ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
அடிப்படை ஸித்தாந்தங்களை அருளிச்செயல் கொண்டு நிரூபித்தல்
உபநிஷதங்கள் வெவ்வேறு பொருள்களைத் தருவது போலத் தோற்றும் வெவ்வேறு கூற்றுகளால் தொகுக்கப்பெற்றுள்ளன. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் வேறுபாடில்லை எனத் தோற்றும் சில கூற்றுகள் உள. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்மையில் வேறுபாடு உண்டு எனும் கூற்றுகளும் உள.
வேதாந்தத் தத்வவாதி எவருமே ஜீவாத்மக் கோட்பாடே தவறு எனக் கூறத்துணியார். அந்தத் தத்வஞாநியை, “உலகில் இன்ப துன்பங்களை அனுபவிப்பவன் யாவன்?” என வினவினால், பரமாத்மா என்பது விடையாய் இருக்கவே இராது. ஆகவே, தரித்ரபக்ஷம் ஒரு தாற்காலிக ஜீவாத்மாவையாவது இசைந்தே தீரவேணும். மேலும் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே எனும் வேதாந்தியும் உலகில் இன்பு துன்புகளையனுபவிக்கும் ஜீவாத்மா பரமாத்மாவை எல்லாவகைகளிலும் ஒப்பவன் என்னார். இக்கோட்பாடுகளில் ஜீவ பர ஐக்யம் என்பது நேர்பட்டதன்று முற்றானதுமன்று. இவற்றில் ஜீவாத்மா என்பவன் பரமாத்மாவின் மனோ/ஞான உபாதிகளால் ஆன ஒரு தோற்றமே என்றவளவிலேயே அவனுக்கும் பரமாத்மாவுக்கும் ஐக்யம் சொல்லப்படுகிறது. . .
ஆகவே ஜீவாத்மா, பரமாத்மா என்கிற சொற்கள் எல்லா வேதாந்தக் கோட்பாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன . ஒவ்வொரு வேதாந்தக் கோட்பாடும், ஜீவ பரமாத்மாக்கள் பற்றிய முரண்பாடாய்த் தோன்றும் கருத்துகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்கிற விசாரத்திலேயே பிடியாய் உள்ளது.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் வேதாந்த விஞ்ஞானிகள் அணுகுமுறை பல்வேறுபட்டுள்ளது. அத்வைதத்தில் இவ்வேறுபாடுகளைக் கூறுவன இரண்டாம் பக்ஷமாகக் கொள்ளப் படுகின்றன. அவர்கள் ஐக்யம் பேசும் உபநிஷத வாக்யங்களைத் தலையாயதாகக் கொண்டு பேதம் கூறும் பிறவற்றைத் தாழ்ந்த விஷயங்களாகப் புறம் தள்ளுகின்றனர்.
பேதத்தைக் கருதுவோர் நேர்மாறான வழியைக் கடைப்பிடிக்கின்றனர். அத்வைதிகள் அபேதம் சொல்வதாகக் காட்டும் உபநிஷத வாக்யங்கள் அவ்வாறு கூறுவதாகவே அவர்கள் நினைப்பதில்லை. அசேதன உலகம் போலன்றி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இருவருமே ஆத்ம வ்யக்திகள் என நினைக்கின்றனர். ஐக்கியம் பற்றிப் பேசுவனபோல் தோற்றும் வாக்யங்கள் இவர்களின் ஆத்ம குணங்களையே காட்டுகின்றன. அவர்கள், ஜீவாத்மா பரமாத்மா போல உயிர்வாழிகள் கூட்டத்தினரே, அசேதனங்களினின்று வேறுபட்டவர் என்கின்றனர். இதைக் காட்ட அவர்கள்பேதம் காட்டி இருவரும் வேறு எனும் கணக்கற்ற உபநிஷத வாக்யங்களை மேற்கோள் காட்டுகின்றனர். இந்த பேதம் என்பது வெறும் அஞ்ஞானத்தால் மட்டுமன்று எனவும் வன்மையாக மறுக்கின்றனர்.
இவர்கள் தம் கருத்தை வலியுறுத்தத் தாம் எடுக்கும் வாக்யங்களின் நேர்பட்ட பொருளை மட்டும் சொல்வரேயன்றி மாறுபட்ட கருத்துடைய வாக்யங்களை முற்றிலும் கைவிட்டுவிடுவர். இருவேறுபட்ட கருத்துகள் வரும்போது ஒரு சார்பாக ஒரு பகுதி வாக்யங்களைமட்டும் ஏற்றுக்கொண்டு எப்படிப் பேசலாம்?
பேதாபேதவாதிகள் இரு ஆத்மாக்களையும் ஏற்கின்றனர் ஆனால் எவ்வளவுக்கு என்பது அவர்கள் எந்த பேதாபேத வகுப்பினர் என்பதைப் பொறுத்தது. ஆயினும் கற்றோர், பேதாபேதவாதிகள் புதிதாகத் தத்வ விசாரம் எதும் செய்யவில்லை, உள்ளதையே திரும்பச் சொல்லினர் என்கிறார்கள். இந்த இரு வ்யக்திகளின் இருப்பை ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது குறித்த சரியான உபநிஷதச் சான்றுகள் காட்டுவதில்லை.
விசிஷ்டாத்வைதத்தில் உபநிஷதுகளுக்குத் தனி ஓரிடமுண்டு. அவர்கள் பேதம் அல்லது ஐக்கியம் பற்றிய எந்த ஒரு வாக்யத்தையும் தலையாயது என்றோ தாழ்ந்தது என்றோ கொள்ளுவதுமில்லை தள்ளுவதுமில்லை. இவ்விஷயத்தில் தீர்வு உபநிஷதமே தருகிறது. இந்த சிக்கலைத் தீர்க்க யாதொரு தனி மேதைமையும் தேவையில்லை. உபநிஷதங்கள் காட்டும் மார்க்கத்தைப் பின் சென்றாலே போதும் இதில் தெளிவு வந்துவிடும்.
விசிஷ்டாத்வைதிகள், இரண்டல்ல மூன்று வகைப் பட்ட உபநிஷத் வாக்யங்கள் உள என்கின்றனர்”
- பேதச்ருதி – ஜீவனும் பரமாத்மாவும் வேறு எனும் வாக்யங்கள்
- அபேதச்ருதி – இவை வேறல்ல என ஐக்கியம் சாதிப்பன :
- கடக ச்ருதி – இவ்விரு கருத்துகளை ஒருங்கிணைப்பன
முதலிரண்டையும் நாம் பார்த்துவிட்டதால் இனி மூன்றாவதைப் பார்ப்போம்.
இதில் மிக முக்யமான பகுதிகள் மிகப் பழைய உபநிஷதமாகப் போற்றப்படும் அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும், சுபாலோபநிஷத்திலும் வருகின்றன. இப்பகுதிகள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமுள்ள தொடர்பு உடலுக்கும் உயிருக்குமுள்ளது போன்றது என்கின்றன. ஜீவாத்மா பரமாத்மாவின் ஆன்மீக சரீரம். பரமாத்மா உயிர் உள்ளன இல்லன இரண்டையுமே தன் சரீரமாகக் கொண்டுள்ளது. ஆகவே பரமாத்மா ஜீவாத்மாவின் அந்தர்யாமி அந்தராத்மா. இவ்வுறவே ஜீவ பரர்களிருவர்க்கும் நித்யமானது. இது இன்றேல் அவர்கள் இல்லை. ஆகவே ஜீவ பரர்களிருவரும் ஒன்றே, ஆனால் வெவ்வேறாக உள்ளனர். அவர்கள் ஒரே வ்யக்தியாக உளர், சரீர வேறுபாடுகளோடு. ஸ்வாமி ராமானுசர் சரீரம், ஆத்மா இரண்டையும் தெள்ளத் தெளிவாய் விளக்கியுள்ளார், இது இப்போதைய விஷயத்துக்குப் புறம்பானது..
விசிஷ்டாத்வைதிகள் அத்வைதம் த்வைதம் விசிஷ்டாத்வைதம் மூன்றுமே நித்யம் என்கின்றனர். ஜீவாத்மாவின் ஸ்வரூபம், இருப்பு, செயல்பாடு யாவுமே பரமாத்மாவிலேயே ஊன்றியுள்ளன. ஜீவாத்மா இன்றிப் பரமாத்மாவோ, பரமாத்மா இன்றி ஜீவாத்மாவோ இல்லை இதில்தான் அவர்கள் இருவரின் ஸ்வரூபமும் ஸித்திக்கிறது. தம் இயல்பில் அவை இரண்டும் வேறுபடுகின்றன. பரமாத்மா ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவதில்லை. அது ஸம்ஸாரங்கடந்தது. பரமாத்மா எல்லாக் கல்யாண குணங்களும் நிறைந்தது , குறைகளற்றது, யாவற்றையும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் செய்யும் ஆற்றலுள்ளது. எங்குமுள்ளது எப்போதுமுள்ளது காலப் பரிமாணமற்றது. ஜீவாத்மா ஸம்ஸாரம், இன்பம் துன்பம் கர்மம் இவற்றால் கட்டுண்டது, தன்னைத் தானே காத்துக்கொள்ள இயலாதது, முற்றிலும் பரமாத்மாவைச் சார்ந்துள்ளது, அவனுக்கே ஸ்வாபாவிகமாகவே அடிமைப் பட்டது, இந்நினைவு மாறினால் துன்பப்படுகிறது. இந்நோக்கில் பரமாத்மா ஜீவாத்மா இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. உபநிஷத்துகளில் காணப்படும் கடக ச்ருதிகளால் இந்த சரீர சரீரி பாவத்தை வைத்து இவ்வுறவினால் இவ்விரண்டையும் ஒரே போதில் வேறாகவும் ஒன்று பட்டனவாயும் புரிந்துகொள்ளலாகும். இவ்வாறாக. உபநிஷதங்களில் எழும் பேதாபேதக் குழப்பங்களுக்கு விசிஷ்டாத்வைதத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கிறது. விசிஷ்டாத்வைதம் ஒரு புது அல்லது புரட்சி மாற்றுக் கருத்தன்று, போதாயனர், வேதவியாசர், டங்கர், த்ரமிடர், குஹதேவர் போன்ற மஹரிஷிகளின் திருவுளக் கருத்துப்படியான ச்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களுக்கிசைந்த விளக்கமே இது. உபநிஷத்துகளின் எல்லாப் பகுதிகளுக்கும் ஸமமான மர்யாதையும் முக்யத்வமும் அளித்து எல்லாவற்றையும் ஒருங்கவிடுவதே இதன் லக்ஷ்யம். பாரத தேசத்தின் தொன்மையான மரபுகள் அர்த்த விசேஷங்களைக் காப்பது அதன் பழமை மாறா வேதாந்தப் பாரம்பர்யத்தை ரக்ஷிப்பது, ஒரு துறையைப் பின்பற்றுவோர் பேதையர் என்னாது இன்னொரு துறையினரே விற்பன்னர் என்றும் கருதாது கர்மம், ஞானம், பக்தி, ப்ரபத்தி என எல்லாக் கருத்துகளையும் உபநிஷத் ஸம்ப்ரதாயத்திலேயே ஒருங்கிணைப்பதே விசிஷ்டாத்வைதத்தின் சிறப்பு.
மற்றையோர் நோக்காது விட்ட கடக ஸ்ருதிகளை விசிஷ்டாத்வைதிகள் மட்டும் எங்ஙனம் கண்டுகொண்டனர் எனில், ஆழ்வார்களின் அருளிச்செயல்களால் என்பதே விடை.
ஆழ்வார், “உடல் மிசை உயிர் எனக கரந்தெங்கும் பரந்துளன்” என்றார். (திருவாய்மொழி 1-1-7). உபநிஷத வாக்யங்களின் அர்த்த விசேஷத்தை ஸ்வாமி போல் விசிஷ்டாத்வைதிகள், ஆழ்வார் அருளிசெயல்களில் கண்டனர் எனில் மிகையே அன்று.
இவ்விடத்தில் மட்டுமின்றி இன்னொரிடத்திலும் உபநிஷதங்களில் எழும் வினாவுக்கு அருளிச் செயலில் விடை கண்டமை காணீர்:
சில உபநிஷத் வாக்யங்கள் ப்ரஹ்மம் நிர்குணம் என்னும்; வேறு சில பிரஹ்மம் ஸகுணம், கல்யாண குணங்கள் நிரம்பப் பெற்றது என்னும். வெவ்வேறு வ்யாக்யாதாக்கள் இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் தந்துள்ளார். விசிஷ்டாத்வைதிகள் இதை ஒரே காசின் இரு பக்கங்களைக் கண்டனர். ப்ரஹ்மத்துக்கு இவ்விரு தகைமைகளுமுண்டு என்றனர் உபநிஷதுச் சான்றுகளோடு. ஹேய குணங்கள் இல்லை ப்ரஹ்மத்துக்கு ஆனால் கல்யாண குணங்களுண்டு என்பதே. கல்யாண குணங்களுண்டு, ஸகுணம். ஹேய குணங்களில்லை, நிர்குணம்.
ஆழ்வார் திருவாய்மொழித் தொடக்கத்திலேயே இவ்விளக்கம் தருகிறார் எல்லார்க்கும் பெரியனான எம்பெருமான் எல்லாக் கல்யாண குணங்களும் நிறைந்தவன்.
ப்ரஹ்மம் எனும் சொல்லே “ப்ரு” எனும் பெரிது எனும்பொருள்படும் வேர்ச் சொல்லில்லிருந்து வருவது. .
எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார்வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸந்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குணகண
யவனவன்=புருஷோத்தமன்
ஸ்வாமியின் திருவாக்கில் ஆழ்வார் திருமிடறு எதிரொலிப்பதைக் காணக் கூடியவர்களே பாக்யசாலிகள்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/22/dramidopanishat-prabhava-sarvasvam-24-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org