திருப்பாவையில் அர்த்த பஞ்சகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருப்பாவை உபய வேதாந்தத்தின் ஸாரமாகும். ஒருவன் திருப்பாவையின் உள் அர்த்தங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், எம்பெருமானை நோக்கிய அவனின் பயணத்தின் எல்லாத் தடைகளும் எளிதாக விலக்கப்படும்.

மோக்ஷத்தில் இச்சையுள்ளவனான முமுக்ஷு (ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்டு பரமபதம் சென்றடைந்து நித்யமாகக் கைங்கர்யம் செய்ய ஆசைபடுபவன்) அர்த்த பஞ்சகத்தை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிள்ளை லோகாசார்யரால் முமுக்ஷுப்படியில் காட்டப் பட்டுள்ளது. அர்த்த பஞ்சகம் என்பது:

  • பரமாத்ம ஸ்வரூபம் (இறைவனின் நிலை),
  • ஜீவாத்ம ஸ்வரூபம் (ஆத்மாவின் நிலை),
  • உபாய ஸ்வரூபம் (ஆத்மா இறைவனை அடையக்கூடிய வழியின் நிலை),
  • உபேய ஸ்வரூபம் (ஆத்மா இறைவனை அடைந்தபின் செய்யும் செயல்)
  • விரோதி ஸ்வரூபம் (ஆத்மா இறைவனை அடைய விடாமல் தடுக்கும் தடைகளின் நிலை).

ஆண்டாள் தன் முதல் பாசுரத்திலேயே அர்த்த பஞ்சகத்தை வெளியிடுகிறாள். இதில்  “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்வதாவது:

  • “நாராயணன்” என்ற சொல் பரமாத்ம ஸ்வரூபத்தை விளக்குகிறது – “நாராயண” என்ற சொல் இரண்டு அர்த்தங்களை விளக்குகிறது
    • அவனுடைய பரத்வம் (மேன்மை) – எம்பெருமான் எல்லோரையும் தாங்குபவன், ஏனைய அனைவரும், அனைத்துப் பொருள்களும் தாங்கப்படுவன
    • அவனுடைய ஸௌலப்யம் (எளிமை – எங்கும் இருக்கும் நிலை) – அதாவது எம்பெருமான் எல்லா ஆத்மாக்களின் உள்ளும் அந்தர்யாமியாக இருப்பது
  • “நமக்கு” என்ற சொல் ஜீவாத்ம ஸ்வரூபத்தை விளக்குகிறது – எல்லா ஆத்மாக்களும் எம்பெருமானையே சார்ந்து உள்ளன. இதில் “ஏவகாரம்” (நமக்கே), ஆண்டாள் எம்பெருமானிடம் சரணடையத் தயாராக இருப்பவனின் நிலையே உணர்த்துகிறாள். அதாவது – எவன் ஒருவன் ஆகிஞ்சன்யத்தையும் (கைம்முதல் இல்லாமை) அநந்ய கதித்வத்தையும் (வேறு புகலிடம் இல்லாமை) கொண்டிருக்கிறானோ அவனே எம்பெருமானிடம் முழுமையாகச் சரணடைந்தவன்.
  • நாராயணனே தருவான்” என்பது உபாய ஸ்வரூபத்தை விளக்குகிறது – அதாவது எம்பெருமான் நாராயணனே ஜீவாத்மாக்களுக்கு உயர்ந்த பேற்றை அளிக்க வல்லவன்.
  • பறை” என்பது உபேய ஸ்வரூபத்தை விளக்குகிறது – பறை என்பது நமக்கு ஒரு துளி எதிர்பார்ப்பும் இல்லாமல் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வது.
  • விரோதி ஸ்வரூபம் எம்பெருமான் நம்மை ரக்ஷிக்க விடாமல் தடுக்கும் நம்முடைய ஸ்வாதந்த்ரியம் என்று தன்னடையே காட்டப்பட்டதாகிறது .

இவ்விஷயங்கள் நம் பூர்வாசார்யர்களால் தங்கள் விரிவான வ்யாக்யானங்கள் மூலம் மேலும் விளக்கப்பட்டுள்ளன.

திருப்பாவை வ்யாக்யாதாகக்கள் (உரை அருளியவர்கள்)

ஆய் ஜநந்யாசார்யர் – 2000 படி, 4000 படி
பொன்னடிக்கால் ஜீயர் – ஸ்வாபதேசம் (உட்பொருள்)

பரமாத்ம ஸ்வரூபத்தின் விரிவு:

  • பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்” – க்ஷீராப்தியில் ஸயனித்துக் கொண்டிருக்கும் மேன்மை பொருந்திய எம்பெருமான்
  • ஓங்கி உலகளந்த உத்தமன்” – மூன்று உலகங்களையும் அளந்தவன், தனக்கு மிக்கார் இல்லாதவன்
  • பற்பநாபன்” – பிரமன் தோன்றிய தாமரையைத் தன் திருவுந்தியிலே கொண்டவன்
  • தூய பெருநீர் யமுனைத்துறைவன்” – தூய்மை பொருந்திய யமுனை ஆற்றின் கரையிலே வாழ்பவன்
  • கோவிந்தன்” – பசுக்களைக் காப்பவன், பசுக்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன், பூமிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன்

ஜீவாத்ம ஸ்வரூபம் 6 முதல் 15ஆம் பாசுரம் வரை மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஆத்மாக்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுடன் இருப்பதை எப்பொழுதும் விரும்ப வேண்டும் என்பதும், எம்பெருமானை ஸ்ரீவைஷ்ணவர்கள் மூலமாகவே அணுக வேண்டும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. மேலும் 16 மற்றும் 17ஆம் பாசுரங்களில், ஆத்மாக்கள் எம்பெருமானுக்கு மிகவும் விருப்பமான நித்யஸூரிகளைக் கொண்டாட வேண்டும் என்பது காட்டப்பட்டுள்ளது.18 முதல் 20ஆம் பாசுரம் வரை, ஆத்மாக்கள் பிராட்டி புருஷகாரத்துடனேயே எம்பெருமானை அணுக வேண்டும் என்பது காட்டப்பட்டுள்ளது (நீளா தேவியின் அவதாரமான நப்பின்னைப் பிராட்டி, வ்ருந்தாவனத்தில் கண்ணன் எம்பெருமானின் ப்ரிய மனைவி).

விரோதி ஸ்வரூபம் 2ஆம் பாசுரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

எம்பெருமானை அடைய முற்படும்போது மற்ற விஷயங்களில் கண் வைக்கக் கூடாது என்பதை “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் பூர்வாசார்யர்கள் செய்யாததை நாம் செய்யக் கூடாது என்பதையும் “செய்யாதன செய்யோம்” என்பதன் மூலம் காட்டியருளியுள்ளாள்.

இவற்றுக்கு மேலே, உபாய ஸ்வரூபமும் உபேய ஸ்வரூபமும் நாம் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்டாள் இந்த முக்கியமான கொள்கைகளை கோபர் மற்றும் கோபியர் பாவனையில் திருப்பாவை 28 மற்றும் 29ஆம் பாசுரங்களில் விளக்கியுள்ளாள். பெரியவாச்சான் பிள்ளை மற்றும் நாயனார் இப்பாசுரங்களுக்கு மிக அழகான உரைகள் அருளி உள்ளனர். குறிப்பாக நாயனாரின் உரை மிகவும் விரிவாக அத்புதமான விளக்கங்களுடன் அமைந்துள்ளாது. இப்பாசுரங்களின் ஸாரத்தை இங்கே காண்போம்:

உபாய ஸ்வரூபம்கறவைகள் பின்சென்று – 28ஆம் பாசுரம்

இப்பாசுரத்தில் ஆண்டாள் எம்பெருமானே ஸித்த ஸாதனம் (நம் முயற்சியால் பெறப்படாதது) என்பதை நிரூபித்துள்ளாள்.

  • முதலில் தனக்குக் கர்ம ஞான பக்தி யோகங்களில் ஈடுபாடு இல்லை என்பதைக் காட்டியுள்ளாள்.
  • நம்மிடம் கர்ம யோகத்திற்கு தேவையான அதிகாரங்கள் இல்லை:
    • கர்ம யோகத்தில் ஈடுபட்டவன் தேர்ந்த ஞானிகளின் பின் செல்ல வேண்டும், நாமோ பசுக்களின் பின் செல்கிறோம்.
    • அவன் திவ்ய தேசங்களுக்குச் செல்ல வேண்டும் – நாமோ காட்டுக்குச் செல்கிறோம். இவ்வாறு காட்டுக்குச் செல்வது தவம் செய்ய என்று அதைக் கர்ம யோகத்தின் அங்கமாக நினைத்தால், நாமோ பசுக்களை புல் மேய விடக் காட்டுக்குச் செல்கிறோம். இவ்வாறு பசுக்களுக்கு உணவிடுவது வர்ண தர்மம் என்று சொன்னால், நாமோ, கறவைப் பசுக்களுக்கு மட்டும் உணவிட்டு அந்த தர்மத்தையும் முறையாகச் செய்யவில்லை.
    • சாப்பிடுவதிவிலும் பல நியமங்கள் உள்ளன. நாம் அவற்றைக் கடைபிடிக்காமல், நடந்துகொண்டே சாப்பிடுதல், இரண்டு கைகளாலும் சாப்பிடுதல், குளிக்காமல் சாப்பிடுதல் போன்றவைகளைச் செய்கிறோம்.
  • “அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம்” ஆதலால், நமக்கு ஞான யோகத்திலும் அந்வயம் இல்லை.
  • பக்தி என்பது ஞானத்தின் முதிர்ந்த நிலையே ஆதலால், ஞானமே இல்லாத நம்மிடத்தில் பக்தி யோகமும் இல்லை என்பது திண்ணம்.
  • ஆனால் எங்களிடம் ஒரு புண்யம் உள்ளது – அதாவது நாம் “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம்” என்கிறபடியே தலைசிறந்த தர்மமமான எம்பெருமானையே ஊட்டி வளர்க்கிறோம் என்னும் நன்மை.இதுவும் எங்கள் முயற்சியால் நடந்தது அன்று – நீயே இங்கே வந்து எங்கள் நடுவில் வாழ்கிறாய். ஆகையால், எங்களிடம் வெளி விரோதியான கர்ம ஞான பக்தி யோகங்களும் இல்லை, உள் விரோதியான நாமே எம்பெருமானை அடைய முயல்வது என்னும் ஸ்வகத ஸ்வீகாரமும் இல்லை..
  • எப்படி எங்களிடம் ஞானம் இல்லையோ, உன்னிடம் ஒரு குறையும் இல்லை. நீ கல்யாண குணங்களால் நிறைந்தவன். முக்யமாக உன் கல்யாண குணங்கள் நீ கோபர்களுக்கு நடுவே கோவிந்தனாக இருக்கும் இந்நிலையில் நன்றாக ப்ரகாசிக்கிறது. நீ நித்யஸூரிகளுக்கு நடுவே இருக்கும்போது உன் மேன்மையே ப்ரகாசிக்கும், ஆனால் நீ இங்கே கோப கோபியர்களுக்கு நடுவே இருக்கும்போது உன் எளிமையே ப்ரகாசிக்கும்..
  • நீ கல்யாண குணங்களால் நிறைந்தவனாகவும் ஸித்த ஸாதனமாக இருப்பவனாகவும் மட்டும் இல்லை – நீயே அனைத்து ஆத்மாக்களுடன் குடல் துவக்கை உடையவன். நீயே அனைத்து ஆத்மாக்களின் உள் இருக்கும் பரமாத்மா. நீ இல்லாமல் ஒரு வஸ்துவும் இருக்க முடியாது. உன்னால் வெளியிடப்பட்ட திருமந்த்ரம் ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒன்பது வித ஸம்பந்தங்களை அழகாகக் காண்பிக்கிறது. அவையாவன – பிதா புத்ர (தந்தை – மகன்) ஸம்பந்தம், ரக்ஷக ரக்ஷ்ய (காப்பவர் – காக்கப்படுபவர்) ஸம்பந்தம், சேஷி சேஷ (தலைவன் – தொண்டன்) ஸம்பந்தம், பர்த்ரு பார்யா (கணவன் – மனைவி) ஸம்பந்தம், ஜ்ஞேய ஞாதா (அறியப்படும் பொருள் – அறிபவர்) ஸம்பந்தம், ஸ்வாமி ஸ்வம் (உடையவன் – உடைமை) ஸம்பந்தம், ஆதார ஆதேய (தாங்குபவர் – தாங்கப்படும் பொருள்) ஸம்பந்தம், சரீரீ சரீர (ஆத்மா தேஹம்) ஸம்பந்தம், போக்தா போக்யம் (அனுபவிப்பர் – அனுபவிக்கப்படும் பொருள்). ஆகையால் உனக்கு உன்னை சரணடைந்தவரகளைக் காக்கும் கடமை உள்ளது.
  • அறிவின்மையாலும் அன்பாலும், உன்னை சில சமயங்களில் நாராயண என்று அழைத்துள்ளோம். நீ இங்கு வந்ததோ கோவிந்தனாக உன் எளிமையைக் காட்ட, ஆனால் நாங்களோ உன் மேன்மையை உணர்த்தும் நாராயண நாமத்தைக் கொண்டு உன்னை அழைத்துள்ளோம். ஆகையால் நீ எங்களை மன்னித்து அருள்வாயாக. (நாயனார், நாம் எம்பெருமானிடம் அணுகும்போது, அவனிடம் நம் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அணுக வேண்டும் என்று ஆண்டாள் விளக்குவதைக் காண்பிக்கிறார்).
  • நீயே சிறந்த உபாயமாக இருப்பதாலும் எங்களிடம் ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் இருப்பதாலும் எங்களிடம் நீ உதவ வரும்போது தடுப்பதாகிய விலக்காமை இல்லாமையாலும், எங்களுக்கு எல்லையான கைங்கர்யத்தைத் தந்தருள வேண்டும்.

ஆக இப்பாசுரத்தில் ஆண்டாள் எம்பெருமானின் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத நிரபேக்ஷ உபாயத்வத்தை நிரூபிக்கிறாள்.இங்கே முக்யமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. எம்பெருமான் நம்மைக் காப்பதற்கு நம்மிடத்தில் ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் தேவை என்றாலும் அவை உபாயத்தில் சேராது, அவை முமுக்ஷுவான அதிகாரியின் இயல்பான குணங்களே ஆகும். இக்குணங்கல் எம்பெருமானிடம் சரணடைய விரும்பும் ஜீவாத்மாக்களையும் மற்ற ஜீவாத்மாக்களையும் வேறுபடுத்திக் காண்பிக்கின்றன.

உபேய ஸ்வரூபம் – சிற்றம் சிறுகாலே – 29ஆம் பாசுரம்

இப்பாசுரத்தில் எம்பெருமானுக்கு மட்டுமே ஆநந்தத்தைக் கொடுக்கும் கைங்கர்யமே எல்லையான உபேயம் என்று நிரூபித்துள்ளாள்.

  • நாங்கள் உன்னிடம் சரணடைய அதிகாலையில் வந்துள்ளோம். நாயனார் அதிகாலைப் பொழுதை, முமுக்ஷுக்களின் ஆரம்ப நிலைக்கு ஒப்பிடுகிறார். இந்நிலையில் அறியாமை (இருள்) சிறிது விலகியிருந்தாலும் எம்பெருமானிடத்தில் ஈடுபாடு (வெளிச்சம்) இன்னும் முழுதாக ஏற்படவில்லை. காலைப் பொழுது பொதுவாக முழு விழிப்புடனும் ஞானத்துடனும் இருக்கும் நிலையாகக் கருதப்படுகிறது.
  • நீயே எங்களை வந்து ரக்ஷித்து இருக்க வேண்டும் (ஏனேனில் நீ எங்களை உடையவர்) ஆனால் நாங்கள் உங்களைத் தேடி வந்துள்ளோம். தண்டகாரண்ய ருஷிகளைக் கண்ட ஸ்ரீராமன் அவர்களைத் தேடித் தானே வந்திருக்க வேண்டி இருக்க, அவர்கள் தன்னைத் தேடி வந்து முறையிடும்படி ஆகிவிட்டதே என்று வருந்தினான். இங்கும் அதே போல் நிலைமையே. ஆத்மாக்களின் ஸ்வகத ஸ்வீகாரம் ஸ்வரூபத்துக்கு ஏற்புடையதன்றாகையால் எம்பெருமானுக்கு வருத்தத்தை விளைக்கக் கூடிய செயல் என்று இங்கே விளக்கப்பட்டுள்ளது.
  • நாங்கள் இங்கு வந்ததோடல்லாமல் உனக்கு ப்ரணமங்களையும் செய்து விட்டோம். மற்ற தேவதைகள் தங்கள் பக்தர்கள் தங்களைச் சேவித்துக் கொண்டே இருக்க ஆசைப்படுவர்கள். ஆனால் எம்பெருமானோ ஸ்வாராத்யன் – எளிதில் ஆராதிக்கப்படுபவன். அவன் தன் பக்தர்கள் தன்னை வணங்க வேண்டும் என்றுகூட எதிர்பார்ப்பதில்லை. எம்பெருமானின் பெருமை எப்படிப்பட்டது என்றால் – எப்படி ஒரு தந்தை தன் மகன் தன்னைக் காண வந்தாலே போதும் என்றிருப்பாரோ, அது போலே எம்பெருமானும் தன் பக்தர்களிடம் ஒன்றுமே எதிர்பார்ப்பதில்லை.
  • நாங்கள் வைதிகர்கள் விரும்பும் உன் பொற்றாமரை அடிகளைப் போற்றினோம். வேறு எந்தப் பலனுக்காகவும் அவற்றைப் பாடவில்லை – பாடுவதே வழியும் பலனும்.
  • இப்பொழுது நாங்கள் சொல்வதைக் கேள். பறை என்றால் என்னவென்று விளக்குகிறோம். நீ இங்கு வ்ருந்தாவனத்துக்கு வந்தது மட்டும் போதாது. எங்கள் ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும். நீயே விரும்பி கோப குலத்தில் அவதரித்துள்ளாய். நீ எங்களைப் பொருத்தமான அந்தரங்க கைங்கர்யத்தில் ஈடுபடுத்த வேண்டும். இதை நீ சேய்தே தீர வேண்டும் – நீயே எங்களைத் திருத்தி உன்னிடமுள்ள பக்தியையும் வளர்த்து விட்டதால், கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தியே ஆகவ் வேண்டும்.
  • அவன் “நான் உங்களுக்கு மார்கழி நோன்பின் பலனை மட்டும் அளிக்கிறேன்” என்று சொல்ல, ஆண்டாள் மற்றும் கோபிகைகள் இந்த நோன்பு அவனிடம் ஈடுபடுவதற்கு ஒரு வ்யாஜமே தவிர கைங்கர்யத்தைத் தவிர வேறு பலன்களை ஏற்க மாட்டோம் என்று மேலும் விளக்குகின்றனர்.
  • ஆண்டாள் தான் பரமபதத்திலோ ஸம்ஸாரத்திலோ எங்கிருந்தாலும், எம்பெருமானுடனே இருக்க விரும்பவதை விளக்குகிறாள். எப்படி இளைய பெருமாள் பெருமாளைப் பிரியாமல் காட்டுக்குச் சென்றும் கைங்கர்யம் செய்தாரோ, தானும் அப்படியே கண்ணன் எம்பெருமானுடனே பிரியாமல் இருக்க வேண்டும் என்கிறாள். மேலும் எம்பெருமான் உடையவனாகையாலும் தான் உடைமைப் பொருளாகையாலும், அந்த ஸம்பந்தம் நன்றாகப் ப்ரகாசிக்க வேண்டும் என்கிறாள்.
  • இறுதியில் ஆண்டாள் சிறந்த பலனாக எம்பெருமானுக்கு மட்டுமே ஆனந்தம் கொடுக்கக் கூடிய கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறாள். அவள் பரதாழ்வானைப் போல் பெருமாளை சில காலம் பிரிந்திராமல் இளைய பெருமாளைப் போலே எம்பெருமானுடன் இருந்து கைங்கர்யம் செய்ய ஆசைப் படுகிறாள். “மற்றை நம் காமங்கள் மாற்று” (வேறு ஆசைகளை எங்களிடமிருந்து விலக்கு) என்று சொல்வதன் மூலம் தனக்கு என்று ஒரு ஆனந்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் எம்பெருமான் அவ்வாறு நினைத்து விடக் கூடாது என்றும் அறுதியிட்டுச் சொல்கிறாள். இதே விஷயத்தை நம்மாழ்வாரும் திருவாய்மொழி “எம்மா வீடு” (2.9) பதிகத்தில், “தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே” என்று எம்பெருமான் அவனுடைய ஆனந்தத்துக்காக மட்டுமே தன்னைக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று ப்ரார்த்தித்தார்.

ஆண்டாள், இவ்வாறு சிறந்த பலமான கைங்கர்யத்தை விளக்கினாள். மேலும், “மற்றை நம் காமங்கள் மாற்று” என்பது விரோதி ஸ்வரூபத்தை விளக்குகிறது – அதாவது எம்பெருமானடைய ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் செய்யாமல் நம்முடைய ஆனந்தத்துக்காக கைங்கர்யம் செய்வதே விரோதி.

இவ்வாறு, அர்த்த பஞ்சகத்தை ஆண்டாள் நாச்சியாரின் திவ்ய ஸ்ரீஸூக்தியான திருப்பாவைக்கு பல ஆசார்யர்கள் அளித்துள்ள அத்புத உரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/01/thiruppavai-artha-panchakam/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment