த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 28

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 27

சந்தமிகு தமிழ் மறையோன், வேதாந்த குரு

(த்ரமிடோபநிஷத் ப்ரபாவ  ஸர்வஸ்வம் , இறுதிப் பகுதி)

ஸம்ஸ்க்ருத வேதங்களைப் பயில அருளிச்செயலை அறிந்துகொள்வது அத்தியாவசியம் என வேதாந்த தேசிகன் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். வேதாப்யாசம் செய்யாதவர்களுக்கு மட்டும் அருளிச்செயல் மற்றொரு வாய்ப்பு மட்டுமன்று. வேதங்களை பயில விரும்புமவர்களுக்கு அருளிச்செயல் அறிவின்றி வேதங்களின் பொருள்  அறிவதென்பது எளிதன்று.

தேசிகன் வடமொழியில் பெரும்புலமை உள்ளவரென்பது மறுக்க முடியாதது, அதற்கு அவரது ஸ்ரீ கோசங்களே சாக்ஷி. ஆகிலும், தமக்கிருந்த அளவற்ற வேதாந்த ஞானமோ ஸம்ஸ்க்ருதப் புலமையோ அருளிச் செயலை விளக்கிவிட ஓரு ஹேது என அவர் திருவுள்ளம் பற்றினாரல்லர்.

அதிகார ஸங்க்ரஹத்தில்  அவர், “செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!” என இதைத் தெளிவாகக் கூறியருளினார்.

இச்செய்யுளில் தேசிகன், ஸம்ஸ்க்ருத வேதங்களைத் “தெளியாத மறை நிலங்கள்” என, மருட்டும் பகுதிகளையுடையதாக வேதங்களைச் சொன்னது மட்டுமன்றி, “தமிழ் மாலைகளைத் தெளிய ஓதி” என்று என்று தமிழ் மறைகளைத் தெளிய ஒத்த வேண்டிய ஆவச்யகதையையும் வலியுறுத்துகிறார். இது அவர் பிறர்க்குச் சொன்னது மட்டுமின்றி, தாமும் அனுஷ்டானத்தில் கொண்டிருந்தார் என்பதே “நாம் தெளிய ஓதி” என்றதன் மருமமாம்.

இக்கருத்தை அவர், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில், “யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:  சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது. ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும். மாறாக ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன. இதையே ஸத்வ ஸீம்னா என்றார். ஆகவே சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

ஆளவந்தார்  ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன் “மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் – ”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய  ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை: ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார். மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன. ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீ தேசிகன், “யஸ்ய ஸாரஸ்வதம் ச்ரோதோ வகுளாமோதவாசிதம் ச்ருதீநாம் விஸ்ரயாமாசம் சடாரிம் தம் உபாஸ்மஹே”

என்று ஸாதிக்கிறார். வேதங்கள் வலுவிழந்து தெம்பிழந்து தவித்த வேளையில் ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளே அவற்றின் தளர்வை நீக்கிப் புத்துயிரளித்தன என்பதாம்.

பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்ரீ தேசிகன் ஆழ்வாரையும் அருளிச்செயலையும் பற்றிப் பலபடச் சொல்லுகிறார். 22ம் ஸ்லோகத்தில் ஸ்ரீ தேசிகன், உய்ய வழி ஆழ்வாரின் அருளிச்செயலைக் கற்பதும், எம்பெருமான் திருவடி நிலைகளின் பெயர் தாங்கிய அந்நிலையைத் தலையில் தரிப்பதுமன்றி  வேறில்லை என்கிறார்.

அம்ருதவாதினி ப்ரபந்தத்தில் ஸ்ரீ தேசிகன்  நம்மாழ்வாரே உயர்ந்த ஆசார்யன் பக்தர்களைக் கரையேற்றவல்லவர் என 28ம் பாட்டில் கூறுகிறார்.

இறுதியாக ஸ்ரீ தேசிகன் தம்மையே “திராவிட வேதாந்த வித்வான்” என்று கூறிக்கொள்கிறார். “சந்தமிகு தமிழ் மறையோன் தூப்பில் தோன்றும் வேதாந்தகுரு” என்பது அவர் திருவாக்கு,

இவ்வாறாக, நம் ஆசார்யர்கள் ஆழ்வார்களையும் அருளிச்செயலையும் மிக உயர்ந்த நிலையில் கொண்டனர் என்று கண்டோம். ஆசார்யர்கள் ஆழ்வார்களை அனுபவித்ததில் ஒரு திவலையே இவ்விருபத்தெட்டு பகுதிகளில் கண்டோம். இதனால் ஆழ்வார்களின் அருளிச்செயலையும், பிள்ளான், நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை, தெள்ளார் வடக்குத்திருவீதிப் பிள்ளை, அழகிய மணவாள ஜீயர், பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் போன்றோரின் வ்யாக்யானங்களையும் ஊன்றி வாசிக்க ஆவல் எழுமாயின் அதுவே பெரும் பேறாகும். ஆழ்வார்களின் திருவாக்கே வடமொழி நூல்களுக்கும் வழிகாட்டி எனத் தெள்ளென நமக்கு விளக்கியுள்ள காஞ்சீ ஸ்வாமி மஹாவித்வான் ஸ்ரீ உ வே அண்ணங்கராசார்ய ஸ்வாமிக்கு நாம் தலையல்லால் கைமாறிலோம்.

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

இன்பம் என்னும் பனிமூட்டத்திலும், இருள் என்னும் துன்பத்திலும், அருளிச்செயல் என்னும் ஒளி நம் மனத்தில் ப்ரகாசமாக எப்பொழுதும் மலரட்டும்.

எம்பெருமானாரே! இதை மட்டும் அளித்து அருள்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/26/dramidopanishat-prabhava-sarvasvam-28-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment