நாயனார் அருளிய திருப்பாவை ஸாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில் கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமானின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கி, ஜீவாத்மாக்களை இந்த ஸம்ஸாரத்தின் துயரங்களிலிருந்து விடுவித்து எம்பெருமானுக்கு களையில்லாத கைங்கர்யம் செய்வதாகிற ப்ராப்யத்தை அடைய உபகாரம் செய்தாள்.

ஆண்டாள் தன் இளம் வயதிலேயே இரண்டு திவ்ய ப்ரபந்தங்களை அருளிச்செய்தாள். முதலில் அவள் எம்பெருமானுடைய ஆனந்தத்துக்கே தன்னைக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தும்படி திருப்பாவையில் ப்ரார்த்திக்கிறாள். பின்பு, எம்பெருமான் அவளின் ஆசையை நிறைவேற்றாததால், எம்பெருமானைப் பிரிந்த பெரும் துக்கத்துடன், அவள் நாச்சியார் திருமொழியைப் பாட, இறுதியில் பெரிய பெருமாள் அவளை ஸ்ரீரங்கத்துக்கு வரவழைத்துத் தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள, பரமபதத்தை மீண்டும் சென்றடைந்தாள். அவ்வாறு செல்லும்போது நமக்காகவே திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய இவ்விரண்டு ரத்னங்களை விட்டுச் சென்றாள்.

எம்பெருமானார், பட்டர், பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வேதாந்தாசார்யர், மணவாள மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயர் போன்ற பல பூர்வாசார்யர்கள் ஆண்டாளையும் அவளின் திருப்பாவையையும் தங்கள் பாசுரங்கள், ஸ்தோத்ரங்கள், வ்யாக்யானங்கள் ஆகியவை மூலம் கொண்டாடியுள்ளனர்.

திருப்பாவையை நம் பூர்வாசார்யர்கள் பின்வருமாறு கொண்டாடியுள்ளனர்:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

திருப்பாவை நம்முடைய லக்ஷ்யமான எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்தலுக்குத் தடைகளை விலக்கி அவன் திருவடிகளை அடைவிக்கும். இது ஸகல வேத ஸாரம். திருப்பாவை அறியாதவர் இந்த பூமிக்கு ஒரு சுமையே.

இன்றும், ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் இந்தத் திருப்பாவை எங்கும் பாடப் படுவதையும், உபந்யஸிக்கப் படுவதையும், பேசப் படுவதையும் எழுதப் படுவதையும் காண்கிறோம். 3 வயதுக் குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை திருப்பாவையில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். இதுவே இதன் சக்தியும் ஈர்ப்பும். ஆண்டாள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை இம்முப்பது பாசுரங்களில் அளித்துள்ளதாலேயே இதற்கு இவ்வளவு ஏற்றம்.

ஆக, சாஸ்த்ரத்தின் ஸாரம் தான் என்ன? நம்மாழ்வார் இவ்விஷயத்தை திருவாய்மொழி 4.6.8ல் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணி” என்று மிக எளிதாக விளக்கியுள்ளார். இதன் அர்த்தம் – ஒருவன் சாஸ்த்ரத்தில் விற்பன்னர்களான பூர்வாசார்யர்களைக் கொண்டு, பெரிய பிராட்டியார் தொடக்கமான நித்யஸூரிகளை முன்னிட்டு எம்பெருமானைச் சரணடைந்து அவன் திருவடித் தாமரைகளில் கைங்கர்யம் செய்ய வேண்டும். மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் இவ்வாறு சாஸ்த்ரத்தின் ஸாரத்தை எளிதாக விளக்கினார். இதை மட்டும் ஒரு ஆத்மா புரிந்து கொண்டு இதன் வழி நடந்தால், நிச்சயமாக எம்பெருமானுக்கு நித்யமாகச் செய்யக் கூடிய குற்றமற்ற கைங்கர்யமாகிற உபேயத்தை அடையலாம்.

பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருப்பாவைக்கு ஒரு அத்புதமான மற்றும் விரிவான வ்யாக்யானம் அருளியுள்ளார். இந்த ஸ்வாமியின் அருளிச்செயல் ஞானம் ஒப்பில்லாதது. உதாரணத்துக்கு அருளிச்செயல் பாசுரங்களில் வரும் சொற்களைக் கொண்டே ரஹஸ்ய த்ரயத்தையும் விளக்கும் ஒரு அழகிய ப்ரபந்தமான அருளிச்செயல் ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தை இவர் இயற்றியுள்ளார்.

ஆண்டாளின் தனித்துவமான பெருமை அவள் அனைவரையும் பகவத் அனுபவத்தில் ஈடுபடுத்தியதே. சாஸ்த்ரம் “ஏக ஸ்வாத் ந புஞ்சீத” (தனிமையில் அனுபவிக்காமல் அனைவருடன் பகிர்ந்து கொண்டு அனுபவிக்க வேண்டும்) என்கிறது. இது பகவத் விஷயத்தில் மிகவும் பொருந்தும். இவ்வுலக விஷயங்கள் குறைபட்டது ஆகையாலே, தனிமையிலேயே அனுபவிக்கப்படுகிறது. பகவத் விஷயமோ அனைவருக்கும் பொதுவாகையால் அனைவருடனும் பகிர்ந்து அனுபவித்தக்கது. பெரியாழ்வார் எவ்வாறு இவ்வுலக ஐச்வர்யத்தை விரும்பும் ஐச்வர்யார்த்திகள், தன் ஆத்மாவைத் தானே அனுபவிக்க விரும்பும் கைவல்யார்த்திகள் மற்றும் பகவானுக்கு நித்யமாகக் கைங்கர்யம் செய்ய விரும்பும் பகவத் கைங்கர்யார்த்திகள் ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு எம்பெருமானுக்குத் தன் திருப்பல்லாண்டில் மங்களாசாஸனம் செய்தாரோ, அவர் அடியொற்றி ஆண்டாளும் அனைவரையும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட அழைக்கிறாள்.

நாயனார் தன் 6000 படி வ்யாக்யானத்தில், கடைசி பாசுரமான “வங்கக் கடல்” பாசுரத்தின் அவதாரிகையில் (முன்னுரையில்), முதல் 29 பாசுரங்களின் அர்த்தங்களையும் சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். உண்மை அறிஞர்கள் நாயனார் ஒரு பாசுரத்தின் அர்த்தத்தை ஒரு வரியில் விளக்கும் ஆற்றலைப் பெரிதும் கொண்டுவர்கள். அவரின் திவ்ய ஸ்ரீஸூக்தி மூலம், நாமும் இப்பொழுது திருப்பாவை ஸாரத்தைக் காண்போம்.

  • முதல் பாசுரம் – ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், உபாய (வழி) உபேயங்களான (லக்ஷ்யம்) எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்க்ழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.
  • இரண்டாம் பாசுரம் – க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள். “மேலையார் செய்வனகள்” என்று பெரியோர்களான பூர்வாசார்யர்களின் நடத்தையே ப்ரபன்னர்களான நமக்கு வழி என்கிறாள்..
  • மூன்றாம் பாசுரம் – வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.
  • நான்காம் பாசுரம் – வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை (ப்ராஹ்மணர்களுக்காக, ராஜாவுக்காக, பத்தினிகளுக்காக) மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.
  • ஐந்தாம் பாசுரம் – நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். இங்கே முக்யமாகப் புரிந்து கொள்ள வேண்டியது – முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.
  • ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை, ஆண்டாள் கண்ணனிடம் மிகவும் ஈடுபாடு கொண்ட பத்து கோபிகைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களை எழுப்புகிறாள். அவ்வாறு செல்லும்போது கண்ணனின் திருமாளிகைக்குச் செல்வதில் மிகவும் ஈடுபாடு கொண்ட பல கோபிகைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள்.
  • ஆறாம் பாசுரம் – இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபியை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.
  • ஏழாம் பாசுரம் – இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபியை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்..
  • எட்டாம் பாசுரம் – இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுவளும் அதனால்  மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபியை எழுப்புகிறாள்.
  • ஒன்பதாம் பாசுரம் – இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்றதைப் போலே இருப்பவள்.
  • பத்தாம் பாசுரம் – இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபியை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.
  • பதினோறாம் பாசுரம் -இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபியை எழுப்புகிறாள். இப்பாசுரத்தில் வர்ணாச்ரம தர்மங்கள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டிய அவச்யம் காட்டப்பட்டுள்ளது.
  • பன்னிரண்டாம் பாசுரம் – இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனும் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்காத ஒரு இடையனுமான ஒருவனின் தங்கையான ஒரு கோபியை எழுப்புகிறாள். ஒருவன் எம்பெருமானுக்கே எப்பொழுதும் அன்புடன் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தால் அவனுக்கு வர்ணாச்ரம தர்மங்கள் முக்யமன்று. ஆனால் எப்பொழுது கைங்கர்யத்தை முடித்துத் தன் செயல்களை ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவனுக்கு மீண்டும் வர்ணாச்ரம தர்மங்கள் முக்யத்துவம் பெறும்.
  • பதிமூன்றாம் பாசுரம் – இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபியை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.
  • பதிநான்காம் பாசுரம் – இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள்.
  • பதினைந்தாம் பாசுரம் – இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள்.
  • 16 மற்றும் 17ம் பாசுரங்களில், நித்யஸூரிகளான க்ஷேத்ர பாககர்கள், த்வார பாலகர்கள், ஆதிசேஷன் போன்றோர்களுக்கு இவ்வூரில் ப்ரதிநிதிகளாய் இருப்பவர்களை எழுப்புகிறாள்
  • பதினாறாம் பாசுரம் – இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.
  • பதினேழாம் பாசுரம் – இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பிமூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.
  • 18, 19 மற்றும் 20ம் பாசுரங்களில் – கண்ணன் எம்பெருமானை எழுப்பவதற்கு இன்னும் ஏதோ ஒரு குறை உள்ளது என்று யோசித்து, நப்பின்னைப் பிராட்டியின் புருஷகாரம் இல்லை என்பதை உணர்ந்து, இம்மூன்று பாசுரங்களில், ஆண்டாள் நப்பின்னைப் பிராட்டியின் பெருமை, கண்ணன் எம்பெருமானுக்கும் அவளுக்கும் இருக்கும் நெருக்கம், அவளின் எல்லையில்லாத போக்யதை, ஸௌகுமார்யம், அழகிய உருவம், எம்பெருமானுக்கு வல்லபையாய் இருக்கும் குணம் மேலும் அவளின் புருஷகாரத்வம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறாள்.பிராட்டியை விட்டு எம்பெருமானை மட்டும் ஆசைப்படுதல் ஸ்ரீராமனை மட்டும் ஆசைப்பட்ட ஸூர்ப்பணகையின் நிலை என்றும், எம்பெருமானை விட்டு பிராட்டியை முட்டும் ஆசைப்படுதல் ஸீதாப் பிராட்டியை மட்டும் ஆசைப்பட்ட ராவணின் நிலை என்பர்கள் நம் பூர்வர்கள். இதில் உந்து மதகளிற்றன் பாசுரம் எம்பெருமானார் மிகவும் உகந்த ஒன்று.
  • இருபத்தொன்றாம் பாசுரம் – இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள்.
  • இருபத்திரண்டாம் பாசுரம் – இதில் எம்பெருமானிடம் தனக்கும் தன் தோழிகளுக்கும் வேறு புகலில்லை என்பதையும், விபீஷணாழ்வான் ஸ்ரீராமனிடம் சரணடைய வந்தாப்போலே தாங்கள் வந்துள்ளதையும் அறிவிக்கிறாள். மேலும் தான் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டதையும் எம்பெருமானின் அருளையே வேண்டுவதையும் அவனுக்கு அறிவிக்கிறாள்.
  • இருபத்துமூன்றாம் பாசுரம் – இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்கவைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிங்காஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.
  • இருபத்து நாலாம் பாசுரம் – அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்கவைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.
  • இருபத்தஞ்சாம் பாசுரம் – எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
  • இருபத்தாறாம் பாசுரம் – இதில் நோன்புக்கு தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜன்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.
  • 27 மற்றும் 28ம் பாசுரங்களில் எம்பெருமானே ப்ராப்யமும் ப்ராபகமும் என்பதை அறுதியிடுகிறாள்.
  • இருபத்தேழாம் பாசுரம் – ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.
  • இருபத்தெட்டாம் பாசுரம் -இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் (வ்ருந்தாவனத்தில் பசுக்களைப் போலே அத்வேஷத்தை மட்டும் காரணமாகக் கொண்டு) உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள். இப்பாசுரம் நமக்கு மிக முக்யமான பாசுரங்களில் ஒன்றாகும் – நாயனார் சரணாகதனின் ஆறு தேவைகளை விளக்குகிறார்:
    • எம்பெருமானை மட்டும் உபாயம் என்று எண்ணும் ஸித்தோபாய நிஷ்டன் அவனை அடைவதற்கு தன்னிடம் ஒன்றும் இல்லாதவன்
    • தன்னிடம் ஒரு அதிகாரமும் இல்லாததால், தன்னை மிகவும் அசக்தனாகவும் தாழ்ந்தவனாகவும் கருத வேண்டும்
    • எல்லா நன்மைகளுக்கும் மூல காரணமான எம்பெருமானின் திவ்ய குணங்களையே எப்பொழுதும் த்யானித்தல் வேண்டும்
    • எம்பெருமானுக்கும் தனக்கும் உள்ள நிரந்தர ஸம்பந்தத்தை உணர்தல் வேண்டும்
    • அநாதி காலமாகச் செய்யும் தவறுகளுக்கு எம்பெருமானிடம் மன்னிப்புக் கேட்டல்
    • எம்பெருமானிடம் கைங்கர்யத்தை ப்ரார்த்தித்தல்
  • இருபத்தொன்பதாம் பாசுரம் – இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது , கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.
  • முப்பதாம் பாசுரம் – எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபி பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். அவள் யாரொருவர் இந்த 30 பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். அதாவது – ஆண்டாளின் கருணையினால் – கண்ணன் வ்ருந்தாவனத்தில் இருந்த காலத்தில் அவனிடம் பேரன்பு பூண்டு அங்கிருந்த கோபிகளுக்கும், அதே பாவத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்ட ஆண்டாளுக்கும், வேறு யவரேனும் இப்பாசுரங்களை கற்று, பாடுபவர்களுக்கும் ஒரே பலன் கிடைக்கும். பட்டர் “வைக்கோலால் செய்யப்பட்ட தோல் கன்றைக் கண்டும் ஒரு தாய்ப் பசு பால் கொடுக்குமது போலே, யவரேனும் எம்பெருமானுக்கு பிரியமானவளால் பாடப்பட்ட இப்பாசுரங்களைப் பாடினால், அவருக்கும் அப்படி எம்பெருமானின் அன்பைப் பெற்றவர்கள் பெறும் பலன் கிடைக்கும்” என்று அருளிச்செய்வர். ஆண்டாள் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த சரித்ரத்தைச் சொல்லி முடிக்கிறாள். ஏனெனில், கோபிகள் எம்பெருமானை அடைய விரும்பினார்கள். எம்பெருமானை அடைய பிராட்டியின் புருஷகாரம் தேவை. எம்பெருமான் பிராட்டியை வெளிக்கொணர்ந்து மணம் புரியவே கடலைக் கடைந்தான். ஆகையால் ஆண்டாளும் இச்சரித்ரத்தைப் பாடி ப்ரபந்தத்தை முடிக்கிறாள். ஆண்டாள் ஆசார்ய அபிமான நிஷ்டை ஆகையாலே, தன்னைப் பட்டர்பிரான் கோதை என்று காட்டி, ப்ரபந்தத்தை முடிக்கிறாள்.

இவ்வாறு, நாயனார் திருப்பாவை ஸாரத்தை ஒரு பெரிய பத்தியில் அழகாக விளக்கியுள்ளார் – இது அவரின் மேதாவிலாசத்துக்கு ஒரு எடுத்தாக்காட்டு. நமக்கு அவரின் வித்வத்தைக் கொண்டாடத் தகுதி இல்லை என்றாலும், அதைக் கண்டு ஆச்சர்யப்படாமல் இருப்பது அரிது. அவரின் பகவத் விஷய ஞானமும் பக்தியும் சேர்ந்ததனால் நமக்கு ஒரு அத்புத அனுபவம் கிடைத்தது.

திருப்பாவை நம் பூர்வாசார்யர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு, நம் ஸம்ப்ரதாயத்திலும் நித்யானுஸந்தானத்திலும் ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளது. நாமும் ஆண்டாளின் திருவடித் தாமரைகளில் பணிந்து, அவளிடம் இருக்கும் பகவத் பாகவத ப்ரேமத்தில் ஒரு துளி நமக்கும் அருளுமாறு ப்ரார்த்திப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2012/12/thiruppavai-saram-by-nayanar/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “நாயனார் அருளிய திருப்பாவை ஸாரம்”

  1. அருமை. தாசன் .

    2017-12-21 19:01 GMT+05:30 SrIvaishNava granthams in thamizh :

    > sarathyt posted: “ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
    > ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனின்
    > திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில்
    > கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமா”
    >

    Reply

Leave a Comment