ஸார த்ரயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருமழிசை ஆழ்வார் பக்தி ஸாரர் என்று புகழ் பெற்றவர்.  ஆழ்வாரின் முழு மேன்மையை அறிந்த ருத்ரனே இந்தப் பெயரை ஆழ்வாருக்குச் சூட்டினார். குருபரம்பரா ப்ரபாவக் கதையின்படி ஆழ்வார் ஏதோ கந்தலைத் தைத்துக் கொண்டிருந்தபோது வான்வழியே பார்வதியோடு ரிஷபாரூடராகச் சென்று கொண்டிருந்த சிவனார் ஆழ்வார் பெருமையைப் பார்வதிக்கு கூற, அவளும் இவ்விஷ்ணு பக்தர்க்கு ஏதாவது செய்து போவோம் என்றாளாக, இருவரும் இறங்கி வந்து அவர்க்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.  அவர் தமக்கு ஏதும் வேண்டா என்று மறுத்து, தாம் விரும்புவது மோக்ஷம், அதனை அவர்களால் தர இயலாது என்னவும், இருவர்க்கும் வாக்குவாதம் வளர்ந்து சிவன் தம் நெற்றிக்கண்ணைத் திறந்து நோக்க, ஆழ்வார் தம் கட்டைவிரலின் மூன்றாம் கண் திறக்கவும் தாங்கொணா வெப்பம் எழுந்தது. எம்பெருமான் இறுதியில் தானே வந்து சிவனைக் காக்க, சிவன் ஆழ்வாரின் பகவத் பக்தியை மெச்சி, “பக்தி ஸாரர்”. என்று பேரிட்டார். அதாவது திருமால் அன்பின் ஸாரமான வ்யக்தி விசேஷம்.

நம் ஸம்ப்ரதாயத்தில் தத்வங்கள் மூன்று – சித் அசித் ஈச்வரன் என.

  • சித் – அறிவுள்ளன அனைத்தும். இவற்றுக்கு, தமக்கு இறைவன் ஸ்ரீமந் நாராயணன், தாம் அவன் உடைமை என்ற அறிவு உண்டு.
  • அசித் – இவற்றுக்கு ஞானம் இல்லை. இவை மூல ப்ரக்ருதி, அஹங்காரம், மஹான், மனஸ், கர்மேந்த்ரியங்கள் (செயலாற்றும் புலன்கள்) ஐந்து, ஞானேந்திரியங்கள் (அறிவைப் பெரும் புலன்கள்) ஐந்து, பஞ்ச பூதங்கள் (நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாசம்), பஞ்ச தன்மாத்ரைகள் (ஐந்து சூக்ஷ்ம பூதங்கள்) என 24 தத்வங்கள் ஆகும்.
  • ஈச்வரன் – அளவற்ற ஞானம் கொண்ட ஸர்வஜ்ஞன். ஸ்ரீமந் நாராயணன். ஞானமுள்ள அனைத்துக்கும் தலைவன். ஞானம் (அறிவு), பலம் (ஆற்றல்), ஐச்வர்யம் (செல்வம்), வீர்யம் (பராக்ரமம்), சக்தி (வல்லமை), தேஜஸ் (பேரொளி) எனும் ஆறு கல்யாண குணங்கள் கொண்டவன். இவ்வாறு பண்புகளே மேலும் பலப்பலவாக விரிவடைகின்றன. இவன் அத்புதமான வடிவுகளும் அலகிலா லீலைகளும் உடையவன். (பரத்வாதி பஞ்சகம் – இணைய தளம் பார்க்கவும் https://granthams.koyil.org/2012/10/archavathara-anubhavam-parathvadhi/) நித்யவிபூதி லீலாவிபூதி எனும் இரு உலகங்களையும்  உடையவன். பரமபதம் = நித்ய, அழிவற்ற உலகு; லீலா விபூதி = தாற்காலிக மாறுபாடுள்ள இவ்வுலகு.
    • பரம பதத்தில் அவன் ஸ்ரீ, பூ, நீளா தேவிகளும் இன்னும் பல மஹிஷிகளும் கைங்கர்யம் செய்ய எழுந்தருளியுள்ளான். அனந்த கருட விஷ்வக்ஸேனாதி பரிசாரகர்கள் உளர்.
    • ஸம்ஸாரத்தில் அவன் ஒவ்வோர் அண்டத்திலும் ஒரு ப்ரஹ்மா ஒரு சிவன் ஓர் இந்திரன் எனத் தொழிலாற்ற தேவர்களை நியமித்து நடத்துபவன்.

இத்தேவர்களால் அனைத்து உலக விபரங்களையும் அவன் தானே நடத்தி ருள்கிறான்.

இம்மூன்றனுள்ளும் ஈச்வர தத்வமே நம் நோக்குக்கு உரியதாக இருக்கவேணுமென்று ஆழ்வார்கள்/பூர்வாசார்யர்கள் நிர்த்தாரணம் செய்துள்ளனர். சித்தும் அசித்தும் எம்பெருமான் லீலை அநுபவத்துக்காகவே உள்ளன. ஆகவே ஈச்வர தத்வம் தத்வ ஸாரம் எனப்படுகிறது. மேலும் நம்மால் ஈச்வர தத்வம் நன்கு அறிந்து கொள்ளப்படுமேயானால் மற்ற இரு தத்வங்களும் தம்மடையே அறியப்பட்டுவிடும். பகவத் விஷயமே தத்வ ஸாரம்.

உபதேசம் எனில் அறிவுரை. சாஸ்த்ரம் நம்மை எது செய்யலாம்/செய்யக் கூடாது என்று அறிவுறுத்தும். “சாஸனாத் இதி சாஸ்திரம்” = எது செய்/செய்யாதே என்று சாஸனம் = கட்டளை இடுகிறதோ அது சாஸ்திரம். சாஸ்திரத்தின் ஸாரம் திருமந்திரம், அஷ்டாக்ஷரீ. இதை அழகிய மணவாள பெருமாள் நாயனார் தம் ஆசார்ய ஹ்ருதயம் சூர்ணிகை 16ல் :

“வேத ஸார உபநிஷத், ஸார தர அநுவாக, ஸார தம காயத்ரியில் முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கு”

என்கிற சொற்களில் அழகாக எடுத்துக் காட்டினார். இவ்விடம் மாமுனிகளின் அத்புத வியாக்யானம்:-

  • வேதங்களின் ஸாரம் ப்ரஹ்ம வித்யையை விளக்கும் உபநிஷதங்கள்
  • உபநிஷதங்களின் ஸாரம் அவ்வுபநிஷதங்கள் யாவும் பரப்ரஹ்மம் , பரஞ்சோதி என்று ஸ்ரீமந் நாராயணனையே காட்டுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டும் நாராயண அநுவாகம் எனும் நாராயண ஸூக்தம்
  • அந்த நாராயண ஸூக்தத்தின் ஸாரம் அதில் பயின்று வரும் எம்பெருமானின் ஸர்வ வ்யாபகத்வத்தைக் குறிக்கும் எம்பெருமானின் மூன்று திருநாமங்கள் அடங்கிய விஷ்ணு காயத்ரி
  • விஷ்ணு காயத்ரியின் ஸாரம் அதில் முன்னதாக வரும் சித் அசித் ஈச்வர தத்வங்கள் மூன்றையும் விவரிக்கும் திருநாமம் ஆன நாராயண எனும் சொல். இந்த நாராயண நாமமே ஸகல வேத ஸாரம் என்றும உத்கோஷிக்கப் படுகிறது.

நாராயண மந்த்ரம் சாஸ்த்ரார்த்தங்கள் அனைத்தையும் நமக்குத் தெளிவாக அறிவுறுத்துகிறது. பிள்ளை லோகாசார்யர் தமது முமுக்ஷுப்படி திருமந்த்ர ப்ரகரணத்தின் இறுதி 115ஆம் ஸூத்ரத்தில் இதைச் சுருக்கமாக ஸாதித்துள்ளார்:-

“ஆக,  ‘திருமந்த்ரத்தால் எம்பெருமானுக்கே உரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே ஒழியவேணும்; ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்‘ என்றதாயிற்று.“

இவ்வாறாக திருமந்த்ரத்தில் நான் (ஜீவாத்மா) எம்பெருமானின் உடைமை ஆனதால் அவனுக்காகவே இருக்கவேணும், எனக்கு என்னுடையது என்றில்லாமல் இருக்க வேணும், என் ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே என் கைங்கர்யங்கள் யாவும் அமைய வேண்டும் என்றதாயிற்று. மாமுனிகளின் அழகிய வ்யாக்யானத்திலிருந்து இந்த 115ஆவது ஸூத்ரம் இதற்கு முந்தின 114 சூத்ரங்களினுடையவுமான ஸங்கிரஹம் என்பது தெளிவு. இவ்வாறு பக்தி ஸாரர், தத்வ ஸாரம், உபதேச ஸாரம் இவற்றை அறிந்த நாம் இம்மூன்றிற்கும் உள்ள தொடர்பைக் காணலாம். முதலாழ்வார்கள் மூவரும் சாஸ்த்ரங்களிலிருந்து ப்ரமாணரீதியில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்று ஸ்தாபிக்கையில் திருமழிசை ஆழ்வார் எம்பெருமானே  ஏகதேசமாகப் பரம்பொருள், ப்ரஹ்ம ருத்ரேந்த்திராதிகளைச் சார்ந்தவனல்லன் என்பதைப் ப்ரதானமாக ஸாதிக்கிறார்.

நான்முகன் திருவந்தாதி முதல் பாசுரத்திலேயே நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகன் சிவனைப் படைத்தான் என சாஸ்த்ரார்த்தத்தைத் தாம் வெளியிடுவதாகத் தொடங்குகிறார்.

ப்ரணவமே திருமந்த்ர ஸாரம். ப்ரணவம் நம: பதத்திலும் நாராயணாய பதத்திலும் விவரிக்கப் படுகிறது. ப்ரணவம் விளக்குவதாவது:-

  • ’அ‘ – ஸ்ரீமந் நாராயணனைக் குறிக்கிறது .
  • ‘ஆய‘ – இதில் மறைந்து நின்று அவனே சேஷி = உடையவன் எனக் குறிக்கிறது
  • ம – எல்லா ஜீவாத்மாக்களையும்  குறிக்கிறது

ப்ரணவத்தில் நடு  எழுத்தாகிய “உ”வே மிக முக்யமானதாகும். இதுவே ஜீவாத்மா எம்பெருமான் ஒருவனுக்கே அடிமைப்பட்டவன் என அறுதியிட்டுச் சொல்கிறது.

பிள்ளை லோகாசார்யர் இதை முமுக்ஷுப்படி திருமந்த்ர ப்ரகரணத்தில் மிக அழகாக விளக்குகிறார். அதை விளக்கும்போது பக்திஸாரரின் ஸ்ரீஸூக்திகளைக் காட்டுகிறார் ஸூத்ரம் 64ல்:-

“மறந்தும் புறந்தொழா மாந்தர் என்கையாலே”

மாமுனிகள் இதை விளக்குகையில், அடியார்கள் எம்பெருமானை ஒருவேளை மறந்தாலும்கூட இதர தேவதைகளை வணங்க மாட்டார்கள் என்கிறார். நான்முகன் திருவந்தாதியில் 68ஆம் பாசுரத்தில் திருமழிசை ஆழ்வார் இதை ஸாதிக்கிறார் :-

திறம்பேன்மின்  கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.

யமதர்ம ராஜன் தன தூதர்களைக் கூப்பிட்டு, ரஹஸ்யமாய் அவர்கள் காதோடு சொல்கிறான் – “என் கட்டளையை மறவாதீர். ஸ்ரீமந் நாராயணனைத் தவிர பிறரை வணங்காத ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் அவர்களை வணங்குங்கள். நான் அவர்களுக்கு தெய்வம் அல்லேன்”. பிற தெய்வங்களை வணங்கினால் நாம் ப்ரபன்னர்கள் ஆக மாட்டோம்.

பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுரத்தை மிக விபுலமாக வ்யாக்யானித்துள்ளார்:-

  • இப்பாசுரம் ”ஸ்வபுருஷம் அபிவீக்ஷ்ய” எனும் யமதர்மராஜன்/அவனுடைய ஏவலாளிகள் ஸம்பாஷணை கூறும் ஸ்ரீவிஷ்ணு புராண ச்லோகத்தின் நேர் தமிழாக்கம் போல் உள்ளது.
  • நாம் நம் எம்பெருமானைக் கூட மறந்தாலும், தேவதாந்தர பஜனம் செய்ய இயலாது. ஏனெனில் அது ப்ரபந்ந லக்ஷணத்துக்கு விரோதம்.
  • இதற்கு ஓர் அழகிய எடுத்துக் காட்டு – ஒரு மனைவி தன்  கணவனிடம் பூர்ண பக்தி இல்லாதிருப்பது ஒன்று, ஆனால் அவள் பர புருஷனிடம் விருப்பம் காட்டினாள் எனில் நிரந்தர நாசம் உண்டாகும். அதேபோல் நாமும் நம் எம்பெருமானிடம் அவிச்வாஸமாய் இருப்பினும், தேவதாந்தர பஜனம் செய்யில் நம் ப்ரபன்னத்வம் நழுவும், எம்பெருமானும் விலகுவன்.
  • எம தர்ம ராஜன் இப்படிப்பட்ட ப்ரபன்னர்களிடம் மிகவும் பக்தியோடிருக்க அறிவுறுத்தினான்.

எம்பெருமானோடு நமக்குள்ள நவ வித ஸம்பந்தங்களில் பதி பத்நி ஸம்பந்தமே தலையாயது. கற்புடைய குலமகள் தன் கணவனிடம் இருப்பதுபோன்றே ப்ரபன்னர்களும் எம்பெருமானிடம் அவன் விச்வபதி ஆனதால் தம் பதி  என்று விச்வாஸத்தோடு உள்ளனர்.

ஒருமுறை நம்பெருமாள் புறப்பாட்டின் போது மழை வர, எம்பெருமான் நனையாதிருக்க அடியார்கள் அவனை அருகிருந்த சிவாலயத்துக்குள் எழுந்தருளப் பண்ணனினர். உடன் வந்திருந்த எம்பெருமானாரையும் அவர்கள் தங்கள் கோவிலுக்குள் அழைத்தனர் – “ஸ்வாமி உங்கள் பெருமாள் உள்ளே வந்துள்ளார்….நீங்களும் மழைக்கு உள்ளே வாருங்கள்”.  எம்பெருமானார் மிக்க பணிவோடு, “ஓ எம்பெருமான் உள்ளே வந்தானோ. அவன் ஸர்வஸ்வாமி, ஆனால் அடியோம் அவ்வாறன்றே ஆகவே நம்மால் உள்ளே வர இயலாது ” என்றனர்.

திருமந்த்ரத்தில் நம: பதம் உகார அர்த்தமும் சொல்வதாய், திருமங்கை ஆழ்வார் ஸ்ரீஸூக்தியில் இருந்து சூத்ரம் 89ல் பிள்ளை லோகாசார்யர்,

“உற்றதும் உன்னடியார்க்கடிமை” என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும் அனுசந்தேயம்” என்று ஸாதிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் திருமந்த்ரார்த்தம் கற்றதற்பின் அடியேன் ஸ்ரீமந் நாராயணனுக்கே உரியேன், அடியேன் உன்னடியார்க்கு அடிமைப் பட்டேன் என்று தெளிவாக அருளிச் செய்கிறார்.

மாமுனிகள் நாம் நம் தேஹமே ஆத்மா என மயங்கும் அஹங்காரமும், நாம் ஸ்வதந்த்ரர் என மயங்கும் மமகாரமும் விட்டால், இறுதி நிலையாக பாகவத சேஷத்வத்தில் ஊன்றுவோம் என்கிறார்.

தன்  மனைவி, தன் பெற்றோர் உற்றார்களையும் பேணுவது கண்டு கணவன் உகப்பது போல் எம்பெருமானும் நாம் அவனுடைய அடியார்களிடம் பக்தியோடு இருப்பதை மிக உகக்கிறான்.

ஆக நாம்:

  • உபதேச ஸாரம் – தேவதாந்தர பஜனம் விடுவதே ஸகல சாஸ்த்ரார்த்தம்
  • தத்வ ஸாரம் – பகவத் விஷயமே என்பதை
  • பக்தி ஸாரர் ஆகிய திருமழிசைப் பிரான் திருவாக்கினால் கண்டோம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/01/sara-thrayam/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment