ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
பராங்குச பயோதி = நம்மாழ்வார் எனும் பாற்கடல்
ஸ்வாமியின் திவ்ய க்ரந்தங்களில் ஆழ்வாரின் திருவாக்குப் ப்ரபாவம் எவ்வளவென அநுபவிக்கப் பல விஷயங்கள் பார்த்தோம்.ஸ்வாமி ஆழ்வாரிடம் எவ்வளவு பக்தியோடிருந்தார் என்றும் பார்த்தோம். இனி, பெரும்பாலும் வடமொழியில் க்ரந்தங்கள் சாதித்தருளிய மற்ற ஆசார்யர்களின் மீது ஆழ்வார் ப்ரபாவத்தை நாம் அனுபவிப்போம்.
ஆழ்வான் எனப் ப்ரசித்தரான ஸ்வாமியின் சிஷ்யர் புகழ்மிக்க “பஞ்ச ஸ்தவங்கள்” எனும் ஸ்துதி நூல்களை அருளிச்செய்தவர், மஹா மேதாவி. இவரது முதல் ஸ்ரீகோசம் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் என்பது. இதில் ஆழ்வான் நூலை, “யோ நித்யம் அச்யுத” எனும் புகழ்மிக்க எம்பெருமானார் பற்றிய ச்லோகத்தோடு தொடங்குகிறார். அதன்பின் இரண்டு ச்லோகங்களில் ஆழ்வாரைப் போற்றுகிறார். ஆழ்வாரைப் போற்றினாலன்றோ எம்பெருமானாரும் திருவுள்ளம் உகப்பர்? எம்பெருமானும் ஆழ்வாரைப் போற்றியபின்னரே தன்னைப் பற்றிய ஸ்துதிக்கு உகப்பன்.
இனி இவ்விரு ச்லோகங்களும் விவரிக்கப் படுகின்றன
த்ரைவித்ய-வ்ருத்தஜன-மூர்த்தவிபூஷணம் யத் ஸம்பச்ச ஸாத்விக ஜநஸ்ய யதேவ நித்யம் I
யத்வா சரண்யம் அசரண்ய-ஜனஸ்ய புண்யம் தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரணாங்ரியுக்மம்II
ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே “த்ரைவித்ய-வ்ருத்தஜன-மூர்த்த விபூஷணம்”. வேதம் வல்லார் சிரசுக்கு ஆழ்வார் திருவடித் தாமரைகளே ஆபரணம் என்கிறார். அவையே, “ஸாத்விகஜனஸ்ய நித்யம் ஸம்பத்” = ஸுத்த ஸாத்விகர்களின் நிரந்தரச் செல்வம். ஆளவந்தார் தாமும் தமது “மாதாபிதா” எனும் ச்லோகத்தில் ஆழ்வார் திருவடிகளே தமக்கு எல்லாமும் என்றார்.
ஆழ்வார் திருவடித் தாமரைகளே வேறு புகலற்றவர்க்குப் புகலிடம் = ”அசரண்ய ஜனஸ்ய சரண்யம் “ பொதுவாக மக்கள் செல்வத்தையோ வலி மிக்கோரையோ தமக்குப் புகலாகப் பற்றுவர்கள். ஆனால் பகவத் கைங்கர்ய நிஷ்ணாதர்கள் இத்தகைய இழிந்தவற்றைப் புகலாகக் கொள்ளார், தம் மனம் மெய் மொழிகளால் நினையார். அவர்கள் தம் த்ரிகரணமும் பகவச்சிந்தனையிலேயே ஈடுபடுத்துவர். ஆழ்வாரே இத்தகு மேலோர் கோஷ்டிக்கெல்லாம் தலைவரானபடியால் அன்னவர்கள் ஆழ்வார் திருவடிகளையே புகலாகக் கொள்ளுவர்கள்.
ஆழ்வார் திருவடித் தாமரைகளே இவ்வுலகத் துன்பங்களிலிருந்து மக்களை உய்விக்க வல்லன. எவருக்கும் பெருந்தவங்கள் இயற்றவோ, நீர்நிலைகளில் புனித நீராடவோ வேண்டா. ஆழ்வார் திருவடிகளில் சரண் அடைந்தாலே போதும். ஸ்வாபாவிகமாகவே இத்திருவடிகள் யாவரையும் தூய்மைப் படுத்த வல்லவை. ஆகவே நாம் வகுள மாலையணிந்த ஆழ்வார் திருவடிகளைப் பற்றுகிறோம்.
அடுத்த ச்லோகத்தில் ஆழ்வான் சாதிக்கிறார்:
பக்தி-ப்ரபாவ பவத்-அத்புத-பாவ-பந்த-ஸம் துக்ஷித-ப்ரணய-ஸார-ரஸௌக -பூர்ண: I
வேதார்த்தரத்னநிதிர்-அச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர்-அஸீமபூமா ||
இந்த ச்லோகத்தில் ஆழ்வார் ஒரு ஸமுத்ரமாக உருவகிக்கப் படுகிறார். ஏனெனில் இதற்கு நான்கு காரணங்கள் உள.
- ஸமுத்ரம் பல்வேறு நீர் வரத்தால் நிறைகிறது. பராங்குச ஸமுத்ரமும் பக்தி-ப்ரபாவ-பவத்-அத்புத-பாவ-பந்த-ஸந்துக்ஷித-ப்ரணய-ஸார-ரஸௌக பூர்ண: = பக்தி எனும் வியத்தகு நவ ரஸ புனித உணர்வாகிய வெள்ளத்தினால் நிறைந்த கடல்.
- ஸமுத்ரம் முத்தும் பவழமும் மற்றும் செல்வத்துக்கிருப்பிடம். பராங்குச ஸமுத்ரமும் அப்படியே – அதில் வேதார்த்த ரத்ன நிதி மண்டியுள்ளது
- ஸமுத்ரம் எம்பெருமான் பள்ளிகொள்ளுமிடம். அச்யுத திவ்ய தாமா. அவன் திருப்பாற்கடலில் துயில்பவன். இராமனாய் அவன் கடலில் அணை கட்டினான். எனினும் அவன் வைகுந்தம் வேங்கடம் பாற்கடல் என்பன விட்டு என் இதயத்தினுள்ளே வந்திருந்தான் அவற்றைவிட இது மேல் என்று.”கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏ பாவமே, வெள்ள நெடியான் நிறங்கரியான் உள் புகுந்து நின்றான் அடியேனது உள்ளத்தகம்” அவை தாழ்ந்தன ஏனெனில் என் மனத்தில் இடம் கொண்டான் என்றார் ஆழ்வார். கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன் அடியேனுள்ளானே” இவ்விஷயம் “இவையுமவையும்” திருவாய்மொழியில் நன்கு விளக்கப் பட்டுள்ளது.
- ஸமுத்ரம் கரை காண ஒண்ணாதபடி பெரிது எனவே அஸீம பூமா எனப்படுகிறது. கண்ணிநுண் சிறுத்தாம்பில் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை “அருள் கொண்டாடும் அடியவர்” என்கிறார்.
இவ்வாறு, பராங்குச பயோதியின் பெருமைகளை ஆழ்வான் கொண்டாடுகிறார்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/23/dramidopanishat-prabhava-sarvasvam-25-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org