸம்ப்ரதாயமும் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. அவரே திவ்யப் ப்ரபந்தத்தில் ஒரு பகுதியான திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதியில் இத்தகு மேன்மை மிக்க ஸம்ப்ரதாய ஸ்தாபனம் செய்தமையால் ப்ரபன்ன காயத்ரி என அனைவரும் தினமும் அனுசந்திக்கத் தக்க க்ரந்தத்தால் போற்றப்படுகிறார்.

nampillai-goshti1

நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி

இவ்வாசார்ய பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், பட்டர், நஞ்சீயர்க்குப் பின் வந்த மஹாசார்யர் நம்பிள்ளையேயாவார். இவர் தம் காலம் முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளியிருந்து ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணம் செய்தவர். இவர் காலத்திலேயே திருவரங்கத்தில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யானங்களுக்கும் இவரது அர்த்த புஷ்டியும் நயமும் சுவையும் மிக்க விரிவுரைகளால் மிகப் பெரும் மதிப்பும் கௌரவமும் கூடின. இவரது சிஷ்யர்கள் சம்பிரதாய இலக்கியத்துக்குப் பெரும் பணிகள் ஆற்றினர். நாலாயிரத்துக்கும் வியாக்யானம் அருளிய வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை இவரது சிஷ்யரே. இவரது திருவாய்மொழிப் பேருரையை ஏடு படுத்தி இன்றளவும் ஈடு முப்பத்தாறாயிரப் படி என நம்மனோர் அநுபவிக்கத் தந்த வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் இவர் சிஷ்யரே.

pillailokacharya-goshti

பிள்ளைலோகாசார்யர் காலக்ஷேப கோஷ்டி

நம்பிள்ளைக்குப் பின், ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராகப் பிள்ளை லோகாசார்யர் எழுந்தருளியிருந்து அதற்கு முன்பில்லாதபடி ரஹஸ்ய க்ரந்தங்களை முழு நோக்கோடு அருளிச் செய்து, வேத/வேதாந்த/அருளிச் செயல்களில் பொதிந்து கிடக்கும் அர்த்த பஞ்சகம்/ரஹஸ்யத்ரய விவரணங்களை விசதமாகத் தம் அஷ்டாதச ரஹஸ்யங்கள் எனும் பதினெட்டுச் செம்பொருள் நூல்களால் பரப்பினார். இவர், நம்பிள்ளை சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக் குமாரர். இவரும் இவர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருமே நம்பிள்ளையின் திருவுளக் கருத்துகள் அனைத்தையும் தம் க்ரந்தங்களில் தெளிவுபடுத்தி ஸம்ப்ரதாயத்தைச் செழுமையும், வினாக்களுக்கப்பாற்பட்டதாயும் ஆக்கினர்.

srisailesa-thanian-small

மாமுநிகள் காலக்ஷேப கோஷ்டி…”ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தனியன் ஸமர்ப்பணம் ஆதல்

இறுதியாக, எம்பெருமானாரின் புனரவதாரமாகக் கருதப்படும் மணவாள மாமுநிகள் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து, தம் திருத்தகப்பனாரிடமும் திருவாய்மொழிப் பிள்ளையின் சிஷ்யராய் அவரிடமும் வேத/வேதாந்தங்கள்/அருளிச்செயல், ரஹஸ்யார்த்தங்கள் யாவும் கற்று, ஆசார்யரான பிள்ளையின் திருவாணைப்படித் திருவரங்கம் சென்று ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணத்திலேயே  அங்கேயே தம் வாழ்நாளைக் கழித்தார். ஓலைச் சுவடிகளில் கற்றும், கற்றவற்றை மிகக் கஷ்டப்பட்டுப் பின்புள்ளாருக்காக ஏடு படுத்தியும், இடை இடையே எல்லாத் திவ்ய தேசங்களுக்கும் சென்று சேவித்து, ஆங்காங்கே ஸந்நிதி முறைகளை நெறிப்படுத்தியும், ஓராண்டுக் காலம் தொடர்ந்து திருவரங்கன் திருமுன்பே திருவாய்மொழிப் பேருரை நிகழ்த்தி, அரங்கனாலேயே மன மகிழ்ச்சியினால் ஆசார்ய ப்ரதிபத்தி தோன்ற “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” எனும் தனியன் ஸமர்ப்பிக்கப் பட்டு இன்றளவும் எல்லா சந்நிதிகளிலும் திவ்ய பிரபந்த சேவைத் தொடக்க ச்லோகமாக நம்பெருமாள் நியமனப் படியே நடக்கும்படியான பெருமை இவர்க்கே அசாதாரணம். தொடர்ந்து அவதரித்த பல ஆசார்யர்கள் திவ்ய ப்ரபந்தங்களைக் கற்றும் அதன் படி வாழ்ந்தும் போனார்கள்.

எம்பெருமானின் திருவுள்ள உகப்பான சேதனர்களின் உஜ்ஜீவனத்துக்காக ஏற்பட்ட திவ்ய ப்ரபந்தங்களை நம் பூர்வர்கள் பல விதத்திலும் பாதுகாத்துப் போந்தார்கள். இவ்வாறாக, எம்பெருமானை அறிந்துகொள்ள அவனது நிர்ஹேதுக க்ருபையால் நமக்குக் கிடைத்துள்ள திவ்ய பிரபந்தத்தை நாம் கற்று அதன் செம்பொருளையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அதன் படி வாழ்தலும் வேண்டும்.

ஆழ்வார்களையும் அவர்களின் திவ்யப்ரபந்தங்களின் பெருமையையும் ப்ராமாணிகத்வத்தையும் பற்றி அறிய இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படிக்கவும்:

திவ்யப்ரபந்த பாசுரங்களின் அர்த்தங்களைப் பல மொழிகளில் அறிய  https://divyaprabandham.koyil.org பார்க்கவும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/simple-guide-to-srivaishnavam-dhivya-prabandham-dhesam/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

4 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்”

Leave a Comment