ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ரஹஸ்ய த்ரயம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஒரு பகுதியாக மூன்று மந்த்ரங்கள் ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுகின்றன:

  • திருமந்த்ரம்

ஓம் நமோ நாராயணாய

எம்பெருமானின் இருஅவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாச்ரமத்தில் உபதேசித்தது. எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன் எளிய பொருள்.

  • த்வயம்

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

எனும் ஈரடியுள்ள மந்த்ரம் விஷ்ணுலோகத்தில் எம்பெருமான் நாராயணனால் மஹாலக்ஷ்மித் தாயாருக்கு உபதேசிக்கப் பட்டது.

ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயாரின் பதியான ஸ்ரீமன் நாராயணனின் தாமரைத் திருவடிகளில் சரணம் புகுகின்றேன், அத்தாயாருக்கும் எம்பெருமானுக்குமே சுய நலமற்ற கைங்கர்யம் செய்யக் கடவேனாக என்பது இதன் எளிய பொருள்.

  • சரம ச்லோகம்

பகவத் கீதையின் ஒரு பகுதியான

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச ||

எனும் ச்லோகம் அர்ஜுனனுக்கு க்ருஷ்ணனால் மஹா பாரதப் போர்க்களத்தில் அவன் மனம் கலங்கியபோது உபதேசிக்கப்பட்டது. எல்லா உபாயங்களையும் கைவிட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று, உன் பாபங்களினின்றும்  உன்னை விடுவித்து உன்னை ரட்சிப்பேன் கவலையற்றிருப்பாயாக என்பது  இதன் சுருக்கமான பொருள்.

த்வய மஹா மந்த்ரப் பொருளை வ்யாக்யாநிக்கத் தொடங்கும்போது, முமுக்ஷுப்படியில், மாமுனிகளால் இம்மூன்று ரஹஸ்யங்களுக்குமுள்ள இருவகைத் தொடர்புகள் விளக்கப்படுகின்றன:

  • விதி – அனுஷ்டானம் – திருமந்த்ரம் ஜீவனுக்கும் பரமனுக்குமுள்ள உறவைக் காட்டுகிறது. சரம ச்லோகம் ஜீவனை எம்பெருமானிடம் சரண் அடையக் கட்டளை இடுகிறது. இவ்வாறு சரண் புக்க ஜீவன் எப்போதும் நினைந்து, சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதே  த்வய மஹா மந்த்ரம்.
  • விவரண – விவரணி – ப்ரணவம் திருமந்த்ரத்தில் நமோ நாராயணாய என்பதால் விளக்கப் படுகிறது. த்வய மஹா மந்த்ரம் திருமந்த்ரத்தை விளக்குகிறது.  சரம ச்லோகம் அதை மேலும் விளக்குகிறது.

இம்மூன்றிலும், த்வயமே ஆசார்யர்களால் மிகவும் அபிமாநிக்கப் பட்டதும், ஓயாது உள்ளப் பட்டதுமாம். இது மந்த்ர ரத்னம் எனப்பட்டது. இதுவே மஹாலக்ஷ்மித் தாயார் புருஷகாரம் செய்யும் வைபவத்தை ஸ்பஷ்டமாகச் சொல்கிறது. தேவராஜ குரு என்னும்எறும்பியப்பா வர வர முனி தின சர்யையில் அருளிய படி, எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியில் நித்ய கைங்கர்யப் ப்ரார்த்தனை இதிலேயே உண்டு:

மந்த்ர ரத்ந அநுசந்தான ஸந்தத ஸ்புரிதாதரம் |
ததர்த்த தத்த்வ நித்யாந் ஸந்நத்த புலகோத்கமம் ||

மாமுனிகளின் திருவதரங்கள் (உதடுகள்) த்வய மஹா மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவரின் உள்ளமோ த்வயத்தின் அர்த்தமான திருவாய்மொழியையே நினைத்துக் கொண்டிருப்பதால், அவரின் திருமேனியில் மயிர்க்கூச்செரிதல், கண்களில் கண்ணீர் பெருகுதல் போன்ற மாற்றங்கள் வெளிப்படுகின்றன என்பது இந்தச் ச்லோகத்தின் சுருக்கமான பொருள். நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது – குரு பரம்பரா த்யான பூர்வகமாகவே (அஸ்மத்குருப்யோ நம: … ஸ்ரீதராய நம: என்ற குரு பரம்பரா மந்த்ரத்தைக் கூறிய பின்னே) த்வயத்தை அநுஸந்தித்தல் வேண்டும்.

அஷ்ட ச்லோகி அருளிய பட்டர் முதலாக, பரந்த ரஹஸ்யம் அருளிய பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீயப் பதிப் படி/யாத்ருச்சிகப் படி/பரந்த படி/முமுக்ஷுப்படி ஆகியவற்றில் பிள்ளை லோகாசார்யர், அருளிச் செயல் ரஹஸ்யத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், முமுக்ஷுப்படி முதலான ரஹஸ்ய வ்யாக்யானங்களில் மணவாள மாமுநிகள் ஈறாக ரஹஸ்ய  த்ரய விளக்கங்களிலேயே ஊன்றியிருந்தனர் நம் பூர்வர்கள் என்பது முக்யமாகக் குறிக் கொள்ளத் தக்கது.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவாதுவான தத்த்வ த்ரயமும் அர்த்த பஞ்சகமுமே ரஹஸ்ய  த்ரய விளக்கமெனில் நன்றாம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2015/12/rahasya-thrayam/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ரஹஸ்ய த்ரயம்”

Leave a Comment