பங்குனி உத்ரமும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பங்குனி உத்ரம் பலவகைகளில் ஒரு மிகச்சிறந்த
தினம்.

 

  • இந்நன்னாளே பெருமாள் சீதாப்பிராட்டியை மணம் புரிந்தநாள்.

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் இந்நாளே.

இவ்வெல்லாவற்றையும் விட மிக விசேஷித்து, எம்பெருமானார் திருவரங்கத்தில் நம்பெருமாள் தாயார் சேர்த்தியில் சரணாகதி  கத்யம்,ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் எனும் அத்புதமான மூன்று கத்யங்களை கத்ய த்ரயத்தை விண்ணப்பித்தது இந்நன்னாளிலேயே ஆகும்.

ஒரு பங்குனி உத்ரத் திருநாளில் நம்பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் இருந்தபோது அங்கு எழுந்தருளிய எம்பெருமானார் ஸம்ஸாரத்தின் கொடிய இயல்பைக் கருதி அதினின்றும் தப்பி அவர்தம் திருவுள்ளத்தில் இருந்த உபாயத்தை வெளியிடுமுகமாக இம்மூன்று திவ்ய க்ரந்தங்களையும் அருளிச்செய்தார். சரணாகதி எனில், எம்பெருமானை அடைய அவனே உபாயம் என்று பொருள்படும்.

கத்ய த்ரயம் த்வய மஹா மந்த்ரத்தின் பொருள் என்றே விவரிக்கப் படுகிறது.

  • சரணாகதி கத்யம்
    • முதலில் எம்பெருமானார் ரங்கநாயகித் தாயாரைப் புருஷகாரமாக ஏற்றுப் போற்றுகிறார்.
    • பின் எம்பெருமானின் திவ்ய கல்யாண குணங்கள், வடிவங்கள், நித்ய கைங்கர்ய  பரர்கள் ஆகியோரைப் போற்றுகிறார்
    • எம்பெருமானிடம் சரணாகதி செய்கிறார்

  • ஸ்ரீரங்க கத்யம்
    • இதில் எம்பெருமான் திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனாக எழுந்தருளியிருப்பதை முழுமையாக அனுபவித்துப் பரவசராகிறார்.
    • இவ்வுலகில் த்வய மஹா மந்திரத்தின் பொருளாக எம்பெருமான் திவ்ய தேசங்களில் அர்ச்சா ரூபியாக எழுந்தருளி இருப்பதால், நம் பூர்வாசார்யர்கள் திவ்யதேச எம்பெருமான்களின் அனுபவத்திலேயே நோக்காய் இருந்தனர்.  அடியார்க்கு எளியனாய் சௌலப்யம் எனும் கல்யாண குணத்தை எம்பெருமான் காட்டுவது திவ்யதேச அர்ச்சாவதாரங்களான வடிவிலேயே  என்பதால் எம்பெருமானார் இந்த கத்யத்தில் சௌலப்யம் எனும் குணாநுபவமே செய்கிறார்.

  • ஸ்ரீ வைகுண்ட கத்யம்
    • இதில் எம்பெருமானார் வைகுண்டத்தின் பல்வகைப்பட்ட மாஹாத்ம்யத்தை மிகப்பரக்கப் பேசி அளவிலா இன்பமடைகிறார்
    • இதில் பகவத் பரத்வமே அனுபவிக்கப் படுகிறது.
    • பரம பதத்தில் கைங்கர்யம் செய்வதன் அறுதிப்பயன் இதில் தெரிவிக்கப் படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளையின் அத்புதமான கத்ய த்ரய வ்யாக்யான அவதாரிகையைச் சற்று அனுபவிப்போம்:

பெரியவாச்சான் பிள்ளை எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் கத்யத்ரயம் இரண்டின் நோக்கத்தை விவரிக்கிறார்:

  • கீதா பாஷ்யத்தின் நோக்கம் கர்மஞானங்களை உட்கொண்ட பக்தி யோகத்தைக் காட்டுவதன் மூலம்  வேத/வேதாந்தங்களைத் தவறாக விளக்கும் குத்ருஷ்டிகளை வலுவிழக்கச் செய்து ப்ரபத்தியே உபாயம் எனக்காட்டுவது.
  • வேதாந்தம் ஞான ராசியான பக்தியை நோக்காகக் கொண்டதால், எம்பெருமானார் வேதாந்தத்தை விளக்க அதையே கைக்கொண்டார். ஆழ்வார்/ஆசார்யர்கள் ப்ரபத்தியை (எம்பெருமானையே உபாயமாகக்) கொண்டதால், தம் திருவுள்ளத்துக்கு மிக உகப்பான இதையே அவரும் கத்ய த்ரயத்தில் வெளியிட்டார்.
  • வேதம் அவைதிகர்களுக்குச் சொல்லத்தகாதது போலே எம்பெருமானாரும் வேதத்தை விபரீதமாக விரித்துரைப்போர்க்கு உதவாது என்பதால் அவர்களை அவர்களின் ஞான பக்திகளாலேயே தோற்பித்து, தம் சித்தாந்தமான ப்ரபத்தியை கத்ய த்ரயத்தில் காட்டியருளினார்.

எம்பெருமானார் திவ்ய தம்பதிகளின் திருமுன்பே சரணாகதி அனுஷ்டித்து, ப்ரபத்தியின் மேன்மையையும் எம்பெருமானே நமக்கு உபாயம் என்பதையும் காட்டியருளினார். நம் பூர்வாசார்யர்களும் எப்போதுமே எம்பெருமானையே உபாயமாகக் கொண்டார்களே அன்றி மற்றொன்றை அன்று.

சரணாகதி கத்ய வ்யாக்யான ப்ரவேசத்தில் பெரியவாச்சான் பிள்ளை பக்திக்கும் சரணாகதிக்குமுள்ள வேறுபாட்டை அழகாகக்காட்டியுள்ளார்:

பக்தி யோகம் ப்ரபத்தி (எம்பெருமான் )
ப்ராஹ்மண க்ஷத்ரிய வைசியர்கள் மட்டுமே அதிகாரிகள். பக்தி/அன்பு வேறு, பக்தி யோகம் வேறு. சாஸ்திரம் காட்டும் பக்தி எம்பெருமானை அடையும் உபாயம் மிகக் கடினமான அங்கங்களை உடையது. எம்பெருமான் ஸர்வர்க்கும் பொதுவான உபாயம் ஆதலால் எவர் வேணுமானாலும் இதை அனுஷ்டிக்கலாம்.
பக்தியோகம் மிகக்  கடினமானது;  கர்ம யோகத்தை உள்ளடக்கியது; முறையான ஞானத்தோடேயே பயிலப்பட வேண்டியது. ப்ரபத்தி செய்தபின் எம்பருமான் தானே நம் கார்யங்கள் யாவற்றையும் நிர்வகிக்கிறான் என்பதால் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் நம் எல்லாச் செயல்களையும் கைங்கர்யமாக நினைத்து ஸ்வரூபாநுரூபமாகச் செய்ய வேண்டும்.
இதன் இறுதி இலக்கு பல பிறவிகளுக்குப் பின்பே அடையப்  படுகிறது. இப்பிறப்பின் இறுதியிலேயே மோக்ஷப் ப்ராப்தி உண்டு.
இடையில் வழி தவறி இடற நிறைய வாய்ப்புண்டு. ப்ரபத்தி செய்தவரை எம்பெருமான் நழுவ விடுவதே இல்லை, நாம் தவற வழி இல்லை.
இந்த உபாயம் நாம் செய்யும் (பக்தி யோகம் சார்ந்த செயல்களால்) அடையப்படுகிறது வழி/உபாயம் எம்பெருமான் ஏற்கெனவே உள்ளான், புதிதாக அமைய வேண்டா(ஸித்தோபாயம் : உபாயம், வழி…ஸித்தமாய் தயாராக உள்ளது).
ஜீவாத்மா எம்பெருமானுக்கே உரிமைப்பட்டவனாதலால் (எம்பெருமானை அடைய ஸ்வப்ரவ்ருத்தி/ ஸ்வயத்நம்)  பக்தி யோகம் அவன் ஸ்வரூபத்துக்குச் சேராது. ​ எம்பெருமானே உபாயம் என்பதால் ஜீவாத்மாவுக்குத் தன உடைமையாளனைப் பாதுகாப்பாக ஏற்பது மிக இயல்பான ஒன்று
எம்பெருமான் தரும் பலத்தோடு (மோக்ஷம்/நித்ய கைங்கர்யம்) ஒப்பிடும்போது ஜீவாத்மாவின் பக்தி யோகம் மிக அல்பமானதே ஆகும்.​ எம்பெருமானே வழி (உபாயம்), சென்று சேரும் இடம் (உபேயம்) என்று இரண்டுமாக இருப்பதால் ப்ரபத்தி எவ்வகையிலும் ஒரு குறையும் இல்லாத நிர்தோஷ உபாயமாய் உள்ளது .

வேதாந்தமும் ப்ரபத்தியையே மிக உயர்ந்த உபாயமாக விதிக்கிறது. ஆபஸ்தம்ப ஸூத்ரம் “தர்மஜ்ஞ ஸமயம் ப்ரமாணம், வேதாச் ச” (கற்றறிந்தோர் கூறுவதே முக்ய ப்ரமாணம், வேதமும் ப்ரமாணம்) என்று கூறுவதால், நம் பூர்வாசார்யர்கள் எம்பெருமானையே உபாயம் என்று ஏற்றிருந்ததால் நமக்கும் அது நல்வழியே.

எம்பெருமானார் இப்பெரிய ரஹஸ்யார்த்தத்தைத் தம் அடியார்கள் அனைவரும் ஸத்வகுண ஸம்பன்னர்களாய் அறிந்து உணர்ந்து ஒழுகவேணுமென்று கருணையால் திருவுள்ளம் பற்றி, கத்ய த்ரயத்தை வெளியிட்டருளினார்.

பெரியவாச்சான் பிள்ளை இப்ரகரணத்தில் ஓர் அழகிய வினா எழுப்புகிறார்:

எம்பெருமானார் ஏற்கெனவே பெரியநம்பிகளிடம் ஸமாச்ரயணம் செய்துகொண்டவர். ஏன் மறுபடியும் சரணாகதி கத்யம் என சரணாகதி செய்கிறார் என்பதே அக்கேள்வி.

பெருமாள் ஸ்ரீராமன்:

ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மி இதி யாச தே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம ||

என்று திருவுள்ளம் பற்றி ஒருமுறை சரண் அடைந்தவனை நான் காக்கிறேன் இது என் வ்ரதம்/சபதம் என்றாரே.

பெரியவாச்சான் பிள்ளை மேலும் ஸாதிக்கிறார். ஒரு சரணாகதன் முதல் சரணாகதியோடேயே முழுத்ருப்தி அடைந்து விட வேண்டும்.

  • சீதாப்பிராட்டி போல் “தத் தஸ்ய சத்ருசம் பவேத்” “ஸ்ரீராமன் வந்து அவர் விரும்பிய போது என்னை அழைத்துக் கொள்ளட்டும், அதுவே அவர் தகுதிக்கும் ஒத்தது; என் ஸ்வரூபத்துக்கும் இயல்பு” என்று சொன்னதுபோல் இருக்க வேண்டும்.
  • நம்மாழ்வார், “களைவாய் துன்பம், களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்”-எம்பெருமானே நீ என் துன்பத்தைக் களைந்தாலும் அல்லது களையாவிடினும் எனக்குத் துன்பம் போக்க்கக் கூடியவன் நீயே” என்றிருந்தாற்போல் இருக்க வேண்டும்.

ஆக, ஏன் எம்பெருமானார் மறுபடி சரணாகதி பண்ணினார்?

இதைப் பிள்ளையே தம் வ்யாக்யானத்தில் வெகு அழகாக விளக்கியருளுகிறார்:

ஸம்ஸாரிகள் படும் துயரம் எம்பெருமானாரால் ஸஹிக்க முடியவில்லை. அந்த ஆர்த்தி, துயரம் தாளாமல் அவர் ஆழ்வார்கள் போல தாமும், சரணாகதி அவர்கள் பொருட்டாக அனுஷ்டித்தார். திருவாய்மொழியில் நோற்ற நோன்பு (5.7), ஆரா அமுதே (5.8), மானேய் நோக்கு (5.9), பிறந்தவாறும் (5.10) ஆகிய எல்லாவற்றிலும் ஆழ்வார் மீண்டும் மீண்டும் சரணாகதி சேதனர்கள் பொருட்டே செய்தது போன்றே நம் பூர்வர்களும் நமக்காகவே தாங்கள் பெற்ற நற்கதி நமக்கும் கிட்டி நலமந்தமில்லதோர் நாடு புக‌ வேணுமென்று, அவனே உபாயம் ஆதலால் அவனையே சரணம் புக்கனர்.

எம்பெருமானார் “உடையவர்” நம் எல்லார்க்கும் ஸ்வாமி என்பதாலும், லீலா விபூதி நித்ய விபூதி இரண்டும் எம்பெருமான் அவர்க்குக் கொடுத்துவிட்ட படியால் அவர் நமக்காகச் செய்யும் ப்ரார்த்தனையையால், நம் குருபரம்பரை மூலம் அவரோடு நமக்கு ஏற்படும் தொடர்பினால்,  எம்பெருமான் அவச்யம் நமக்கும் கைங்கர்ய ப்ராப்தி அளிப்பான்.

ஆக, நாமும் எம்பெருமானார் திருவடித் தாமரைகளை த்யானித்து உஜ்ஜீவனம் அடைவோம்.

ஆக, இக்கட்டுரையில் நாம் அனுபவித்தது:

  • பங்குனி உத்ரச்  சிறப்பு
  • கத்ய த்ரயச் சிறப்பு
  • கீதா பாஷ்ய கத்ய த்ரய வேறுபாடு
  • பக்தி ப்ரபத்தி வேறுபாடு
  • எம்பெருமானார் க்ருபை
  • எம்பெருமானார் பங்குனி உத்ரத்தன்று சரணாகதி செய்ததன் காரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் :  https://granthams.koyil.org/2013/03/panguni-uthram-and-emperumanar/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “பங்குனி உத்ரமும் எம்பெருமானாரும்”

  1. wonderful comparison between Geetaopadesam& emberumanars saranagathy gadyam . what a thought emperuman Has graced Emperumanar with. As a lowkeeka teacher of physics I fall flat for emperumanar adopting methodology of teaching as best suited to context of this kaliyuga. Really a revolutionary Philosopher& a great seersaint & more importently a great frien philosopher& guide. Your service to humanity by such uploads is amazing swami
    mythili

    Reply

Leave a Comment