ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில் ஸ்வாமியை “காரேய் கருணை இராமாநுசா” என்று போற்றுகின்றார். இங்கு எம்பெருமானார் மேகங்களோடு ஒப்பிடப் படுகின்றார். மேகங்கள் பெருவள்ளல்களாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் :
- அவை எவரும் கேளாமலே கடலிலிருந்து நீரை முகர்ந்து நிலத்தில் ஊற்றுகின்றன.
- அவை நல்லவன்/கெட்டவன், ஏழை/செல்வன் என்று வேறுபாடு கருதாது நீரை மழையாய்ப் பொழிகின்றன
- அவை கறுத்திருப்பதன் காரணம் அவைகள் நீரைச் சுமந்து யாவர்க்கும் வழங்க காத்திருக்கின்றன என்பதே
அதேபோல் எம்பெருமானாரும் சாஸ்த்ரார்த்தங்களை கற்றார் கல்லார் என்று வேறுபடுத்தாமல் ஜீவாத்மாக்களை உயர்த்த வேண்டுமென்னும் ஒரே நோக்கோடு தாராளமாக யாவர்க்கும் வழங்கினார்.
ஸ்ரீவசன பூஷணத்தில் பிள்ளை லோகாசார்யர் பெரியாழ்வார் எம்பெருமானார் இருவருடையவுமான ஓர் இயல்பை அழகாகச் சுட்டிக் காட்டுகிறார். அதை அநுபவிப்போம் :
மங்களாசாஸனத்தின் (எம்பெருமான் நன்றாய் இருக்கவேண்டுமே என்று பிரார்த்திப்பது) முக்யத்வத்தைப் பேசும்போது உலகாசிரியர் எப்போதும் மங்களாசாஸனத்திலேயே ஊறியும் ஊன்றியும் இருப்பவரான பெரியாழ்வாரைப் பற்றி சாதிக்கிறார். ஸூத்ரம் 255ல் எம்பெருமானாரும் பெரியாழ்வாரும் எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதிலேயே ஊற்றமாய் இருந்தனர் என்று காட்டுகிறார்.
“அல்லாதவர்களைப் போலே கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும் தனிமையைத் தவிர்க்கையன்றிக்கே, ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைக்காயிற்று பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது”
மாமுனிகள் தம் வ்யாக்யானத்தில் இதை வெகு அழகாக இந்தப் ப்ரகரணத்தில் சாதிக்கிறார்:
- ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் ஜீவாத்மாக்களுக்கு உண்மை ஞானம் ஊட்டி மேலேற்ற விரும்பினார்கள்
- அவர்கள் சிஷ்யர்களை உத்தரிப்பித்த போதே ஸத் ஸங்கத்தையும் பேணிக்கொண்டார்கள் ஸம்ஸாரத்தில் பரஸ்பர நன்மைக்காக
- ஆனால் பெரியாழ்வாரும் எம்பெருமானாரும் எப்போதுமே எம்பெருமான் திருமேனி ஸம்ரக்ஷணத்திலேயே கண்ணாய் இருந்தார்கள்
- மாமுனிகள் இவ்விஷயத்தை ஸாதிக்கும்போது லோகாசார்யர் ஸ்வாமியை எம்பெருமானார் என்னாதே பாஷ்யகாரர் என்றதன் ஸ்வாரஸ்யம் அவர் ஒரு ஸாதாரண வ்யக்தி அல்லர், சாஸ்த்ர வேதாந்தங்கள் ஸ்ரீபாஷ்யம் இயற்றுமளவுக்குக் கைவந்தவர் என்பதால் என்பது குறிக்கொள்ளத் தக்கது
ஆசார்ய ஹ்ருதயம் சூர்ணிகை 204ல் அழகிய மணவாள பெருமாள் நாயனார் சீதாப் பிராட்டி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), ப்ரஹ்லாதாழ்வான், விபீஷணாழ்வான், நம்மாழ்வார், எம்பெருமானார் இவ்வைவரின் காருண்யத்தை மேன்மையாகச் சொல்கிறார்:
“தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்க்குமே இவையுள்ளது”
நாயனாரின் இந்தத் திருவாக்கை மாமுனிகள் விசதமாக வ்யாக்யானித்துள்ளார். இவை உள்ளது என்றது:
- ஸம்பந்த ஞாநம் – ஸம்ஸாரத்திலும் பரமபதத்திலும் எல்லா ஜீவாத்மாக்களும் எம்பெருமானோடு ஒரே உறவையுடையன. முக்யமாக பிதா புத்ர (தகப்பன்/மகன்), சேஷ/சேஷி (ஆண்டான்/அடிமை). சிலர் இவ்வுறவை உணர்ந்துள்ளனர் பலர் உணர்ந்திலர்
- ஜீவாத்மாக்களின் அபராதங்களைக் கண்டு பொறுக்க இயலாமை – அறியாமையால் அவர்கள் செய்யும் பிழைகள் எண்ணிறந்தவை.
- பெருங்கருணை – இஜ்ஜீவர்கள் உலகியலில் மூழ்கிக் கிடக்கக் கண்டு எம்பெருமானே இவர்களை கடைத்தேற்ற இயலாதெனக் கைவாங்கியிருக்கும்போது இவர்களுக்காக இரங்கி இவர்கள் வாழ்ச்சிக்காக மனம் கலங்குபவர்கள் ஆழ்வார்கள்/ஆசார்யர்களே.
சீதாப் பிராட்டி கொண்ட கருணை எவ்வளவெனில் தன்பால் தீமனங்கொண்ட இராவணனையும் உய்விக்க அவள் தான் தாயானபடியால் அவனை நீ பெருமாளை வணங்காவிடிலும் அவனோடு நட்பாவது பாராட்டி உய்ந்து போவாய் என்றாள்.
ப்ரஹ்லாதன் தான் பெருமாளிடம் கொண்ட பக்திக்காகத் தன்னைப் பலவாறு துன்புறுத்திய தன் தந்தையையும் தன்னோடிருந்த சிறார்களையும் அவர்கள் உணராவிடினும் எம்பெருமானிடம் ஈடுபடுத்தவே விரும்பினான்.
தன்னை எப்போதும் இழித்தும் பழித்தும் பேசி இகழ்ந்த இராவணனையும் விபீஷணன் திருத்தி வாழ்விக்கவே விரும்பி முயற்சி செய்தான்.
நம்மாழ்வார் பெருங்கருணையால் முற்றிலும் உலகியலில் ஆழ்ந்து எம்பெருமானை நினையாத ஜீவர்களுக்காகக் கலங்கினார்.
கடைசியாக ஆழ்வாரின் திருவடியாகவே கருதித் தொழப்படும் எம்பெருமானாரும் பரம ரஹஸ்யமான சாஸ்த்ரார்த்தங்களைத் தாம் மிகவும் பரிச்ரமப்பட்டுப் பயின்றாலும் அவற்றைக் கற்க ஆவலுடையோர்க்கு ஒரு தகுதியும் கருதாது கற்பித்தார். அப்படிக்கற்றோர் வழியாக இந்த பர ஞானம் எல்லார்க்கும் சென்று சேரவும் வழி வகுத்தார்.
நாயனார் ஆச்சான் பிள்ளை தமது “சரமோபாய நிர்ணயம்” (https://granthams.koyil.org/charamopaya-nirnayam-english/) எனும் திவ்ய க்ரந்தத்தில் மிக விபுலமாகக் காட்டியுள்ளார்.
உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் எம்பெருமானாரை எல்லாரும் ஏற்றுப் போற்ற ஒரு தலையாய காரணம் என்று இக்கருணையையே காட்டியருளுகிறார். எம்பெருமானார்க்கு முன்பிருந்த ஆசார்யர்களுக்கு இல்லாத ஒரு குண விசேஷம் இக்கருணை என்பதை அவர்:
“ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் —பாருலகில்
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று
பேசி வரம்பறுத்தார் பின்”
என்கிற பாசுரத்தில் காட்டியருளினார்.
எம்பெருமானார் காலத்துக்கு முன்பு, ஆசார்யர்கள் ஞானத்தை மிகவும் தேர்ந்தெடுத்தவர்களுக்கே அளித்தனர். முதலில் மாணாக்கர்களை நன்றாகப் பரிசோதித்து, அவர்களிடம் பல காலம் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு, தாங்கள் த்ருப்தி அடைந்த பின்பே உபதேசம் செய்தனர். எம்பெருமானாரோ ஸம்ஸாரத்தில் சேதனர்கள் உண்மை ஞானத்தைப் பெறப் படும் துன்பத்தைக் கண்டு, தன்னுடைய சிஷ்யர்களில் 74 ஸ்ரீவைஷ்ணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஸிம்ஹாஸனாதிபதிகளாக்கி, அவர்களை ஆசை உடையோர்க்கெல்லாம் பகவத் விஷயத்தைக் கற்பிக்கும்படி செய்தார். தானும் பல சமயங்களில் ஆசையுடையோர்க்கு விஷயங்களைக் கற்பித்தார். ஆசார்யர்களில், எம்பெருமானார் காலத்துக்கு முன்பிருந்தவர்கள் அனுவ்ருத்தி ப்ரஸன்னாசார்யர் (சிஷ்யர்களைப் பூர்ணமாகப் பரிசோதித்து ஞானத்தை அளித்தவர்கள்) என்று அழைக்கப் பட்டனர். ஆனால் எம்பெருமானாரே முதல் க்ருபா மாத்ர ப்ரஸன்னாசார்யர் (தன் பெருங்கருணையால் சிஷ்யர்களுக்கு உயர்ந்த ஞானத்தை அளிப்பவர்)
இவ்வாறாக திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், நாயனார் ஆச்சான் பிள்ளை, மணவாள மாமுனிகள் யாவரும் எம்பெருமானாரின் ஈடு இணையற்ற கருணை எனும் பெரும் பண்பை நமக்குக் காட்டியருளினர். அவரே நமக்கு அரண்.
ஆழ்வார் எம்பெருமானார் அமுதனார் லோகாசார்யர் நாயனாராச்சான் பிள்ளை நாயனார் ஜீயர் திருவடிகளே சரணம்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம் : https://granthams.koyil.org/2013/05/unlimited-mercy-of-sri-ramanuja/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
Adiyean Dasnpakiyam pakiyam pallandu pallandu R.Umamaheswaran kadaikanal
On 31 Mar 2018 21:07, “SrIvaishNava granthams in thamizh” wrote:
> sarathyt posted: “ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
> ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கத்து அமுதனார் தம்
> இராமாநுச நூற்றந்தாதி இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில் ஸ்வாமியை “காரேய் கருணை
> இராமாநுசா” என்று போற்றுகின்றார். இங்கு எம்பெருமானார்”
>